புத் 64 இல. 40

நந்தன வருடம் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா பிறை 20

SUNDAY OCTOBER 07 2012

 
TNA க்குள் குழப்பம்

நிதி விவகாரங்களை பங்காளி கட்சிகளுடன் பகிர மறுக்கும் தமிழரசுக் கட்சி;

TNA க்குள் குழப்பம்

சம்பந்தன் - சுரேஸ் முறுகல் தொடர்வு: தீர்வு இல்லையேல் புதிய கட்சி உருவாகும் நிலை

o கூட்டுக் கட்சிகளுக்கு தெரியாமலே வெளிநாடுகளில் கிளையா?
o புலத்திலிருந்து வரும் பாரிய நிதியை தமிழரசுக் கட்சி கையாடல்!
o காலப் போக்கில் கூட்டுக்கட்சிகளை கழற்றி விடுவதே நோக்கம்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் ஏனைய பங்காளிக் கட்சிகளை இலங்கையில் மாத்திரமன்றி சர்வதேச ரீதியாகவும் அந்நியப்படுத்திவிட்டு இலங்கை தமிழரசுக் கட்சியை முன்னிலைப்படுத்த அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் முயற்சித்து வருவதாகத் தகவல் கசிந்துள்ளது.

இதன் ஓர் அங்கமாக, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் கலந்தா லோசனை நடத்தாமல் கட்சிக் கிளை அலுவலகங்களை வெளிநாடு களில் திறப்பதற்குத் தமிழரசுக் கட்சியினர் நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளனர். இந்நடவடிக்கை கூட்டமைப்பிற்குள் புதிய குழப்பத்தைத் தோற்றுவித்துள் ளதாக நம்பகரமான கூட்டமைப்பு வட்டாரங்கள் மூலம் தெரிய வருகின்றது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பை இலங் கையிலேயே பதிவு செய்யாத நிலையில், வெளிநாடுகளில் கிளைகளைத் திறப்பதன் உள்நோக்கம் யாதெனப் பங்காளிக் கட்சிகள் கேள்வி எழுப்புவதால், தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்திற்குப் புதிய நெருக்கடி தோன்றியுள்ளது.

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் அகதிகளுக்கான மறுவாழ்வுக்காக அனுப்பிவைக்கும் நிதியைத் தமிழரசுக் கட்சியே அதன் வங்கிக் கணக்கிலிட்டுச் செலவு செய்து வருவதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி.குற்றஞ்சாட்டியிருக்கும் நிலையில், அவுஸ்திரேலியாவில் புதிய கிளையொன்றைத் திறக்கும் முயற்சியில் தமிழரசுக் கட்சி ஈடுபட்டுள்ளதாகவும் அந்தக் கிளையைத் திறந்துவைப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரனும் ஸ்ரீதரனும் அவுஸ்திரேலியா செல்லவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீளக் குடியமர்ந்த மக்களுக்கு வாழ்வாதார உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்காகத் தன்னார்வ தொண்டு நிறுவனமொன்றை ஸ்தாபிக்க முன்பு கூட்டமைப்பு நடவடிக்கை எடுத்திருந்ததாகவும், ஆனால் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைக்காததால் அந்தப் பணி கிடப்பில் போடப்பட்டிருப்பதாகவும் சுரேஷ் எம்.பி தெரிவித்துள்ளார். அதேநேரம், உள்ளூரில் நிதி திரட்டும் பணியிலும் தமிழரசுக் கட்சியினர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் நிதியை முறையாகச் செலவு செய்வதற்கான நிதிக் குழுவோ, வங்கிக் கணக்கோ இல்லாத நிலையில் தமிழரசுக் கட்சி நிதியினைச் சேகரித்து தம் விருப்பப்படி செலவு செய்து வருவதாலேயே, கூட்டமைப்பை பதிவு செய்வதில் அங்கத்துவக் கட்சிகள் விடாப்பிடியாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டமைப்பைக் கட்டுக்கோப்புடன் ஒழுங்கமைக்க வேண்டுமெனப் பங்காளிக் கட்சிகள் பிடிவாதம் பிடிப்பதும் அதனை திரு. சம்பந்தன், மாவை சேனாதிராஜா முதலான தமிழரசுக் கட்சியினர் ஒத்திப்போடுவதன் பின்னணியில் நிதி விவகாரம் வெளியில் வராத விடயமாக உள்ளதென்று தற்போது தெரியவந்துள்ளது.

கூட்டமைப்பை பதிவு செய்யாமல் இழுத்தடித்துச் சென்று காலப்போக்கில் அதன் பங்காளிக் கட்சிகளை ஓரங்கட்டிவிடும் உள்நோக்கத்துடன் தமிழரசுக் கட்சியினர் திட்டமிட்டுச் செயற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது இவ்வாறிருக்க, கூட்டமைப்பைப் பதிவு செய்வதில் தமிழரசுக் கட்சி பின்வாங்கும் பட்சத்தில் அந்தக் கட்சியைப் புறந்தள்ளிவிட்டு எஞ்சிய நான்கு கட்சிகளும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் இணைத்துக்கொண்டு கூட்டமைப்பாகப் பயணிக்கும் சாத்தியம் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதய சூரியன் சின்னத்தின் கீழ் தமிழ்த் தேசிய கூட்டமைப்பைப் பதிவு செய்து வலுவான ஓர் அமைப்பாக அதனைக் கட்டியெழுப்புவது பற்றி தமிழரசுக் கட்சியைத் தவிர்ந்த ஏனைய கட்சிகள் ஆலோசித்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தன.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.