புத். 67 இல. 50

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 26ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 29

SUNDAY DECEMBER 13, 2015

 

 
தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவருவதை வரவேற்கின்றோம்: ஆனால், அதன் மூலமாக----

தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவருவதை வரவேற்கின்றோம்: ஆனால், அதன் மூலமாக----

தமிழரது உரிமைகள் பறித்தெடுக்கப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது

இன்றைய நல்லாட்சி சிறுபான்மை மக்களுடன் இணைந்து பெற்ற மக்கள் ஆணை என்பதை எவரும் மறந்து விடக் கூடாது

மஹிந்த, பசில் செய்த தவறை மைத்திரி அரசு செய்யக் கூடாது ----அமைச்சர் மனோ கணேசன் 

அரசாங்கம் உத்தேசித்துள்ள புதிய தேர்தல் முறையில் தமிழ் பிரதிநிதித்துவத்திற்கு ஏற்படவிருக்கும் அநீதி சீர்ப்படுத்தப்படும் வரை அடுத்த தேர்தலுக்குச் செல்ல முடியாது. தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவரப்படுவதை வரவேற்கின்றோம். மக்களின் ஆணையைச் சிறுபான்மை மக்களாகிய தமிழ், முஸ்லிம் மக்களுடன் இணைந்தே புதிய அரசாங்கம் பெற்றுக்கொண்டது. அந்த ஆணையைப் பயன்படுத்தி தமிழ் பிரதிநிதித்துவத்தையும், தமிழ் மக்களின் உரிமைகளையும் பறித்தெடுப்பதற்கு நாங்கள் இடங்கொடுக்கப் போவதில்லை.

இவற்றையெல்லாம் நாம் ஒருபோதும் கை கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கவும் மாட்டோம் என்று தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அத்துடன் தேர்தல் முறை தொடர்பிலான இறுதி முடிவு அறிக்கை சமர்பிக்கும் காலக்கெடுவை நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் முன்வைத்துள்ளார்.

சர்வகட்சி மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் மனோ கணேசன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே மேற்கண்டவாறு கூறினார். தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவரப்படுவதை வரவேற்கின்றோம். மக்களின் ஆணையை எம்முடன் இணைந்தே புதிய அரசாங்கம் பெற்றுக்கொண்டது. அந்த ஆணையைப் பயன்படுத்தி தமிழ் பிரதிநிதித்துவத்தையும், தமிழ் மக்களின் உரிமைகளையும் பறித்தெடுப்பதற்கு நாங்கள் இடங்கொடுக்கப் போவதில்லை.

குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே 16 இலட்சம் தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். இந்த நிலையில் தேர்தல் முறை தொடர்பான இறுதி முடிவை உள்ளடக்கிய அறிக்கை ஜனவரி மாதம் 15ஆம் திகதி சமர்பிக்கப்படும் என்ற அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு இணங்க முடியாது.

இந்தக் காலக்கெடுவை மேலும் இரண்டு வாரங்களுக்காவது நீடிக்க வேண்டும். ஏனென்றால் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, கண்டி, நுவரெலியா, மாத்தளை, பதுளை ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்களைச்சந்தித்து, கடந்த காலத்தில் ஏற்பட்ட பிழையை திருத்திக் கொண்டு வருகின்றோம்.

கடந்த காலத்தில் ஏற்படுத்தப்பட்ட எல்லை நிர்ணயத்தினால், தமிழ் பிரதிநிதிகள் தெரிவாக முடியாத வகையில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. பசில் ராஜபக்‌ஷ உள்ளிட்ட ராஜபக்‌ஷ குழு செய்த அநீதி, சிறிசேனவின் ஆட்சியில் இழைக்கப்படக் கூடாது. எனவே தமிழ் பிரதிநிதித்துவத்திற்கு சரியான நீதி கிடைத்த பின்னரே அடுத்த தேர்தலுக்குச் செல்வோம் என்றார்.

 

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.