புத் 67 இல. 04

ஜய வருடம் தை மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ர.ஆகிர் பிறை 04

SUNDAY JANUARY 25 2015

 

சிலாவத்துறையில் இரு நாவல்கள் வெளியீட்டு விழா

உங்களுக்கேனும் தெரியுமோ?

நீள இரவுகளெல்லாம்
நிச்சயமாய் விடியும்!

வீட்டின்
பஞ்ச தோஷமெலாம்
வெளிநடப்பு செய்யும்!

முதிர் கன்னிகளின்
முந்தானை கனவுகள்
முழு நனவாகும்!!

எட்டி நின்ற நலமெலாம்
எம் வீட்டுக்கு வந்து
விருந்து வைக்கும்!

வலிக்கொரு வழிகிடைக்கும்!
கொடுக்கும் கை கொடுக்கும்!!

இப்படி எண்ணிலா
இனிய கனவுகளின் தொகுப்பு
நாளைக்கு நாளை என்ற
நாளுக்கு விடிவேயில்லை!?

இன்பமெல்லாம்
இலங்கும் ‘தை’யில் என்றார்
எந்த ‘தை’ அதுவென்று
எவராவது சொல்லி வைத்தாரா??

தொழிலோ? தொல்லையோ?

அறியாமல் சுவைத்து
அவஸ்தைப்படும்
மருந்தாகியது
இந்த வேலை பார்க்கும்
வேண்டாத வாழ்வு

உபாதைகள் கடந்து,
உயர்வுகள் உயிரிழந்து
குடும்பமும், தொழிலுமாய்
இரு முனைத் தாக்குதல்
வாழ்வு
தாரமென்ற
பல குறையும்,
தாயென்ற பல குறையும்,
தொழில் புரிந்து திரும்புகையில்
தொலைந்து போகும் நிம்மதி
எவருக்கும் திருப்தியில்லை
எனக்கும் திருப்தியில்லை

கஷ்டங்கள் நீங்கவென்றே
இஷ்டம்போல்
தொழில் செய்து
நஷ்டம் போனது யாவும்
வாழ்வு நொந்தது நாளும்

வீட்டிலும் தொழிலிலுமாய்
இயங்கி இயங்கியே
இயக்கமில்லா
இயந்திரமாய் இதயம்

வீட்டு வேலைகள்
முதுகின் மேல் சுமையாகும்
தொழிலில் எப்போதும்
மூளை ரணமாகும்

சதக்காசும் மிச்சமின்றி
சதாவும் சுழன்று செல்லும்
மாதக் கடைசிகள் என்னை
மனமின்றி
மிரட்டிச் செல்லும்

சமத்துவம் வேண்டாமே,
சாதனைகள் வேண்டாமே
விட்டுவிடுங்கள்
வீட்டில் என்னை
மனையாள மகிழ்வாக

நிரந்தரம்

வாழ்வும் சாவும் சந்தித்த வேளை
வாழ்வு மரணத்திடம் கேட்டது!

எனக்கு
மனிதர்கள் முத்தமிடுவதன்
மகத்துவம் என்ன?
உனக்கு
உமிழ்ந்து துப்புவதிலுள்ள
உண்மை என்ன?

மரணம் மர்மமாய்ப் புன்னகைத்தது!
நீ ஓர் அழகான பொய்
உன்னை ஆராதிக்கிறார்கள்!

நான்
ஓர் அதிர்ச்சிதரும் உண்மை
அடித்து விரட்டுகிறார்கள்!
இந்த மானிடர்களே
இப்படித்தான்
உண்மையை ஒத்துக்கொள்வதில்லை!

ஆனால்
அவர்களுக்குத் தெரியாது
நீ வெறும் நீர்க்குமிழி
நான்தான் நிரந்தரம்!

