புத் 64 இல. 40

நந்தன வருடம் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா பிறை 20

SUNDAY OCTOBER 07 2012

கடாபியின் மரணம்...

கடாபியின் மரணம்...

பின்னணியில் சர்கோசி?

தனக்குப் பிடிக்காத முஸ்லிம் ஆட்சியாளர்களையெல்லாம் ‘சர்வாதிகாரிகளாகச் சித்தரித்து, அவர்களை அவ்வாட்சியாளர்களின் நாட்டவர்களாலேயே புரட்சியெனும் பெயரில் தூக்கியெறியும் மேற்குலகின் உத்திக்கு, லிபியாவின் முன்னாள் தலைவர் பலியாகி, கிட்டத்தட்ட ஒரு வருடமாகின்றது.

சில காலங்களுக்கு முன்னர்வரை உலக முஸ்லிம்களில் அனேகரால் ஒரு ஹீரோவாகப் பார்க்கப்பட்ட, கடாபியை, அவரது நாட்டு மக்களாலேயே வில்லனாகச் சித்தரிக்கச் செய்து, நடு வீதியில் அவர் நாயைப் போலச் சுட்டுக் கொல்லப்படுவதை நியாயப்படுத்திவிட்டன மேற்குலக ஊடகங்கள்.

கடாபி நல்லவரா கெட்டவரா என்ற வாத பேதங்களுக்கப்பால், அவரது மிக நீண்டகால ஆட்சியில் (சுமார் 42 வருடங்கள்) அவர் தன் மக்களைச் செல்வந்தர்களாகவே வைத்திருந்தார். மின்சாரக் கட்டணம் கூட எந்த லிபியரிடமிந்தும் அறவிடப்பட்டிருக்கவில்லை. அதிக பொருளாதார சலுகைகளை வழங்கியிருந்தார். ஆனால் எதிர்ப்பரசியல், மாற்றுச் சிந்தனை என்பனவற்றுக்கு அங்கு இடமிருக்கவில்லை என்பது உண்மையே. அவரது நீண்டகால சர்வாதிகார ஆட்சியால் வெறுப்புற்றிருந்த மக்கள், தியு+னிஸியா, எகிப்து என அண்டை நாடுகளில் அதன் சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கெதிரான அந்நாட்டு மக்களின் புரட்சியால் உந்தப்பட்டு, தாமும் கடாபிக் கெதிராக கிளர்ந்தனர்;.

ஈற்றில் கடந்த ஆண்டு ஒக்டோபர் 20 ஆம் திகதி அவருக்கெதிரான கிளர்ச்சியாளர்களால், சுட்டுக் கொல்லப்பட்டார். இது மேற்குலக ஊடகங்கள் நமககுக் கூறிய சேதி. ஆனால் அண்மையில் கசிந்திருக்கும் தகவல் வேறுமாதிரியானதாக இருக்கின்றது.

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி சார்க்கோஸியின் உத்தரவின் பேரில் அந்நாட்டு இரகசிய சேவைப் பிரிவைச் சேர்ந்த ஒருவராலேயே லிபிய முன்னாள் தலைவர் கடாபி கொல்லப்பட்டார் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

கடாபி கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி தனது சொந்த ஊரான கிரிட்டில் வைத்து கொல்லப்பட்டார்.

லிபிய புரட்சியில் ஈடுபட்டவர்களுடன் இணைந்திருந்த வெளிநாட்டு முகவர் ஒருவரே கடாபியை கொன்றதாக தெரிவிக்கப்படுகி;ன்றது.

இந்நிலையில் மேற்படி வெளிநாட்டு முகவர் பிரான்ஸ் நாட்டவராக இருக்கலாம் என இத்தாலிய பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

லிபிய புரட்சிக்கு நிகொலஸ் சர்கோஸியின் அரசாங்கம் ஆரம்பம் முதல் மிகுந்த ஆதரவளித்து வந்தது. 2007ஆம் ஆண்டு தேர்தலில் சார்க்கோஸி வேட்பாளராக போட்டியிட்ட போது அவருக்கு மில்லியன் கணக்கான பண உதவி வழங்கப்பட்டமை உள்ளடங்கலாக அவருடனான தனது உறவை அம்பலப்படுத்தப் போவதாக கடாபி பகிரங்கமாக அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.

இதன் காரணமாக கடாபியை எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் மௌனமாக்குவதற்கு தேவையான முயற்சியில் சார்க்கோஸி ஈடுபட்டதாக திரிபோலி வட்டாரமொன்றை மேற்கோள்காட்டி பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் கிளர்ச்சியாளர்களின் மத்தியில் ஊடுருவிய வெளிநாட்டு முகவரான 22 வயது இளைஞரே கடாபியை சுட்டுக்கொன்றதாக தெரிவிக்கப்படுகிறது.

