புத் 67 இல. 04

ஜய வருடம் தை மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ர.ஆகிர் பிறை 04

SUNDAY JANUARY 25 2015

 

மலையக மக்களின் நீண்ட கால கனவுகள் நனவாகும் காலமிது

மலையக மக்களின் நீண்ட கால கனவுகள் நனவாகும் காலமிது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட புதிய அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் உத்தியோகபூர்வ கடமையேற்பு வைபவங்கள் கடந்த வாரம் எவ்விதமான ஆடம்பரங்களும் இன்றி மிகவும் எளிமையாக இடம்பெற்றன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் போலவே அவர்களது அமைச்சர்களும் எளிமையை விரும்பியவர்களாகக் காணப்பட்டனர். கடந்த ஆட்சியாளர்களுக்கும் இப்போது பதவியேற்றுள்ள இவர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை நாட்டு மக்கள் நிச்சயம் கவனத்திற் கொண்டிருப்பர்.

இந்தப் பதவியேற்பு வைபவங்களில் அமைச்சர்கள் பலரும் பலவிதமான உறுதி மொழிகளை மக்களுக்கு வழங்கியிருந்தனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து தயாரித்த தனது தேர்தல் கால விஞ்ஞாபனத்தில் தெரிவித்திருந்த உறுதி மொழிகளையே தத்தமது அமைச்சுகளுக்கு உட்பட்ட துறைகளுக்கு அமையும் விதத்தில் அமைச்சர்கள் உறுதி மொழிகளாக வழங்கினர்.

அந்த வகையில் மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அமைச்சர்களான பி. திகாம்பரம், க. வேலாயுதம், பெ. இராதாகிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்த கருத்துக்கள் அம்மக்களிடையே மிக நீண்ட காலமாக இருந்துவரும் பல கனவுகளையும் எதிர்பார்ப்புக்களையும் நிச்சயம் நிறைவேற்றுவதற்காக அமைந்துள்ளது. இந்தப் புதிய அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சராகப் பதவியேற்றுள்ள அமைச்சர் பி. திகாம்பரம் மலையக மக்களது வீடில்லாப் பிரச்சினைகளுக்கு விரைவாகத் தீர்வு காணப்படும் என உறுதியாகத் தெரிவித்திருக்கிறார்.

பெருந்தோட்ட உட்கடமைப்பு வசதிகள் மற்றும் அபிவிருத்தி அமைச்சராக அவர் பதவியேற்றுள்ளார். கடந்த இரண்டு ஆட்சிக் காலத்தின் பின்னர் இந்த அமைச்சு புதிய அரசாங்கத்தினால் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே வரவேற்கத்தக்கதொரு விடயம். ஏனெனில் இந்த அமைச்சின் மூலமாக மலையகப் பெருந்தோட்டத்துறை மக்களுக்குத் தேவையான பலவற்றைச் செய்யலாம்.

இந்த அமைச்சின் கீழ் அம்மக்கள் நலன்களுக்காக பல நிதியொதுக்கீடுகளை மேற்கொள்ள முடியும். தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் பலவற்றை நிச்சயமாக ஏற்படுத்திக் கொடுக்க முடியும். அதனால்தான் அமைச்சர் திகாம்பரம் தான் அமைச்சராகப் பதவியேற்ற அன்றைய தினமே தேர்தல் காலத்தில் தன்னால் வழங்கப்பட்ட உறுதிமொழிகளில் பிரதான இடத்தைப் பிடித்துள்ள மலையக மக்களுக்கு ஏழு பேர்ச் காணி வழங்கி அதில் வீடமைத்துக் கொடுப்போம் எனும் விடயத்தைப் பற்றித் தனது உரையில் குறிப்பிட்டார்.

தனது அந்த உறுதிமொழி வெறுமனே வாக்குகளைப் பெறுவதற்காக கூறப்பட்டது அல்ல என்பதை அவர் நிரூபித்துள்ளார். அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத் திட்டத்தில் இந்த விடயத்திற்கு அதிமுக்கியத்துவம் கொடுக்கப்படும் என அவர் தெரிவித்தமையானது மலையக மக்களது வீடில்லாப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றுத் தரும் எனும் நம்பிக்கையை அம்மக்களிடையே நிச்சயம் ஏற்படுத்தியிருக்கும்.

அதேபோன்று பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சராக க. வேலாயுதம் நியமிக்கப்பட்டிருப்பதானது உண்மையிலேயே மலையகத்தின் மலர்ச்சிக்கான ஓர் ஆரம்பமாகவே கருத வேண்டும். கடந்த நாற்பது வருடங்களுக்கும் மேலாக மலையகத்தில் தொழிற்சங்கவாதியாக இருக்கும் இவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கத்தில் முக்கியமான பதவிகளை வகித்து வருகிறார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்.

தான் சார்ந்த பெருந்தோட்டத் துறை மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் எனும் எண்ணம் இருப்பதனாலேயே கட்சியின் தொழற்சங்கத்தில் இவருக்கு தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் முக்கியமான பதவிகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் வேலாயுதம் நிதியம் எனும் அமைப்பினூடாக பதுளையில் பல மக்கள் சேவைகளையயும் இவர் செய்து வருகிறார்.

