புத். 67 இல. 50

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 26ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 29

SUNDAY DECEMBER 13, 2015

 

 
ஈழத்தில் தெலுங்கர்களும் அவர்களது வாழ்வியலும்

ஈழத்தில் தெலுங்கர்களும் அவர்களது வாழ்வியலும்

இலங்கையானது பல்லின சமூகப் பண்பாட்டு அடையாளங்களையும் பாரம்பரியங்களையும் கொண்டு விளங்குகிறது. பூர்வீகக் குடிகள், வந்தேறிய குடிகள் பற்றிய பார்வையானது தற்காலத்தில் அதிகளவு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ‘ஜிப்சிஸ்’ போன்று நாடோடிகளாகத் திரிந்த இனமே குறவர்கள். குறி, சாத்திரம் பார்ப்பதனை தமது பிரதான தொழிலாக கொண்ட இவர்கள் இந்தியாவின் ஆந்திரா தேசத்திலிருந்து தொழில் நிமித்தம் இலங்கைக்கு வந்து குருணாகல் அபிலேகம என்ற இடத்தில் தங்கினர். 1953ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற கலவரத்தினால் அவர்கள் அங்கிருந்து கொழும்பு, புத்தளம், வவுனியா, திருகோணமலை, தம்பலகாமம், அனுராதபுரம், தெரப்பள எனப்பல இடங்களுக்கும் இடம்பெயர்ந்தனர்.

பின்னர் 1983ம் ஆண்டில் இலங்கையில் இடம்பெற்ற கலவரத்தின் காரணமாக கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்கு இடம்பெயர்ந்து சத்துருக்கொண்டானில் 6 மாதம் தங்கியிருந்தனர். பின்னர் தருமரெத்தினம் என்பவர் கிரான்குளத்தில் இருந்து தனது நிலத்தை வழங்க அதில் அரசாங்கம், தற்காலிக கொட்டில் அமைத்து இவர்களைக் குடியமர்த்தி அவ்விடத்திற்கு தருமபுரம் என பெயரிட்டனர். இக்காலக்கட்டத்தில் தமிழ், சிங்கள, முஸ்லிம் ஆகிய இனங்களுள் மணம் முடித்து இனத்தால் கலந்திருந்தனர்.

இவர்களின் பூர்வீகக் குடியினர் தற்பொழுது அக்கரைப்பற்று, பனங்காடு, வளத்தாப்பிட்டி, காஞ்சிரங்குடா, தம்பலகாமம், தெலுங்குநகர் போன்ற இடங்களில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுள் பச்சை குத்துவோர், பாம்பாட்டி, குரங்காட்டி, மராட்டி, நரிக்குறவர், தெலுங்கர் எனப் பல பிரிவினர் காணப்படுகின்றனர்.

ஆரம்பத்தில் தங்களுக்கென தனித்துவமான மதம், மொழி, பண்பாடு, கலாசாரம், தொழில், சட்டம், மரபு, பழக்கவழக்கங்கள் போன்றவற்றைக் கொண்டிருந்தாலும் தற்போது பிற மத, பண்பாட்டின் தாக்கத்தினால் தங்களது அடையாளங்களையும் பாரம்பரியங்களையும் இழக்கின்ற நிலையில் காணப்படுகின்றனர். “ஏனைய சமூக்ததினரால் தாம் ஒடுக்கப்பட்ட பார்வையில் பார்க்கின்ற நிலைப்பாட்டால் சமூகத்தில் தமக்கென அங்கீகாரத்தைப் பெறும் நோக்கில் கிறிஸ்தவ மதத்தினை தழுவி வருகின்றோம்” என அவர் குறிப்பிடுவது இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும். இவர்களை நாகரிக்கப்படுத்துகின்றோம் அறிவுமயப்படுத்துகின்றோம் என்ற சிந்தனையில் இவர்களில் மாற்றத்தைக் கொண்டுவருவதான செயற்பாடுகள் அவர்களது அடையாளங்களை, தனித்துவங்களை இழக்க வைப்பதாக அமைகின்றது.

இவர்களது தாய் மொழியான தெலுங்கை தமது வீட்டுச் சூழலில் கற்றுவருகின்றனர். சிறுவர்களுக்குக் கல்வியைப் புகட்டுவதற்காக அந்தச் சூழலில் காணப்படும் பாடசாலையில் சேர்க்கும் போது அங்கு தமிழ், மொழியில் கற்பிக்கப்படுவதனால் தங்களது தாய் மொழியை முன்னெடுத்துச் செல்வதில் பெரும் சவாலை எதிர் கொள்கின்றனர். தாய்மொழியில் கல்வியைக் கற்க முடியாவிட்டாலும் அதனை ஒரு பாடமாகக் கூடக் கற்க முடியாமல் இருப்பது பெரும் வேதனையைத் தருவதாகக் குறிப்பிடுகின்றனர்.

