புத் 67 இல. 04

ஜய வருடம் தை மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ர.ஆகிர் பிறை 04

SUNDAY JANUARY 25 2015

 

 
வெளிவிவகார அமைச்சர் மங்களவின் இந்திய விஜயம்

வெளிவிவகார அமைச்சர் மங்களவின் இந்திய விஜயம்

திய அரசாங்கத்தின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு பொறுப்பை ஏற்றுள்ள மங்கள சமரவீர தனது முதல் உத்தியோகபூர்வ விஜயத்தை கடந்த வாரம் 18ம், 19ம் திகதிகளில் இந்தியாவுக்கு மேற்கொண்டார். இந்த அரசில் வெளிநாட்டுக்கு விஜயத்தை மேற்கொண்டவர் என்ற பெருமையும் மங்களவிற்கு முதன் முதலாக கிடை த்தது.

இந்தியாவில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அவர்களுக்கு பாரிய வரவேற்பு கிடைத்தது. இது புதிதாக உருவாக்கப்பட்ட அரசாங்கத்திற்கு இந்தியா வழங்கவுள்ள ஒத்துழைப்பையும் ஆதரவையும் காட்டுகின்றது.

பிராந்திய அரசியல் ராஜதந்திரத்தில் எமது இலங்கை நாட்டுக்கு இந்தியா மிகவும் முக்கியம் என்பதனை திறமை வாய்ந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர “த எகனொமிஸ்ட்” என்ற சஞ்சிகைக்கு வழங்கிய பேட்டியில் தெளிவாகவும் விபரமாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இவரது விஜயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து ‘த ஹிந்து’ பத்திரிகையும் கட்டுரைகளையும் செய்திகளையும் வெளியிட்டது. 20 மில்லியன் ஜனத்தொகையை கொண்ட எமது நாட்டின் உள்விவகாரத்தையும் வெளிவிவகாரத்தையும் இந்தியா நன்கு அவதானிக்கும்.

அமைச்சர் மங்கள சமரவீரவின் இந்திய விஜயம் பல வழிகளில் முக்கியத்துவம் பெறுகின்றது. ராஜபக்ஷ நிர்வாக ஆட்சிக் காலத்தில் பல இலங்கை உயர் ஸ்தானிகர்கள் டெல்லியில் கடமை செய்தனர்.

இவர்கள் ஆழ்ந்த அனுபவமும் திறமையும் கொண்டவர்களாக இருந்த போதிலும் கூட கெளரவமான ராஜதந்திர உறவுகளை இந்தியாவுடன் கடைப்பிடிக்கவோ அமுல்படுத்தவோ இவர்களால் முடியாமல் போனது.

இதன் காரணமாக இந்திய - இலங்கை உறவுகளில் கசப்பு நிலைமை தோன்றியது. இதனால் பல சிக்கல்கள் உருவாகின. இதன் பிரதிபலிப்பாக இருதரப்பு பொதுமக்களுக்கும் வந்தது. வாணிப, கலாசார விடயங்களில் சங்கடங்கள் உருவாகின. குறிப்பாக மீன் பிடிக்கும் விடயங்களில் காரசாரமான வாக்குவாதங்கள் ஏற்பட்டன.

இதற்கு அடிப்படையாக விளங்கியது எமது வெளிவிவகார அமைச்சு உயர்மட்டமாகும். முன்னாள் ராஜபக்ஷ அரசாங்கத்தில் வெளிவிவகார அமைச்சருக்கு இல்லாத கெளரவமும் அதிகாரமும் அமைச்சை கண்காணிக்கும் அல்லது அவதானிக்கும் பொறுப்பிற்கு நியமிக்கப்பட்ட பாராளுமன்ற அங்கத்தவருக்கு இருந்ததாகும். இவர்களுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் இந்தியாவுடன் பகைமை வளர வழி செய்தது.

இது தவிர மகிந்த ராஜபக்ஷவிற்கு துதிபாடிய அரசியல்வாதிகள் இந்தியாவுக்கு எதிராக பல சந்தர்ப்பங்களில் குரல் எழுப்பினர். இதனால் இந்தியா ஆத்திரமும் கோபமும் அடைந்தது. அமைச்சர் மங்கள சமரவீர அவர்களின் விஜயம் வரை இந்த அரசியல் சூழ்நிலை இருந்தது என கூறலாம்.

