புத். 67 இல. 50

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 26ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 29

SUNDAY DECEMBER 13, 2015

 

 
சவுதியில் பணிப்பெண் கல்லெறிந்து கொல்லப்படும் விவகாரம் பற்றி கேட்கின்றார்கள்

சவுதியில் பணிப்பெண் கல்லெறிந்து கொல்லப்படும் விவகாரம் பற்றி கேட்கின்றார்கள்

 சவுதி அரேபியாவில் அமுலில் உள்ள சட்டங்களிற்கு கட்டுப்படுவதென்ற இருதரப்பு ஒப்பந்தங்களின் அடிப்படையிலேயே தொழிலாளர்கள் அங்கு செல்கின்றார்கள், இது உலகறிந்த உண்மையாகும்.

அங்கு அமுலில் உள்ள கொலைக்குக் கொலை என்ற சட்டம் பல இலட்சக் கணக்கான பிறநாட்டுத் தொழிலாளர்களுக்கு எவ்வாறு பாதுகாப்பை வழங்குகின்றதோ அதேபோன்றுதான் விபச்சாரத்திற்கான குற்றவியல் சட்டங்களும் நோக்கப் படல் வேண்டும்.

எனவே, சவுதி அரேபிய சட்டங்கள் தமக்கு ஏற்புடையதல்ல. காட்டுமிராண்டித்தனமானது எனது இலங்கை அரசு அல்லது பாராளுமன்றம் கருதுமாயின் உடனடியாகவே இலங்கையர் அங்கு தொழிலுக்குச் செல்வதனை இரத்துச்செய்தல் வேண்டும்.

சவுதியில் உள்ள ஷரீஆ விற்பன்னர்கள் இஸ்லாமிய ஷரீஆ சட்டங்களை அமுலாக்கம் செய்வதில் கடைப்பிடிக்கின்ற நடைமுறைகள் , அங்குள்ள குற்றவியல் சட்டங்கள், நீதித்துறை குறித்த விமர்சனங்களை ஆய்வு செய்வதில் இப்பொழுது எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை.

இஸ்லாமிய ஷரீஆவில் விபச்சாரத்திற்கு கல்லெறிந்து கொல்லுதல் இருக்கின்றதா எனக் கேட்டால் இருக்கின்றது என்றே சொல்ல வேண்டும்.அல்-குரானில் இல்லாவிட்டாலும் ஷரீஆவின் அடிப்படை மூலாதாரமான சுன்னஹ்வில் அதற்கான ஆதாரம் இருக்கின்றது.

இஸ்லாமிய சமூக கட்டமைப்பில் “குடும்ப நிறுவனம்” என்ற அலகைக் கட்டிக் காப்பதற்கும் ஒருவரின் வம்ச மற்றும் சந்ததியினைக் கட்டிக் காப்பதிலும் இஸ்லாம் அதிக கரிசனை செலுத்துகின்றது.அத்தோடு விபச்சாரம் என்ற குற்றச் செயலுக்கான தண்டனையை விதிப்பதற்கு முன்னர் வயது வந்தவர்கள் இல்லற பந்தத்தில் இணைகின்ற ஏற்பாட்டை இஸ்லாம் வலியுறுத்தி உள்ளது.

விபச்சாரம், அல்லது பாலியல் துஷ்பிரயோகம் இடம் பெறுவதனைத்தடுக்கின்ற பல்வேறு வழிமுறைகளை இஸ்லாம் வலியுறுத்தியுமுள்ளது, உதாரணமாக மஹ்ரம் ஆன உறவுமுறை துணை இல்லாமல் வீட்டைவிட்டு ஒருபெண் வெளியேறுவது தடுக்கப்பட்டுள்ளது.

பெண்கள் மாத்திரமன்றி ஆண்களும் தமது நடை, உடை, பாவனைகளில் எவ்வாறு நடந்து கொள்ளல் வேண்டும், அவர்களை ஆண்கள் எவ்வாறு வாழவைக்க வேண்டும் என்றெல்லாம் இஸ்லாம் கண்டிப்பான கட்டளைகளைப்போட்ட பின்னரே தண்டனைகளை விதித்துள்ளது.

இஸ்லாமிய ஷரீஆவை, அதன்அடிப்படைஇலக்குகள் மற்றும் குற்றவியல் சட்டங்களை மற்றும் தேசங்களுக்கிடையிலான உறவுகள் குறித்த இஸ்லாமிய சட்டங்களைக் கற்றவன் என்ற வகையில் எனது தனிப்பட்ட அபிப்பிராயம், மேற்படி தீர்ப்பை பின்வரும் அடிப்படைகளில் ஷரீஆ நீதிமன்றம் மீள் பரிசீலனை செய்தல் வேண்டும்:

குறிப்பிட்ட பெண் மஹ்ரம் இல்லாமல் வீட்டைவிட்டு வெளியேறிய காரணிகள் எவை..?

இஸ்லாமிய ஷரீஆ அமுலில் உள்ள தேசத்திற்குள் மஹ்ரம் இல்லாமல் அவர் எவ்வாறு உட்புகுந்தார்?

திருமணமாகியும் பலவருடங்களாக தனது சக்திக்கு அப்பாற் பட்டகாரணங்களுக்காக அல்லது தன்மீது இழைக்கப்பட்டுள்ள குடும்ப மற்றும் சமூக அநீதிகளின் காரணமாக கணவனைப் பிரிந்து வாழும் ஒரு பெண்ணுக்குத் தனது பாலியல் தேவைகள் நீண்ட காலம் மறுக்கப்பட்ட நிலையில் எவ்வாறான தண்டனை வழங்குவது?

மனிதனின் இயல்பூக்கங்களுக்கு மதிப்பளித்து குற்றங்கள் இடம் பெறுவதற்கான சகல வாயில்களையும் மூடிய பின்னரே இஸ்லாம் கடினமான குற்றவியல் சட்டங்களை விதித்துள்ளது.

திருமண வயதில் திருமணமாகாத, திருமணமாகியும் துணைகள் அருகில் இல்லாத பல இலட்சக் கணக்கான தொழிலாளர்களை உள்வாங்க முன் இந்த முஸ்லிம் நாடுகள் மஹ்ரம் விடயத்தில் கண்டிப்பான சட்டங்களை விதித்திருக்க வேண்டும்.

ரஸுலுல்லாஹ் (ஸல்) அவர்கள் கூட அக்கால சூழ்நிலையில் பல காரணிகள் குறித்தும் ஆராய்ந்து இருக்கின்றார்கள்.

இந்த அடிப்படைகளில் தண்டனை மீள்பரிசீலனை செய்யப்பட்டு அந்த மாது இலங்கைக்குத் திருப்பி அனுப்பபடல் வேண்டும் என்பதே எனது அபிப்பிராயமாகும்.

குறிப்பு: இது தொடர்பாக சவுதி தாருல் இப்தா, உயர் நீதித்துறை கவுன்ஸில், தாவ்த்மி நீதி மன்றம் ஆகியவற்றின்முன் ஆஜராகும் சந்தர்ப்பம் ஏற்படுத்தி தரப்படும் எனில், எந்தவித பிரதி உபகாரமும் இன்றி ஒரு சேவையை செய்யத்தயாராக உள்ளேன்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.