புத் 67 இல. 04

ஜய வருடம் தை மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ர.ஆகிர் பிறை 04

SUNDAY JANUARY 25 2015

 

நீதித்துறையின் சுதந்திரம் மீளவும் நிலைநிறுத்தப்படும்

இலங்கை சிங்களவர், தமிழர், முஸ்லிம் என சகலருக்கும் உரிய நாடு;

நீதித்துறையின் சுதந்திரம் மீளவும் நிலைநிறுத்தப்படும்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

* சீனாவுக்கு எதிராக இந்தியாவையும் இந்தியாவுக்கு எதிராக சீனாவையும் மோதவிட முயற்சித்தது ராஜபக்ஷ அரசு

* ஐ.நா வினால் விசாரணையை மேற்கொள்ள முடியும். ஆனால், எந்தவொரு குற்றம் தொடர்பான சட்ட நடவடிக்கையும் இலங்கையி லேயே இடம்பெறவேண்டும்

இந்தியாவின் என்.டி.ரி.வி செய்திச் சேவையின் ஸ்ரீனிவாசன் ஜெய்னுக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரத்தியேக பேட்டியொன்றை வழங்கியுள்ளார். இந்தியாவுடனான இலங்கையின் உறவுகள், சீனாவுடனான கடனுடன் தொடர்புடைய பிணைப்பு மற்றும் சிறுபான்மை தமிழ் மக்களுக்கு அதிகாரப்பகிர்வுடன் தொடர்புடைய விடயத்தில் முன்னோக்கிச் செல்லும் வழி என்பன பற்றி அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். அப்பேட்டி வருமாறு:

கே: இலங்கையின் தருணத்திற்குப் பொருத்தமான அரசியல்வாதிகளில் ஒருவரும் மூன்றாவது தடவையாக இப்§¡து பிரதமராக இருப்பவருமான ரணில் விக்கிரமசிங்கவின் ஆதரவு இல்லாவிடில் தேர்தலில் மைத்திரி பால சிறிசேன வெற்றியடைந் திருப்பது சாத்தியப்பட்டிருக்காதென பலர் நம்புகின்றனர். உண்மையில் நீங்கள் பேட்டியில் இணைந்து கொண்டமையிட்டு நன்றி தெரிவிக் கின்றேன். நீங்கள் இல்லாவிடில் சிறிசேன வெற்றியடைந்திருக்க முடியாதென கணிப்பீடு காணப்படுகின்றது. இந்த தேர்தலில் நீங்களா உண்மையான ‘கிங் மேக்கர்’?

மக்களே கிங் மேக்கர்கள். அவர்கள் மாற்றத்தை விரும்பியிருந்தார்கள். அவர்கள் மன்னரை விரும்பியிருக்கவில்லை. அவர்கள் ஜனாதிபதியையே விரும்பி இருந்தனர். மற்றும் நிறைவேற்று அதிகார முறைமையை இல்லாதொழிப்பதை விரும்பியிருந்தனர். ஆதலால் நாங்கள் பொதுவேட் பாளரை நிறுத்துவதெனத் தீர்மானித்தோம். எதிரணியில் உள்ள பெரிய கட்சியாக ஐ.தே.க இருந்தது. வட மாகாணத்திற்கு வெளியே களத்தில் நிச்சயமாக அமைப்புகளை நிர்வகித்து வந்தது.

கே: ஆனால், மாற்றம் அமைதியான முறையில் வந்ததெனப் பலர் நம்புவதை தாங்களே அறிவீர்கள். முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷவினால் சதிப் புரட்சிக்கு முயற்சிக்கப்பட்டதாக வந்த செய்திகளைத் தவிர மாற்றம் அமைதியான முறையில் இடம்பெற்றிருந்தது. அவர் இறுதியில் தோல்வியை ஏற்றுக்கொண்டு காலைப் பொழுதில், அவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகைக்கு அவரைச் சந்திக்க உண்மையில் வந்திருந்தீர்களா? அவர் உடனடியாக ஏற்றுக் கொண்டாரா அல்லது திட்டமிட்ட சதிப்புரட்சி ஏதாவது இருந்ததா?

