புத். 67 இல. 50

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 26ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 29

SUNDAY DECEMBER 13, 2015

 

 
ஐ.எஸ்ஸை பயன்படுத்தி ஐக்கியத்தை சீர்குலைக்க முயலும் பொதுபலசேனா

ஐ.எஸ்ஸை பயன்படுத்தி ஐக்கியத்தை சீர்குலைக்க முயலும் பொதுபலசேனா

எமது நாட்டில் இனங்களுக்கிடையிலான சமத்துவம் பேணப்பாடாமையால் ஏற்பட்ட முரண்பாடுகள் காலவோட்டத்தில் எண்ணிக்கையில் சிறுபான்மையானகவுள்ள தேசிய இனங்களை அடக்குமுறைக்குட்படுத்தி அரசாட்சி புரியவேண்டும் என்ற வன்மமான சிந்தனைகள் சீர்தூக்கப்பட்டன. இதன் விளைவு இன்று ஆறுதசாப்த காலமாக இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் புற்றுநோயாகவிருக்கின்றதோடு அவலங்களும் இழப்புக்களுமே எஞ்சியவையாக விருக்கின்றன.

இவ்வாறான நிலையில் இந்தநாட்டில் ஆயுதகலாசாரத்தால் காணப்பட்ட அச்சமான அசாதாரண நிலைமைகள் 2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி நிறைவுக்கு கொண்டுவரப்பட்டிருந்து. எனினும் இனங்களுக்கிடையில் நம்பிக்கைகளை கட்டியெழுப்பி சமத்துவம் பேணப்பட்டு அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வை கண்பதற்காக நல்லிணக்கத்தை ஏற்படுத்தி ஐக்கிய இலங்கையை உருவாக்குவதே இறைமையுள்ள அராசங்கத்தின் கடமை. ஆனால் அந்தக் கடமையை செய்வதிலிருந்து முன்னாள் ஆட்சியாளர்கள் முற்றுமுழுதாக விலகியிருந்ததோடு மட்டுமன்றி சர்வாதிகார குடும்ப ஆட்சியை வலுப்படுத்தி சிறுபான்மை இனங்களை அடக்குமுறைக்குள்ளாக்கி ஊழல் நிறைந்த அபிவிருத்தியை முன்னெடுத்து முழு நாட்டையும் அபகரிக்கும் திட்டங்களுக்கே முன்னுரிமையளித்து திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல் ஊடாக செயல்வடிவமளித்து வரலாயினர்.

இதற்காக அரசாங்கத்தின் அமைச்சரவையில் அங்கம் வகித்தவர்கள் முதல் பொதுபலசேனா, ரவணா பலய போன்ற அமைப்புக்களையும் உருவாக்கி அதன் செயற்பாடுகளை சுதந்திரமாக மேற்கொள்வதற்கு இடமளித்திருந்தனர். குறிப்பாக தமிழ் மக்களை யுத்தத்தில் தோல்வியடைச்செய்து விட்டோமென மார்பு தட்டிக்கொண்டிருந்த பெளத்த சிங்கள இனவாதிகள் மற்றொரு தேசிய இனமான முஸ்லிம்கள் மீது இலக்குவைத்தனர். தம்புள்ளை பள்ளிவாயலில் ஆரம்பித்தவர்கள் அளுத்கமவில் உயிர்காவுகொள்ளப்பட்டபோதும் நிறுத்தியிருக்கவில்லை. உணவு, உடை, சமயம், கலாசாரம் போன்ற ஒரு மனித சமுகத்தின் அடிப்படை சுதந்திரங்களை மறுதலிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்ததுடன் முஸ்லிம் சமுகத்தின் தேசிய அரசியல் சக்தியான முஸ்லிம் காங்கிரஸ் மீது வீண்பழிகளைச் சுமத்தி அவமானப்படுத்தும் செயற்பாடுகளையும் ஒருங்கே முன்னெடுத்தனர்.

முஸ்லிம் சமுகம் பொறுமையின் உச்சத்திற்குச் சென்றிருந்த போதும் வடகிழக்கு வெளியே பரந்துவாழும் மூன்றிலிரண்டு பகுதி சமுகத்தினருக்காகவும் முஸ்லிம்கள் என்றுமே வன்முறையை விரும்பவில்லை என்பதை உணர்த்துவதற்காகவும் இந்த நாட்டில் மீண்டும் இனவாதத்தால் வன்முறை வெடித்துவிடக்கூடாது என்பதற்காகவும் அமைதியாகவும் பேச்சுவார்த்தைகளுடாக பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்பதை அரசாங்கத்திற்கும், பெரும்பான்மை சமூகத்திற்கும் பெளத்த சிங்கள இனவாதத்தை வலிமையாக முன்னெடுத்த தரப்புக்களுக்கும் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டி வந்தனர். எடுத்துரைத்து வந்தனர். இருப்பினும் எந்தப்பயனும் ஏற்பட்டிருக்கவில்லை.