இவர்கள் தமது குலதெய்வமான காளியை “ஜக்கம்மா” என்ற பெயரில் வழிபட்டு வருகின்றனர். தாங்கள் குறிசொல்லப் போக முன்னர் நள்ளிரவு வேளையில் மயானத்திற்குச் சென்று காளிக்குப் படையல் படைத்து காளியை வரவழைத்து நிர்வாணமாக நின்று வழிப்பட்டனர். அதிகாலையில் 18 நிறங்களினால் அலங்கரிக்கப்பட்ட ஆடையினை அணிந்து வீடு வீடாகச் சென்று உடுக்கடித்து சாஸ்திரம் சொல்வர். இதன்போது இவர்களது வார்த்தை உண்மையாக இருக்கும் என்பது இவர்களது நம்பிக்கை ஆனால் தற்காலச் சூழ்நிலையில் இவர்களது சந்ததியினர் இச்செயற்பாட்டை முன்னெடுப்பதில் தயக்கம் காட்டுகின்றனர்.

இவர்களது மரணச் சடங்கினை நோக்கும் போது சடலத்திற்கு மொட்டை அடித்து பாடையில் வைத்து அதனை நால்வர் வீட்டு எல்லைக்குள் நின்றவாறு வேலிக்கு மேலால் தூக்கிக் கொடுக்க அதனை வெளியில் நிற்கும் நால்வர் வாங்கி மயானத்திற்குத் தூக்கிச் செல்வர். அன்றிலிருந்து 31 நாட்கள் சடலத்தை தூக்கிச் சென்றவர்களும் அந்த நாட்களுக்குள் காயம் நோய்கள் வரக்கூடாது என்பதற்காக இம்மரபினைக் கடைப்பிடிக்கின்றனர்.

இவர்கள் குறி சொல்வதனை தமது பரம்பரைத் தொழிலாகக் கொண்டிருந்தார்கள். தற்பொழுது இத்தொழிலைக் கைவிட்டு கொழும்பிலிருந்து குச்சிகளும் வாசனைத் திரவிய தூள் என்பனவற்றைக் கொணர்ந்து தமது வீடுகளில் ஊதுபத்தி உற்பத்தி செய்து விற்கும் செயற்பாட்டில் அதிக நாட்டம் காட்டிவருகின்றனர். ஒரு சில மூத்தவர்களே தங்ளது பரம்பரைத் தொழிலைத் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர். நவீன தொழிநுட்ப அறிவு மிகுந்த இவ்யுகத்தில் தங்களது பரம்பரைத் தொழிலானது பொருத்தமற்றது எனக் கருதி வேறு தொழிலை நாடுவதாக அச்சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

ஆரம்பத்தில் இவர்களது நீதி நடவடிக்கைகளை நோக்கும் போது தங்களுக்குள் இடம்பெறும் பிரச்சினைகளைத் தாங்களே தீர்த்து கொண்டனர். தங்களுக்குள் ஒரு தலைவரைத் தேர்ந்தெடுப்பர். ஏதும் குற்றச் செயல்கள் புரியப்படும் போது இத்தலைமையின் கீழ் ஊர் மக்கள் கூடி அதனைத் தீர்த்து வைப்பர். சில குற்றச் செயல்களுக்கு தண்டப்பணம் அறவிடப்பட்டு அதனை ஊரின் நலனுக்காகப் பயன்படுத்துவர். அல்லது அவர்களில் யாரும் வறுமையில் இருக்கும் போது அதனைக் கடனாகக் கொடுத்து குறித்த நாளில் அதனை மீளப் பெறுவர்.

இதன் மூலம் குற்றச்செயலைக் குறைக்கவும் அக்குற்றச் செயலினால் கிடைக்கப்பெறும் பணத்தை சமூக நலனுக்காகப் பயன்படுத்துவது ஏனைய சமூகத்தினருக்கு ஒரு முன் உதாரணம் ஆகும்.

இவ்வாறு தங்களுக்கெனத் தனித்துவமான பண்பாட்டுப் பாரம்பரியங்களைக் கொண்டிருந்த இவர்கள் பிற பண்பாட்டின் தாக்கம் நவீன தொழிநுட்ப சாதனங்களின் விருத்தி போன்றன காரணமாக தங்களது அடையாளங்களை இழக்கும் நிலையில் உள்ளனர். ஒரு சில மூத்தவர்கள் இதன் மகத்துவத்தை உணர்ந்து தொடர்ந்து அதனை முன்னெடுத்து வருகின்ற சூழ்நிலையில் அவர்களது சந்ததியினர் இதில் அக்கறை காட்டாமல் இருப்பது பெரும் வேதனையை தருவதாக அச்சமூகத்தினரின் மூத்தோர்கள் குறிப்பிடுகின்றனர்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.