புத் 64 இல. 40

நந்தன வருடம் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா பிறை 20

SUNDAY OCTOBER 07 2012

 
INNOCENCE OF MUSLIMS சூத்திரதாரி யாரெனத் தெரியுமா?

INNOCENCE OF MUSLIMS சூத்திரதாரி யாரெனத் தெரியுமா?

இஸ்லாம் இப்படித்தான் இருக்கிறது, கொலை, பயங்கரவாதம், தீயிடுவது, நாங்கள் உண்மையைத்தான் சொல்லுகிறோம். அதிலிருந்து மீளும் வழியைக் கூறுகிறோம். அமைதியான முறையில், நாங்கள் சொல்லுவதற்கு நீங்கள் பதில் தருவீர்கள் என எதிர்பார்க்கிறோம். ஆனால் அவர்கள் இஸ்லாம் என்பது பயங்கரவாதம்தான் என்று உலகிற்கு நிரூபிக்கிறார்கள்.

சகரியா பொட்ரொஸ் ஹேனின் என்பது அவர் பெயர், வயது 77, கறுப்பு அங்கி, நீண்ட தாடி, கழுத்தில் கிறிஸ்தவ சிலுவையுடன் இருக்கும் அவர் எகிப்தின் கொப்டிக் கிறிஸ்தவ பிரிவின் போதகர். இஸ்லாத்தின் நம்பர் 1எதிரி என்ற அடைபெயரும் அவருக்கு உண்டு.

முஹம்மது நபியைப் பற்றி எப்போதும் நிந்திப்பதே அவர் வேலை. INNOCENCE OF MUSLIMS என்ற படத்தின் வீடியோ காட்சிகளை ஆதரித்து இஸ்லாமிய வரலாறு, குர்ஆன், ஹதீஸ் ஆகியவற்றோடு ஒப்பிட்டு பேசுகிறார். இந்த வீடியோவை எதிர்த்தவர்களைக் கண்டித்தும் அவர் கருத்து கூறுகிறார். கொப்டிக் கிறிஸ்தவ பிரிவானது இயேசுநாதரின் சீடர்களில் ஒருவரால் 1900 வருடங்களுக்கு முன்பு எகிப்தில் உருவாக்கப்பட்டது. 80 லட்சம் மக்களைக் கொண்ட அவர்கள் எகிப்தின் ஜனத்தொகையில் 10 சதவீதம் ஆவார்கள்.

1992 முதல் 1996 வரை ஐக்கிய நாட்டு சபையின் செயலாளர் நாயகமாக இருந்த பூத்திரஸ் பூத்திரஸ் காலி எகிப்தைச் சேர்ந்தவர், கொப்டிக் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்தான். இவரது பாட்டனார் 1908 முதல் 1910 வரை எகிப்தின் பிரதமராக இருந்து கொலை செய்யப்பட்டார்.

மேலும் சதாம் ஹுஸைன் காலத்தில் எகிப்தின் வெளிவிவகார அமைச்சராக இருந்த தாரிக் அசீஸ் ஒரு கிறிஸ்தவரே என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்லாமும், கிறிஸ்தவமும் மத்திய கிழக்கில் பிறந்தவையே. ஆகவே அவை ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து இருப்பது ஆச்சரியமல்ல.

சிறுபான்மையினரான கொப்டிக் கிறிஸ்தவர்கள் பல காலம் வன்முறை தாக்குதலுக்கு உட்பட்டே வாழ்ந்துள்ளார்கள் - வாழ்கின்றார்கள். 2010ஆம் வருடம் கிறிஸ்மஸிற்கு முந்திய தினம், தெற்கு எகிப்தில் ஆறு கிறிஸ்தவர்களும், ஒரு முஸ்லிம் காவலாளியும் காரில் சென்றவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். சென்ற வருடம் புது வருட தினத்தன்று அலெக்சான்டிரியாவில் உள்ள செயின்ட்ஸ் தேவாலயத்தில் நடந்த குண்டுவெடிப்பில் பிரார்த்தனைக்கு வந்த 21 கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டார்கள். மூன்று தினங்கள் நடந்த ஆர்ப்பாட்டம் காவலர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே மோதலை உண்டாக்கியது. சகரியா பொட்ரோஸ் ஹேனின் பிரசாரமானது தாய்நாடான எகிப்து, ஈரான், சவூதி அரேபியா போன்ற முஸ்லிம் நாடுகளை எரிச்சலடையச் செய்தது. அல்-கொய்தா அவரது தலைக்கு 60 மில்லியன் டொலர் தருவதாகச் சொன்னதாகவும் சொல்லப்படுகிறது.

