புத். 67 இல. 50

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 26ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 29

SUNDAY DECEMBER 13, 2015

 

 
மிதக்கும் நகரங்கள்

மிதக்கும் நகரங்கள்

வெள்ளம் எங்கு பார்க்கினும்! மழையின் கோரத்தாண்டவம் தமிழ்நாட்டை குறிப்பாக சென்னை மற்றும் கடலூரை, மூழ்கடித்துவிட்டது. காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட்ட பல இடங்களும் கடும் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றன. நூற்றிப்பதினான்கு வருடங்களுக்கு பின்னர் பெய்த கனமழை, ஏழை பணக்காரன்; சாதி இன பேதமின்றி அனைவரையும் நிர்க்கதியாக்கி விட்டிருக்கின்றது. மாடி வீடுகளின் கீழ்தளம், ஏனைய வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன, குடிசைகள் நீரின் திசையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் இறந்துள்ளார்கள், பல்லாயிரக்கணக்கான கால்நடைகளும் இறந்துள்ளன பல ஆயிரம் கோடி ரூபாய்கள் பெறுமதியான பொருட்கள், விவசாய நிலங்கள் சேதமேடைந்துள்ளன.

இது படிப்பதற்கு கதை போன்றிருக்கும் ஆனால் நான் மட்டுமல்ல நண்பர்கள், சூழலில் உள்ளவர்கள், அனைவரும் அனுபவித்த சொல்லொண்ணா துயரங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நம் இனத்தவர்கள் அகதிகளாக அலைந்தது ஒன்றும் புதிதல்ல… பழக்கப்பட்டிருக்கின்றோம். நான் கூட எனது 12வது வயதிலிருந்து பல இடப்பெயர்வுகளை சந்தித்திருக்கின்றேன். சண்டிலிப்பாயிலிருந்து யாழ்ப்பாணம் ஓடுவோம், அங்கிருந்து சுண்டுக்குழிக்கு, அங்கிருந்து மானிப்பாய்க்கு, அங்கேயும் பிரச்சினையென்றால் நாவற்குழி இல்லையேல் கொழும்பு, இந்தியா மற்றும் உலகநாடுகள் பலவற்றுக்கும் ஓடியிருக்கின்றோம். இவ்வாறாக நான் ஒதுங்கி சுமார் 20 ஆண்டுகளாக சென்னையில் இருக்கின்றேன். சென்னையில் பிழைப்பு தேடி பிறநகரங்களிலிருந்தும், கிராமங்களிலிருந்தும், பிறமாநிலங்களிலிருந்தும் வந்திருப்பவர்களே அதிகம் என்றாலும், இவ்வாறானதொரு பேரிடரால் நாதியற்று அலைவதும், இடப்பெயர்வு என்பதும் சென்னை நகரவாசிகளை புதுமையான ஆற்றொண்ணா துயரத்துக்கு உள்ளாக்கியிருக்கின்றது.

பேரிடர்களான பல புயல்களையும் சுனாமியையும் இதற்கு முன் சென்னை மற்றும் கடலூர் கண்டிருக்கின்றது, ஆனால் இது எல்லாவற்றையும் மிஞ்சும் வகையில் தண்ணீர் கடலில் தமிழகம் – கண்ணீர் கடலில் தமிழ் மக்கள் என்று சொல்லுமளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடகிழக்கு பருவமழை பொய்த்து போகுமோ என்றளவுக்கு தீபாவளி முன்னர் வரை மழையைக் காணாமல் தமிழ்நாட்டில் கவலை ரேகைகள் இருந்த நேரத்தில் மழை பெய்யத் தொடங்கியது. தீபாவளியைக் கூட கொண்டாட முடியாமல் மக்கள் தவித்து போயினர். ஒரு பக்கம் பட்டாசு விற்பனையாளர்கள் வருணபகவானை திட்டித் தீர்த்தார்கள், அவர்கள் வியாபாரம் படுத்ததே இதற்குக் காரணம். இம்மழை 17 திகதி வரை விடாமல் கொட்டித் தீர்த்து கடலூர் மற்றும் சென்னையின் பல இடங்களையும் மூழ்கடித்துவிட்டது. நூற்றுக்கணக்கானவர்கள் இறந்தனர், பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு நஷ்டம் ஏற்பட்டது. பின்னர் மழை ஓய்ந்த வேளையில் நீர் வடியத் தொடங்கி மக்கள் அப்பாடா என்று நிம்மதி பெருமூச்சு விடத் தொடங்குகையில் 'வாட்ஸப்'களில் 22ம் திகதி புயல் சென்னையைத் தாக்கும் மேலும் அழிவு நிச்சயம் என்று பஞ்சாங்கத்தை மேற்கோள் காட்டி நாசாவை மையப்படுத்தி செய்தி பரப்பத்தொடங்கினார்கள். மக்களும் வழமை போலவே பரபரக்கத் தொடங்கினர். வங்காள விரிகுடாவில் இலட்சத்தீவை ஒட்டி தாழமுக்கம் ஏற்பட்டது. வரும் வரும் என்று மழையையும் புயலையும் எதிர்பார்த்திருந்த வேளையில் ஏனோ அது வலுவிழந்து விட்டது. மக்களும் வழமை போலவே நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள், பாத்தியாப்பா பஞ்சாங்கம் எல்லாம் பொய்யப்பா என்று நாத்திகம் பேசினர் சிலர்... ஆனால் அதுவும் உண்மையானது சில நாட்களில்... அப்போ அவர்கள் ம்ம்... ஏதோ ஒண்ணு இருக்குதப்பா என்றார்கள்.