தனக்கு தொலைபேசி அழைப்பு விடுக்குமாறு ஜனாதிபதி ராஜபக்ஷ எனக்குச் செய்தியொன்றை அனுப்பியிருந்தார். அவர் தேர்தலில் தோல்வியடைந் திருந்தார். நான் அங்கு வருவதாகவும் தொலைபேசியில் லாமல் நேரடியாக வந்து அதிகார மாற்றம் குறித்து கலந்துரையாடுவதாகவும் பதிலளித்திருந்தேன். ஆதலால், இங்கு நான் வந்தேன். அவர் (ஜனாதிபதி ராஜபக்ஷ) தோல்வியை ஏற்றுக் கொண்டார். அதிகாரப் பரிமாற்றம் குறித்து நாங்கள் விரிவாக கலந்துரையாடினோம்.

கே: அவர் தயக்கம் அல்லது வேறு எதனையும் காட்டவில்லையா?

அவர் என்னைச் சந்தித்த போது அவ்வாறு எதுவும் இல்லை.

கே: இந்த அதிகாரத்தின் பின்னணியில் உள்ள உண்மையான அதிகாரமாக நீங்களே இருக்கப் போகின்aர்கள் என பலர் நம்புகின்றனர். அந்த உண்மையை தாங்கள் அறிவீர்கள்? உண்மையில் இது ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கமாகவே இருக்கப்போகின்றது. இது சிறிசேனவின் அரசாங்கமல்ல இதில் உண்மை உள்ளதா?

நல்லது, நாங்கள் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கியுள்ளோம். அரசாங்கத்தில் உள்ள கட்சிகள் கூட்டாகச் செயற்படும். இந்த மாதம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கு அரசியல் அமைப்பில் திருத்தத்தைக் கொண்டுவரவுள்ளோம். அநேகமாக ஜுன் அல்லது மேயில் நாங்கள் பாராளுமன்றத் தேர்தலை நடத்தவுள்ளோம். அப்போது யார் பிரதமராக இருப்பார் என்பதையும் அரசாங்கத்தின் தலைவராக இருப்பார் என்பதையும் பொது மக்களால் தீர்மானிக்க முடியும்.

கே: இப்போது இந்தியா கரிசனை கொண்டிருக்கும் முக்கியமான மூன்று பாரிய விவகாரங்களை நாங்கள் பார்க்கும் போது, முதலாவதாக தமிழர்களுக்கு நீங்கள் முழுமையான சுயாட்சியை வழங்குவீர்களா? அல்லது அந்த விடயம் வெறுமனே காகிதத்தில் வெறும் உறுதி மொழியாக தொடர்ந்து இருக்குமா?

13ஆவது திருத்தம் அமுல்படுத்தப்பட வேண்டுமென்பது உடன்பாடாகும். அந்த விடயம் தொடர்பாக தமிழ்க் கூட்டமைப்புடன் நாங்கள் கலந்துரையாடல்கள் மேற்கொண்டுள்ளோம். கொள்கை அடிப்படையில் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டுமென்பதில் நாங்கள் இணங்கியுள்ளோம்.

கே: இரண்டாவது விடயமாக இருப்பது ராஜபக்ஷ அரசாங்கத்தினால் சீனாவுக்குச் சார்புடையதாக அதிகளவுக்கு சாய்ந்து சென்ற விடயமாகும். நீங்கள் அதனை சீர்படுத்துவீர்களா? ஏனென்றால் அந்த விடயம் இந்தியாவுக்கு அதிகளவுக்கு கவலைக்குரியதொன்றாக இருக்கின்றது?

எங்களைப் பொறுத்தவரை இந்தியாவுடன் நட்புறவுக் கொள்கை என்ற பாரம்பரியத்தை நாங்கள் தொடர்வோம். அதேவேளை சீனா, ஜப்பான் மற்றும் ஏனைய நாடுகளுடனும் எமது நட்புறவைப் பேணுவோம்.