ஹொஸ்னி முபாரக்கின் ஆட்சியின் போது முஸ்லிம்களை கிறிஸ்துவத்திற்கு மதமாற்றம் செய்ய முயன்றார் என்ற குற்றச்சாட்டில் பலமுறை இவர் சிறை சென்றுள்ளார். 1990ல் முபாரக் இவரை விடுதலை செய்து நாடு கடத்தினார்.

அவுஸ்திரேலியாவுக்கு பறந்த சகரியா அங்கு தனது கிறிஸ்தவ அமைப்பை உருவாக்கினார். பத்து வருடங்களைக் கழித்தார். அவுஸ்திரேலியாவில் தனது பிரசாரத்தை இவர் அதிகமாக கணனி வழியிலேயே செய்தார். லட்சக்கணக்கான ஆதரவாளர்களை இவர் உருவாக்கினார். பிரதானமாக இஸ்லாத்திற்கு எதிராகவே இவர் உரை இருக்கும். வார்த்தையால் வர்ணிக்க முடியாத முஹம்மது நிந்தனைகளுக்கு அதில் பஞ்சமில்லை.

பின்பு தனது பிரிவு போப் ஆண்டவரோடு ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் அவுஸ்திரேலியாவை விட்டு அமெரிக்கா சென்றார். கலிபோர்னியாவின் ஒரேஞ்ச் கவுன்டி என்ற பகுதியில் சொந்தமாக வீடொன்றை வாங்கி அங்கு குடியேறிய சகரியா, 15 வயது இளம்பெண் ஒருவரைத் திருமணம் செய்தார். வெளியில் அதிகம் தலைகாட்டாது சற்று ரகசியமாகவே அவர் வாழ்ந்தாலும் அவரது பிரசாரம் வேகமாகவே நடந்தது.

அல்-ஹயாத் என்ற பெயரில் நடந்த செட்டிலைட் தொலைக்காட்சி நிறுவனம் 90 நிமிடங்கள் அடங்கிய இவரது உரைகளை தொடர்ந்து ஒளிபரப்பிவந்தது. பின்பு அது நிறுத்தப்பட்டதும் சகரியா சொந்தமாக அல்ஃபாடி (Al-Fady) என்ற தொலைக்காட்சி நிறுவனத்தை உருவாக்கி தொடர்ந்து தனது பிரசாரத்தை மேற்கொண்டார்.

Innocence of Muslims என்ற பட தயாரிப் புக்கும் சகரியாவிற்கும் நேரடி தொடர்பு இல்லா விட்டாலும் அப்படத்தில் வரும் கருத்துக்கள் அனைத்தும் இவரது பிரசாரத்தை அடிப்படையாக வைத்தே உள்ளது. மேலும் அப்பட தயாரிப்பில் சம்பந்தப்பட்ட மும்மூர்த்திகளான நகூலா, ஸ்டீவ் கிளெய்ன், ஜோசப் நஸ்ரெல்லா ஆகியோர் சகரியாவின் பெரிய விசுவாசிகள்.

சகரியா தனது நெருங்கிய நண்பர் என்று ஸ்டீவ் கிளெய்ன் கூறியதோடு அவரை மார்ட்டின் லூதர் கிங் உடன் ஒப்பிட்டும் பேசினார். நஸ்ரெல்லாவின் கிறிஸ்தவ ஏழைகளுக்கு உதவும் அமைப்பின் அலுவலகங்களே இப்படத் தயாரிப்புக்கான அலுவலகங்களாக செயல்பட்டன. நகூலா தான் சிறையிலிருந்த காலத்தில் சிறை அதிகாரிகளிடம் சகரியாவைப் பற்றி பெரிதாகப் புகழ்ந்து பேசியதோடு தன்னை சகரியாவின் தீவிர விசுவாசி என்றும் கூறியுள்ளார்.

