புத் 64 இல. 40

நந்தன வருடம் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா பிறை 20

SUNDAY OCTOBER 07 2012

 
ஆரோக்கிய வாழ்வுக்கு மூலிகை உணவுகள்

ஆரோக்கிய வாழ்வுக்கு மூலிகை உணவுகள்

அத்தி

வேறுபெயர்: அதவு, உதும்பரம்

தாவரவியற் பெயர்: Ficus recemosa /F.glomerata

(ஃபைகஸ் ரெசிமோசா / ஃபைகஸ் குளோமெரேற்றா)

குடும்பம்- Moraceae (மோரேசியே)

ஆங்கிலப் பெயர்: country Fig

சமஸ்கிருதப் பெயர்: உதும்பர/ ஔதும்பர

அத்தி ஒரு தெய்வீக மரமாகும். தத்தாத்திரேயர் அத்திமரத்தில் வாசஞ் செய்கிறார் என்பதும், அசுரகுருவான சுக்கிராச்சாரியாரின் அம்சமே அத்திமரம் என்பதும் புராணங்கள் தரும் செய்திகளாகும்.

அத்திமரம் வளரும் இடங்களில் நிலத்தடிநீர் நன்னீராக இருக்கும் என்பது நம்பிக்கை. கிணறு வெட்டுவதற்கு இடம் தெரிவுசெய்வோர் நன்னீரூற்றுள்ள இடத்தைக் கண்டறிவதற்கு அத்திமரம் வளர்ந்துள்ள இடத்தைத் தெரிவு செய்வதும் யாழ்ப்பாணத்தில் முன்பு வழக்கிலிருந்த ஒன்று. மறுதலையாக கிணறுகள், குளங்களுக்கு அருகில் அத்திமரத்தை வளர்ப்பதன் மூலம் நன்னீரைப் பெறவாய்ப்புள்ளதாகவும் நம்பிக்கையுள்ளது.

இத்தகு சிறப்பு வாய்ந்த அத்திமரம் பொதுவாக எல்லா இடங்களிலும் வளரக் கூடியது. இதன் பட்டை வெண்மை அல்லது பசுமை அல்லது மண்ணிறங்கலந்ததாகக் காணப்படும். தனி இலைகள் முட்டைவடிவாக அல்லது ஈட்டிவடிவாகவும் நுனி கூராகவும் இருக்கும் இலைகள் பூச்சிகளால் தாக்கப்படுவதால் அழுத்தமற்று, கொப்புளங்களைக் கொண்டது போலவும் காணப்படும்.

அத்திப்பூக்கள் மிகச் சிறியவை. எனவேதான் அத்திபூப்பதில்லை என்று சிலர் தவறாக எண்ணுகின்றனர். “அத்தி பூத்தாற்போல” என்ற சொற்றொடர் அத்தி அபூர்வமாகப் பூக்கும் என்ற கருத்தில் எழுந்த ஒன்றாகும். உண்மையில் ஒவ்வொரு தடவையும் அத்தி பூத்துத் தான் காய்க்கிறது.

அடிமரத்திலும், கிளைகளிலும் மரத்தை ஒட்டி அத்திக்காய்கள் கொத்துக் கொத்தாக உண்டாகின்றன. இளம் பிஞ்சுகள் பச்சைநிறமாகவும், சுண்டாங்காய் போன்று வட்டமாகவும் காணப்படும். இவற்றுள் பூச்சி, புழுக்கள் பெரும்பாலும் இருப்பதில்லை. காய்கள் புன்னைக்காய் அளவில் பச்சை நிறமாகவும், பழங்கள் சிவப்பு நிறமாகவும் காணப்படும்.

100கிராம் அத்திக்காயில் புரதச்சதத்து 1.3கிராம் கொழுப்புச்சத்து 0.2 கிராம், மாச்சத்து7.6கிராம், கல்சியம் 80மி.கி, பொசுபரசு 30மி.கி, இரும்புசத்து 10மி.கி, கரோட்டின் 162மை.கி, தயமின் 60மை.கி, இரைபோபிளேவின் 50 மை.கி, நியாசின் 0.6மி.கி, உயிர்ச்சத்து வி-5.0 மி.கி அளவில் உள்ளன.

அத்திப்பிஞ்சி துவர்ப்புச் சுவையுடையது. இதைச் சாதாரண காலங்களில் கறிசமைத்துண்ணலாம் மருந்துண்ணுங் காலங்களில் பத்தியப் பொருளாக, பத்தியக் கறிகளிலும் சேர்த்துக் கொள்ளலாம்.

அத்திப் பிஞ்சானது மூலவாயு, மூலக்கிராணி என்னும் நாட்பட்ட கழிச்சல்நோய், இரத்தமூலம், வயிற்றுக்கடுப்பு போன்ற நோய்களை நீக்க வல்லது இதனை,

“மூலக்கிராணியறும் மூலவிரத்தந்தீரும்

சாலக் கடுப்புந் தரிக்குமோ- மாலரவத்

துத்திப் படவல்குற்றோகாய்! துவர்ப்பையுறும்

அத்திச் சிறுபிஞ்சருந்து”

என்ற அகத்தியர் குணபாடப் பாடல் எடுத்துக் கூறுகிறது.