குறிப்பாக இளைஞர், யுவதிகளுக்கு இவரால் பல சுயதொழில் வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு வருகிறது. இவருக்கு இந்த அமைச்சுப் பதவி கிடைத்தமை உண்மையிலேயே மிகவும் பொருத்தமானதாகும். அமைச்சர் திகாம்பரத்துடன் இணைந்து இவர் மலையகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவார் என்பது நிச்சயம்.

இவர்களைப் போலவே கல்வி இராஜாங்க அமைச்சராகப் பதவியேற்றுள்ள பெ. இராதாகிருஷ்ணன் தனது பதவியேற்பு வைபவத்தில் உரையாற்றுகையில், மலையக மக்கள் மற்றும் புத்திஜீவிகளின் நீண்ட கால கனவாக இருந்துவரும் மலையகப் பல்கலைக்கழக விடயத்தில் தீர்வு காணப்படும் எனத் தெரிவித்திருக்கிறார்.

இது அவர் தனக்கு வழங்கப்பட்டுள்ள பதவியை எதிர்காலத்தில் சாயாகப் பயன்படுத்துவார் என்பதனை எடுத்துக் காட்டியுள்ளது. இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் மத்திய மாகாண சபையில் சுமார் பத்து வருடங்களாகக் கல்வி அமைச்சராகக் கடமையாற்றியவர். அதன் பின்னரேயே பாராளுமன்றத்திற்கு தெரிவானார். தனது பத்து வருட காலத்தில் மத்திய மாகாணத்தில் இவரது சேவையைப் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. அந்தளவிற்கு அந்த மாகாணத்தில் கல்வித்துறைக்கு குறிப்பாகத் தமிழ்க் கல்வித் துறைக்கு இவர் அளப்பரிய பங்காற்றியுள்ளார். இத்தகைய அனுபவம் உள்ள ஒருவருக்கு முழு நாட்டுக்குமான கல்வி இராஜாங்க அமைச்சர் பதவி கிடைத்தமையை வரவேற்க வேண்டும்.

வடக்கு கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கல்வி நடவடிக்கைகள் குறித்தும் தான் விசேடமாகக் கவனம் செலுத்தவுள்ளதாக இவர் தெரிவித்த கருத்து அவரது பரந்துபட்ட நாடளாவிய ரீதியிலான வேலைத் திட்டத்தை பறைசாற்றுவதாக உள்ளது. உண்மையில் இவர் தெரிவித்த மலையக பல்கலைக்கழகம் சம்பந்தமான விடயம் முன்னர் பல தடவைகள் பலராலும் முயன்றும் முடியாத காரியமாகவே இருந்தது.

கடந்த அரசாங்கத்தின் இறுதிக் காலகட்டத்திலும்கூட பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் இவ்விடயம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நேரடியாகவே இக்கோரிக்கையை முன்வைத்த போதும் அது தேவையில்லை என்று கூறப்பட்டது. ஆனால் அவை எல்லாவற்றுக்கும் இப்போது இந்தப் புதிய அரசாங்கத்தில் தீர்வு கிடைத்துள்ளது. இத்தகைய திட்டங்களுக்கு புதிய அரசாங்கம் ஒருபோதும் தடையாக இருக்காது.

அதனால் இந்த மூன்று மலையக அமைச்சர்களும் இணைந்து மலையகத்தில் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சின் மூலமாகப் பலவற்றைப் செய்யலாம். இந்த அமைச்சினுள்ளேயே பெருந்தோட்டத்துறை மக்களுக்குத் தேவையான சகல விடயங்களும் பொதிந்துள்ளன.

அத்துடன் இந்த அமைச்சு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சாக இருப்பதனால் அதன் மூலமாகக் கிடைக்கும் சகல வரப்பிரசாதங்களையும் பெற்று மலையகத்தை முன்னேற்றுவது அவசியம். அதேபோன்று இராஜாங்க அமைச்சர்கள் மூவரும் தமது அமைச்சுக்களினூடாகவும் மலையகத்திற்குப் பலவற்றைச் செய்யலாம். மலையகத்தைப் பொறுத்தவரையில் வீடமைப்பு, கல்வி, சுகாதாரம், மின்சாவர வசதி மற்றும் போக்குவரத்து என்பனவே அவர்களுக்கு அவசியமானதாகக் காணப்படுகிறது.

இவற்றை அம்மக்களுக்கு வழங்கவே இதுவரை காலமும் வழங்கப்படாது இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சை புதிய ஜனாதிபதியும், பிரதமரும் வழங்கியுள்ளனர்.

அதை சரிவரப் பயன்படுத்திக் கொள்வது எமது கெட்டித்தனம். புதிய அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத் திட்டத்தில் நாடு முழுவதும் பல அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதற்குள் இந்த நாட்டின் வருமானத்திற்கு முதுகெலும்பாக இருந்து உழைத்துவரும் தோட்டப்புற மக்களது வாழ்வும் மலர மலையக அரசியல் தலைவர்கள் தம்மாலான பணிகளை புத்திக் கூர்மையுடன் மேற்கொள்ள வேண்டும் என்பதே எமது கருத்தாகும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.