இந்த வேளையில் தமிழ்நாட்டு வானிலை இயக்குனர் ரமணனைப் பற்றி சொல்லியாக வேண்டும். சினிமா ஹீரோ ஹீரோயின்களுக்கு ரசிகர் மன்றங்கள் இருக்கும். இது தமிழ் மக்களுடைய பண்பாடோ இல்லை சாபக்கேடோ சொல்லத் தெரியவில்லை. ஆனால் அதற்கப்பால் ஒரு ரசிகர் மன்றம் உருவாகியதென்றால் அது ரமணனுக்குத்தான். எனக்குத் தெரிந்து ரமணனை பல முறைகள் தொலைக்காட்சிப் பேட்டிகளுக்காக சந்தித்திருக்கின்றேன். அனைவரையும் ஈர்க்கும் பேச்சு அவருடையது என்றே சொல்ல வேண்டும். எப்போதும் அவர் தன் வாயை நாக்கால் ஒரு சுழற்றுச் சுழற்றி தமிழ் நாட்டில் இன்று அனேக இடங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ என்று சொல்லும் பாங்கே தனி. இது பல முறை பொய்த்துப் போவதுமுண்டு. துல்லியமான கணக்கிடுதலுக்கான கருவிகள் இல்லாதது கூட காரணமாக இருக்கலாம். தீபாவளி நேரத்தில் விருகம்பாக்கத்தில் உள்ள நண்பர் அமல் வீட்டிற்க்குப் போன போது, அங்கே சில குழந்தைப் பட்டாளங்கள் எதையோ கத்திக் கொண்டு ஓடி வந்தார்கள்.

 அப்போதுதான் செய்தி முடிவடைந்திருக்கும். நேரம் இரவு 8 மணி. அந்த செய்தி இதுதான் ‘மறுநாள் பாடசாலை மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை’ என ரமணன் சொன்னதுதான். சரி! குழந்தைகள் என கத்தினார்கள் என்பதை கேட்கிறீர்கள் புரிகிறது, வேறொன்றுமல்ல 'ரமணன் வாழ்க! ரமணன் வாழ்க'! இன்னும் கூட அவர்கள் அந்த கோஷத்தை எழுப்புவார்கள் என்று நினைக்கின்றேன், காரணம் இன்று வரை ஒரு மாதத்திற்கும் மேலாக பூட்டிய கல்லூரிகளும் பாடசாலைகளும் திறக்கப்படவில்லை. எல்லோருக்கும் பாஸ்மார்க் போட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் அரசுக்கு வேறு கோரிக்கை வைத்திருக்கின்றார். விளங்கும் கல்வி. இதை விடுங்கள் ஆட்சியாளர்களை கோபத்திற்கு உள்ளாக்கும் செயல் ஒன்று அதன் பின்னர் 'வாட்ஸப்' களில் வந்தது.

ஓர் இளைஞர் பட்டாளம் 'ரமணன் வாழ்க! வருங்கால முதலமைச்சர் ரமணன் வாழ்க!' இப்படியெல்லாம். ஏற்கனவே அவருடைய பணிக்காலம் நிறைவு பெற்று விட்டது. தற்போது அவருக்கு 3 வருடங்கள் வேலை நீட்டிப்புச் செய்யப்பட்டு தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்து வருகின்றார். வேலைக்கு உலை வைக்க யாரும் செய்யும் சதியோ என்று எண்னத் தோன்றுகிறது. இங்கே ஒரு வேடிக்கை என்னவென்றால் மழையின் அகோரப் பசி அவரையும் விட்டு வைக்கவில்லை. வானிலை அறிவிப்பு சொல்லி விட்டு வீடு வந்து தூங்கியவர், மறுநாள் மீட்பு படையினரின் உதவியுடன்தான் வீட்டை விட்டு வெளியே வர முடிந்தது.

