புத் 67 இல. 04

ஜய வருடம் தை மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ர.ஆகிர் பிறை 04

SUNDAY JANUARY 25 2015

 

 
எழுத்து எனது தொழில்களில் ஒன்றாகவே பரிணமித்து விட்டது!

எழுத்து எனது தொழில்களில் ஒன்றாகவே பரிணமித்து விட்டது!

தேவிபரமலிங்கம்

கல்விப் பாரம்பரியமே இல்லாத பரம்பரையில் பிறந்து, கற்றலையும் மூன்றாம் வகுப்புக்கு அப்பால் போகாமல் பூர்வீகத் தொழிலில் பத்து வயதுப் பருவத்திலே நுழைந்து விட்ட என்னால் எப்படி இவ்விதம் படைப்புகள் செய்யக் காரணங்கள் என்பவற்றைத் திரும்பிப் பார்க்கிறேன்.

நவாலி பிறந்த மண். எமது அயல் கிராமம் பெரும்பாலும் கற்பித்தலைத் தொழிலாகக் கொண்டவர்கள் வாழும் இடம். கலையரசு சொர்ணலிங்கம் அயலவர். ஆண், பெண் எல்லாரும் ஆசிரியத் தொழில் பார்ப்பர்.

தங்கத் தாத்தா என்றழைக்கப்பட்ட நாவலியூர் சோமசுந்தரப் புலவர், நான் பிறந்த கிராமத்தவர். அவரது புதல்வர்களான நவாலியூர் சோ. நடராசன் பண்டிதர் சோ. இளமுருகனார் போன்றோரால் மண்ணின் விழுமியங்கள் எங்குமே பரவியிருந்தது.

இசைத் துறையில் வி. என். பாலசுப்பிரமணியம், நவாலியூர் சச்சிதானந்தன் தொழில் நுட்பத் துறையில் முதலியார் மகேசன் வைத்திலிங்கம், வானவெடி தயாரிப்பென்று பல்துறையிலும் நவாலியூர் மண்ணில் தோன்றியவர்களால் புகழ் பூத்திருந்தது.

அந்த மண்ணைப் பிறப்பிடமாகக் கொண்ட எனக்கு ஆரம்பத்தில் கவிதைகளில் நாட்டமும் வந்தது ஆச்சரியமில்லை. ஆயினும் மரபு ரீதியாகக் கல்வியைப் பெற்றிருக்காத என்னால் மிகவும் பிரயத்தனப்பட வேண்டியதாயிற்று.

1962ல் சுதந்திரன் வார இதழில் வெளிவந்த ‘வளர்மதி’ என்னும் சிறுவர் பகுதியில் முதல் முதலாக எழுதிய ‘மலரே மலரே மலர் வாயோ’ என்னும் கவிதை நவாலியூர்க் கவிராயர் என்னும் புனைபெயரில் வெளிவந்த பிற்பாடு அந்தப் பெயரில் இருக்கும் கனதி பலராலும் எனக்கு உணர்த்தப்பட்டது.

அப்பொழுதெல்லாம் எனக்குக் கவிதை இலக்கணம் தெரியாது. ஏதொவொரு வேகத்தில் எழுதிக் கொண்டிருந்தேன். சிறுகதைகளையும் எழுதத் தொடங்கினேன். கொழும்பில் தொழில் செய்து வந்த 1960களில் இருந்து 1967கள் வரை சில கவிதைகள், சிறுகதைகள், சிறுவர் தொடர் கட்டுரைகள், வானொலியில் மாதர் பகுதியில் ஒலிபரப்பப்பட்ட சிறுகதை நாடகம் என்பவற்றை எழுதினேன்.

1967களில் யாழ். மீண்ட என்னால் யாழ். இலக்கிய நண்பர்கள் கழகம், யாழ். இலக்கிய வட்டம் போன்ற அமைப்புகளின் தொடர்பால் கவிஞர்கள் வி. கந்தவனம் மதுரகவி இ. நாகராஜன், காரை செ. சுந்தரம்பிள்ளை, அரியாலையூர் வே. ஐயாத்துரை, கல்வயல் வே. குமாரசுவாமி ஆகியோருடன் தொடர்பேற்பட்டதால் அவர்களுடன் சேர்ந்து கவியரங்குகளில் ஈடுபட்டு வந்தேன்.

