புத் 64 இல. 40

நந்தன வருடம் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா பிறை 20

SUNDAY OCTOBER 07 2012

 

ஆளணி பற்றாக்குறையே மொழிக் கொள்கையை உரிய முறையில் அமுல்படுத்த முடியாமைக்குக் காரணம்

ஆளணி பற்றாக்குறையே மொழிக் கொள்கையை உரிய முறையில் அமுல்படுத்த முடியாமைக்குக் காரணம்

- பதுளை மாநகர ஆணையாளர்

மூவின மக்கள் வாழ்ந்துவரும் பதுளை மாவட்டத்தில் அரச நிறுவனங்களில் தமிழ், சிங்கள மொழிகளில் கடமையாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தமிழும், சிங்களமும் அரச கரும மொழிகளாக வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போதிலும் அதனை நடைமுறைப்படுத்த முடியாத நிலை காணப்படுவதாக பதுளை மாநகர ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

பதுளை மாநகர சபையின் நூலக கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். பதுளை மாவட்ட பிரஜைகள் மன்றத் தலைவர் லயனல் பியதிலக்க தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பதுளை மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் அரச நிர்வாக ரீதியிலான பல பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன் அவற்றுக்கான தீர்வுகள் மற்றும் அவற்றை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் பேசப்பட்டது.

இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய பதுளை மாநகர ஆணையாளர் ஞானா ரட்னாயக்க, ஊவா மாகாண சபை, பதுளை மாநகர சபை உள்ளிட்ட அரச நிறுவனங்களில் தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் கடமையாற்ற வேண்டுமென பணிக்கப்பட்டுள்ளது. எனினும் தமிழ் மொழியில் கடமையாற்றுவதற்கான ஆளணி பற்றாக்குறை நிலவுகிறது. இதன் காரணமாகவே தமிழ் மொழிப் பாவனையை உரிய முறையில் அமுல்படுத்த முடியாதுள்ளது. எனவே புதிதாக நியமிக்கப்படுபவர்களில், தமிழ் மொழியில் கடமையாற்றக் கூடியவர்களை சேவையில் இணைத்துக் கொள்ள வேண்டுமென்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளோம். அரசுக்கு இது தொடர்பாக அறிவித்துள்ளோம். அரசும் இதற்கு ஒத்துழைப்பை வழங்கிவருகின்றது. தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் வாழ்ந்துவரும் இப்பிரதேசங்களில், இருமொழிகளிலும் செயல்பட வேண்டியது அவசியமாகும்.

பதுளை மாநகரசபையின் அடுத்தாண்டு வரவு செலவுத் திட்டம் தொடர்பாக, மாநகர பொதுமக்களின் ஆலோசனைகளைப் பெற்று, அதற்கமைய வேலைத்திட்டங்களை உள்ளடக்கும் நிலையை, முதன்முதலாக ஏற்படுத்தியுள்ளோம். பொதுமக்கள் முன்வைக்கும் ஆலோசனைகளுடன், அவர்கள் முன்னிலைப்படுத்தும் வேலைத்திட்டங்களே அடுத்தாண்டு வரவு செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்படும்.

பதுளை பொது விளையாட்டு மைதானத்தை நவீன மயப்படுத்தி, அதனை தரமுயர்த்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ் விளையாட்டு மைதானத்திற்கருகாமையில் 35 வருடங்களுக்கு மேலாக குவிக்கப்பட்டுவரும் பதுளை மாநகர குப்பை, கூளங்களை அகற்ற வேண்டியுள்ளது. இக்குப்பை, கூளங்களை மலங்கமூலை தோட்டக்காணியில் குவிக்க எடுத்த முயற்சிகளும், பயனளிக்கவில்லை. அதன் பின் ரிதிபானையில் குப்பை கூளங்களை கொண்டுச் செல்ல எடுக்கப்பட்ட முயற்சியும் பயனளிக்கவில்லை. தற்போது, அலுகொல்லை என்ற இடத்தில் குவிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அங்கும் தடை ஏற்படும் பட்சத்தில், இராணுவத்திரின் உதவியுடன் எமது செயற்பாடுகளை முன்னெடுக்க உள்ளோம்.

