புத் 67 இல. 04

ஜய வருடம் தை மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ர.ஆகிர் பிறை 04

SUNDAY JANUARY 25 2015

 

 
ஒன்பதாவது அனைத்துலக தமிழாராய்ச்சி மாநாடு

ஒன்பதாவது அனைத்துலக தமிழாராய்ச்சி மாநாடு

மலேசியா, கோலலம்பு+ர் மலாலா பல்கலைக்கழக ஜன. 29 முதல் பெப். 01 வரை

ஒன்பதாவது அனைத்துலக தமிழாராய்ச்சி மகாநாடு மலேசியா கோலாலம்பூரில் மலாயா பல்கலைக்கழகத்தில் இந்திய துறையினரால் ஜனவரி 29ம் திகதி முதல் பெப்ரவரி 1ம் திகதி வரை நான்கு நாட்கள் நடைபெறவுள்ளது.

உலகத்தில் பல பாகங்களிலும் உள்ள தமிழ் ஆய்வாளர்கள், தமிழ் அறிஞர்கள், இலக்கியவாதிகள், கல்விமான்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இந்த ஆராய்ச்சி மாநாட்டில் தமது ஆய்வுகளை சமர்ப்பிக்கவுள்ளனர்.

தமிழாராய்ச்சி மாநாடுகளின் முன்னோடிகளாக அமைந்த அனைத்துலக தமிழாராய்ச்சி மன்றம் இந்த ஒன்பதாவது மாநாட்டினை நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஒழுங்கு செய்துள்ளது.

1964ம் ஆண்டு புதுடில்லியில் 26வது கீழைத்தேயவியல் மாநாடு நடைபெற்றது. தமிழ்த்துறையில் ஆர்வம் கொண்ட அறிஞர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். இலங்கை சார்பாக பேராசிரியர் க. கணபதிப்பிள்ளையும், மலேசியாவின் சார்பில் தனிநாயகம் அடிகளாரும் கலந்து கொண்டனர். மலேசியாவில் பணியாற்றிய க.பொ.இரத்தினமும் கலந்து கொண்டவர்களுள் ஒருவர். தமிழுக்கு கீழைத்தேயவியல் மாநாட்டில் அளிக்கப்படும் இடம் போதாது என இவர்களின் மனதில் பதிந்தது.

தனி நாயகம் அடிகளார் 1961ம் ஆண்டு முதல் மலேசியப் பல்கலைக்கழகத்தில் இந்தியத்துறையில் பேராசிரியராக பணியாற்றினார். 1968ல் இரண்டாவது தமிழாராய்ச்சி மாநாடு சென்னையில் நடைபெற்றது. அறிஞர் அண்ணாதுரை முதலமைச்சராகக் கொண்ட தமிழ்நாடு இந்த மாநாட்டை சிறப்பாக நடாத்தியது. இந்த மகாநாட்டிலேயே அனைத்துலக தமிழாராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள அனைத்துலக தமிழாராய்ச்சி பணியகம் அமைக்க வேண்டும் என தனிநாயகம் அடிகளார் விரும்பியதால் அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இங்கு அடிகளார் பணிப்பாளராக இருந்து கடமையாற்ற முடியாமல் போனது பலருக்கும் கவலையளித்தது.

மூன்றாவது மகாநாடு 1970ல் பிரேஞ்சு தலைநகரான பாரிசில் நடைபெற்றது. தமிழாராய்ச்சித் துறையில் மேற்கத்தேய நாட்டவர்களின் பணிகளை தளமாகக் கொண்டு இம்மாநாடு அமைக்கப்பட்டது. இதன் தலைவராக பேராசிரியர் ஜுன் பிரியோசட்டும், இணைச் செயலாளர்களாக பேராசிரியர் காமிஸ் அவலபில், தனி நாயகம் அடிகளார் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

1966ஆம் ஆண்டு மலேசியா பல்கலைக்கழகத்தில் முதல் உலகத்தமிழ் மாநாடு கூட்டப்பட்டது. தனி நாயகம் அடிகளார் ஏற்பாடு செய்த இந்த மாநாடு மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது. இதற்கு ஆதரவாக அனைத்துலக தமிழாராய்ச்சி மன்ற இலங்கைக் கிளை 1965இல் அமைக்கப்பட்டது.

