புத் 64 இல. 40

நந்தன வருடம் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா பிறை 20

SUNDAY OCTOBER 07 2012

 
படைப்பாளிகளும் கலைஞர்களும் சிறப்படைய

படைப்பாளிகளும் கலைஞர்களும் சிறப்படைய வழி காட்டியவர் ~தினகரன்' சிவா

ஒருவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றபின் அவரை தேடிச்செல்வோர் தொகை குறைவதும் - அவர் மரணித்த பின் அவர் பற்றிய நினைவுகள் மனதிலிருந்து மறைவதும் இயற்கை. அதற்கு மாறாக நம் நாட்டின் பத்திரிகை உலகில் அதிகம் விற்பனையான தமிழ்ப்பத்திரிகை என்னும் சிறப்பை பெற்றுக்கொண்ட தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியராக தொடர்ந்து முப்பது ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி ஊடகத்துறைக்கு அப்பாலும் தனது முத்திரையை பதித்துக்கொண்ட கலாசூரி ஆர். சிவகுருநாதனை அவர் இயற்கையெய்தி பல வருடங்கள் கழிந்த பின்னரும் அவர் நினைவாக போட்டிகளையும் விழாவையும் பல்வேறு மட்டத்திலுள்ளோர் இணைந்து நடாத்தி நினைவுகூர்ந்தமை சற்று வித்தியாசமான நிகழ்வு தான்.

அவரைப்பற்றி தெரிந்து கொண்டவற்றில் சிலவற்றையாவது பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தை எழுத்தாக்க முயற்சிக்கின்றேன். அரசியல் மாற்றம், நிர்வாகமாற்றம் எல்லாவற்றுக்கும் தாக்குபிடித்து நீண்ட காலம் ஏரிக்கரை நிறுவனத்தில் தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என்பது எவராலும் செய்யமுடியாத சாதனை எனமுக்கியமான பதிவை முதலில் செய்ய விரும்புகின்றேன்.

1967ல் எனது 19வது வயதில் உத்தியோகமாகி கொழும்புக்கு வந்த சில நாட்களில் தங்கியிருந்த வீட்டுக்கு பக்கத்திலிருந்தவர் சிரித்திரன் சஞ்சிகை ஆசிரியர் சிவஞானசுந்தரம் என்பதை அறிந்து அவர் நட்பைப்பெற்றுக் கொண்டேன். அவர் மூலம் தினகரன் சிவகுருநாதன் இளம் படைப்பாளிகள் கலைஞர்களை ஊக்குவிக்கும் செய்திகளையும் அறிந்து கொண்டேன்.

சிவகுருநாதனின் தூண்டுதலும் தொடர்ந்து வழங்கிய ஆதரவும் தினமும் சுந்தரின் சவாரித்தம்பர் சின்னக்குட்டி அம்மான் தமிழ் வாசகர்களிடையே நடமாடவும் ஞாயிறு வாரமலரில் சித்திரகானத்தை ரசிக்கவும் வைத்தது என்று தெரிவித்த போது சிவகுருநாதனை சந்திக்க மனம் விரும்பியது. அடுத்தடுத்து வேறுபலர் மூலமாகவும் அவரது ஆளுமை ஆற்றல்களைப்பற்றி கேள்விப்பட்டதும் சந்திக்கும் ஆவல் அதிகரித்தது.

கல்லூரி மாணவனாக இருந்தபோது ஒரு பெரிய கொப்பியில் பல கதைகளை எழுதி வைத்திருந்தேன். சிரித்திர சுந்தரின் சந்திப்பைத் தொடர்ந்து கொப்பியில் 1963ல் எழுதிய வாசக்கட்டி என்ற சிறுகதையைப்பிரதி எடுத்து 1967 ¦ப்பரவரி மாதம் தினகரனுக்கு அனுப்பினேன். 01-05-1967 தினகரன் வாரமலரில் வாசக்கட்டி சிறுகதை பிரசுரமானது. அதன் பின்னர் உற்சாகம் பிறக்க முதன் முதலாக சிவகுருநாதனைத் தினகரன் அலுவலகத்தில் சந்தித்தேன்.

தரமான கதை என்பதால் தாமதிக்காமல் பிரசுரிக்க ஒழுங்கு செய்ததாக சொன்னார். பலநாள் பழகியது போல சிரித்துக்கதைத்தார். எனது குடும்பப்பின்னணி, நான் படித்த பாடசாலை, கடமையாற்றும் அலுவலகம் பற்றியெல்லாம் விசாரித்தார். இந்த விசாரிப்பு என் மனதில் அவருக்கு உயர்ந்த இடத்தை வழங்கியது. அவர் ஒவ்வொருவருடனும் உண்மையான நட்பு வைத்திருப்பதை பிற்காலத்தில் தெளிவாகத்தெரிந்து கொண்டேன்.