வழமை நிலைக்கு வந்து கொண்டிருந்த சென்னை ரமணனின் இடிச்செய்தியால் நிலைகுலைந்தது. அந்தமானுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தால் ஐந்து நாட்களுக்கு மேகம் மூட்டத்துடன் காணப்படும், இடியுடன் கூடிய மழை பெய்யலாம், கனமழைக்கு வாய்ப்புண்டு என்று குண்டை தூக்கி போட்டார். அதுவும் வெடித்தது முதலாம் திகதியிலிருந்து மழை பேயென கொட்டத் தொடங்கியது. இரண்டாம் திகதி அதி கனமழை கொட்டத் தொடங்கியது. மணித்துளி இடைவெளியில்லாமல் இரவு பகல் பாராமல் கொட்டியது. எனக்கு நேர்ந்த அனுபவம் ஒன்றை இங்கே சொல்ல வேண்டும். இரண்டாம் திகதி காலை சேலத்தைச் சேர்ந்த டாக்டர் ஆனந்தன் மேச்சேரி அம்மன் அருளை படமாக்குகின்றார். அந்த படத்தின் கதை விவாததிற்காக ஏ.வி.எம் தியேட்டருக்கு முன் உள்ள ஹோட்டலுக்கு அழைத்தார். வளசரவாக்கம் வீட்டிலிருந்து செல்லும் போது மழை, கதை விவாதத்தின் போது மழை, இரவு வீட்டிற்கு செல்கிறேன் அப்போது இடுப்பளவு தண்ணீர்.

அடுத்த நாள் காலை எழுந்தால் வீட்டுக்குள் வெள்ளம் நிற்கிறது, வீட்டில் இருக்க முடியாமல் கதை விவாதத்திற்கு செல்ல வந்தால் ரோட்டில் கழுத்தளவு வெள்ளம், அதையும் தாண்டி சென்று வந்தால் வீட்டில் உள்ள பொருட்கள் எல்லாம் நாசம், பின்னர் வெளியே எங்கும் செல்ல முடியவில்லை, தண்ணீரும் பிஸ்கற்றும் சாப்பிட்டு மூன்று நாட்களை கழித்தேன். பின்னர் அகதி வாழ்க்கை. மேட்டுப்பகுதிக்கு ஓடினேன், அதன் பின்னர் சேலத்துக்கு ஓடினேன், எட்டு நாட்கள் கழிந்து தண்ணீர் வடிகிறது, இவையனைத்தும் பெரும்பாலான மக்களுக்கு நடந்திருக்கின்றது.

என்னுடன் பழகியவர்களுக்கு நேர்ந்த அனர்த்தங்கள் இரண்டு மூன்றை சொல்ல வேண்டும், எனது நண்பர் திரு. பாப்பா ராஜேந்திரன் மிகப்பெரும் கோடீஸ்வரர், எப்போதும் உடம்பில் ஒரு கிலோ தங்கம் தொங்கும், இதைப் பார்க்கும் போது எதற்கு என்று எனக்கே தோன்றும், சினிமாவிலும் சாதிக்க வேண்டும் என்ற அவா இருந்தது அவருக்கு, பிறருக்கு உதவுவதில் மன்னர், முதலாம் திகதி மழையின் போது அசோக்நகர் காசி தியேட்டருக்கு அருகில் உள்ள அவரது வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து விட்டது, யாராலும் உள்ளேயோ வெளியேயோ போக முடியாத சூழல், மனைவி, பையன் மட்டுமே இருக்கின்றனர். திடீரென்று மார்புவலி, ஹாஸ்பிட்டலுக்கு எடுத்துச் செல்ல முடியாத சூழல், இறந்து விட்டார், இரண்டு நாட்கள் கழித்தே அவர் தம்பிக்கு தெரிந்து உடலை அடக்கம் செய்தனர். எந்த உதவிக்கும் யாரையும் அழைக்க செல்போன் இணைப்புகள் தொலைபேசி இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டதே இதற்கு காரணம். அவர் உயிர் காப்பாற்றப்பட்டிருந்தால் பலர் வாழ்ந்திருப்பார்கள்.