அத்திப்பிஞ்சுப் பாற்கறி

அத்திப்பிஞ்சை இரண்டிரண்டாக வெட்டி அத்துடன் வெங்காயம், பச்சை மிளகாய் என்பவற்றையும் நறுக்கிப் போட்டு, தேங்காய்ப்பால் தேவையான அளவு உப்புச் சேர்த்து பாற்கறியாகச் சமைத்து சோற்றுடன் சேர்த்துச் சாப்பிட்டு வர முற் கூறிய நோய்கள் மாறும். வாய்ப்புண் உள்ளவர்கள் மிளகாயை நீக்கிச் சமைத்து சாப்பிடல் நன்மை பயக்கும்.

அத்திப் பிஞ்சுக் குளம்பு

அத்திப்பிஞ்சை முற் கூறியவாறு இரண்டிரண்டாக வெட்டி, அவற்றைச் சிறிதளவு நல்லெண்ணெயில் வதக்கி எடுத்துக் கொள்ளவும். தேவையான அளவு பழப்புளி, தேங்காய்ப்பால், உப்பு, மிளகு, சீரகப் பொடி என்பவற்றைச் சேர்த்துக் குளம்பு செய்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வர வயிற்றுகடுப்பு, மூலநோய், மூலத்தால் இரத்தம் போதல், மூலச்சூடு, வெள்ளைசாய்தல், குடற்புண் என்பன தணிவடையும்.

அத்திப் பிஞ்சுப் பிட்டு

அத்திப் பிஞ்சுகளை இரண்டாக அல்லது நான்காக வெட்டி, அரிசிமாவைப் பிட்டுக்கு மாக்குழைப்பது போலக் குழைத்து அத்துடன் மேற்படி அத்திப் பிஞ்சைக் கலந்து, பிட்டாக அவித்துச் சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைசாய்தல், நீடித்த மாதவிடாய் அல்லது மாதவிடாயின் போது காணப்படும் அதிகரித்த குருதிப் போக்கு என்பன தணிவடையும்.

அத்திப்பிஞ்சை வாழைக்கிழங்குச் சாற்றில் அவித்தெடுத்து பின்னர் பிட்டு மாவுடன் சேர்த்துப் பிட்டு செய்து சாப்பிட்டால் அதிக நன்மை அத்திப் பிஞ்சைத் தனித்தாவது பிறமூலிகைகளுடன் சேர்த்தாவது பாவிக்குபோது அது குழந்தைகளுக்கும், பெரியவர்களும் ஏற்படக் கூடிய சீதக்கழிச்சல், இரத்தபேதி முதலானவற்றையும் குணப்படுத்தவல்லது. பரராசசேகரம் வைத்திய நூலில் பாலர் ரோக நிதானத்தில் அதுபற்றி பின்வருமாறு எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

“ஆனைதனிற் கண்ணொருப்பிடியு

மசுரர்விரோதியிளம்பிஞ்சும்

கானக்குதிரை மேற்புறணி

கண்டர்வாயில் களிப்பாக்கும்

தாயைக் கொன்றான் சாற்றைவிட்டுத்

தாகம் தணியக் கொள்வீரேல்

மானைப்பொருதும் விழிமடவீர்

வடுகுந்தமிழுங் குணமாமே.

அதாவது, அத்திப்பிஞ்சு (ஆனை=அத்தி ; ஆனைதனிற்கள்) வேலம்பிஞ்சு (அசுரர் விரோதி= முருகனின் வேல்), மாம்பட்டை(குதிரை-மா;குதிரை மேற்புறணி), காசுக்கட்டி (கண்டர் வாயில்), களிப்பாக்கு, ஆகியவற்றை எடுத்து வாழைப்பூச்சாறு விட்டு (தாயைகொண்றான் வாழை குலைதள்ளிய பின் இறந்துபடுவது) அவித்து அந்தக் குடிநீரைப் பருகியமை சீதக்கழிச்சல் (வடுகு), இரத்தக் கழிச்சல் (தமிழ்) மற்றும் கழிச்சலால் ஏற்படும் தாகம், நாவரட்சி என்பனவும் தணியும் என்பது கருத்து. அத்திப் பிஞ்சுக்குப் பதிலாக அத்திக்காயையும் உணவாகச் சமைத்துச் சாப்பிடலாம்.“

அதவுதன் காயினை யியன்முறையா யுண

விதமுறு மெய்யினில் வினையெலா மகலுமே”

என்று தேரையர் என்னும் சித்தர் எடுத்துக்கூறியுள்ளார்.

அத்திப் பழமானது மலச்சிக்கல், தாகம் நாவரட்சி, உடல்வெப்பு என்பவற்றை நீக்கக் கூடியது. 100 கிராம் உலர்ந்த அத்திப்பழத்தில் புரதச்சத்து- 4கிராம், மாச்சத்து-61 கிராம், கல்சியம்-200 மி.கி, பொசுபரசு-140மி.கி, இரும்புச்சத்து-4 மி.கி, உயிர்ச்சத்து தி-150மை.கி, தயமின.-150மை.கி, இரைபோபிளேவின்-90மை.கி, நியாசின் 1.7மி.கி அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சித்த மருத்துவ கலாநிதி

சே. சிவசண்முகராஜா ணி.ளி(ஷி)

சிரேஷ்ட விரிவுரையாளர்,

சித்த மருத்துவ பீடம்

யாழ். பல்கலைக்கழகம்

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.