புத் 64 இல. 40

நந்தன வருடம் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா பிறை 20

SUNDAY OCTOBER 07 2012

 
'நபிகளாரின் முன்மாதிரியை பின்பற்றுவோம்'

'நபிகளாரின் முன்மாதிரியை பின்பற்றுவோம்'

பறகஹதெனிய இஸ்லாமிய மாநாட்டில் அழைப்பு

ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் ஆறாவது இஸ்லாமிய தேசிய மாநாடு செப்டம்பர் 29, 30 ஆகிய இரு தினங்களில் குருநாகல் பறகஹ தெனியாவில் நடைபெற்று முடிந்தது.

குருநாகல் மாவட்டத்தில் பறகஹதெனிய கிராமத்தைச் சேர்ந்த மிகப்பெரும் சீர் திருத்தவாதியும் சமூக ஆர்வலருமான அல்லாமா அப்துல் ஹமீத் றஹுமதுல்லாஹ் என்பவரால் அவ்வமைப்பு 1974 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அன்றிருந்து இன்று வரை தங்கு தடையின்றி பல சவால்களுக்கு மத்தியில் அஷ்ஷெய்க் அபூபக்கர் சித்தீக் மதனி தலைமையில் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. இஸ்லாமிய அழைப்புப் பணி, கல்வி, சமூகப் பணி என்ற அடிப்படையில் எண்ணிலடங்கா வரலாற்றுச் சாதனைகளை இந்த அமைப்புக் கொண்டுள்ளது.

முதல் நாள் நிகழ்ச்சி சரியாக காலை 9.30 மணிக்கு ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் பொதுச் செயலாளர் ஏ.எல்.கலிலுர்ரஹ்மானின் அறிமுகத்துடன் பொதுத் தலைவர் அஷ்ஷெய்க் என்.பீ.எம்.அபூபக்கர் சித்திக் மதனியின் அங்குரார்ப்பணத் தலைமையுரை இடம்பெற்றது.

இன்றைய காலகட்டத்தில் இஸ்லாம் குறித்தும் இஸ்லாத்தின் இறுதித் தூதர் முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் தொடர்பாகவும் தவறாகவும் பிழையாகவும் பிரச்சாரம் செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறது. இவ்வாறான சூழ்நிலையில் அவற்றைக் களைந்து இஸ்லாத்தின் மகத்துவத்தையும் புனிதத் தன்மையையும் முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் சிறப்பையும் சரியான முறையில் தெளிவுபடுத்த வேண்டியது எமது பொறுப்பாகும். இதனை முஸ்லிம் மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் மற்றும் ஏனைய மக்கள் மத்தியிலும் கொண்டுசெல்ல வேண்டியுள்ளது. இதற்குப் பொறுமை, சகிப்புத்தன்மை, கருணை ஆகியன மிகவும் இன்றியமையாதது, முஹம்மது நபி (ஸல்) அவர்களின் ஆரம்பகால வாழ்க்கையில் இதற்கு நிறைய முன்னுதாரங்கள் உள்ளன. அவற்றை நாமும் முன்மாதிரியாகக் கொண்டு செயற்பட வேண்டும்.

முஸ்லிமாக இருக்கின்ற ஒவ்வொருவருக்கும் கொள்கையும் கோட்பாடும் மிக முக்கியமானது இதனை அல்குர்ஆனும் வலியுறுத்துகின்றது. குறிப்பாக அல்குர்ஆனில் இஹ்லாஸ் என்ற அத்தியாயமும் இதனையே தெளிவுபடுத்துகின்றது. இந்த நான்கு வசனங்களைக் கொண்ட அத்தியாயத்தை முஹம்மத் (ஸல்) அவர்கள் முழுக் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்கு சமனானது என்றார்கள். இஸ்லாம் ஒருபோதும் வன்முறையை அனுமதிக்கவே இல்லை. அன்பும் பண்புமே இஸ்லாத்தின் பிரதான அம்சங்களாகும். இதன் அடிப்படையில் குர்ஆன், சுன்னாவைப் பேணி வாழ வேண்டும். இதுவே இன்றைய முஸ்லிம் சமுதாயத்திற்கான செய்தியாகும் என்று அவர் தம் தலைமை யுரையில் குறிப்பிட்டார்.