கே: ராஜபக்ஷ காலப் பகுதியில் சீனாவுடனான சாய்வு அதிகளவுக்கு சென்றிருப்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிaர்களா? அதிகளவுக்கு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளனவே?

ப: ராஜபக்ஷ அரசாங்கமானது இந்தியாவுக்கு எதிராக சீனாவுடனும் சீனாவுக்கு எதிராக இந்தியாவுடனும் விளையாடுவதற்கு முயற்சித்தது என்று நான் எப்பொழுதுமே கூறியுள்ளேன்.

கே: ஆனால், ஒப்பந்தங்களின் நிலைமை என்ன மாதிரி? தனது காலப் பகுதியில் ராஜபக்ஷ இந்த ஒப்பந்தங்கள் பலவற்றில் கைச்சாத்திட்டுள்ளாரே, ஜனாதிபதிக்கு சீனர்கள் நிதியுதவி அளித்துள்ளனர். அவை தொடர்பான விசாரணையை மேற்கொள்ளுமாறு நீங்கள் கேட்டுள்Zர்களே?

நாங்கள் சகல வெளிநாட்டு ஒப்பந்தங்களையும் ஆராய்கின்றோம். அத்துடன் உள்ளூர் ஒப்பந்தங்களையும் தேடிப் பார்க்கின்றோம். அவற்றில் ஊழல் இருந்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுப்பதை நாங்கள் உறுதிப்படுத்துவோம். சீனாவாக இருந்தால் என்ன வேறு நாடாக இருந்தால் என்ன ஒப்பந்தங்களில் ஊழல் இருந்தால் நடவடிக்கையை மேற்கொள்வோம்.

இதேவேளை, துறைமுக நகரத்திட்டத்தை நாங்கள் மீளாய்வு செய்து வருகின்றோம். இதில் நாங்கள் பூர்வாங்க ஆய்வையோ சுற்றாடலுக்கு ஏற்படுத்தப்படும் தாக்கம் குறித்த கணிப்பீட்டையோ பார்த்திருக்கவில்லை. நாங்கள் எதிரணியில் இருந்த போது அவை தொடர்பாக பாராளுமன்றத்தில் விபரத்தை சமர்ப்பிக்குமாறு கேட்டிருந்தேன். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்திருக்கவில்லை. ஆதலால், சுற்றாடல் மற்றும் பூர்வாங்க ஆய்வு விடயங்கள் குறித்து நாங்கள் பார்க்க வேண்டியுள்ளது.

கே: நீங்கள் அதனை பார்த்தீர்களா? அங்கு ஊழல் இடம்பெற்றிருப்பதாக நம்புகின்aர்களா?

இரு அறிக்கைகளை நாங்கள் அதிகமாக பார்த்துக் கொண்டிக்கின்றோம். அதன் பின்னர் அங்கு ஊழல் இருந்ததா, அல்லது இல்லையா என்பது பற்றி அறிந்து கொள்வோம்.

கே: போர்க்குற்ற விசாரணை தொடர்பான பிரச்சினை என்ன மாதிரியாக இருக்கின்றது.

நாங்கள் எதனைச் செய்வதாயினும் எமது உள் மட்டத்திற்குள்ளே செய்ய வேண்டுமென்பது எமது நிலைப்பாடாகும். அதுவே சகல தருணத்திலும் எமது நிலைப்பாடாக இருந்து வருகின்றது.

கே: ஆதலால், சர்வதேச விசாரணைக்கு இடமளிக்கப்போவதில்லையென நீங்கள் கூறுகின்aர்களா?

இல்லை, இலங்கையுள் எந்தவொரு குற்றத்தையும் இழைத்த எந்த நபரையும் விசாரணை செய்வது இலங்கையைப் பொறுத்தது என்பதையே நாங்கள் கூறுகின்றோம்.

கே: ஆதலால், உங்களின் நிலைப்பாடும் முன்னைய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஒத்திருக்கின்றது. ஐ.நா. விசாரணைக்கு வரவேற்பு இல்லை, நீங்கள் உங்களின் சொந்த உள்மட்ட விசாரணையையே மேற்கொள்வீர்கள்?