கானல் நீர்

சாஸ்திர சம்பிரதாய மென்பது
கானல் நீர் கொண்டு
கங்கை யொன்று உருவாக்குவது போன்றது

முன்னோர் சொன்னதைக் கொண்டு,
இன்றுடன் முடிச்சுப் போடுவது
முட்டாள் தனமானது

ஆசாமிகள் சாமிகளாவதும்,
அருவருடிகள் துறவிகள் போலாவதும்,
அன்றாடம் நடக்கும் நாடகமே

பூனை குறுக்கறுத்தால்,
போகின்ற காரியம் முற்றுப் பெறாதாம் - இது
முடிக்கின்ற வேலையினை தடுக்கின்ற செயலாகும்

ஆதார மற்றவைகளை நம்புவதால்,
ஆகப் போவது ஒன்றுமில்லை - நாம்
அறிவிலிகளாய் வாழ்வதில் பயனொன்றுமில்லை

உழுது செல் உயர்வாய்

காலையில் எழு
கடவுளைத் தொழு

வேளை தப்பாது
விரும்பிப் படி
சாலச் சிறந்ததது
வாழ் வுயர்வுக்கு
வழி வகுக்கும்

சேலையில் கழிவில்லை
அது கட்டிய மாதரிலும்
சேதம் இல்லை
யாருக்காவது பிடிக்கும்
மனிதரிலும் பதரில்லை

ஊரோடு ஒத்து வாழ்
உனக்கில்லை
யாரோடும் பகை
உழைத் துண்
உழுது செல்
உயர்வா யுலகில்

அப்பா!

அப்பாவின் அன்பிற்கே ஒப்பேது? - உலகில்
அப்பாக்கள் அறிவுரையில் தப்பேது?
அப்பாவின் வாய்மொழிதான் தப்பாது - எந்த
அப்பாவும் உழைத்திடுவார் எப்போதும்!

மாடாய் நிதம் உழைக்கிறார் பாடுபட்டு - அப்பா
மாடத்தில் வாழவைக்கத் தன் குடும்பத்தை

கேடாய் அதை அழிக்கின்றார் “சிலர்” தேடுவதை - அப்பா
ஓடாய்த் தேய்கின்றார் “அவர்” ஆடுவதில்!

தந்தை என்பவரின் சிந்தைக்குள் - நிதம்

தந்தியடிப்பது குடும்ப சொந்தம்தான்
குந்தியிருந்தவர் மனப் பந்திக்குள் - கணம்
யந்திரமாய் சுற்றவைக்கும் சொந்தம்தான்!

எல்லோர்க்கும் அறிவுரைகள் சொல்லிடுவார் - அப்பா
பிள்ளைகளோ அதை வெறுத்தே தள்ளிடுவார்
நல்லோராய் நெறியுணரச் சொல்லிடுவார் - அப்பா
நள்ளிரவு தாண்டியுழைத்துவம உருக்குலைந்திடுவார்!

தன் வேலை சேற்றினில் என்றபோதும் - அப்பா
தன்மகன் சான்றோனாகக் கனா கண்டிடுவார்
மண்மேலே ஆற்றுகின்ற தன்பணியில் - அப்பா
மாண்புடனே பிறர்வாழ தனையழிப்பார்!

அப்பாவும் அம்மாவும் இருந்தால் ஒப்பேது? - இங்கு
அப்பாக்கியம் பெற்றவர்க்கே நற்பேறு
அப்பாவை அம்மாவை இழந்தால் இப்பாரில் - நாம்
எப்பேறும் உயர்வுமடைந்துதான் சிறப்பேது?

மறக்கத்தான் நினைப்பேனோ?

என்னை உனக்கு மறந்து போயிருக்கலாம்
எதுவும் நினைவில் இல்லாமலிருக்கலாம்
விண்ணை நோக்கி உயர்ந்த நிலையில் - என்னிடமிருந்து
விடுதலையை நீயும் உணர்ந்திருக்கலாம்...

காலங்கள் மட்டுந்தான் கடந்திருக்கின்றது - என்னில்
காட்சிக ளெதுவும் கலைந்திடவில்லை
பாலமாய் நமைவளர்த்த கவிதையும் - இன்று
மாயமாய் எங்கேயோ மறைந்துவிட்டது....

அன்றொரு நாளின் ஆனந்த பொழுதுகளும்
அழுகையோடு தொடர்ந்த இன்ப முடிவுகளும்
கன்னத்தில் வழிந்த நீரு மின்று
கண்ணீராய்தான் முடிந்து போனது....