இதனை அடுத்து சத்தியக்குரல் இஸ்லாமிய பத்திரிகை ஆசிரியர் அஷ்ஷெய்க் இம்தியாஸ் ஸலபி ‘முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள்’ என்ற தலைப்பில் மிகச் சிறப்பான உரையினை நிகழ்த்தினார். அவர் உரையின் போது மேற்கத்திய நாடுகள் முஸ்லிம் நாடுகளை தம் ஆதிக்கத்திற்குள் வைத்துக்கொள்ள எடுக்கும் முயற்சிகள் பற்றி தெளிவாக விளக்கினார். மேலைத்தேய நாடுகள் தேவைக்கு ஏற்ப முஸ்லிம் நாடுகளை ஆக்கிரமித்து தமக்குத் தேவையான ஆட்சியாளர்களை அமர்த்தி அந்நாடுகளைச் சுரண்டி வாழும் விடயங்களை சுட்டிக்காட்டினார்.

‘இஸ்லாமியக் கோட்பாடும் ஷியாக்களின் நிலைப்பாடும்’ என்ற தலைப்பில் அஷ்ஷெய்க் என்.பி.ஜுனைத் காஸிமி (மதனி) உரை நிகழ்த்தினார். ளுஹர் தொழுகையுடன் அஷ்ஷெய்க் அப்துல் வதூத் ஜிஃப்ரியின் “நபித் தோழர்களும் நமது நிலைப்பாடும்” என்ற தலைப்பில் சிறந்த உரையினை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து பகல் உணவும் பரிமாறப்பட்டது. பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு எந்தவிதமான அசெளகரியமின்றி சிறப்பான முறையில் உணவு பரிமா றப்பட்டது. வெளியே இருந்து வந்த மக்களை மனம் நோகாமல் சிறந்த முறையில் உணவுப் பரிமாற்றத்தினை மேற்கொண்ட மாநாட்டினுடைய தொண்டர்கள் தங்கள் பணியைச் சிறப்பாகச் செய்துள்ளதாக மாநாட்டுக்கு வருகை தந்த மக்களின் கருத்தாக இருந்தது.

அஸர் தொழுகையுடன் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் முபாரக் மதனி மாற்று மதத்தவர்களுடனான சமூக உறவுகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இத் தலைப்பு காலத்தின் தேவையினைக் கருத்திற்கொண்டு வழங்கப்பட்ட மிகச் சிறப்பான தலைப்பு ஆகும். முஸ்லிம் அல்லாத சமூகத்தினருக்கு மத்தியில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். வியாபாரம், பண்பாட்டுக் கலாசார விழுமியங்களை மதித்து நடத்தல் வேண்டும் அதுவும் குறிப்பாக முஸ்லிம் அல்லாத சமூகத்தினர்களுக்கு மத்தியில் நம்பகத் தன்மையையும் நன்மதிப்பையும் ஏற்படுத்தல் வேண்டும். அதேபோல் எம்முடைய சிறார்களையும் முஸ்லிம் அல்லாத சமூகத்தவர்களை மதித்து நடக்கக் கற்றுக் கொடுத்தல் அவசியமாகும். கருத்துக்களை முன்வைத்தல், நடை உடை பாவனை, கொடுக்கல் வாங்கல்கள், சமூக நடத்தை என்பவை குறித்து முறையான ஒழுங்கைச் சரியாகக் கடைப்பிடித்தல் அவசியம்.

