புத் 64 இல. 40

நந்தன வருடம் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா பிறை 20

SUNDAY OCTOBER 07 2012

 
தமிழ் கூட்டமைப்பை ஒழுங்கமைக்க வேண்டியது காலத்தின் தேவை

தமிழ் கூட்டமைப்பை ஒழுங்கமைக்க வேண்டியது காலத்தின் தேவை

சுயநலனுக்காக எவருமே இதனை தட்டிக்கழிக்க முடியாது

“வடக்கு, கிழக்கு மக்கள் வீட்டுச் சின்னத்தைக் கருத்திற்கொள்ளவில்லை. அவர்கள் புலிகள் மெளனிக்கப்பட்டதன் பின்னர் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கக் கூடிய ஒரே அமைப்பாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பையே கருதுகிறார்கள். தமிழரசுக் கட்சியின் செல்வாக்கு என்ன என்பதை கிழக்குத் தேர்தலில் கண்டுகொள்ள முடிந்தது. ஆகவே, கூட்டமைப்பை ஒழுங்கமைக்க வேண்டியது காலத்தின் தேவை” என விடாப் பிடியாக நிற்கிறார் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி.

இன்று திரு. சம்பந்தனுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குபவர் என்றுகூடச் சொல்லலாம். கூட்டமைப்புக்கு ஒரு வடிவம் கொடுத்து அதனை வலுவான ஓர் அமைப்பாகக் கட்டியெழுப்ப வேண்டுமென்பதில் சுரேஷ் பிரேமச்சந்திரன் திடமான உறுதிப் பாட்டுடன் இருக்கிறார்.

"கூட்டமைப்பு எதிர்பார்க்கின்ற தீர்வு தொடர்பிலான திட்ட வரைவு ஏதாவது தயாரிக்கப்பட்டுள்ளதா, அப்படியாயின் அதன் சாராம்சத்தைச் சொல்ல முடியுமா?"

"பேச்சுவார்த்தையைத் தொடங்கியபொழுது தீர்வுத் திட்டமொன்றை கூட்டமைப்பு கொடுத்திருந்தது. ஆனால், அந்தத் தீர்வுத் திட்டம் தொடர்பில் அரசாங்கம் இதுவரை எந்தப் பதிலையும் கூறவில்லை. அந்தத் திட்டம் அடிப்படையில் அதிகாரப் பகிர்வை மையமாகக் கொண்டது. அது முழுமையாக வெளியிடப்படவில்லை. ஆனால், ஓர் ஆங்கிலப் பத்திரிகை அதன் சில பகுதிகளை ஏற்கனவே வெளியிட்டிருந்தது. அது வெறும் மூன்று நான்கு பக்கங்களைக்கொண்ட ஒரு தீர்வுத் திட்டமாகும். விசேடமாக காணி, பொலிஸ் அதிகாரங்கள், ஆளுநரின் அதிகாரம் தொடர்பில் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தத் தீர்வுத் திட்டம் முழுமையாக வெளிவரும்போது மேலதிகமாக அறிந்துகொள்ள முடியும்."

"போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தொழில் துறை முன்னேற்றம் அல்லது பிற உதவிகளை வழங்குவதற்கான பொறிமுறை எதனையும் கூட்டமைப்பு இதுவரை முன்வைக்கவில்லை. அதற்கான தாமதம் அல்லது காரணம் என்ன?"

"தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆரம்பத்தில் உள்நாட்டில் ஒரு சொந்த நிறுவனத்தை உருவாக்க முயற்சித்தது. ஆனால், ஓர் அரசியல் கட்சி என்ற வகையில் அதனைத் தனித்துச் செயற்படுத்த முடியாது என்பதால் அதற்கான பணிகள் முழுமையடையவில்லை. இலங்கையைப் பொறுத்த வரை ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் செயற்படுவதாயிருந்தால், பாதுகாப்பு அமைச்சில் பதிவுசெய்ய வேண்டும். எனவே, இவ்வாறான திட்டங்களைச் செயற்படுத்துவதாக இருந்தால் பல்வேறு தடைகள், தடங்கல்கள் ஏற்படக்கூடும். இந்த நிலையில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் வெளிநாடுகளில் உள்ளவர்களின் உதவியுடன் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார்கள். ஆனால், அது ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட திட்டமாக இல்லை என்பதுதான் உண்மை. இந்தத் திட்டத்தைச் செயற்படுத்துவதற்கான ஓர் நிறுவனத்தைத் தொடங்குவதற்கான யாப்பு முதலானவற்றைக்கொண்ட பொறிமுறையொன்றை கூட்டமைப்பு தயாரித்திருந்தாலும் அதற்கு இன்னமும் பாதுகாப்பு அமைச்சின் அங்கீகாரம் கிடைக்கவில்லை. கிடைத்தாலும்கூட அந்த நிறுவனத்திற்குக் கிடைக்கும் பணம், உதவிகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சுக்குக் காண்பிக்கவேண்டிய நிலைமையே காணப்படுகிறது."

