புத் 64 இல. 40

நந்தன வருடம் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா பிறை 20

SUNDAY OCTOBER 07 2012

 
மாற்றீடே இல்லாதது தண்ணீர்

மாற்றீடே இல்லாதது தண்ணீர்

அன்றாட வாழ்வில் மனிதன் எத்தனையோ விடயங்களைப்பற்றி சிந்திக்கின்றான். திட்டமிடுகின்றான், நடைமுறைப்படுத்துகின்றான். ஆனாலும் அவன் தனது அன்றாட வாழ்வில் சுயநலம் வாய்ந்தவனாகவே காணப்படுகின்றான்.தன்னைச் சூழவுள்ள புவிச் சூழல், அதன் இயற்கை வளங்கள், மற்றும் அதன் பெறுமதி இவை பற்றி மனிதன் உணர மறுக்கின்றான். தானும் தன்னைச் சார்ந்தோரும் மாத்திரம் நன்றாய் வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் வாழ்கிறான். மறுபுறம் மற்றொரு குழுவினர் பூமியின் எல்லைகளுக்காகவும் தேசங்களுக்காகவும், பொருளாதார வளங்களுக்காகவும், பயங்கரமான யுத்தங்களையும், அநியாயங்களையும், சதித் திட்டங்களையும் மேற்கொண்ட வண்ணம் இருக்கின்றனர்.

ஆனாலும் அனைத்திற்கும் மேலாக ஒரு விடயத்தை மாத்திரம் மனிதன் புறக்கணித்து விட்டான். அதுதான் “தண்ணீர்” ஆகும். அது அரிதாகிக் கொண்டிருக்கிறது. அதுவே இவ்வுலகின், உயிரினங்களின் உயிர் முதலும் உயிர் நாடியுமாகும். அத் தண்ணீரைத் தேடியே மனிதன் பல கோடி ரூபாய்கள் செலவுசெய்து கிரகங்களை நோக்கிப் பயணிக்கிறான். ஆனாலும் இப் புவியைத் தவிர வேறு எங்குமே அவன் தண்ணீரை இன்னும் கண்டு கொள்ளவில்லை. எதிர்காலத்தில் ஒரு உலக மகாயுத்தம் நடக்குமென்றால் அது நீருக்கான யுத்தமாகவே இருக்கப் போவது நிச்சயமே.

இப்புவியின் மொத்தப்பரப்பில் ஏறத்தாள 70 வீதமான பகுதி நீர்க் கோளமாகும். இருப்பினும் “குடிநீர்” எதிர்காலத்தில் அரிதாகிவிடும் ஒருநாள் வரப்போகின்றது. சர்வதேசரீதியான ஆய்வுகளின்படி 2050ஆம் ஆண்டளவில் உலக நகர்வாழ் சனத்தொகை 6.3 பில்லியன்களையும் தாண்டிவிடும். கடந்த 2009ம் ஆண்டு கணிப்பீட்டின் படி 3.4 பில்லியன்களாக இருந்த நகர்வாழ் சனத்தொகை குறிப்பிட்ட சில ஆண்டுகளிலேயே இரட்டிப்பாகியது தண்ணீருக்கு பாரிய சவாலாக மாறிவிட்டது. இத்தொகையினருக்கான அன்றாட பாவனைக்கான நீரினை வழங்குவது இலகுவான விடயமன்று. இதன் விளைவுகளினால் “குடிநீர்”, “தண்ணீர்” சர்வதேச ரீதியான ஒரு பெரும் சமரைத்தோற்றுவித்துக் கொண்டிருக்கிறது. எனவேதான் இன்று எண்ணெய் போன்று எதிர்காலத்தில் ஒரு உலக யுத்தம் நடக்குமென்றால் நீருக்காக வேண்டியே இருக்கப் போகின்றது என்ற உண்மையை முன்பு குறிப்பிட்டோம்.

மனித நாகரிகங்கள் மற்றும் குடியேற்றங்கள் நதிக்கரைகள் மற்றும் நீர் நிலைகளைச் சூழவே தோற்றம் பெற்று வளர்ச்சி கண்டன என்பது வரலாற்று உண்மையாகும். எனினும் அக்காலத்தில் குறிப்பிட்ட சில தொகையினராக இருந்த மனித சமூகத்தினர் இன்று சனப்பெருக்கத்தின் சவாலாக பல பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளனர்.

நீர் மற்றும் உணவு அவற்றுள் மிகப் பிரதானமான சவால்களாகும். புவி வெப்பமடைதல் காரணமாக பனிப் பாறைகள் கரைவதால் சிறு தீவுகளாக உள்ள நாடுகள் புவியை இழந்து கொண்டிருக்கின்றன. அது மாத்திரமல்ல பெரும்பாலான நாடுகள் கரையோரக் கடலரித்தல் சவால்களை எதிர்கொள்கின்றன. அண்மையில் தமது பாராளுமன்ற கூட்டத்தை கடலுக்கடியில் நடாத்திக் காட்டி மாலைதீவு இச்செய்திகளையே உலகத்தாருக்கு எடுத்துக் காட்டியது என்பதை நாம் அறிகின்றோம்.

