புத். 67 இல. 50

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 26ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 29

SUNDAY DECEMBER 13, 2015

 

வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றம் தரும் உட்கட்சிப் பூசல்

வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றம் தரும் உட்கட்சிப் பூசல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் உட்கட்சிப் பூசல் ஒன்று நிலவுகிறது என்பதை கடந்த திங்கட்கிழமையன்று மட்டக்களப்பில் நடைபெற்ற அக்கட்சியின் கூட்டமொன்றில் உரையாற்றும்போது அதன் தலைவரான இரா. சம்பந்தன் முதற் தடவையாக அதுவும் வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார். கட்சிக்குள் சிறு சிறு பிரச்சினைகள் உள்ளன. அவற்றை நாம் பேசித் தீர்த்துக் கொள்வோம்.

வெளியார் எவரும் இவ்விடயத்தில் தலையிட வேண்டியதில்லை என அவர் கூறியதிலிருந்தே, அண்மைக் காலமாக தமிழ் ஊடகங்கள் சிலவற்றில் இவ்விடயம் தொடர்பாக வெளியாகிய செய்திகள் ஊர்ஜிதப்படுத்தியுள்ளன.

கட்சிக்குள் பிரச்சினை அல்லது கட்சிக்குள் பிளவு என்பது இலங்கையில் புதிய விடயமல்ல. எமது நாட்டிலுள்ள சகல கட்சிகளுக்குள்ளும் பிரச்சினைகள் உள்ளன. பிளவுகளும் காணப்படுகின்றன. ஆனால் இதுவரை காலமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதற்கு எதிர்மறையாக இருந்து வந்த நிலையில் தற்போது அக்கட்சிக்குள்ளும் சிறிது பிரச்சினை எழுந்துள்ளது. முன்னரும் இவ்வாறு சிலர் அக்கட்சிக்கு சேறு பூசும் வகையில் நடந்து கொண்டபோதிலும் கட்சி பிளவுபடவில்லை. ஒருவரையொருவர் விமர்சிக்கவும் இல்லை. வெறுமனே ஒருசிலர் பிரிந்து சென்றனரே தவிர பெரிதாக எதுவும் இடம்பெறவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற எவரும் இதுவரை எந்தவொரு தேர்தலிலும் வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை. ஐந்து கட்சிகள் கொண்ட கூட்டமைப்பாக உருப்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று நான்கு பிரதான தமிழ்க் கட்சிகளின் கூட்டமைப்பாக இருந்து வருகிறது. பிரிந்து சென்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி இக்கூட்டமைப்பிற்கு எதிராக எத்தனையோ விதமாகப் பிரசாரம் செய்து வருகின்றபோதிலும் தமிழ் மக்கள் தமிழ்க் கூட்டமைப்பிற்கே தமது ஆதரவை வழங்கி வருகின்றனர்.

நிலைமை இப்படியிருக்கையில் இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் எழுந்துள்ள உட்கட்சிப் பூசல் அக்கட்சிக்கு வாக்களித்த தமிழ் மக்களைச் சிறிது முகஞ்சுளிக்க வைத்துள்ளது. அதிலும் இக்கட்சியின் பூரண ஆதரவுடன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுப் பெருவெற்றிபெற்று வட மாகாணத்தின் முதலமைச்சராகத் தெரிவான உயர் நீதிமன்றத்தின் முன்னாள் பிரதம நீதியரசர் சி.வி. விக்கினேஸ்வரனை இன்று கட்சியிலுள்ள சிலர் விமர்சித்து அறிக்கைகள் விட்டு வருவதை மக்கள் ஏற்றுக் கொள்வதாக இல்லை.

தமிழ் மக்களது வாழ்வில் கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாகப் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வினைக் காண்பதில் தம்மால் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சர் விக்கினேஸ்வரன் காத்திரமான பங்களிப்பைச் செய்யக் கூடியவர் என்ற நம்பிக்கை தமிழ் மக்களிடம் காணப்படுகிறது. இதற்கு அவரது ஆளுமை, ஆற்றல் கல்வித் தகைமை, நேர்மையான அரசியல், எவரிடமும் கடமைப்படாத க​ைறபடியாத கரங்கள், துணிச்சலான செயற்பாடு என்பன காரணமாக அமைந்துள்ளன.

எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் இவரைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில தலைமைகளின் சில செயற்பாடுகள் இதற்கு எதிர்மாறாக அமைந்துள்ளதை அவதானிக்க முடிகிறது. இதனைத் தமிழ் மக்களும் உணர்கிறார்கள். முன்னர் இந்த விடயத்தை மூடி மறைத்து வந்த தமிழ் ஊடகங்களும் இப்போது முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு எதிரான கூட்மைப்பினரின் கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.

உண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கட்சியைச் சரியாக வழி நடத்தி வருகிறார். அதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. அவரது தலைமைத்துவப் பண்பு, அரசியல் சாணக்கியம், நீண்டகால அனுபவம் என்பன காரணமாகவே அவரது தலைமையில் கட்சி நீண்ட காலமாக எவ்விதமான பிரச்சினைகளும் இல்லாது சிறப்பாக இயங்கி வருகிறது. விடுதலைப் புலிகள் இருந்தபோது அவர்களையும் சமாளித்து பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவையும் சமாளித்து அவர் சிறப்பாகக் கட்சியைக் கொண்டு வந்தார்.

ஆனால் இப்பொது திடீரென கட்சிக்குள் முளைத்துள்ள சிலராலும் கட்சியிலிருந்து விலகிச் சென்று மக்களால் தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்பட்ட சிலராலும் கட்சிக்கு ஏற்படுத்தப்பட்டு வரும் பிரச்சினைகள், புலிகளையும், முன்னாள் ஜனாதிபதியையும் சமாளித்ததை விடவும் கடினமானதாக உள்ளதாகவே நோக்க முடிகிறது. இந்த இரு சாராரும் வெளிநாட்டிலுள்ள சில புலம்பெயர் அமைப்புகளுடன் இணைந்து, கட்சியைக் கூறுபோடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனரோ என்ற சந்தேகத்தையும் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

யுத்தம் முடிவடைந்து கடந்த ஐந்து வருடங்களாக மஹிந்தவின் ஆட்சியில் தமிழ் மக்களுக்கு எதுவுமே நடைபெறாதபோது அமைதியாக இருந்த இவர்கள், இன்றைய நல்லாட்சியில் தமிழருக்கு ஏதாவது தீர்வு கிடைக்கும் எனும் நம்பிக்கை ஏற்பட்டிருக்கையில் அதனைக் குழப்பும் வகையில் கட்சிக்குள் கலகத்தை ஏற்படுத்த முனைந்திருப்பது தமிழ் மக்களை மிகுந்த வேதனை அடைய வைத்திருக்கிறது. ஆனால், ஒருவகையில் தமிழ் மக்களுக்குத் துரோகிகளை இனங்காண வைத்துள்ளது எனவும் கூறலாம்.

கட்சி ஒற்றுமைக்கு நாட்டிலுள்ள ஏனைய பிரதான கட்சிகளுக்கு முன்னுதாரணமாக இருந்த கட்சி, இன்று பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைமையையும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் பதவியையும் பெற்று கம்பீரமாக இருந்து வருகிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் அதே கட்சிக்குள்ளேயிருந்துகொண்டு கட்சியைக் கூறுபோட அல்லது உட்கட்சி மோதல்களை ஏற்படுத்தச் சிலர் முயல்வதானது, வாக்களித்த மக்களுக்குச் செய்யும் பாரிய துரோகமாகவே அமையும். இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாதிருக்கும் ஏனைய கட்சிகளுக்கு ஏளனமாக அமைந்து விடும்.

எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு உள்ளேயிருந்தும், வெளியே இருந்தும் துரோகமிழைக்க முயல்வோர், இனியாவது தமது காழ்ப்புணர்வுகளை ஒருபுறமாக ஒதுக்கி வைத்துவிட்டுத் தமிழ் மக்களது வாழ்வு மலரத் தமது பங்களிப்பைச் செய்ய முன்வர வேண்டும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.