புத் 67 இல. 04

ஜய வருடம் தை மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ர.ஆகிர் பிறை 04

SUNDAY JANUARY 25 2015

 

 
*நம்பிக்கையளிக்கும் ஆரம்பம்

*ஆளுநர் நியமனம், பிரதம செயலாளர் இடமாற்றம், 13 ஆவது திருத்தத்திற்கு சாதக சமிக்ஞை, தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம்,
மலையக வீடமைப்பு, மலையக பல்கலைக்கழகம்:

*நம்பிக்கையளிக்கும் ஆரம்பம்

*அரசியல் தீர்வுக்கான பேச்சுக்களை சுமுகமாக முன்னெடுப்பதற்கான அத்திபாரமாக கருதி தமிழ் அரசியல் தலைவர்கள் நம்பிக்கை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரது தலைமையிலான புதிய அரசாங்கம் எடுத்துவரும் மக்கள் நலன் சார்ந்ததும், நாட்டின் சிறப்பான எதிர்காலத்திற்குமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் குறித்துத் தமிழ் அரசியல் வட்டாரங்களில் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பாக வடமாகாணத்திற்கான புதிய ஆளுநர் நியமனம், அம்மாகாணத்தின் பிரதம செயலாளருக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் மற்றும் சிறைகளில் வாடும் அப்பாவித் தமிழ் இளைஞர்கள் விவகாரம் தொடர்பாக புதிய அரசாங்கம் எடுத்த நடவடிக்கைள் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களிடையேயும், தமிழ் தலைவர்களிடையேயும் நம்பிக்கையைத் தோற்றுவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நீண்டகால கோரிக்கையாக இருந்த வடமாகாண ஆளுநர் மாற்றம், மற்றும் அம்மாகாணத்தின் பிரதம செயலாளருக்கான இடமாற்றம் தொடர்பாக கடந்த அரசு இழுத்தடிப்பை மேற்கொண்டு வந்தது. ஆனால் புதிய அரசாங்கம் ஆட்சியைப் பொறுப்பெடுத்த ஒரு வார காலத்தினுள் இவ்விரு விடயங்களுக்கும் தீர்வினை வழங்கியமையை தமிழ் அரசியல் தலைவர்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.

குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இவ்விடயங்கள் தமக்கு நம்பிக்கை தருவதாகத் தெரிவித்துள்ள அதேவேளை தமிழ் மக்களின் மிக நீண்ட கால பிரச்சினையான இனப்பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார். புதிய அரசாங்கத்தின் புதிய பாராளுமன்ற அமர்விலேயே இதனை அவர் தெரிவித்திருந்தார்.

அதேபோன்று கூட்டமைப்பினதும், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனினதும் நீண்டகால கோரிக்கையாக இருந்த சிறைகளில் வாடுகின்ற தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாகவும் அரசாங்கம் ஆக்கபூர்வமான ஆரம்ப நடவடிக்கையை எடுத்துள்ளது. இவ்விடயத்திற்காக மனோ கணேசன் கடந்த ஆட்சியில் பல்வேறு போராட்டங்களை நடத்திய போதிலும் அன்றைய ஆட்சியாளர்கள் அதற்குத் துளியளவும் செவிசாய்க்காமலிருந்த நிலைமையே காணப்பட்டது.

ஆனால் இன்று இவர்களது விடுதலை தொடர்பாக ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கான பணிப்புரையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே விடுத்துள்ளதாக மனோ கணேசன் தெரிவித்திருக்கிறார். அவ்வாறு சிறைகளில் வாடுகின்ற தமிழ் அரசியல் கைதிகளின் விவரங்கள் ஜனாதிபதியிடம் மனோ கணேசனினால் வழங்கப்பட்டதும் அது குறித்து ஜனாதிபதி உரிய நடவடிக்கை எடுத்து அப்பாவிகள் அனைவரும் விடுவிக்கப்படுவர் எனவும் மனோ கணேசன் தெரிவித்திருக்கிறார்.

அத்துடன் மலையக மக்களின் மிக நீண்ட கால கோரிக்கையாக இருந்தும் தட்டிக் கழிக்கப்பட்டு வந்த காணியுடன் கூடிய வீடு, மலையக பல்கலைக்கழகம் எனும் கோரிக்கைகளும் புதிய அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படவுள்ளது. இவை குறித்து மலையக அரசியல் தலைமைகளும் புதிய அரசாங்கத்தின் மீது தமது நம்பிக்கையை வெளியிட்டுள்ளனர். குறிப்பாக பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் பி.திகாம்பரம், மலையகத்தில் உறுதியளித்தபடி ஏழு பேர்ச் காணியுடன் வீடு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருக்கிறார்.

அதேபோன்று மலையகத்தில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கையும் புதிய அரசாங்கத்தின் மூலமாக நிறைவேற்றப்படும் என புதிய கல்வி இராஜாங்க அமைச்சர் பெ. இராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.

இவை யாவுமே தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான பேச்சுக்களை சுமுகமாக முன்னெடுப்பதற்கான அத்திபாரமாக கருதி தமிழ் அரசியல் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். புதிய அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத்திட்டத்திற்கு கட்சி வேறுபாடுகளை மறந்து ஆதரவு தெரிவித்தவரும் தமிழ்க் கட்சிகள் இக்காலப்பகுதியினுள் இனப்பிரச்சினைக்கும் தீர்வு காண்பதற்கான சிறந்ததொரு அடித்தளம் இடப்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.