அவ்வேளை மதுரகவி இ. நாகராஜன் என்னை அடிக்கடி சந்தித்து வந்தார். அவரே கவிதை இலக்கணங்களை தெரிந்து கொள்ள அரிச்சுவடி தந்தார்.

அதுபோல செம்பியன் செல்வன் செங்கை ஆழியான், கே. வி. நடராசன், மு. கனகராஜன், டொமினிக் ஜீவா போன்ற எழுத்தாளர் அறிமுகங்களும் ஏற்பட்டன. ஐந்து வருடங்கள் கழிந்தே அமரர் கே. டானியலின் அறிமுகம் பெற்றேன். சிறுகச் சிறுக என்னை ஆகர்ஷத்துக் கொண்டதால் சிறுகதை, நாவல்களில் ஈடுபட முடிந்தது.

1972ல் அவரைச் சந்திப்பதற்கு முன்பான ஐந்து ஆண்டுகளில் 1970ல் திருமணம் செய்தது. இலங்கை வானொலியில் என்னால் எழுதப்பட்ட 20 நாடகங்கள் முதலில் கலாஜோதி எஸ். சண்முகநாதன் (சானா) கே. மாணிக்கவாசகர் கே. எம். வாசகர் ஆகியோரால் முதல்தர தெரிவாகத் தயாரிக்கப்பட்டு ஒலிபரப்பாகின.

1975 ஆம் ஆண்டில் வீரகேசரி புத்தகங்களை வெளியிட்டு வந்தது. அதனில் இடம்பிடிக்க ‘அணி திரளும் சிறு அலைகள்’, ‘கோணல்கள் நிமிர்கின்றன’ நாவல்கள் எழுதப்பட்டன. அவை பிற்பாடு 2001ல் ‘அணி திரளும் சிறு அலைகள்’ நூலுருப் பெறமுன்பாக 1980ல் ‘தினகரன்’ நாளிதழில் தொடராக வெளிவந்தது.

“கோணல்கள் நிமிர்கின்றன”. இன்னமும் நூலுருப் பெறாமல் மேட்டு நிலத்து ஊற்று என்னும் பெயரில் இப்பொழுது உதயன் வார இதழ் சூரியகாந்தியில் வெளிவந்து கொண்டிருந்தது.

ஏழு வருடங்கள் குழந்தைச் செல்வங்கள் இல்லாமல் இருந்த எமக்கு 1977ல் பெண் குழந்தை பிறந்தது. கவிதாயினி எனப் பெயர் வைத்தேன். மூன்று வருடங்களில் 1980ல் மகன் பிறந்தான். சுதாகரன் என்னும் பெயரை சூட்டினேன். மனைவிக்குப் பெயர் தேவி பட்டனைந்து நவாலியூர் த. பரமலிங்கம், பூமணி மந்தன், நவாலியூர்க் கவிராயர், மூலபாரதி ஆகிய புனை பெயர்களுடன் தேவி பரமலிங்கம் என்ற பெயரிலும் எழுதிக் கொண்டுள்ளேன்.

கடந்த 2014 ஆம் வருடம் புதிய படைப்புலகம் சிறுகதைத் தொகுதி, பூமணி சிறுவர் கவிதைகள் ஆகிய இரு நூல்களை வெளியிட்டிருந்தேன்.