விதியை ஒருபோதும் நம்பியதில்லை - இப்போது
விழி நீரில் ஓய்வு கொஞ்சமுமில்லை
கதியின்றி நிற்குமிந்த அபலைக்கு
கடவுளின்றி கைகொடுக்க யாருமில்லை....

பழிவாங்கும் எண்ணமெனக்கில்லை - உன்னையினி
பார்க்கும் வலிமைகூட எனக்கில்லை
களிப்புடன் என்றென்றும் நீவாழ - கடவுளிடம்
வேண்டுவதை தவிர வேறுவேலையும் எனக்கில்லை!!

தொ(ல்)லை பேசி

தேகம் வருடும் காற்றலைகள்
காந்தப் புயம் கொண்டு
கையடக்கத்திற்குள்
கட்சிதமாய் உள் நுழைந்து
செய்தி தின்ன விழிகள் உசுப்பும்...!

ஒன்று உணர்வுக்கு வெப்பமேற்றும்
இன்னொன்று

மழைச்சாரலில் தீப்பொறி மூட்டும்
பல திறக்கப்படாமலே புதைக்கப்படும்

சில சிந்தாமல்
பொக்கிசமாய் போசிக்கப்படும்...!

வியாபகம் முற்றி
வெற்றிலைக்காறியின் வல்லுகனுக்குள்ளும்
இலாபம் பெருக்க
கணக்குப் போட்டு
சரித்திரம் படைக்க சாடை சொல்லும்
இரைச்சல் அடங்கிய
இங்கிதமான இரவுகளில்
இறுக்க மறுக்கும்
இளசுகளின் இமைகளுக்குள்
சாத்தான் வேஷத்துடன்
கலியுக வேட்டை
விடிமீன் வரைக்கும்....!?

நிலவும் நானும்

அந்திமாலை.... அங்கு ஓர்
அமைதியான சாலை
அந்திக்கு விடைகொடுக்கும்
அவசரத்தில் வானம்
பெளர்ணமியை வரவேற்க
விரைந்தோடும் மேகங்கள்

அந்தியின் அந்தம்
தொடங்கவே
இடம்பிடிக்கத் தொடங்கியது

புதுமணப் பெண்ணின் பொலிவுடன்
உதயமாயிற்று
என் பெளர்ணமி
மேனியழகுக்கு மெருகூட்டி
தொடுவானம் வரை
தோகை விரித்து
தோரணங்கட்டி
விழாக்கோலம் பூண்டது
மேகங்கள்

நட்சத்திரங்களும் தோற்றுப்போயிற்று
ஜொலிப்பதில் என்
நிலவுக்கு நிகராய்

இருளில் வரைந்த
ஓவியமாய் - நிலவின்

ஒளியில் நனைந்து
அழகு தந்தது
ஒரு பட்டமரம்

கீதம் இசைத்து
நிலவை வரவேற்க
சோலை விரும்பியது
ஆனாலும்
பாடும் பறவைகள் எல்லாம்
உறங்கிப் போனது
சோலையின் மடியில்

பசுந்தரையில்
புற்களின் நுனியில்
பனித்துளிகள் கூடு கட்டி
இவளின் அழகை
காட்சிப்படுத்திக் கிடக்கிறது!

பாவங்களும்
பாழ்பட்ட துயரங்களும்
இதயத்தில் நிரம்பி வழிந்த
பொழுதுகளிலெல்லாம்
பெளர்ணமி

உன் ஒளியைச் சுவைத்துதானே
என் இதயம்
பூமெத்தையாக மாறிப்போனது

தாயின் மார்பில் உறங்குவதும்
மடியில் உறங்குவதும்
இரண்டும் புனிதம் தான்
இன்று பெளர்ணமி மடியில்
நான் உறங்குவதும்
புனிதம்தான்

தாய் மொழி
 

ஜீவிக்கும் உயிருக்கு
வாய்மொழி தாய்மொழியாம்
ஆயினும்
மனசு, அதற்கு
தாய்மொழியே
உணர்வுகளாம்...!

