புத் 64 இல. 40

நந்தன வருடம் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா பிறை 20

SUNDAY OCTOBER 07 2012

தமது வேட்டிகளை தாமே உரியும் தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர்கள்

தமது வேட்டிகளை தாமே உரியும் தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர்கள்

நெடுங்காலமாக பனிப்போராக இருந்து வந்த தமிழ்த் தேசியக் கூ:ட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையேயான உட்கட்சிப் பூசல் தற்போது சந்தி சிரிக்கும் வகையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஒரு காலத்தில் தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர்கள் பதவிகளுக்கு ஆசைப்படாதவர்கள், கொள்கைகளிலிருந்து ஒருபோதும் விலகாதவர் கள், பணத்திற்குச் சோரம் போகாதவர்கள் என்று ஏனைய கட்சித் தலைவர்களாலும், நாட்டிலுள்ள பெரும்பான்மை மக்களாலும் உதாரணம் காட்டிப் பேசப்பட்டவர்கள். ஆனால் இன்று அந்நிலை கேள்விக்குரிய தொன்றாகிவிட்டது.

வடக்கு, கிழக்கில் இன்றுள்ள நிலையில் தமக்குரிய ஒரே பலம் தமிழ்க் கூட்டமைப்பே என நினைத்திருக்கும் தமிழ் மக்களின் நம்பிக்கையில் சம்பந்தன் - சுரேஷ் பிரேமச்சந்திரன் முறுகல் மண் அள்ளிப் போடுவ தாக அமைந்துள்ளது. தமக்குள் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டிய உட்கட்சி விடயங்களை ஊடகங்களுக்குத் தெரிவித்து தாமும் மற்றைய கட்சிகளின் அரசியல்வாதிகள் போலவே என்பதை மக்களுக்குக் காட்டிவிட்டனர். இவ்வளவு காலமும் இவர்கள் இந்த நினைப்புடன்தான் தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் செய்து வந்துள்ளனர் என்பதை இப்போது விளங்கிக் கொள்ள முடிகிறது.

புலிகள் தமது காலத்தில் ஆயுதத்தால் இவர்களைக் கட்டிப் போட்டு வைத்திருந்தமையே உண்மை. இன்று புலிகள் இல்லை என்றதும் சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்ற முன்னாள் ஆயுதக் குழுக்களின் தலைவர்கள் இப்போது தமது ஆயுதமேந்திப் போராடிய காலத்தில் இருந்த காட்டுத் தர்பார் பாணியைக் காட்டத் தலைப்பட்டுள்ளனர். தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் புலிகளிடம் பயந்து நடுங்கியதை சுரேஷ் பிரேமச்சந்திரன் நேரடியாகவே கண்டவர். அந்த பயத்தை இப்போது தான் ஏற்படுத்தி காரியத்தைச் சாதிக்க முற்படுவதே உண்மை. ஆனால் இதற்கு மக்கள் சம்மதிக்க வேண்டுமே.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்ய வேண்டும், கணக்கு வழக்குகள் முறையாகப் பேணப்பட வேண்டும், கூட்டுக் கட்சிகளுக்கு சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று சில குற்றச்சாட்டுக்களை சுரேஷ் பிரேமச்சந்திரன் முன்வைத்தாலும் அவரது குறிக்கோள் தமிழர சுக் கட்சியினால் புதிதாக உள்வாங்கப்படும் படித்த அல்லது பழுத்த அரசியல்வாதிகள் எவரும் தானிருக்கும்வரை தலைமைக்கு குறிவைக்கக் கூடாது என்பதே ஆகும்.

சரி அவ்வாறே சம்பந்தன் அவர்கள் சுரேஷின் ஆதங்கத்தைப் போக்க அவரது வேண்டுகோளை நிறைவேற்றி தமிழ்க் கூட்டமைப்பைக் கட்சியாகப் பதிவு செய்தால் இப்போது சேறடிக்கும் பிரேமச்சந்திரன் அதற்குப் பின்னர் சேறடிக்க மாட்டார், தூற்றமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்? சுரேஷ் பிரேமச்சந்திரன் வெளியிட்ட நீண்ட அறிக் கைக்கு சம்பந்தர் எதுவாக இருந்தாலும் கட்சிக்குள் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று பெருந்தன்மையோடு சொன்னார். அதுதான் எமது கருத்தும். சுரேஷ் பிரேமச்சந்திரன் “கூட்டமைப்பிற்கு ஒரு சரியான யாப்போ, அன்றி அதற்கான ஒருவடிவமோ இதுவரை இல்லை. அது மட்டுமன்றி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கான ஒரு பொதுச்சின்னமோ கொடியோ எதுவும் கிடையாது” என்கிறார். பின்பு எப்படி தன்னை மட்டும் அதன் உத்தியோகப் பேச்சாளர் என்று ஓயாது சொல்லிக் கொண்டிருக்கிறார்?