இந்த முதலாவது மகாநாட்டில் 22 நாடுகளைச் சேர்ந்த 132 பிரதிநிதிகள் 40, பார்வையாளர்கள் கலந்து கொண்டதுடன் 150 ஆராய்ச்சி கட்டுரைகள் படிக்கப்பட்டுள்ளன. காலாண்டு சஞ்சிகையை தனிநாயகம் அடிகளார் 1955லிருந்து 1963 வரை பல தமிழ் ஆய்வாளர்களை ஒன்றிணைத்து நடாத்தி வந்தார். இந்த சஞ்சிகை மூலம் தமிழ் ஆய்வின் அவசியம் பற்றி அறிவுறுத்தப்பட்டு வந்தது.

சர்வதேச மாநாட்டை தமிழியல் தொடர்பாக நடாத்த வேண்டும் என தனி நாயகம் அடிகளார் திட்டமிட்டார். எனவே 1964ல் கீழைத்தேயவியல் மாநாட்டின் போது தனிநாயகம் அடிகளார் பேராசிரியர் வி.ஐ.சுப்பிரமணியனும் சேர்ந்து இந்த மாநாட்டுக்கு வருகைதந்த தமிழ் அறிஞர்களை ஒன்றுதிரட்டி புதுடில்லி விக்யபவனில் 7.01.1964 அன்று ஒரு கூட்டம் நடாத்தினார். இந்தக் கூட்டத்திலேயே அனைத்துலக தமிழாராய்ச்சி மன்றம் ஆரம்பிக்கப்பட்டது.

இம்மாநாடுகளில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் நூலுருப் பெற்றன. இவை பாரிஸ் மாநாட்டில் வெளியிடப்பட்டன.

நான்காவது மாநாடு இலங்கையில் 1974 நடத்தப்பட்டது. 1972ல் தனி நாயகம் அடிகளார் ஓய்வுபெற்று யாழ்ப்பாணத்தில் வசித்தார். அனைத்துலக தமிழாராய்ச்சி மன்ற இலங்கைக் கிளை கொழும்பு பம்பலப்பிட்டி கிளென் ஆபார் பிரேசில் காரியாலயத் தினை திறந்தது. 1974ம் ஆண்டு மாநாடு யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பட்டது. தனிநாயகம் அடிகளாரின் மறைவுக்கு பின்னர் சில காலம் தாமதித்து 1981ம் ஆண்டு தமிழக முத லமைச்சர் எம்.ஜி.ஆர்.தலைமையில் தமிழ்நாட்டில் மதுரையில் ஐந்தாவது மகா நாடு நடத்தப்பட்டது.

ஆறாவது மகாநாடு மலேசியாவில் 1987ஆம் ஆண்டு நடைபெற்றது. ஏழாவது மகாநாடு 1989ம் ஆண்டு மொரிசியஸ் தீவில் நடைபெற்றது. எட்டாவது மகாநாடு 1995 இல் தமிழகத்தில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையில் தஞ்சாவூரில் நடைபெற்றது.

தற்போது 20 வருடங்களின் பின்னர் 2015ல் மலேசியாவில் ஒன்பதாவது மகாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கான ஆய்வுக்கட்டுரைகள் கடந்த ஜுன் மாதத்தில் அழைக்கப்பட்டிருந்தன. தெரிவுகள் நடைபெற்று செப்டம்பர் முதல் நவம்பர் வரை ஆய்வாளர்களுக்கு அறிவிக்கப்பட்டு வந்தது. பார்வையாளர்களுக்கான பதிவுகளும் கனணியூடாக நடைபெற்றன.

20 வருடம் இலங்கையில் ஏற்பட்டிருந்த யுத்தம், அமைதியின்மை, புலம்பெயர்தல் சூழல் காரணமாக இம்மாநாடு ஒத்திவைக்கப்பட்டு வந்தது. தற்போது பன்முகத்துறையில் நடைபெறும் இம்மாநாடடில் புலம்பெயர் நாடுகளிலிருந்தும் பல ஆய்வாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.