இல்லை, ஐ.நா தனது விசாரணையை மேற்கொள்ள முடியும். இந்த விவகாரங்களில் ஐ.நாவுடன் நாஙகள் செயற்படுவோம். அதுவே வித்தியாசம். இந்த விவகாரங்கள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் பேரவையுடன் நாங்கள் செயற்படவுள்ளோம். எந்தவொரு குற்றவியல் நடவடிக்கை தொடர்பாகவும் விசாரணை இலங்கையில் மேற்கொள்ளப்படுவது அவசியம் என்று நாங்கள் கூறுகின்றோம்.

எந்தவொரு சிவில் சட்டமும் இலங்கைக்குள் பயன்படுத்தப்பட வேண்டும். இந்த விவகாரத்தை இலங்கை நீதிமன்றங்களால் மட்டுமே தீர்மானிக்க முடியும். இந்தியா, அல்லது அமெரிக்காவிலும் இதே நடைமுறையே உள்ளது. நாங்கள் எவரிடமும் வேறுபட்டவர்களாக இருக்கவில்லை. ஆனால், நீதித்துறையின் சுதந்திரத்தை நாங்கள் மீள நிலைநிறுத்துவோம்.

கே: இந்தப் போர்க் குற்றங்கள் இடம்பெற்றிருந்ததாக ஏற்றுக் கொள்கிaர்களா?

மனித உரிமைகள் மீறல்கள் இடம்பெற்றிருந்தால் அவற்றை நாங்கள் ஆராய்வோம். ஐ.நா தனது சொந்த அறிக்கையை அனுப்பவுள்ளது. ஆதலால், அதன் பின்னர் நாங்கள் என்ன செய்வது என்பது குறித்து தீர்மானிப்போம். ஆனால், நாங்கள் செயற்படுவோம். ஐ.நா அறிக்கையானது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லும் நடவடிக்கை பற்றியது அல்ல. மீறல்கள் இடம்பெற்றிருக்கிறதா இல்லையா என்பது பற்றியதாகவே இது இருக்கின்றது.

கே: இலங்கை ஒற்றையாட்சி நாடாகவுள்ளதா? சிங்கள அரசாக உள்ளதா அல்லது சகல மக்களையும் உள்ளடக்கிய அரசாக இருக்கின்றதா? இந்தக் கவலை முன்னைய ஆட்சியிலும் இருந்தது. அந்த நிலைப்பாட்டில் எந்தவொரு, ஏதாவது மாற்றத்தை அவர்கள் கொண்டு வரப்போகிறார்களா என்பது பற்றிய கவலைகள் இருக்கின்றவே?

13ஆவது திருத்தமானது தற்போதைய அரசியல் அமைப்பின் அடிப்படையைக் கொண்டதாகும். இதனை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது. இது ஒற்றையாட்சி தன்மையைக் கொண்டதாகவும் இருக்கின்றது. இந்த நாடு சிங்களவர், தமிழர், முஸ்லிம் என சகலருக்கும் உரிய நாடு. அதனை இங்குள்ள சகலருமே ஏற்றுக்கொண்டுள்ளனர்.

கே: தேர்தல் பிரசாரத்தின் போது தங்களால் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ நீதியை எதிர்கொள்வாரா அல்லது அது தொடர்பாக ஏதாவது உடன்பாடு இருக்கின்றதா?

ஆம், நாங்கள் சகல விடயங்களையும் ஆராய்கின்றோம். நடவடிக்கை எடுக்கத் தேவப்பட்டால் அதனை நாங்கள் மேற்கொள்வோம்.

கே: நீங்கள் பிரதமர் என்ற ரீதியில் தாங்கள் எதிர்கொள்ளும் தனியொரு பாரிய சவாலாக எது இருக்கின்றது என்று கூறுவீர்கள்?

அரசியல் அமைப்பு ரீதியான திருத்தங்களை ஏற்படுத்துவதே இப்போது எமக்கு உள்ள பாரிய சவாலாகும். ஜனநாயகத்தை மீள ஏற்படுத்தி மக்களுக்கு ஆறுதலைக் கொடுக்க வேண்டும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.