இப்படியான ஒரு தர்மசங்கடமான நிலையில் இருந்து இலங்கையைக் காப்பாற்ற வேண்டிய ஒரு கட்டத்தில், எமது நாட்டின் வெளிநாட்டுக் கொள்கையை முன் எடுத்துச் செல்லும் சவாலை எமது புதிய வெளிவிவகார அமைச்சர் ஏற்றுள்ளார்.

தமிழ் நாட்டு அரசு செல்வாக்கு இந்தியாவின் மத்திய அரசில் முக்கிய இடம் வகிக்கின்றது. எனவே தமிழ் நாட்டின் ஆதரவு இலங்கை வெளி யுறவு கொள்கைக்கும் முக்கியத்துவம் பெறுகின்றது. எமது அமைச்சரின் விஜயத்திற்கு முன்னர் எமது நாட்டின் வடக்கு ஆளுநர் பதவியில் இருந்து விலக்கப்பட்டார். தமிழ் பேசும் வட பகுதியில் சிவிலியன் அல்லாத சிங்கள இராணுவ உயர் அதிகாரி கவர்ணராக ராஜபக்ஷ நிர்வாகத்தில் நியமிக்கப் பட்டிருந்தார்.

இதனால் இந்தியாவும் தமிழ் நாடும் எமது வடக்கு மக்களும் அதிருப்தி அடைந்திருந்தனர். மங்களவின் விஜ யத்திற்கு சில தினங்களுக்கு முன்னர் இந்த கெளரவமான பதவிக்கு தகுதி வாய்ந்தவராக முன்னாள் ராஜதந்திரி பலிஹக்கார நியமிக்கப்பட்டார். இது இந்தியாவுடன் நல்ல உறவுகளை வளர் த்துக்கொள்ள அடித்தளமிட்டுள்ளது எனலாம்.

அரசாங்கம் எடுத்த இந்த புத்திசாதுரிய மான நடவடிக்கையும் மங்கள சமரவீர விற்கு நல்ல வரவேற்பு கிடைப்பதற்கு காரணமாக அமைந்தது எனலாம்.

தனது இந்திய விஜயத்தின் போது சமரவீர அவர்களை இந்திய அரசின் தற்போதைய, முன்னைய அரசியல் தலைவர்களை சந்தித்தது இலங்கை விவகாரங்களில் இந்தியா கொண்டுள்ள ஆர்வத்தை காட்டுவதாகவுள்ளது. காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டோவல், வெளிவிவகார அமைச்சர் ஸ்வராஜ் மற்றும் பிரதமர் மோடி ஆகியோரையும் மங்கள சந்தித்தார்.

பிரதமர் மோடி பதவியேற்ற பின்னர் பல பக்கத்து நாடுகளுக்கு விஜயம் செய்துள்ளார். இது வரைக்கும் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்ளாத பிரதமர் மோடி மங்களவின் அழைப்பை ஏற்று மார்ச் மாதம் இலங்கை வரவுள்ளார். இத்துடன் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளும்படி மங்கள விடுத்த அழைப்பை ஏற்றுள்ளார்.

பல விடயங்களில் பல கோணங்களில் இலங்கையுடன் கோபமும் ஆத்திரமும் கொண்டுள்ள இந்தியா எமது வெளிவிவகார அமைச்சரின் சாமர்த்திய பேச்சுவார்த்தைகளினால் அவற்றை மறந்து நல்ல உறவுகளை வளர்த்துக்கொள்ள கூடிய ஒரு சந்தர்ப்பம் உருவாகியுள்ளது எனலாம்.

ராஜபக்ஷ ஆட்சியினால் ஆத்திரமடைந்துள்ள இந்தியாவை சாந்தப்படுத்துவது மங்கள சமரவீரவிற்கு கஷ்டமான சவாலான காரியமாகும். பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கு வளர எமது முன்னைய அரசாங்கம் வழி செய்ததை விரும்பாத இந்தியா கூடுதலான உறவுகளை இலங்கையுடன் எதிர்பார்க்கின்றது. சீனாவுடன் அளவுக்கு மீறிய அர்த்தமற்ற தொடர்புகளை வைத்திருந்த மகிந்த அரசாங்கம் படிப்படியாக இந்தியாவுடன் பகைமை வளர வழி செய்தது.

இப்படியான பல சிக்கல்களுக்கு மத்தியில் எமது அமைச்சர் மங்கள சமரவீர மேற்கொண்ட விஜயம் வெகுவிரைவில் இரு நாடுகளுக்கும் இடையில் நல்ல உறவுகள் மீண்டும் தலைதூக்க வழி செய்யும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.