நிதா உல் ஹைர் நிறுவனத்தின் தலைவர் அஷ்ஷெய்க் எஸ்.எல்.எம்.நவ்பர் கஃபூரி ‘இளைஞர்களே புறப்படுங்கள் சுவனத்தை நோக்கி’ என்ற தலைப்பில் இளைஞர்களை விழிப்புணர்வூட்டும் கருத்துக்களை மிகத் திறம்பட கூறிச்சென்றார். மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து தூய இஸ்லாமிய குடும்ப வாழ்வும் அடிப்படைகளும் என்ற தலைப்பில் அஷ்ஷெய்க் தீனுல் ஹஸன் உரை நிகழ்த்தினார். முதல்நாள் இறுதி உரையாக இந்தியாவிலிருந்து வருகைதந்த மிகப் பிரபல்யமான பேச்சாளர் அஷ்ஷெய்க் கோவை ஐயூப் “அண்ணல் நபி (ஸல்) ஓர் அழகிய முன்மாதிரி” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்

முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கு எதிரான இவ்வாறான மோசமான விமர்சனங்கள் நேற்று இன்று ஆரம்பித்தவையல்ல. அண்ணலாரின் வாழ்வுக் காலத்தின் போதே அவருக்கெதிரான விமர்சனங்கள் தொடங்கிவிட்டன. அவற்றை அன்னார் இவ்வாறு எதிர்கொண்டார் என்பது எல்லோருக்கும் ஒரு நல்ல முன்மாதிரியாக இருந்துகொண்டிருக்கின்றது. ஆகவே இஸ்லாத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற சதிகளுக்கும், சூழ்ச்சிகளுக்கும் முஸ்லிம்கள் ஒருபோதும் துணைபோகாது தூர நோக்கோடும், புத்திசாதுரியத்தோடும் செயற்படுவதே காலத்தின் அவசியத் தேவையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், இன்று உலகெங்கிலும் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டங்களையும், கண்டன ஊர்வலங்களையும், மாநாடுகளையும் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். உலக முஸ்லிம்கள் கொதித்தெழுந்திருக்கின்றார்கள். இதில் உயிரிழப்புக்கள், காயங்கள், சேதங்கள், பொருளாதார நஷ்டங்கள் என எல்லாமே ஏற்பட்டிருக்கின்றன. இவையெல்லாம் எதற்கென்றால் நாம் உயிரிலும் மேலாக மதித்துக் கெளரவிக்கின்ற அண்ணல் எம்பெருமானார் (ஸல்) அவர்களை இழிவுபடுத்தும் வகையில் எடுக்கப்பட்டிருக்கின்ற திரைப்படத்துக்கு ஆட்சேபனை தெரிவித்ததன் விளைவேயாகும்.

இரண்டு மணித்தியாலங்கள் ஓடக்கூடிய, நபிகளாரை இழிவுபடுத்தும் வகையிலான திரைப்படத்தை ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் எடுத்திருக்கின்றார்கள். அறுபது நடிகர்கள் நடித்திருக்கும் இத்திரைப்படத்துக்கு 120க்கும் மேற்பட்ட யூதர்கள் நிதியுதவி வழங்கியுள்ளார்கள். என்றாலும் இத்திரைப்படம் கனடா நாட்டில் காண்பிக்கப்பட்ட போதிலும் அது ஒருவார காலம் கூட வெற்றிகரமாக ஓடவில்லை. இப்படம் தோல்வியுற்றது. இவ்வாறான நிலையில்தான் இத்திரைப்படத்தில் முஹம்மத் நபி (ஸல்) அவர்களை இழிவுபடுத்தும் சில காட்சிகளைத் தொகுத்து 15 நிமிடம் யூ-டியூப் இணைய வலையமைப்பில் இணைத்து விட்டார்கள். இதனைத் தொடர்ந்துதான் இத்திரைப் படத்துக்கு எதிராக முழு உலக முஸ்லிம் சமூகமும் கொதித்தெழுந்திருக்கின்றது என்றார் அவர்.