மேலும், தான் சிறையில் இருந்த காலத்தில் தான் நகூலா இந்தப் படப்பிடிப்பிற்கான ஆயத்தங்கள் அனைத்தையும் செய்தார். அதன் பொருட்டு இவர் குர்ஆன் மற்றும் இஸ்லாமிய இலக்கியங்களை ஆராய்ந்தனர். படப்பிடிப்பானது 2011 ஆகஸ்டில் ஆரம்பமாயிற்று. நஸ்ரல்லாவும் நகூலாவும் எகிப்தில் இருந்து அமெரிக்காவிற்கு குடியேறியவர்கள்.

இது நிற்க, கடந்த ஜுன் மாதத்தில் இப்படத்தை வெளியிடுவதற்கும் முஸ்லிம்களைக் கவரவும் நகூலா ஒரு தந்திரமான பிரசாரத்தை செய்தார். அதாவது அறபு மொழியில் பிரசுரங்கள் வெளியிட்டு, அதில் ஒசாமா பின்லேடனின் படத்தையும் போட்டு, அதற்கு Innocence of Osama Binladen என்று பெயரிட்டு கலிபோர்னியாவின் சில மஸ்ஜிதுகளுக்கும், இஸ்லாமிய நிறுவனங்களுக்கும் அனுப்பி அவர்களைப் படம் பார்க்க அழைத்துள்ளார்.

ஸ்டீவ் கிளெய்ன் இது பற்றி கூறும் போது கலிபோர்னியாவின் சில மஸ்ஜிதுகளுக்கு நாங்கள் பிரசுரங்கள் அனுப்பினோம். காரணம் ஒசாமா பின்லேடனின் சில ஆதரவாளர்கள் இன்னும் அங்கு உள்ளார்கள் என்று எங்களுக்கு தெரியும். அவர்களை இனம் காண்பதும் இப்படத்தை பார்க்க வைப்பதுமே எங்கள் நோக்கம் என்றார்.

ஜுன் 18ஆம் திகதி வைன் தியேட்டரில் அறபி மொழியில் ஒசாமாவின் படம் போட்டு சில பிரசுரங்கள் ஒட்டப்பட்டதை வருவோர் போவோர் அவதானித்தனர். ஒரே ஒரு காட்சி மட்டுமே என்று அதில் குறிப்பிடப்பட்டும் இருந்தது. பிரசுரம் பெரிதாக இல்லாவிடிலும் கண்ணில்படும்படியாகவே இருந்தது. அப்பகுதிவாசி ஒருவர் கூறும் போது அது ஒரு ஜோக் என்றே நான் நினைத்தேன். எங்களுக்கு அறபி மொழி தெரியாது. ஆனால் அதில் ஒசாமா பின்லேடன் படம் இருப்பதைப் பார்த்ததும் சற்று யோசனையாகவே இருந்தது. இது நல்லதா கெட்டதா என்று புரியவில்லை. இருந்தாலும் சில தினங்களுக்கு அப்பக்கம் போகக்கூடாது என்று நினைத்தேன் என்றார் அவர். ஜுன் 30ஆம் திகதி ஒரு காட்சிக்கு திரையிட்ட அப்படத்தை பத்து பேர் மட்டுமே பார்த்தனர்.

அமெரிக்காவில் உள்ள கிறிஸ்தவ அமைப்புகள் இந்த வீடியோவைக் கண்டித்ததோடு தங்களுக்கும் அப்படத்திற்கும் எத்தொடர்பும் கிடையாது என அறிவித்தன. காரணம் அப்படத்தின் பல இடங்களில் சிலுவை அமைப்புகள் காட்சியளித்தன. ஆகவே இது ஒரு கிறிஸ்தவரால் உருவாக்கப்பட்டது என்ற ஊகம் வலுப்பெற்றது.

மேலும் அங்குள்ள கொப்டிக் கிறிஸ்தவ அமைப்புகள் தங்களது ஆட்சேபனையை இப்படத்திற்கு காட்டியதோடு எகிப்தில் இஸ்லாமிய சக்திமிக்க அரசு பொறுப்பில் இருக்கும்போது இது போன்ற முட்டாள்தனமான செயல்கள் அங்குள்ள கிறிஸ்தவர்களைப் பாதிக்கவே செய்யும் என்றும் கூறின.