பெண் ஒம்ரான் 'பான் என்ற மேற்படி இளைஞர் கடாபியின் ஆதரவாளர்களால் கடந்த ஜ_லை மாதம் தாக்கப்பட்டதையடுத்து பிரான்ஸின் பாரிஸ் நகரிலுள்ள மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அண்மையில் உயிரிழந்தார். கடாபி படுகொலை செய்யப்பட்டுள்ளார். காட்டுத்தனமான ஆவேச கும்பல் அவரை கொன்றார்கள் என்ற பிரச்சாரம் இப்போது கேள்விக்குறியாகியுள்ளது.

பிரான்சிய உளவு பிரிவின் நிழல் நடவடிக்கை இது. ஒரு தனிமனிதனின் விருப்பத்திற்காக ஒரு நாட்டின் தலைவனை கொலை செய்துள்ளது பிரான்சின் உளவுத்துறை.

இந்நிலையில் கடாபி பாடசாலைச் சிறுமிகளை கடத்திச் சென்று அடித்து துன்புறுத்தி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி அவர்களை பாலியல் அடிமைகளாக பயன்படுத்தி வந்ததாக தகவல் ஒன்று கூறுகிறது.

பிரான்ஸ் ஊடகவியலாளரான அன்னிக் கொகனால் எழுதப்பட்டு அண்மையில் வெளியான ‘லெஸ் புரொயிஸ் டான்ஸ் வி ஹரெம் டி கடாபி’ என்ற நூலிலேயே இத்தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. கேர்ணல் கடாபியின் அந்தப்புரத்தில் பாலியல் அடிமைகளாக செயல்பட நிர்ப்பந்திக்கப்பட்ட சிறுமிகளி டமிருந்து பெறப்பட்ட திடுக்கிடவைக்கும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அன்னிக் மேற்படி புத்தகத்தை எழுதியுள்ளார். அவரால் பாதிக்கப்பட்ட சிறுமிகளில் சொராயா என்ற 15 வயது சிறுமியும் ஒருவராவார்.

தனது பாடசாலைக்கு வந்த கேர்ணல் கடாபிக்கு பாடசாலை நிர்வாகத்தின் ஏற்பாட்டில் மலர்கொத்துகளை கொடுத்து சொராயா வரவேற்றுள்ளார்.

மலர்கொத்தை கையேற்ற கடாபி, சொராயாவின் தலையில் தனது கரத்தை வைத்துள்ளார். சிறுமி தனக்கு வேண்டும் என்பதை தனது உதவியாளர்களுக்கு அறிவிப்பதற்காகவே கடாபி அவ்வாறு சமிக்ஞை செய்ததாக கூறப்படுகின்றது.

மறுநாள் சிர்ட் நகரிலுள்ள சொராயாவின் வீட்டிற்கு சீருடை அணிந்த நிலையில் வந்த கடாபியின் பெண் உதவியாளர்கள் பிறிதொரு வரவேற்பு வைபவத்துக்கு சொராயா தேவைப்படுவதாக தெரிவித்து அவரை அழைத்துச் சென்றுள்ளனர்.

அதன்பின், காட்டு வழியாக கடாபியின் அந்தப்புரத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சொராயா ஆபாசமான ஆடை அணிவிக்கப்பட்டு கடாபியின் படுக்கை அறைக்குள் தள்ளப்பட்டுள்ளார். கடாபி சொராயாவை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தான் ஆரம்பத்தில் கடாபியை எதிர்த்து போராடியதாகவும் இறுதியில் பலிகொடுக்கப்பட்ட ஆட்டுக் குட்டியாக கடாபியால் திரும்பத் திரும்ப பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப் பட்டதாகவும் சொராயா கூறினார்.

சில சமயங்களில் கடாபி தனது பாலியல் துஷ்பிரயோக நடவடிக்கைகளுக்கு ஒரே சமயத்தில் பல சிறுமிகளை பயன்படுத்துவதையும் வழக்கமாக கொண்டிருந்ததாக சொராயா தெரிவித்துள்ளார்.

ஆனால் கடாபியின் மருத்துவத் தாதியாகப் பணியாற்றிய உக்ரேன் பெண் பிறிதொரு சந்தர்ப்பத்தில் குறிப்பிடுகையில், கடாபி தங்களோடு மிகக் கண்ணியமாக நடந்ததாகக் குறிப்பிடுகின்றார். கடாபியின் மெய்ப் பாதுகாவலர்களாகவும் பெண்களே இருந்துள்ளனர்.

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி கடாபியைக் கொல்ல உத்தரவிட்டார் என்ற தகவல்கள் கசிந்த சில நாட்களிலேயே பிரான்ஸ் நாட்டு எழுத்தாளர் கடாபி மீது பாலியல் குற்றச் சாட்டுக்களைச் சுமத்தும் நூலை வெளியிட்டிருக்கிறார்.

கடாபியின் கொலை தொடர்பில் பிரான்ஸின் மீதான கறையைக் கழுவும் முகமாக இப்பாலி யல் குற்றச்சாட்டுக்கள் சோடிக்கப்பட்டிருக்ககக் கூடுமா அல்லது அவை உண்மையானவையா என்பது குறித்த காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.