"தமிழ்த் தேசிய கூட்டமைப்பைப் பதிவு செய்வதற்குத் தமிழரசுக் கட்சிதான் தடையாக இருக்கிறதென்று நீங்கள் அறிக்கையொன்றை விடுத்திருந்தீர்கள், இதற்கு ஆதாரம் எதுவும் உள்ளதா?"

"இதற்கு ஆதாரம் என்ன வேண்டும். கூட்டமைப்பு பதிவுசெய்யப்பட வேண்டும் என்பதை எல்லோரும் சொல்கிறார்கள். ,அந்த அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நான் கோரியிருந்தேன். கூட்டமைப்பு ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் நிறுவனமாக

உள்ளதா, அதற்கான செயற்குழு, மத்திய குழு, பிராந்தியங்களில் கிளைகள் போன்றவற்றைக் கொண்டிருக்கின்றதா என்று திரு. சம்பந்தன், மாவை சேனாதிராசா மற்றும் உயர் மட்டத்தில் உள்ளவர்களிடம் நீங்கள் கேட்கலாம். அவர்கள் ஆம் என்று சொன்னால், நான் சொல்வது பிழையான முடிவாக இருக்கும்."

"அப்படியென்றால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பதிவுசெய்வதற்குத் தேர்தல் திணைக்களத்திற்கு விண்ணப்பித்து அது நிராகரிக்கப்பட்டிருக்கிறதா?"

ஆம். மிகவும் கஸ்டப்பட்டு திரு. சம்பந்தனைச் சந்தித்து கட்சியைப் பதிவுசெய்வதற்கான விண்ணப்பத்தை 2011 ஆம் ஆண்டு தேர்தல் திணைக்களத்தில் கொடுத்திருந்தோம். பதிவிற்காகச் சில மேலதிகத் தகவல்கள் கொடுக்கப்பட வேண்டும். அதாவது கட்சிகளின் ஒப்புதல் கடிதங்கள் கொடுக்கப்பட வேண்டும். ஏனைய சகல கட்சிகளும் வழங்கியிருந்தபோதிலும், தமிழரசுக் கட்சி மாத்திரம் அந்தக் கடிதத்தைச் சமர்ப்பிக்கவில்லை. அதனால் அது நிராகரிக்கப்பட்டது."

"சில சந்தர்ப்பங்களில் நீங்கள் திரு. சம்பந்தனுக்கு எதிராக அறிக்கைகளை விடுத்திருக்கிaர்கள். ஆனால், அறிக்கைகளுடன் எல்லாம் முடிந்துவிடுவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறதே, இதனைப் பற்றி என்ன சொல்ல விரும்புகிaர்கள்?"

குற்றஞ்சாட்டுவதற்காக நான் அறிக்கைகளை விடுக்கவில்லை. திரு. சம்பந்தன் அவர்களை நாங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டிருக்கின்றோம். ஆகவே, தலைவர் என்பவர் தவறுவிடும்போது அதனைச் சுட்டிக்காட்டுகின்றோம். தவறைத் திருத்திக்கொள்வதற்கான விமர்சனத்தையே நான் முன்வைத்திருக்கின்றேன். கூட்டமைப்பு ஒழுங்கமைக்கப்பட்டு ஒருமித்துச் செயற்படும் ஓர் அமைப்பாகச் செயற்படுத்த வேண்டும் என்று மிக நீண்டகாலமாகவே வலியுறுத்தி வருகின்றோம். இதுவே அனைவரதும் விருப்பம்.

ஆனால், எதுவுமே நடைபெறவில்லை. எனினும் வெகு விரைவில் இதனை ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை முடித்துவிடலாம் என்று எதிர்பார்க்கின்றேன்."

"தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வெற்றி வீட்டுச் சின்னத்திலேயே தங்கியிருப்பதாகத் தமிழரசுக் கட்சியினர் தெரிவிக்கின்றனர். ஆகவே தமிழரசுக் கட்சி இல்லாமல் தவிர்த்துப் பயணிப்பதால் வெற்றிபெற முடியாது என்று அவர்கள் கூறுகிறார்கள். இதற்கு நீங்கள் என்ன கூறுகிaர்கள்?"