மட்டக்களப்பில் ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற கட்சிகளுக்கு 4 இடத்தில் வெற்றி என்கிறார். ஆனால் தமிழரசுக் கட்சி வேட்பாளர்கள் வென்றால் மக்கள் தமிழரசுக் கட்சிக்குப் போடவில்லை. த.தே.கூட்டமைப்புக்குப் போட்டார்கள் என்று குழந்தைப் பிள்ளை போன்று பேச்சை மாற்றுகிறார்!

தமிழரசுக் கட்சிதான் தமிழ்க் கூட்டமைப்பில் உள்ள பெரிய கட்சி. அப்படியிருந்தும் கடந்த தேர்தலில் கூட்டமைப்பில் உள்ள ஏனைய கட்சிகளுக்கு 11 இடங்களை ஒதுக்கிக் கொடுத்தது. அதாவது நாலில் ஒன்று. ஆனால் பிரேமச்சந்திரன் “13 வேட்பாளர்களை நியமிக்க வேண் டிய திருமலை மாவட்டத்தில் தமிழரசுக் கட்சிக்கு 10 இடங்களும், ஏனைய நான்கு கட்சிகளுக்கு 3 இடங்களும் கொடுக்கப்பட்டன. 14 வேட்பாளர்களை நியமிக்க வேண்டிய மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சிக்கு 9 இடங்களும் ஏனைய நான்கு கட்சிகளுக்கு 5 இடங்களும் ஒதுக்கப்பட்டன. அதேபோன்றுதான் அம்பாறை மாவட்டத்திலும் நடைபெற்றது. இவ்வாறான ஒரு சர்வாதிகார தேர்தல் கூட்டைத்தான் சம்பந்தன் விரும்புகிறார்போல் தெரிகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்படாமல் இருப்பதன் மூலம் சம் பந்தன் பேசுவதையும் செய்வதையும் ஏனையோர் கேட்டு ஏற்றுக்கொள்ள வேண்டுமெனத் தமிழரசுக் கட்சி விரும்புகின்றது” எனப் புலம்புகிறார்.

திருமலை மாவட்டத்தில் வெற்றியீட்டியவர்களும் தமிழரசுக் கட்சியைக் சார்ந்தவர்கள் அல்லர். அவர்கள் மூவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பென்றே வெற்றியடைந்தவர்கள். இவ்வாறே அம்பாறை மாவட்டத்திலும் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கே வாக்களித்து வெற்றிபெற வைத்துள்ளனர். எனவே மக்கள் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பிற்கு வாக்களித்தார்களே தவிர, தமிழரசுக்கட்சிக்கல்ல என்பதை இனியாவது புரிந்துகொள்ளுங்கள் என்கிறார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

ஆக தமிழரசுக் கட்சி வேட்பாளர்கள் வெற்றிபெற்றால் அவர்கள் த.தே.கூ என்ற காரணத்தினால் வெற்றி பெற்றார்கள். ஐந்து கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் அது அந்த கட்சிகளின் செல்வாக்கால் வெற்றி பெற்றார்கள் என்கிறார். இது என்ன நியாயம்? தலை விழுந்தால் எனக்கு வெற்றி. பூ விழுந்தால் உனக்குத் தோல்வி என்கிறார் பிரேமச்சந்திரன்.

தமிழரசுக் கட்சி 11 இடங்களை ஒதுக்கிக் கொடுத்ததே பெரிய காரியம். கூட்டு வைத்துள்ள ஐந்து கட்சிகளுக்கும் வேட்பாளர்கள் சமமாகப் பிரிக்க வேண்டும் என்று கேட்டு, பின்னர் 50:50 கேட்டு அதுவும் கிடைக்கவில்லை என்ற பின்னர்தான் 11 இடங்களை ஏற்றுக் கொண்டார்கள். வேட்பாளர் எண்ணிக்கையில் ஐந்தில் ஒன்று கேட்பது, பின்னர் பாதி கேட்பது என்ன அடிப்படையில் நியாயம்? அப்படிக் கொடுத்த இடங்கள் போதாதென்றால் தனித்துப் போட்டியிட்டிருக்க லாமே? ஏன் செய்யவில்லை? அரசியல் தற்கொலைக்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் தயார் இல்லை என்பதுதானே காரணம்?

