புத் 64 இல. 40

நந்தன வருடம் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா பிறை 20

SUNDAY OCTOBER 07 2012

 
நக்கிள்ஸ் மலைகளின் மடிதனிலே...

நக்கிள்ஸ் மலைகளின் மடிதனிலே...

பன்னாமத்தின் பக்கங்களுக்கு பிள்ளையார் சுழிபோட்டு முதல் அத்தியாயம் வெளிவந்த அடுத்த நாள் திங்கள் கிழமை வாரத்தின் முதல் நாள். மாத்தளை ‘ரோஸ வீதியில்’ நடந்து கொண்டிருந்தேன். சிரித்த முகத்தோடு எதிர் திசையில் நடந்து வந்து கொண்டிருந்த வழக்கறிஞர் ஜனாப் ஏ.ஏ.லத்தீப் கைகுலுக்கி பாராட்டு தெரிவித்தார். “நல்ல தோர் காரியத்தை செய்கின்aர்கள்” தொடர்ந்து எழுதுங்கள் மறைந்த அப்துல் லத்தீப் அவர்களின் மாணவர்களில் நானும் ஒருவன். அவர் வகுப்பறையில் பாடம் நடத்துவதே தனிஅழகு என்று தன் பழைய நினைவுகளில் மூழ்கினார்.

வழக்கறிஞர் ஏ.ஏ. லத்தீப் அவர்களின் குடும்பம் பாரம்பரிய பண்பாடுமிக்க கல்வி, சமூக சேவைகளில் முன்னிற்கும் பெருமை மிக்கது. வழக்கறிஞறின் மூத்த சகோதரர் “மாத்தளை நkர்” ஒரு கவிஞர். இலக்கியவாதி தோழர் ஏ. இளஞ்செழியன் முதலான திராவிடஇயக்கத் தோழர்களை மாத்தளைக்கு அழைத்து வந்து பகுத்தறிவுப்பிரசாரத்தில் ஈடுபட்டவர். மலையகத்தில் திராவிட இயக்கத்தின் செல்வாக்கு கொடிகட்டி பறந்த கால கட்டம் அது!

வழக்கறிஞர் ஏ.லத்தீப் அவர்கள் விடைபெற்றுச் செல்லும்போது, மாத்தளையில் வாழ்ந்து சமூகப்பணியாற்றிய ஏனைய பிரமுகர்களை பற்றியும் தினகரனில் இத்தொடரில் எழுத வேண்டுமென அன்பு கட்டளையிட்ட தோடு தினகரன் வாரமஞ்சரி ஆசிரியருக்கு தனது அன்பினை தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டதுடன் இக்கட்டுரைத் தொடரை தான் முன்னின்று நூலுருப்பெற உதவிபுரிவதாக எடுத்துக்கூறியமை எனக்கு உற்சாகத்தினை அளித்தது.

அக்டோபர் மாதத்திற்கு பல சிறப்புக்கள் உண்டு. இம்மாதம் அமாவாசை “மஹாளய அமாவாசை என்ற சிறப்பிற்குரியது. நவராத்திரி, சரஸ்வதிபூஜை விஜயதசமி, ஆயுதபூசை என இந்து சமய விரதங்களும் விழாக்களும் மட்டுமன்றி, மக்காவுக்கு யாத்திரை செய்யும் தினம், பக்ரீத் பண்டிகை முதலான இஸ்லாமிய பண்டிகைகளும், அர்ச்சைமன் அன்ஜீட் கிறிஸ் தவத்திருநாளும் இம்மாதத்திலேயே இடம் பெறுவது சிறப்பம்சமாகும். இவ்வாறு சமயத் திரு நாள்கள் மட்டுமன்றி, அக்டோபர் முதலாம் தேதி உலகசிறுவர் தினம். அக்டோபர் இரண்டாம் நாள் உலகம் போற்றும் உத்தமர் அஹிம்சா திலகம் அண்ணல் காந்தியின் தினம். கத்தியின்றி இரத்தம் சிந்தாது அஹிம்சாவழியில் சூரியன் அஸ்தமிக்காத சாம்இராஜ்யத்தைக் கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து பாரதநாட்டிற்கு சுதந்திரத்தைப் பெற்றுத்தந்த காந்தி மகானின் தினம்.