நாவல்கள், காவியங்கள் எழுத வேண்டுமென்ற எண்ணங்களும் தேய்ந்து போகின்றன. ஆயிரக்கணக்கான கவிதைகள் இருந்தும் நூலாக்கம் செய்யப் பயமாக உள்ளது. நூற்றை எட்டும் சிறுகதைகள், இரண்டு நாவல்கள், ஆயிரம் கட்டுரைகள் பத்திகள், விமர்சனங்களென்று முப்பதுக்கும் மேற்பட நூல்கள் போடலாம். 2005ல் நல்லூர் பிரதேச செயலாளர் தேசிய இலக்கியக் கலை விழா, 1967ல் குருநகர், கலைக்கழகம், 1968ல் காங்கேசன்துறை இளந்தமிழர் மன்றம், 1984ல் தாரகை மாசிகை, 1978ல் செவ்வந்தி சிற்றிதழ், 1972ல் குருநகர் கலைக்கதிர் மன்றம், 2012ல் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை வித்தியாலயம் என்பவற்றால் நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டிகளில் முதல் பரிசுகளையும்.

1990ல் நல்லூர் பிரதேச செயலக தமிழ் சிங்கள புத்தாண்டு விழா, 2005ல் பண்டாரவன்னியனின் 2002 ஆம் நினைவு வெற்றி விழா மற்றும் சர்வதேச மாணவர் பேரவை, நமது ஈழநாடு 3 ஆம் ஆண்டு விழா என்பன நடாத்திய கவிதைப் போட்டிகளில் மூன்றாம் இடங்களையும்.

1993ல் நல்லூர் பிரதேச செயலக தமிழ் சிங்கள புத்தாண்டு விழாக் கட்டுரைப் போட்டியில் முதல் பரிசையும் 1992ல் உதயன் வெளியீட்டகமும் யாழ். பல்கலைக்கழகமும் இணைந்து நடாத்திய கட்டுரைப் போட்டியில் முதல் பரிசையும், 1992ல் உதயன் வெளியீட்டகமும் யாழ். பல்கலைக்கழகமும் இணைந்து நடாத்திய கட்டுரைப் போட்டியில் ஓர் இடமும் முன்னால் சேர்க்கத் தவறியவை.

1980களில் அமரர் கே. டானியலில் நிறுவப்பட்ட மக்கள் கலை, இலக்கியப் பெருமன்றத்தின் தலைவராக நியமிக்கப்பட்டேன். மன்றத்தால் வெளியிடப்பட்ட காலாண்டிதழான மக்கள் இலக்கியம் இதழுக்கும் வீ. சின்னத்தம்பி பொன். பொன்ராசா ஆகியவர்களுடன் ஆசிரியக் குழுவில் இணைக்கப்பட்டேன்.

என்னுடைய எழுத்துகளில் 2012ல் தினமுரசு ஆசிரியராக இணைந்த சிதம்பரப்பிள்ளை சிவகுமார் பரமர் சங்கமம் பத்தியை எழுத வாய்ப்பு வழங்கியதின் பின்பாகவே புதிய தடத்தில் வளர முடிந்ததாக உணர்கிறேன்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்பவற்றின் 50வது ஆண்டு பொன் விழாவை குறித்து 1972 ஆம் ஆண்டு கங்கையாளே நெடுநேர இசைத் தட்டு வெளியிடப்பட்டது. அதில் என்னால் இயற்றப்பட்ட உழைக்கும் கரங்கள் உயரட்டும் என ஆரம்பிக்கும் மெல்லிசைப் பாடலும் இடம்பெற்றது. அமரர் எஸ். கே. பரராஜசிங்கம் குழுவினரோடு பாடிய பாடலுக்கு டி. எஸ். பிச்சையப்பா இசை வழங்கினார்.

திரும்பிப் பார்க்கையில் விடுபட்டுப் போனவை எவ்வளவோ இருக்கலாம். பல தோல்விப் படிகளைத் தாண்டி ஏறுவதற்குட்பட்ட பிரயத்தனங்கள் அதிகம். ஆனாலும் அவை பெரிதாகத் தெரியவில்லை என்னால் இன்னும் பல இடைவெளிகள் நிரப்பப்பட உள்ளதாகவே உணர்கிறேன். எழுத்தை என்னுடைய தொழில்களில் ஒன்றாக வரித்தும் பல வருடங்களாகி விட்டன.

கதிரவன்

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.