புவிக் கோளத்தில் நீரின் பரப்பு 70வீதமாக இருப்பினும் அதில் பெரும் பகுதி உவர்நீராகவும் நன்னீராகவுள்ள பெரும் பகுதி கடலோடு சேர்வதாகவும் அவற்றிலும் பெரும் பகுதி குடிப்பதற்கு உகந்ததாக அல்லாமல் இருப்பதும் தண்ணீரின் மட்டுப்படுத்தப்பட்ட தன்மையை உணர்த்துகின்றது. அதேவேளை மனிதனது பல்வேறுபட்ட அன்றாட நடவடிக்கைகள் காரணமாக தண்ணீர் மாசடைந்து கொண்டிருப்பதும், நீரை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு வகையான பானங்கள் தயாரிப்பும் மனிதனின் அடிப்படைத் தேவைகளுக்கான நீரின் பாவனையை மட்டுப்படுத்துகின்ற அதேவேளை தண்ணீரை அரிதாக்கிக் கொண்டே இருக்கின்றது.

புவி வெப்பம் அதிகரிப்பானது மேலும் பல்வேறு வகையான இயற்கைச் சூழல் மாற்றங்கள் ஏற்படக் காரணமாக உள்ளது. காலநிலையில் ஏற்படும் முரண்பாடுகள் அவற்றில் மிக முக்கியமானவை எனலாம். அதன் விளைவாக குறிப்பிட்ட போகங்களுக்குரிய மழை உரிய காலத்தில் பெய்யாமல் போவதும் எதிர்பாராத நிலையில் அதிக மழை வீழ்ச்சியும், வெள்ளமும், சூறாவளியும், மண்சரிவும், இன்னும் பல இயற்கை அனர்த்தங்களும் ஏற்படலாம். இதனால் விவசாயம் மற்றும் உணவுற்பத்தி பாதிக்கப்பட்டு விளைச்சல்கள் அரிதாகி பசி, பஞ்சம், பட்டினி, வரட்சி, போன்ற பயங்கரமான அகோரங்கள் ஏற்படலாம். உலக ரீதியில் இது பற்றிய விழிப்புணர்வுகள் ஏற்பட்டிருப்பினும் நீர்க்கோளத்தை, நீரியல் வட்டத்தை அதன் இயற்கை இயல்புடன் பாதுகாப்பதற்கான செயற்பாட்டுரீதியான நடவடிக்கைகள் மிகவும் குறைவாகவே உள்ளன.

ஐக்கிய நாடுகள் சபை அறிக்கையின் படி; உலக சனத்தொகையில் 1/5 பகுதியினர் தூய குடிநீர் வசதியின்றியே வாழ்கின்றனர். அசுத்தமான நீரை அருந்துவதாலும் அதன் பாதிப்புக்களாலும் தினமும் 14000 பேர் பாதிக்கப்படுகின்றனர். அத்தோடு உலகம் முழுவதிலும் நீர்பற்றாக் குறையாகவுள்ள இடங்களில் தனக்குத் தேவையான நீரைத் தேடிச் செல்ல அவர்கள் எடுக்கும் காலம் மற்றும் சக்தி போன்றன அளவிடமுடியாதனவாகும். அக்காலத்தையும் சக்தியையும் சேமித்தால் உலக முன்னேற்றத்திற்காக உழைக்கக் கூடிய 200 மில்லியன் மணித்தியாலங்களாகும் எனத் தெரிவிக்கின்றது.

2025ஆம் ஆண்டளவில் உலக சனத்தொகை அதிகரிப்பின் ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகள் அதிகளவில் பங்களிக்கும் அவ்வாறென்றால் நாம் உரையாடிக் கொண்டிருக்கும் “தண்ணீர்” என்ற விடயம் எந்தளவுக்கு அரிதாக்கப்பட்டு கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கும் என நினைத்துப் பார்க்க முடிகின்றது. ஒழுங்கான நீர் முகாமைத்துவம் இன்மையால் நகர்புறங்களில் பலகோடி ரூபா பெறுமதியான நீர் விரயமாக்கபடுகின்றது. இது உலகளாவிய மதிப்பீட்டின்படி 30-50 வீதமாகும். இன்று கிராமப்புறங்களில் கூட போத்தலில் அடைக்கப்பட்ட நீர் விற்பனைக்கு வந்துவிட்டதை ஒரு துர்ப்பாக்கிய நிலையாகவே கருத வேண்டியுள்ளது. இது போன்ற பிரச்சினைகளை அவதானிப்பதன் மூலம் எவ்வாறு நாம் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தி எதிர்கால சமூகத்தாருக்கும் மீதம் வைக்கலாம் என்பதை திட்டமிடலாகும்.