குறிப்பாக எனது பள்ளித்தோழன் பாமா ராஜகோபால் தினகரனில் புதிய பகுதிகள் பலவற்றை எழுத வைத்தார். ராஜகோபால் லண்டனுக்கு இடம் பெயர்ந்த முதல் ஊடகவியலாளன் - லண்டன் மக்கீன் புதினம் பத்திரிகையைத் தொடர்ந்து நடாத்தி வருகின்றார். மானா மக்கீன் எழுதிய லைட் ரீடிங் மூலம் பல விடயங்களை சுவைக்க வைத்தனர் -60களில் முழுப்பக்க புகைப்படக்கதைகள் மூலம் புகைப்படப்பிடிப் பாளர்களையும் நடிகர்களையும் வாசகர்களுடன் பழக வைத்தனர். சென்ற வருடம் இந்தியாவில் நடைபெற்ற நடன நிகழ்வொன்றுக்குச் சென்றிருந்தேன்.

விழா விருந்தினரான கலைமாமணி வி.கே.டி. பாலன் பேசுகையில் தன்னை பேட்டி கண்டு பாமா ராஜகோபால் எழுதி தினகரனில் வெளியான பேட்டிக்கட் டுரையின் பின்னர் தான் மற்றவர்கள் தன்னை அடையாளம் கண்டு கொண்டதாகக் குறிப்பிட்டார். இந்திய சுற்றுலாத்துறையில் சிறந்து விளங்கும் மதுரா ரவல்ஸ் பாலன் இந்தியாவுக்கு வெளியிலும் நன்கு அறியப்பட்ட தொழிலதிபர். சிவகுருநாதன் சந்திப்பும் அவரது பாராட்டும் தொடர்ந்தும் அதிகம் எழுத தந்த சந்தர்ப்பங்களும் அவ்வப்போது சன்மானங்களாக கைகளுக்கு கிடைத்த காசோலைகளும் எழுத்துலகில் எனக்கு ஓரிடம் கிடைக்க வைத்தது.

67-68 தொலைபேசி மூலம் தில்லை எழுது தம்பி. என்ன இன்னும் ஒன்றும் வந்து கிடைக்கவில்லை என்பார். தினகரன் சிவாவின் தூண்டுதலால் அக்காலத்தில் எழுதியவை நிர்வாணம் சிறுகதைத் தொகுப்பாகி இலங்கையிலும் இந்தியாவிலும் மூன்று பதிப்புகள் கண்டு சிங்களத்திலும் மொழிமாற்றம் செய்து இருபதிப்புகள் வெளியானதையும் சர்வதேச மட்டத்தில் பரிசில் பெற்றதையும் கல்யாணம் முடித்துப்பார் என்னும் நகைச் சுவைக்கதைகள் எம்.டி.குணசேன நிறுவனத்தால் மூன்று தடவைகள் பதிப்பிக்கப்பட்டதையும் நன்றியுடன் பதிவு செய்வது எனது கடமை. அகில இலங்கை ரீதியாக பிரமாண்டான தினகரன் நாடக விழா நடைபெற்றது.

தென்னிந்திய திரைப்படநடிகை செளகார் ஜானகி விழாவில் கலந்து கொள்ள இலங்கை வந்த போது கலையரசு சொர்ணலிங்கம் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனை வரவழைத்து கலைக்குரிசில் பட்டம் வழங்கி கெளரவித்தமை தினகரன் சிவா காலத்தில் நடைபெற்ற சில சம்பவங்கள், 60களில் தினகரனில் சலையரசு சொர்ணலிங்கத்தின் நாடக அனுபவங்கள் பல்கலைக்கழக பேராசிரியர்களுடன் அ.ந.கந்தசாமி, சொக்கன், தேவன் யாழ்ப்பாணம், காவலூர் ராஜதுரை, கே.எஸ்.சிவகுமாரன் , நீர்வை பொன்னையன், நெல்லை க.பேரன், போன்றவர்களை மக்களிடையே கொண்டு சென்றவர் சிவகுருநாதன். கலைஞர்கள் படைப்பாளிகளுக்கு ஆசிரிய தலையங்கங்கள் தீட்டி முன்னிலைப்படுத்தியதுடன் அவர்கள் கலந்து கொண்ட நிகழ்வுகளையும் புகைப்படங்களுடன் முக்கிய செய்திகளாக வெளிவர வழி சமைத்தவர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.