களிப்பின்போது
“சிரிப்பு” தாய் மொழி
கவலையின் போது

“கண்ணீர்” தாய்மொழி
கஷ்டத்தின் போது
“சகிப்பு” தாய்மொழி
செல்வச் செழிப்பின் போது

“அடக்கம்” தாய்மொழி
பண்பின் போது

“பணிவு” தாய்மொழி
அன்பின் போது
“அரவணைப்பு” தாய்மொழி

குதர்க்கத்தின் போது
“குரோதம்” தாய்மொழி
விதண்டாவாதத்தின் போது
“விரோதம்” தாய்மொழி

பெண்ணானவள் அவளுக்கு
“நாணம்” தாய்மொழி
ஆணானவன் அவனுக்கு
“வீரம்” தாய்மொழி

தாயவள் அன்னைக்கு
“தனியன்பு” தாய்மொழி
தந்தை அவருக்கு
“தயவுடன் அன்பு” தாய்மொழி|
சிறந்த நட்பிற்கு
“சிநேகம்” தாய்மொழி

கணப் பொழுதேனும்
தரிக்காமல்
தவழ்ந்தோடும்
உணர்வுகள்
தடம் புரளும் தருணத்தில்
தாய் மொழியும்

தடுமாறும் - அதற்கே
தகுந்தாற் போல்
உன் மனசும் மாறும்!

கனவுகளும்... நினைவுகளும்

என்னுயிர்க் காதலியே
வாசம் வந்தது
திரும்பிப் பார்த்தேன்
பூவாய் உன் சிரிப்பு!

இசையின் கீதம்...
திரும்பிப் பார்த்தேன் நீ
சுவாசிக்கும் மூச்சுக் காற்று!

கொட்டும் மழை நிற்க...
திரும்பிப் பார்த்தேன்
வானவில்லாய் நீ!

கொட்டும் மேளச் சத்தம்
திரும்பிப் பார்த்தேன்
மணப் பெண்ணாய் - வாழ்க்கையை
தொடங்கி விட்டாய் - நீ!

அன்று
உன் காதல் கனவுகளால்
வாழ்க்கையின் தோல்வியை
தொட்டுவிட்ட

காதல் பைத்தியம் - நான்!
இன்று உன் காதல் நினைவுகளால்
வாழ்க்கையின் வெற்றியை
தொட்டுவிட்ட
காதல் கவிஞன் - நான்!

விறகென எரியும் நிழல்

புல்வெளி படர்ந்து
முகமுலர்த்தி நகரும் காற்றில்
என் வாசக் கைக்குட்டைகளைக்
கொடுத்தனுப்பினேன்

உன் வியர்வையில் நறுமணம் விசிற
அருங்கோடையில் இளைப்பாறி
மடியே தஞ்சமென துயின்றும் இருக்கிறாய்
நிழல் பருகி நீ நெகிழ்ந்த காலங்கள் அது

வெளவால்களின் இராப் போசனங்களில்
தீர்ந்துவிடக் கூடாதென்ற கூர்மையில்

இலைமறைத்து பழுக்க வைத்திருந்தேன்
உனக்கெனக் கனிகளைத் தூவ
நீ தேடித், தேடி பழங்கள் பெருக்கிய பருவங்கள்
சொர்க்கமாய் இருந்திருக்கும் என் காலடி

பின் வந்த நாட்களில்...

நெருக்கடிகளின் பேரிரைச்சல்
உன் ஆன்மாவை கொலை செய்யும் அளவு வர
இருப்பை சோதிக்க வந்து விட்டாய்

தவம் என்றதும், வரம் என்றதும்
உன் பாசாங்குகளின் மாயை ஆயிற்று
அர்த்தமற்ற ஒரு முற்றத்தில்

இருப்பை தக்கவைப்பது
என்றைக்கும் சாத்தியமில்லை என
உணர்கையில் வலி அடர்ந்து
வேர்வரை விகாசிக்கின்றன

என்னைத் தேடியலைந்து தோற்றுத் திரும்பும்
பறவைகளிடம் சொல்லிவை
வாழ்வின் சூனியங்கள் கொடுமையானதென்று

உன் மார்பில் ஏறியமர்ந்ததாகவே
எண்ணிப் புகையும் உன் மனதிலிருந்து
சாம்பலென கூடத் தள்ளுவதில்தான்
சந்தோஷம் எனில் கொளுத்திவிடு
வீழ்த்திய உன் முன்னால் விறகென எரிகிறேன்

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.