கிணறுகள், குழாய்க் கிணறுகள் அதிகமாகத் தோண்டப்படுதலும், நிலக்கீழ்நீர் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டாலும், வீட்டுக்கு ஒரு கிணறு என்ற எண்ணக்கருவும், அதிகரித்த நீர்ப்பம்பிகளின் பயன்பாடும் தண்ணீர் அரிதாக்கப்படுவதற்கும்,இலகுவாக வீணாக விரயமாக்கப்படுவதற்கும் முக்கிய காரணிகளாய் அமைகின்றன. இவற்றின் அடிப்படையில்தான் நீர் முகாமைத்துவம் சம்பந்தமாக புதிய ஒழுங்கு விதிகள் கட்டாயப்படுத்தப்பட வேண்டும் என்றுநீர் முகாமைத்துவம் சம்பந்தமான ஆராய்ச்சி நிலையம்தெரிவிக்கின்றது.

பாரிய நதிகள், ஆறுகள் மற்றும் நீர்ப்பாங்கான நிலங்கள் உலகம் முழுவதுமாக ஏறத்தாழ 260 காணப்படுவதாகவும் அவற்றிள் ஒவ்வொன்றையும் ஏதோவொரு வகையில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகள் முறையாகவும், முறையற்ற ரீதியிலும் பகிர்ந்து கொள்கின்றன என்றும் இவற்றின் பாவனைக்கு சட்டரீதியான விதிகளோ, முகாமைத்துவத் திட்டங்களோ இல்லாமல் இருப்பதால் எதிர்காலத்தில் ஏற்படவிருக்கும் நீரியற்கான சவால்கள் மற்றும் கேள்வி காரணமாக அந்த நீரினை பகிர்ந்து கொள்வதில் பாரிய பிரச்சினைகள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகவே இருக்கப்போகின்றது. இவை அனைத்தினதும் விளைவாக எதிர்காலத்தில் தண்ணீர் என்ற அந்த விலைமதிப்பற்ற பொருள் சர்வதேச ரீதியாக விலை குறிக்கப்பட்ட ஒரு சாதனமாக மாறி அந்த விலையிலும் வாங்குவதற்கு அரிதாக்கப்பட்ட ஒரு பொருளாக நீரின் நிலை மாறப் போகின்றது. அதன் ஆரம்பக்கட்ட நிலையையே நாம் போத்தலில் அடைக்கப்பட்ட நீர் விற்பனையைக் காண்கிறோம்.

மாற்aடே இல்லாத பொருளான தண்ணீர், அந்த நீர் முகங்கொடுகின்ற அனைத்து வகையான பிரச்சினைகளுக்கும் மூல காரணமாக அமைவது “புவி வெப்பமடைதல்” என்ற சர்வதேச பிரச்சினையாகும் என்பது உலகரிந்த உண்மை. புவிக் கோளத்தில் இயற்கைக்கு முரணாக ஏற்படுகின்ற அனைத்து வகையான முரண்பாடுகளுக்கும் காரணமாக அமைவது “புவி வெப்பமடைதல்” ஆகும். அதற்கு முக்கியமான நேரடிக் காரணமாக அமைவது இயற்கைத் தாவரங்கள் அழிக்கப்படுகின்றமையாகும். மனிதனின் நேரடி உறவினனாக இருக்கவேண்டிய இயற்கைத் தாவரங்களை தனது விரோதியாகவே மனிதன் காண்கின்றான்.

தனது சுய இலாபங்கள் தேவைகளுக்காக அவற்றை அழித்துக் கொண்டிருக்கின்றான். அதன் விளைவாக இயற்கை மனிதனுக்கு எதிராகச் செயற்பட ஆரம்பித்துவிட்டது. புவி வெப்பமடைதல், புவி பாலைவனமாக்கப்படல், உயிர்ப் பல்லினத்தன்மை அழிக்கப்படல், நீர் நிலைகள் வற்றுதல், மண்சரிவு மண்ணரிப்பு ஏற்படல், ஓசோன் படலம் பாதிக்கப்படல், மழை குறைதல், பனிப்பாறைகள் கரைந்து கடலோடு சேரல், நீர் ஆவியாதல் அதிகரித்தல், அமில மழை பெய்தல் போன்ற இன்னோரன்ன அசாதாரண விளைவுகளை மனிதன் இன்று ஒரு துளி நீரையும் அநியாயமாக வீண்விரயம் செய்யாமல் நீரை வளமுடன் நமது எதிர்காலத்தினருக்காகவும் சேமிக்கின்ற சமூகமாக மாற்று வோம்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.