கடந்த பாராளுமன்ற தேர்தலில் தனித்துக் கேட்ட ஆனந்தசங்கரி யாரின் லெட்டர் பாட் கட்சிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் கிடைத்த வாக்குகள் வெறுமனே 4,424 தான்! திருகோணமலை மற்றும் அம்பாறையில் அந்தக் கட்சி போட்டியிடவே இல்லை! ஆக மொத்தம் 44 வேட்பாளர்களில் ஆனந்தசங்கரியின் கட்சிக்கு 9 இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்று பிரேமசந்திரன் நினைக்கிறாரா? அப்படி நினைத்தால் அது புத்திசாலித்தனமா?

த.தே.கூயை உள்ளிருந்து கொண்டு குடைச்சல் கொடுக்கிற, அதனைச் சிதைக்கிற பிரேமச்சந்திரன் த.தே.கூ. பதிவு செய்யப்பட்ட பின்னர் குடைச்சல் கொடுக்க மாட்டார், சிதைக்க மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்? ஜெனிவாவுக்கு போவதில்லை என்று கூடிப் பேசி முடிவு எடுத்து பின்னரும் யாழ்ப்பாணத்தில் செய்தியாளர் மாநாட்டைக் கூட்டி அந்து முடிவுக்கு எதிராகப் பேசியது எந்தவகை உட்கட்சி ஜனநாயகம்?

ஆனந்தசங்கரி தமிழர் விடுதலைக் கூட்டணியையும் அதன் சொத்துக்களையும் கைப்பற்றியது போல பிரேமச்சந்திரன் த.தே.கூ கடிதத் தலைப்போடு நடையைக் கட்ட திட்டமிடுகிறாரா? ததேகூ இல் இருக்கும் ஏனைய கட்சித் தலைவர்கள் அறிக்கைகள் எதுவும் விடவில்லை. இவர் மாத்திரம் ஏன் அறிக்கைகள் விட்டுக் கொண்டிருக் கிறார்? ஏனைய கட்சிகள் சார்பாக பேசும் பிரேமச்சந்திரன் அந்தக் கட்சிகளைக் கேட்டுவிட்டா? அவர்களோடு பேசிவிட்டா? இப்படியான அறிக்கைகளை செய்தித்தாள்களுக்கு விடுக்கிறார்?

த.தே.கூ. பதிவு செய்வதாக வைத்துக் கொள்வோம். அதன்பின் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியைக் கலைக்க பிரேமச்சந்திரன் சம்மமதமா? ஐந்து கட்சிகளும் தனித்தனியாக இயங்க ஆரம்பித்தால் ஒருவர்மீது ஒருவர் சேறடிக்க முயற்சிப்பார்களா அல்லது ஒற்றுமையுடன் செயற்படுவார்களா? என்று பிரேமச்சந்திரன் ஒரு பாமரத்தன்மையான கேள்வியைக் கேட்கிறார். இப்போது சேறடிக்கும் பிரேமச்சந்திரன் ததேகூ பதிவு செய்து விட்டால் மாத்திரம் சேறடிக்க மாட்டார், தூற்ற மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்? திரு சம்பந்தனை பெயர் சொல்லி ஒருமையில் பேசுகிறவர் அப்புறம் அஃறிணையில் பேச மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு த.தே.கூட்டமைப்போடும் பாரதூரமான கருத்து வேற்றுமை இருப்பதாகத் தெரிகிறது. தமிழரசுக் கட்சியின் முதன்மை வகிபாகம் பற்றி கருத்து முரண்பாடு இருக்கிறது. “கூட்டமைப்பைச் சிதைக்கும் நடவடிக்கையை தமிழரசுக் கட்சியும் அதனை வழிநடத்தும் தலைவர்களும்தான் மேற்கொண்டுவருகின்றனர் என்பது இன்று உலகறிந்த உண்மை” என மனதார நம்புகிறார். இவையெல்லாம் சரியென்றால் அவருக்கு ஒரு வழி இருக்கிறது. அவருக்கு ஒரு மாற்றுவழி இருக்கிறது.

பொன்னம்பலம் கஜேந்திரகுமார் போல இவரும் ததேகூ விட்டு வெளியேறி இன்னொரு கட்சியைத் தொடக்கலாம். அல்லது இருக்கிற கட்சியைப் பலப்படுத்தலாம். தேர்தலில் போட்டியிட்டு கட்டுக்காசையும் இழக்கலாம். இதில் எது அவருக்கு வசதியோ அதனை அவர் செய்ய லாம். அதுதான் அரசியல் அறம்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.