இத்தினத்தை இவ்வருடம் (2012/10/02) கண்டி இந்திய உதவித் தூதரகம், மாத்தளை மாநகரில் பெண்களுக்கென பாக்கியம் தேசியக்கல்லூரியெனத்திகழும்; மகாத்மா காந்தியின் திருக்கரத்தினால் அடிக்கல் நாட்டப்பட்ட பாடசாலையில் உலக சமாதான தினத்ததைக் கொண்டாடியது. இதனை ஏற்பாடு செய்த இலங்கை கண்டி உதவித்தூதுவர் கெளரவ கே. நடராஜன் பாராட்டிற்குரியவர். தேடு கல்வி இல்லாதோர் ஊரைத் தீயினுக் கிரையாக்கு” என்றார் புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன். இக்கவிஞன் பொன்வாக்கை நனவாக்க, அண்ணல் காந்தி வழியில் மாத்தளையில் கல்விப் பணிபுரிந்தவர் தான் அமரர் சு. கந்தசாமி ஐயாவும் அவர்களது வாழ்க்கைத்து ணைவியான செல்வம் பாக்கியம் அம்மையாரும் மாத்தளை பன்னாமத்தின் வரலாற்றுப் பக்கங்களில் களிநடம் புரியும் காவிய நாயகர்களாவர்.

கந்தசாமி ஐயாவின் பூர்வீகம் சிதம்பரம். சொக்கலிங்கம் பிள்ளை, தெய்வானைப் பிள்ளை வழிவந்த சுப்பையா பிள்ளை உடையப்பச்செட்டியார் நாட்டுக் கோட்டை நகரத்தார் வழிவந்த மீனாட்சி அம்மாள் வழித்தோன்றலே பெரியார் கந்தசாமி ஆவார். கந்தசாமி ஐயா இலண்டன் மாநகரில், நிலஅளவை, கட்டிடக்கலை என்பனவற்றைக் கற்றவர். அக்காலப் பகுதியில் தான் அவருக்கு சேர். பொன் இராமநாதனின் தொடர்பு ஏற்பட்டது. இத்தொடர்பு இலங்கை திரும்பிய பின்னரும் நீண்டது. இதன்பயனாக மொகலாயக்கட்டிடக்கலையில் மோகம் கொண்ட ஐயா சுன்னாகம் இராமநாதன் கல்லூரி, திருநெல்வேலி பரமேஸ்வராக் கல்லூரி ஆகியவற்றின் நிர்மாணப் பணிகளை நிறைவேற்றும் வாய்ப்பினை பெற்றார்.

இவ்வேளையிலேயே சேர். பொன் இராமநாதன் தம்பதியினர் 1912 இல் யாழ்ப்பாணம் இராமநாதன் கல்லூரியில் கல்வி கற்றுக் கொண்டிருந்த தம்பையா செல்வம் பாக்கியம் செல்வியாரை தாமே முன்னின்று இவருக்கு திருமணம் முடித்துவைத்தனர் இத்திருமணத்தின் வாயிலாக யாழ்ப்பாணத்திற்கும் மாத்தளைக்கும் பலமான ஓர் இணைப்பு ஏற்படலாயிற்று பல இந்து சமய கலாசார பண்பாட்டு தொடர்புகள் ஏற்படலாயின.

இது மாத்தளையின் வரலாற்றில் பாரிய வளர்ச்சிக்கு ஏதுவாயிற்று இல்லாவிடில் மாத்தளையில் பாக்கியம் தேசியக் கல்லூரி உருவாகி இருக்குமா..? அல்லது இக்கால்லூரிக்கு மகாத்மா காந்தி அடிக்கல் நாட்டி இருப்பாரா? தொடரும்...

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.