"வடக்கிலும் சரி கிழக்கிலும் சரி, மக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக பார்க்கிறார்களே தவிர வீட்டுச்சின்னத்தை அல்ல. இதனை கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அவதானிக்கலாம். மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி ஒன்பது வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது. ஆனால், கூட்டமைப்பில் உள்ள ஏனைய கட்சிகளைச் சேர்ந்த நான்கு வேட்பாளர்கள் வெற்றி பெற்றார்கள். தமிழரசுக் கட்சி ஒன்பதுபேரை களமிறக்கியும் பயனில்லை. ஆகவே, மக்கள் கூட்டமைப்பாகவே பார்க்கிறார்களேதவிர வீட்டுச் சின்னத்தை அல்ல என்பது தெளிவாகிறது. தமிbழ விடுதலைப் புலிகள் மெளனிக்கப்பட்டதன் பின்னர் மக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பே அரசாங்கத்திற்கு அழுத்தத்தைக் கொடுக்கக்கூடிய ஒரே அமைப்பாகக் கருதுகிறார்கள். ஆகவே, வீட்டுச் சின்னத்தையே விரும்புகிறார்கள் என்பது ஒரு பிழையான கருதுகோள்."

"கிழக்கு மாகாணத் தேர்தலில் தமிழரசுக் கட்சி ஏனைய கட்சிகளுக்கு சந்தர்ப்பங்களைக் குறைத்தே வழங்கியதாக ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. இந்த நிலையில் அவர்களை எதிர்ப்பவர்கள் என்பதைக் காரணம் காட்டி, எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் உங்களை போன்றவர்களின் வாய்ப்பு பறிக்கப்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?"

"பறிக்கப்படலாம்..பறிக்கப்படலாம். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஒரு வடிவமாக இல்லாத காரணத்தால் தமிழரசுக் கட்சி தாம் நினைத்தவாறு செயற்பட முனையலாம். கூட்டமைப்புக்கென்று ஒரு கட்டுக்கோப்பான வடிவம் இருக்குமாகவிருந்தால், போட்டியிடுபவர்கள் யார் என்றெல்லாம் கூட்டாகவிருந்து தீர்மானிக்க முடியும். தேர்தலுக்கு மாத்திரமின்றிப் போராட்டங்களை முன்னெடுப்பதென்றாலும் வலுவான ஓர் அமைப்பு அவசியம். அதற்காகவே அதனைப் பதிவுசெய்ய வேண்டும் என்று கோருகிறோம். அப்படிச் செய்தால் இந்தக் கேள்விக்கு இடமிருக்காது."

"கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகள் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலை மீறிச் செயற்பட முடியாது என்று கூறப்படுகிறதே..இந்தத் தகவல் உங்களுக்கு ஏற்புடையதாகின்றதா?"

"மீறிச்செயற்பட முடியாது என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்தியாவுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருக்கிறது. ஆனால், கூட்டமைப்பின் நிலைப்பாட்டை இந்தியாவிற்குத் தெளிவுபடுத்த வேண்டும். அப்படி தெளிவுபடுத்துவதில் தவறு இருக்குமாகவிருந்தால் அது

சீர்செய்யப்பட வேண்டும். இந்தியாவுடனோ அல்லது ஏனைய நாடுகளுடனோ உறவை வலுப்படுத்த வேண்டும் என்பது முக்கியமான விடயம். இலங்கையின் இன்றைய காலகட்டத்தில் தேசிய இனப்பிரச்சினை என்பது வெறுமனே உள்நாட்டுப் பிரச்சினை அல்ல. அதில் உலக நாடுகள் பல தலையிட்டுள்ளன. இதில் இந்தியாவினுடைய பங்களிப்பு மிகப்பாரிய அளவில் இருக்கின்றது. ஆகவே இந்தியாவை தமிழ் மக்களுக்குச் சாதகமாக்கிக்கொள்வதுடன் சர்வதேசத்தையும் தமிழ் மக்களுக்குச் சாதமாகக் கொண்டு வர வேண்டிய தேவை இருக்கிறது. இதனை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. அதேசமயம், அவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டு அவர்களின் செயற்பாடுகளுக்கு ஏற்ப நடக்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்கவும் முடியாது. எங்களுடைய நிலைப்பாட்டை எடுத்துச் சொல்லி அவர்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும்."

"முன்னாள் போராளிகளின் விடுதலை தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கை எதனையாவது எடுத்திருக்கிறதா?"

