புத். 67 இல. 50

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 26ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 29

SUNDAY DECEMBER 13, 2015

 

 
பலதும் பத்தும்...

இளஞ் சிவப்பு கோழியை பார்த்திருக்கிறீர்களா?

அமெரிக்காவில் ஓரிகன் மாநிலத்திலுள்ள போர்ட்லண்ட் நகரில் திரிந்த இளஞ்சிவப்பு நிறமான கோழிகள் பலரையும் வியக்க வைத்தன.

இந்த அபூர்வ கோழிகள் பற்றிய தகவல்கள் செய்தி ஊடகங்கள், சமூக வலைத்தளங்களிலும் இடம்பெற்றிருந்தன.

அபூர்வமான இளஞ்சிவப்பு நிறத்தில் இக்கோழிகள் இருப்பதற்கான காரணம் மர்மமாகவே இருந்தது.

இந்நிலையில், வெள்ளை நிறமான கோழிகளுக்கு தானே இளஞ்சிவப்பு நிறமான சாயத்தை பூசியதாக அக்கோழிகளின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

புரூஸ் வைட்மேன் எனும் இந்த இளைஞர், உணவுகளுக்கு நிறமூட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் சாயங்களை கோழிகளுக்குப் பூசிவிட்டு, அவற்றை போர்ட்லன்ட் நகரில் விட்டதாக கூறியுள்ளார். அதிகாலை ஒரு மணியளவில் அக்கோழிகளை அவர் நகரில் விட்டுச்சென்றார்.

பொழுது விடிந்தவுடன் உறக்கத்திலிருந்து எழுந்த கோழிகள் நடமாடத் தொடங்கியபோது பலரையும் திகைப்புக்குள்ளாக்கின. மக்களை புன்னகைக்க வைப்பதற்காக இந் நடவடிக்கையை தான் மேற்கொண்டதாக புருஸ் வைட்மேன் தெரிவித்துள்ளார்

மதுபான விடுதியில் பணியாற்றும் இந்த இளைஞர், விமானியாகுவதற்கான கற்கை நெறியை பயின்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இக்கோழிகளை நிர்க்கதியாக திரிய விட்டமைக்காக 32 டொலர்களை நகரின் மிருக சேவைத் திணைக்களத்துக்கு செலுத்திய பின்னரே அவற்றை புரூஸ் வைட்மேன் மீண்டும் பெற்றுக்கொள்ள முடிந்தது 


ஆறாய் ஓடிய யூரோ நோட்டுக்கள்

ஆஸ்திரியத் தலைநகர் வியன்னாவில் இருக்கும் தனூப் நதியில் ஒரு லட்சம் யூரோக்களுக்கும் அதிகமான கரன்ஸி நோட்டுகள் மிதந்து வந்தது குறித்து அந்நாட்டுக் காவல்துறை விசாரித்து வருகிறது.

இந்த கரன்ஸி நோட்டுக்கள் மிதந்துவந்ததைக் கண்ட ஒருவர் அதை எடுப்பதற்காக நதிக்குள் குதித்தார். இதுகுறித்து வியன்னா நகர காவல்துறையினர் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் யூரோ நோட்டுக்கள் காயவைக்கப்பட்டிருக்கும் காட்சிகள் இருக்கின்றன. ஆனால் இந்த கரன்ஸி நோட்டுக்கள் எங்கிருந்து வந்தன என்பது குறித்து இன்னமும் மர்மம் நிலவுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த பணம் தங்களுடையது என்று உரிமைகோரி பலர் காவல்துறையிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டனர்.


அற்புத வேலைப்பாடுகளால் மக்களை வியக்கவைக்கும் நுவரெலியா மைந்தன்

நுவரெலியா கந்தப்பளையில் வசிக்கும் விவசாயியான 32 வயதுடைய சந்திக அருண சாந்த என்பவர் கடதாசித் தாள்களைக் கொண்டு பல விநோதமான கைப்பணிகளை செய்து மக்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றார்.

இவர் செய்துள்ள கைப்பணி வேலைகளை இப்பகுதி மக்கள் பார்வையிடுகின்றனர். அத்துடன் இவற்றை விலை கொடுத்தும் கொள்வனவு செய்கின்றனர். இந்நிலையில் தனது கைப்பணி வேலைப்பாடுகள் குறித்து கருத்துத் தெரிவித்த சந்திக அருண சாந்த, நான் இவ்வாறான கடதாசி தாள்களை கொண்டு பல உருவங்கள் வடிவமைத்து வருகின்றேன். தன்னிச்சையாகவே குடும்பத்தாரின் உதவியுடன் செய்து வரும் இவ்வேலைகள் பணத்திற்காக அல்ல. நவீன உலகில் நாமும் ஆக்கத்தை உருவாக்க வேண்டும் என்ற இலக்கினை கொண்டு இவ்வாறான வேலைப்பாடுகளை செய்து வருகின்றேன்.