அவர் பணியை அவரது சகோதரர் சிரமேற்கொள்வார் என்று நம்புவோம். இயக்குனர் செல்வம் இராமேஸ்வரம் திரைப்படத்தை இயக்கியவர், சாலிக்கிராமம் பிரசாத் லேப் எதிரில் வீடு, அவர் வீட்டுக்குள் புகுந்த வெள்ளம் தொலைக்காட்சி, குளிர்சாதனப் பெட்டி, உட்பட பல பொருட்களை சூறையாடிவிட்டது. நண்பர் சித்தன்பிரசாத் மூலமாக தொல்காப்பியப் பேரவை தலைவர் வேள்கதிரவன் அவர்களுடன் பல வருட நட்பு, அவர் வீட்டுக்குள் 5 அடி உயரத்திற்கு வெள்ளம், பல இலட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசமாகி தலையில் அடித்துக் கொண்டதை பார்க்கக் கூடியதாக இருந்தது. சன் தொலைக்காட்சியில் வேலை செய்யும் என் நண்பர் செளமியன் தோட்டத்தில் இருந்த பதினேழு ஆடுகள் பத்தடி உயரத்திற்கு உயர்ந்த வெள்ளத்தில் சிக்கி மாண்டன. இதில் என்ன வேடிக்கை என்றால் அவர் தோட்டம் விமான நிலையம் அருகில் உள்ளது, அடித்து வரப்பட்ட இரண்டு விமானங்கள் இவர் தோட்டத்து வேலியிலே செருகி நின்றன. நண்பர் பதினோரு ஏக்கர் நிலத்தை சூழ்ந்த நீரில் நீந்தி தப்பித்து விட்டார். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

அம்மையார் ஜெயலலிதா ஆட்சியிலிருந்த காலங்களிலெல்லாம் மழை நிரம்பப் பெய்வதுண்டு. அதனால்தான் 'மழைராசிக்காரர்' என்று அழைப்பார்கள் அந்தம்மாவை. எனக்கு நல்ல ஞாபகம் இருக்கிறது. 2005 ம் ஆணடு! இதே அளவுக்கு இல்லாவிடினும் கடும் மழை பெய்து வீடுகள் மூழ்கியபோது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அம்மையார் இப்போது போல் அல்லாமல் உடனுக்குடன் பாதித்த இடங்களுக்கு சென்று வேண்டிய உதவிகளைச் செய்தார். அந்நேரத்தில் அந்த செய்திகளை படம் பிடிப்பதற்காக நானும் எனது குழுவினரும் அவருடன் சென்று வந்த ஞாபகங்கள் இருக்கின்றது. அதற்கு முன்னர் ஒரு தடவை அவரது ஆட்சிக்காலத்தில் இதே போன்ற வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது ஒவ்வொரு குடும்பத்துக்கும் 2000 ரூபாய் என்று அறிவித்து வழங்கினார். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 50 க்கு மேற்பட்டோர் சென்னை கே.கே நகரில் உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆக எப்போது மழை வந்து சேர்கிறதோ அப்போதே அவருடைய ஆட்சிக்கட்டிலும் சரிந்து விடுகின்றது என்பதையும் பார்க்க வேண்டும். இந்த மழையில் அவரது ஆட்சியில் சரியாக நிவாரணம் கிடைக்கவில்லை என்றும், உதவிகள் செய்யவில்லை என்றும், உதவி செய்பவர்களை அவருடைய கட்சியினர் தடுக்கின்றனர் என்றும், மற்றவர்கள் கொடுக்கும் உதவி தொகையை வாங்கவில்லை என்றும், ஹெலிக்கொப்டரில் 2 சுற்று சுற்றி விட்டு வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றார் என்றும் பல குற்றச்சாட்டுக்கள்.