புளெரிடாவின் டெரி ஜோன்ஸ் பாதிரியார் குர்ஆன் எரிப்பு என்று வந்த போது எகிப்தின் கிறிஸ்தவர்கள் பாதிக்கப்பட்டனர் என்று அவர்கள் கூறினர். நகூலா என்பவர் யார் என்று இந்த வீடியோ வந்தபின் தான் எங்களுக்கு தெரியும் என்று அவர்கள் கூறினர். சகரியாவை தங்கள் கிறிஸ்தவ பிரிவிலிருந்து பத்து ஆண்டுகளுக்கு முன்பாகவே நீக்கிவிட்டதாகவும் அவர் என்ன செய்கிறார், எங்கிருக்கிறார் என்று எங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் பிஷப் செர்பியன் கூறினார். இது போக, இந்த வீடியோவானது உலக முஸ்லிம்களைக் கொதிப்படையச் செய்ததும் அவர்கள் ஆர்ப்பாட்டங்கள் செய்ததும் அறிந்தவையே. ஆனால் சில இடங்களில் இந்த ஆர்ப்பாட்டங்கள் வன்முறையில் இறங்கியது பல இஸ்லாமிய அறிஞர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

முஹம்மது நபி அவர்களை அவர்களது காலத்திலேயே அவர்கள் காதில் படும்படியே நிந்தித்தவர்கள் பலர் உண்டு. ஆனால் நபி அவர்கள் ஆத்திரமடையவில்லை சபிக்கவில்லை. நபியைத் தூசிப்பவர்களை இரத்தப்பலி எடுக்க வேண்டும் என்று எந்த இஸ்லாமிய குறிப்பும் இல்லை என்று கூறும் அறிஞர்கள் சில தலைவர்களால் முஸ்லிம்கள் அளவுக்கு அதிகமாக-குறிப்பாக இளைஞர்கள் உணர்ச்சி வயப்படுத்தப்பட்டுவிட்டார்கள் என்கிறார்கள்.

மேலும் பலர் இந்த வீடியோவின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை அறியாமலேயே யார் யாரையோ எதிர்த்து நின்றார்கள். கண்டனம் சரி தான், கல்லடி சரியா என்று சென்னையில் உள்ள அமெரிக்க உதவி தூதரகத்தைத் தாக்கியவர்களைக் கேட்கும் இவர்கள் அங்கு பாதிக்கப்பட்ட சாதாரண ஊழியர்களுக்கும் இந்த வீடியோவிற்கும் என்ன சம்பந்தம் என்கிறார்கள்.

மேலும் சுமார் ஐந்து தினங்கள் பல்வேறு அமைப்புகளால் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னையே இயங்கவில்லை. இது எத்தனை பேரின் அன்றாட இயல்பு வாழ்க்கையைப் பாதித்தது என்றும் அம்மக்கள் முஸ்லிம்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்றும் வினவுகிறார்கள்.

அத்தோடு அதே தினத்தில் கூடன்குளம் சம்பந்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று ஒரு தேவாலயத்தின் மைதானத்தில் அமைதியாக நடந்தது என்றும் இவர்கள் கூறுகிறார்கள். என்ன பதில் தருவது? தேவையில்லாது இஸ்லாத்தை இழிப்பவர்களுக்கு எதிர்ப்பைக் காட்டுவது ஒவ்வொரு இஸ்லாமியரின் கடமையே. ஆனால் அதில் வன்முறையை வரவழைத்து நாம் பயணிக்கும் பஸ்களைத் தாக்குவதும் பிறரின் கட்டடங்களைத் தாக்குவதும் பொருத்தமுடையது ஆகாது.

இஸ்லாமியரைத் தூண்ட வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற விஷமத்தனமான காரியங்கள் நடக்கின்றன. இது கடைசி அல்ல. இன்னும் வரலாம். மீண்டும், மீண்டும் முஸ்லிம்கள் கட்டடங்களை உடைப்பார்களா? அப்படியானால் அவர்கள் இஸ்லாம் என்பது பயங்கரவாதம் தான் என்று உலகிற்கு நிரூபிக்கிறார்கள் என்ற Innocence of Muslims சூத்திரதாரியான பொட்ரோஸ் ஹேனின் போன்றோரின் கூற்றிற்கு நாம் பலம் சேர்ப்பது போல் ஆகாது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.