இரண்டாம் நாள் சுபஹ் தொழுகையுடன் இந்திய நாட்டைச் சேர்ந்த அஷ்ஷெய்க் முஃப்தி உமர் ரீஃப்பின் அல்குர் ஆன் விளக்கவுரை இடம்பெற்றது. காலை உணவுக்குப் பிற்பாடு காலை 8.30 மணி அளவில் இந்திய நாட்டைச் சேர்ந்த அஷ்ஷெய்க் முஜிபுர் ரஹ்மான் உமரி அல்குர்ஆன் “அஸ்ஸ¥ன்னாவை அணுகும் முறை” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து “அஹ்லுஸ் ஸ¥ன்னத் வல் ஜமாஅத் என்போர் யார்?” என்ற தலைப்பில் அஷ்ஷெய்க் எம்.எல்.முபாரக் ஸலஃபி உரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து “சிறுவர், பெண்கள் துஷ்பிரயோகம் களைவதற்கான வழிகள்” அஷ்ஷெய்க் எ.எல். பீர்முஹம்மது காஸிமி உரை நிகழ்த்தினார். ளுஹர் தொழுகை நடைபெற்றது. அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயீல் ஸலஃபி ‘அல்குர்ஆன், அஸ்ஸ¥ன்னா பார்வையில் சூனியம்’ என்றதலைப்பில் உரை நிகழ்த்தினார்.

அஸர் தொழுகையுடன் முப்தி உமர் ரீஃப் “ஒழுக்க விழுமியங்களை எதிர் நோக்கிய பயணம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இறுதி உரையாக அஷ்ஷெய்க் கோவை ஐயூப்பின் “முஸ்லிம்களின் வாழ்வில் மறுமை நம்பிக் கையின் தாக்கங்கள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

இம்மாநாட்டில் இறுதியாக ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் பொதுச் செயலாளர் ஏ.எல். கலிலூர்ரஹ் மானினால் தயாரிக்கப்பட்ட ஒன்பது தீர்மானங்கள் தக்பீர் முழங்க நிறை வேற்றப் பட்டன. இதனை முஹ ம்மதிய் யாவின் உண்மை உதய சஞ்சிகை ஆசிரியர் அஷ்ஷெய்க் எஸ்.எச். இஸ்மாயீல் வாசிக்க பல்லாயிரக்கணக்கான மக்கள் தக்பீர்முழங்க தீர்மானங்கள் நிறைவேறின.

இம்மாநாட்டில் பல பாகங்களிலிருந்தும் சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். முஹம்மதிய்யா அமைப்பின் பொதுத் தலைவர் அஷ்ஷெய்க் என்.பி.எம். அபூபக்கர் சித்தீக் (மதனி) தலைமையில் நடைபெற்ற இந்த இருநாள் மாநாட்டில் கைத்தொழில் அபிவிருத்தி, வாணிப அமைச்சர் றிசாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் முத்தலிப். பாவா பாறுக், அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்¦ஷ்ய்க் ரிஸ்வி முபத்தி, பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக் (மதனி) ஜாமிஆ நZமிய்யா கலாபீட பிரதிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் அகார் முஹம்மத், ஜம்இய்யதுஸ் ஷபாப் அமைப்பின் முகாமைத்துவப் பணிப்பாளர் மெளலவி எம்.எஸ்.எம். aத், பிரதிப் பணிப்பாளர் மெளலவி எம்.எஸ்.எம். தாkம், அமைப்பின் இணைப்புப் பணிப்பாளர் சபர் சாலி, புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரி அதிபர் மெளலவி அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம், முஹம்மதிய்யா அமைப்பின் பொதுச் செயலாளர் ஏ.எல். கலீலுர்ரஹ்மான், நிதாஉல் ஹைர் அமைப்பின் தலைவர் அஷ்ஷெய்க் எஸ்.எல். நெளபர் சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பின் இலங்கைப் பிரதிநிதி மெளலவி இம்றான், இலங்கை ஹிக்மா மன்றத்தின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.சேகுதீன் உட்பட குவைத், சவூதி, அரோபியா, இந்திய நாடுகளின் முஸ்லிம் அறிஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.