பல ஏரிகள் திறந்து விடப்பட்டதாலும், உடைப்பு ஏற்பட்டதாலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கரையோரங்களிலிருந்த வீடுகள் சூறையாடப்பட்டன. இதற்கு எம்.ஜி.ஆரின் வீடும் தப்பவில்லை, அவர் பாவித்த பொருட்கள் இராமாவரத்தில் உள்ள அவரது தோட்டத்தில் பாதுகாக்கப்பட்டு வந்தன. செம்பரம்பாக்கம் ஏரி நிறைந்து திறக்கப்பட்டதால் அவர் தோட்டத்தில் உள்ள பொருட்களை வெள்ளம் சூறையாடிக் கொண்டு போய்விட்டது, அவரது பொருட்களுக்கே இக்கதியென்றால் சாமானியர்களை இம்மழை எப்பிடிப் புரட்டிப் போட்டிருக்கும் நினைத்துப் பாருங்கள். ஏரிகளை சுற்றியுள்ள இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்ட காரணத்தால் பெருமளவு சேதம் ஏற்பட்டது என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினாலும். குளோபல் வோமிங் எனப்படும் வெப்பமயமாதல் காரணமாக ஏற்படும் பருவமாற்று காலநிலையின் தாக்கம் சென்னையை மட்டுமல்ல தமிழகத்தையும், நாளை இலங்கையையும்

கூட தாக்கலாம். ஐரோப்பிய நாடுகள் வெப்பமடையலாம். வெப்ப நாடுகளான மத்திய கிழக்கு, ஆசிய நாடுகளில் பனி கொட்டலாம். உலக நாடுகள் இதில் தாங்கள் செலுத்த வேண்டிய கவனததை அதிகரித்தால் மட்டுமே உலகத்தை காப்பாற்ற முடியும்.

பார்த்தவைகள், கேட்டவைகள் இரசித்தவைகள் மூட்டை முடிச்சுக்களுடன் மக்கள் வெளியேறினர்.. என்னுடன் கூட வந்த நிஷார் என்ற நண்பர் விடை கொடு எங்கள் நாடே என்ற பாடலை பாடிக்கொண்டு வந்தார். 80 முன்னர் நாம் இருக்கின்றோமோ என்ற நிலை, காரணம் மின்சாரம் இல்லை, தொலைத்தொடர்பு வசதியில்லை, வண்டி வசதியில்லை, பேப்பர் இல்லை, எதுக்கு சுத்திவளைச்சு முன்னாடி இருந்த யாழ்ப்பாணத்தை நினைச்சு பாருங்களேன்.

முதல் இரண்டு நாட்களுக்கு அரசு நிர்வாகம் ஸ்தம்பித்துப் போனது! மாமூல் (இலஞ்சம்) வாங்க கழுகுகள் போல் சுற்றித் திரியும் காவல்துறையினரை அந்த சில நாட்களாகக் காணவில்லை.

முன்னர் எல்லாம் நாம் பொழுது போக்கிற்காக மீன் பிடிக்க செல்வதென்றால் ஏரிக்குச் செல்வோம், ஏரிகள் உடைந்து நகருக்குள் வந்ததால் வீட்டில் இருந்தே தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள். சிலர் ரோட்டோரத்தில் கைகளினால் கூட பிடிப்பதை காணக்கூடியதாக இருந்தது,

தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு பீச் போகணும்னு கேட்டியே இது தான் பீச் என்று காட்டினார்கள்.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து வெளியேறிய முதலை போன்ற கொடிய மிருகங்கள் ஊருக்குள் நுழைந்துள்ளனவாம்..

கால்நடைகள் உயிரினங்கள் செத்து மடிந்து நாறிக்கொண்டிருந்தன.

பாம்புகள் தண்ணீரிலே நீந்தி விளையாட்டுக் காட்டுகின்றன.

கணுக்கால் தெரிந்தாலே கதறும் தமிழ்நாட்டு பெண்கள் எதையும் கண்டு கொள்ளாமல், இடுப்பளவு சேலையை தூக்கிக் கொண்டு சென்றனர்…

ஆலயங்களை இஸ்லாமிய சகோதரர்கள் தூய்மை செய்வதை காணக்கூடியதாக இருந்தது.

‘உதவும் கரங்கள்’ பல நீண்டாலும் அதைப் பறிக்கும் கரங்களையும் காணக் கிடைத்தது.

கால் லிட்டர் பால் விற்றது நூறு ரூபாய்க்கு. செய்தித்தாள் பத்து ரூபாயானது! தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவிப் பொட்டலங்களில் தங்கள் தலைவியின் படத்தை ஸ்டிக்கர் ஒட்டத் துடித்தார்கள்.

முதலமைச்சர் ஜெயலலிதா, கலைஞர் கருணாநிதி போன்ற முக்கியஸ்தர்கள் உள்ள பகுதிகளில் மேற்சொன்னப்பட்ட எதுவும் நடந்ததற்குரிய அறிகுறிகளே தென்படவில்லை. அரசியல் வழமை போல வே நடந்து கொண்டிருக்கிறது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.