இப்போது செய்திருக்கும் மோட்டர் சைக்கிளின் உருவுக்காக சுமார் 30,000 ரூபா செலவிடப்பட்டுள்ளதோடு 5 மாதங்களில் இதனை உருவாக்கினேன். நான் செய்து வரும் இந்த கைப்பணிகளுக்கு பல்வேறுப்பட்ட வரவேற்பும் பாராட்டுகளும் சான்றிதழ்களும் கிடைக்கபெற்றுயிருக்கின்றன என அவர் தெரிவித்தார்.


25 ஆயிரம் கையடக்கத் தொலைபேசிகளை வைத்து உருவாக்கிய கார்!

மீள்சுழற்சி மற்றும் நவீன கலைப் படைப்பு என்வற்றை ஊக்குவிக்கும் வகையில் நிவ்யோர்க் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த தாய்வான் கலைஞர் ஒருவர் உபயோகப்படுத்தப்பட்ட பழைய கையடக்கத் தொலைபேசிகளை கொண்டு காரொன்றை தயாரித்துள்ளார். 53 வயதான இவர் கடந்த 4 ஆண்டுகளாக ஒவ்வொரு ஊராக சென்று சுமார் 25 ஆயிரம் பழைய கையடக்கத் தொலைபேசிகளை சேகரித்து இந்த காரை தயாரித்துள்ளார்.

மரப்பலகையை கொண்டு கார் ஒன்றை உருவாக்கிய அவர் அதில் பசை மூலம் சேகரித்த கையடக்க தொலைபேசிகளை ஒட்டி, சுமார் நான்கு மாத கடின உழைப்பிற்கு பின் தற்போது அவரது கையடக்க தொலைபேசி கார் முழுமையடைந்துள்ளது. எந்த பொருளும் வீணாவது கிடையாது என்பதை உணர்த்தும் வகையில் இந்த படைப்பை உருவாக்கியதாக கூறும் Lin Shih-Pao, தான் படித்த பாடசாலையில் இந்த காரை காட்சிபடுத்தியுள்ளார். இந்நிலையில் இந்த கலைப் படைப்பை விற்கும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


அமெரிக்க படைகளில் இனி பெண்களுக்கு முக்கியத்துவம்

முக்கியமான போர்நிலைகள் உட்பட இராணுவத்தின் அனைத்து போர் பணிகளிலும் , பெண்களைச் சேர்த்துக்கொள்ளும் வகையில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

அமெரிக்க பாதுகாப்பு செயலர் ஆஷ் கார்டர் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்

இந்த விஷயத்தில் இதற்கு மேலும் தாமதம் ஏற்படக் கூடாது என்று கூறிய கார்டர் , அடுத்த ஆண்டு முதல் இராணுவத்தின் அனைத்து போர் பணிகளிலும் பெண்களின் பங்களிப்பும் இருக்கும் என்று தெரிவித்துள்ளார் .

ஈராக் , ஆப்கானிஸ்தான் போன்ற பதட்டம் நிறைந்த பகுதிகளில் 3 இலட்சம் பெண் வீராங்கனைகள் திறம்பட பணியாற்றியதையும் அவர் சுட்டிக்காட்டினார் .


300 ஆண்டுகளுக்கு முன்னர்

300 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 600 பேருடன் பெரிய ஸ்பானிய வணிக கப்பல் ஒன்று சரூபியன் கடலில் மூழ்கடிக்கப்பட்டது. இந்த கப்பலில் இருந்து ரூ.14 ஆயிரம் கோடி தங்கத்தை கொலம்பியா கண்டுபிடித்தது. இதுகுறித்து கொலம்பியா அதிபர் ஜுவான் மானுவல் சான் டோஸ் தெரிவித்துள்ளதாவது - கடந்த 1708–ம் ஆண்டில் இங்கிலாந்துக்கும், ஸ்பெயினுக்கும் இடையே நடந்த போரின் போது ஸ்பெயின் கான்ஜோஸ் என்ற கப்பலில் பல்லாயிரம் கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளியை பத்திரமாக பாதுகாத்து எடுத்து சென்றது.

ஆனால் அக்கப்பலை இங்கிலாந்து படைகளால் கொலம்பியாவில் உள்ள சரூபியன் கடலில் குண்டுவீசி மூழ்கடிக்கப்பட்டது. அக்கப்பலை கண்டு பிடிப்பதில் கொலம்பியா தீவிரமாக ஈடுபட்டது. 1980ம் ஆண்டுகளில் சிதைந்த கப்பல் மூழ்கி கிடக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது அந்த கப்பலில் தங்கம் மற்றும் வெள்ளி இருப்பதை கொலம்பியா நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர். அதில் இருக்கும் புதையலின் மதிப்பு ரூ.14 ஆயிரம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.