இக்குப்பை, கூளங்களை வெறுமனே குவித்து வைக்காமல், அவை தரம் பிரிக்கப்பட்டு, வருமானம் கிடைக்கக் கூடியவகையிலான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும். இவ்வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக உடுவரை என்ற இடத்தில் மின்சாரத்தின் மூலம் மாற்று வேலைத்திட்ட தொழிற்சாலை ஆரம்பிக்கப்படவுள்ளது. பதுளை மாநகர சபை எல்லைக்குள் தினமும் 35 தொன்னுக்கு மேற்பட்ட குப்பை கூளங்கள் சேருகின்றன. இக் குப்பை கூளங்கள் நேரடியாக உடுவரையில் அமையும் தொழிற்சாலைக்கு, எடுத்துச் செல்லப்படும். குப்பை கூளங்கள் கொட்டப்படுவதற்கு, மக்கள் எதிர்ப்பினை தெரிவிக்கின்றனர். அவர்கள் மத்தியில் பூரண தெளிவின்மையே அதற்கான காரணமாகும். மலங்காமை தோட்டத்தில் ஏற்பட்ட நிலையும், அதுவே காரணமாகும். தற்போது, அலுகொல்லை என்ற இடத்தில் குப்பை கூளங்களை கொட்டுவது தொடர்பாக மக்களுக்கு பூரண தெளிவினை ஏற்படுத்தியுள்ளோம். இதனையும் மக்கள் செவி சாய்க்காமல், எதிர்ப்பு தெரிவிப்பார்களேயானால், இராணுவத்தினரை ஈடுபடுத்தியாயினும் மேற்படி வேலைத்திட்டத்தினை முன்னெடுக்க வேண்டிய நிலை உருவாகும் என்றார்.

பதுளைப் பொலிஸ் உத்தியோகத்தர் ஏ.வி.அனுர தமதுரையில், சட்டம், நீதி என்று இருந்தபோதிலும், பொலிஸாரும் மனித நேயத்துடன் செயலாற்ற வேண்டும். மனித நேயம் இல்லாவிட்டால், செய்யும் தொழிலில் திருப்தியை எதிர்பார்க்க முடியாது.

பதுளை மாநகரின் பல வீதிகளில் வாகனங்கள் செல்வதற்கான சமிக்ஞை அறிவிப்புக்கள் போடப்படவில்லை. இதனால் வாகன சாரதிகள் நாளாந்தம் பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். வெளிமாகாணங்களிலிருந்து பதுளைக்கு வருவோர், சமிக்ஞை அறிவிப்புக்கள் இல்லாமையினால், பெரும் சிரமங்களுக்குள்ளாகின்றனர்.

வாகன சாரதிகள் குற்றமிழைக்கும்போது, அது பெரும் விபரீதங்களை ஏற்படுத்திவிடுகின்றது. ஆகையினால், சட்டதிட்டங்களுக்கு சாரதிகள் கட்டுப்படல் வேண்டியதும் அவசியமாகும்.

சட்டத்தை மதித்து நடக்கும் சமூகமொன்றினை கட்டியெழுப்ப வேண்டிய பாரிய கடப்பாடு பொலிஸாருக்கு இருக்கிறது. பொலிஸாரின் கடமைகளுக்கு, பொதுமக்களும், பூரண ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும். பொதுமக்களுக்கு எவ்வகையிலும் இடையூறுகள் ஏற்படும்போது பொலிஸார் முன்வந்து, அவ் இடையூறுகளை அகற்றிவிட வேண்டியது அவசியம் என்றார்.

மன்றத்தின் செயலாளர் வஜிர உமங்கிரிய, விவசாய தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆர்.எம்.கிருஸ்ணசாமி ஆகியோரும் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.