முன்னாள் போராளிகள் எனக்கூறும்போது இதில் இரண்டு பிரிவினர் இருக்கிறார்கள். அதாவது யுத்தத்திற்கு முன்னர் பல்வேறு குற்றச்சாட்டுகளின்பேரில் கைது செய்யப்பட்ட பலர் மிக நீண்டகாலமாக எதுவிதமான விசாரணைகளும் இன்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களின் விடுதலை தொடர்பில் தற்போது போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பல நாடுகள் ஊடாகவும் மனித உரிமை அமைப்புகள் ஊடாகவும் அரசாங்கத்திற்கு அழுத்தங்களைக் கொடுத்து வருகிறோம். ஆனால், விசேட நீதிமன்றங்களை நிறுவி விசாரணைசெய்து நடவடிக்கை எடுப்பதாக அரசாங்கத்தரப்பில் சொல்லப்பட்டிருப்பினும் ஆக்கபூர்வமாக எதுவும் நடக்கவில்லை. அடுத்ததாக யுத்தத்தின்போது கைதுசெய்யப்பட்டவர்கள் அல்லது சரணடைந்தவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டு வருகிறார்கள். இன்னும் பலர் விடுவிக்கப்பட இருக்கிறார்கள். ஆனால், இதில் முக்கியமான விடயம் என்னவென்றால், கைதுசெய்யப்பட்டவர்கள் சரணடைந்தவர்களுள் நூற்றுக்கணக்கானவர்கள் காணாமற்போய் உள்ளார்கள். இதுவே பாரிய பிரச்சினையாக உள்ளது. இது தொடர்பாக நல்லிணக்க ஆணைக்குழு முன்வைத்த பரிந்துரைகளின்படியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே நாங்கள் எங்கள் நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றோம்."

"தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெளிநாட்டில் புதிய கிளையொன்றை ஆரம்பிக்கப்போவதாக அறியப்படுகிறது. உள்நாட்டிலேயே இன்னமும் பதிவு செய்யப்படாத நிலையில் வெளிநாட்டில் கிளையை ஆரம்பிப்பது உங்களுக்கே முரண்பாடாகத் தெரியவில்லையா? இதனால் எதனைச் சாதிக்கப்போகிaர்கள்?"

"உண்மைதான். கூட்டமைப்பு பதிவுசெய்யப்படும் என்ற நம்பிக்கையில் இங்கிலாந்தில் கிளையொன்றை நானே ஆரம்பித்தேன். ஆனால் கட்சி பதிவுசெய்யப்படாமல் பிரச்சினைக்குள்ளாகிவிட்டது. கனடாவில் கிளை ஒன்று இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், அந்தக் கிளைக்கும் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் எந்த அரசியல் கட்சிக்கும் தொடர்பில்லை. சிலவேளை பாராளுமன்ற உறுப்பினர்கள் தனிப்பட்ட ரீதியில் தொடர்புகளைக் கொண்டிருக்கலாம். அதேபோன்று அவுஸ்திரேலியாவிலுள்ள கிளையுடனும் யாராவது தொடர்புகளை வைத்திருக்கலாம். எம்முடன் எதுவும் பேசப்படவில்லை."

ஆனால், கூட்டமைப்பில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், சுமந்திரன் போன்றவர்கள் அவுஸ்திரேலியா சென்று புதிய கிளையைத் திறந்துவைக்கப்போவதாகத்தான் தகவல்கள் கசிந்துள்ளன, இதற்கு என்ன சொல்கிaர்கள்?"

"அப்படி நடக்குமாகவிருந்தால் அது நிச்சயமாக கூட்டமைப்பின் கிளையாக அன்றித் தமிழரசுக் கட்சியின் கிளையாகத்தான் இருக்கும். ஏனென்றால், இதுபற்றிக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் எந்தக் கட்சியுடனும் கலந்துரையாடப்படவில்லை. நீங்கள் கூறும் இருவரும் மிக அண்மையில் அரசியலுக்கு வந்தவர்கள். எனவே அப்படி செயற்பாடு முன்னெடுக்கப்படுமாக இருந்தால் அது கூட்டமைப்பின் முடிவாக இருக்காது."

"புலத்தில் கனடா உட்பட பல நாடுகளில் கூட்டமைப்புக்கென்று நிதி சேகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி எவ்வாறு செலவிடப்பட்டுள்ளது என்பதைப்பற்றி உங்களுக்கு ஏதாவது தகவல் தெரியுமா?"

"எனக்கொன்றும் தெரியாது. ஏனென்றால் கூட்டமைப்புக்கென்று இதுவரை முறையான ஒரு வங்கிக் கணக்கு கிடையாது. நிதிக்குழுவும் கிடையாது. தமிழரசுக் கட்சி தனக்கென்று ஒரு தனிக்கணக்கை வைத்திருக்கின்றது. ஆகவே தமிழரசுக் கட்சிக்கே நிதி வருகின்றது. அவர்கள்தான் செலவுசெய்கிறார்கள். அதற்கான கணக்கு விபரங்கள் எதுவும் எமக்குத் தெரியாது."

"தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து செயற்படும் முனைப்புகள் இருக்கின்றனவா?"

"நிச்சயமாக. நான் திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறேன். மீண்டும் பேச இருக்கின்றோம். எதிர்காலத்தில் இணைந்து செயற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன."

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.