ஈற்றில் ஆட்சிமாற்றமே முடிந்த முடிவு என்பதை சிறுபான்மை சமுகங்கள் வலுவாக உணர்ந்தனர். சிறுபான்மை சமுகங்களின் தேசிய அரசியல் கட்டமைப்புக்களான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றின் ஏகோபித்த ஆதரவுடன் ஜனவரி எட்டாம் திகதி ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டது.

ஜனநாயகத்தை நிலைநிறுத்தி இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தினை ஏற்படுத்தி நல்லாட்சியை உறுதி செய்யும் இலக்குடன் ஆட்சிபீடத்தில் தேசிய அரசாங்கம் அமர்ந்தது. அதன்பின்னர் நடைபெற்ற பொதுத்தேர்தலிலும் ஐக்கிய தேசியக் கட்சி பெரும்பான்மை வெற்றியைப் பெற மீண்டும் நாட்டின் நலனை மட்டுமே கருத்திற்கொண்டு தேசிய அரசாங்கம் ஆட்சியை அமைத்தது. ஆட்சியின் பங்காளர்களான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் வெளியிலிருந்து நல்லாட்சிக்கான நல்லெண்ண செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்கும் எதிர்க்கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வகிபாகத்தைக் கொண்டன.

சிங்கள பெளத்த இனவாதத்தை மக்கள் மனதில் விதைத்து ஆட்சியில் அமர்ந்து விடலாமெனக் கருதியிருந்த முன்னாள் ஆட்சியாளர்களும் அவர்களின் துணைக்குழுவினரான பொதுபலசேனாவும் மக்களால் நிராகரிக்கப்பட்டார்கள். குறிப்பாக பொதுபலசேனவை பெரும்பாமை மக்களே பெருட்படுத்தாதே தேர்தலில் செயற்பட்டிருந்தர்கள் என்பது தேர்தல் முடிவுகளில் பிரதிபலித்திருந்தது வெளிப்படையானது. இவ்வாறான நிலையில் புதிய ஆட்சியில் தமது இனவாத கருத்துக்களை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மட்டார்கள் என்பதை துல்லியமாக புரிந்து கொண்ட பொதுபலசேனாவினர் அடுத்தகட்டம் என்ன செய்வதெனத் தெரியாது தடுமாறிக்கொண்டிருந்தனர். கடந்த காலத்தில் எல்லைகடந்த செயற்பாடுகளால் குற்றவாளிகளாக கருத்தப்பட்டவர்கள் சட்டத்திலிருந்து தப்பித்திருந்த போதும் தற்போது அவ்வாறான நிலைமைகளுக்கு வாய்ப்புக்கள் இருக்கவில்லை.

இந்நிலையில் வாலைச்சுருட்டிக்கொண்டிருந்த பொதுபலசேனாவினர் சர்வதேச நாடுகளில் செயற்பட்டு வரும் முஸ்லிம் அமைப்பான ஐ.எஸ். அமைப்பின் செயற்பாடுகளை மையப்படுத்தி தமது கருத்துக்களை முன்வைத்து மீண்டும் இந்த நாட்டில் தலைதூக்கி கடும்போக்கை முன்னெடுத்து விடலாம் என்ற முயற்சியை தற்போது ஆரம்பித்திருக்கின்றார்கள். ஆம். அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரர் மிகவும் மேசமான வார்த்தைகளை பயன்படுத்தி மிலேச்சத்தனமான கருத்துக்களை இந்நாட்டின் தேசிய இனமான முஸ்லிம் சமூகத்தின் மீது முன்வைத்திருக்கின்றார்.

அவருடைய கருத்துக்களை ஒரு நொடி அவதானிப்போமாகவிருந்தால், தற்போது பிரான்ஸில் நடந்துவரும் ஐ.எஸ். இயக்கத்தின் தொடர்ச்சியான பயங்கரவாத தாக்குதல்கள், விரைவில் இலங்கையில் கொழும்பில் அல்லது கிழக்கு மாகாணத்தில் உள்ள பிரதேசங்களில் இடம் பெறலாம். மதத்தீவிரவாத கற்கை நெறிகள் முஸ்லிம் மக்களுக்கு போதிக்கப்பட்டு அவர்களை தீவிரவாதிகளாக்குவதன் பின் விளைவுகளை முஸ்லிம் சமூகம் விரைவில் எதிர்கொள்ளநேரிடும். குர்ஆனில் உள்ள இஸ்லாம் சார்ந்த அடிப்படை கோட்பாடுகள் தற்போதைய நடைமுறைக்கு சாத்தியமற்றது.

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் இலக்கு தற்போது பிரான்ஸிற்கு அச்சுறுத்தலாகியுள்ளது. இந்நிலையில் விரைவில் இந்த அமைப்பின் இலக்கு இலங்கை பக்கம் திரும்பலாம் என்ற அபாயம் நிலவுகின்றது. தற்போதைய அரசாங்கத்தின் புதிய விசா வழங்கும் திட்டமும் அவர்கள் நாட்டிற்குள் நுழைய சாதகமான காரணியாகவுள்ளன. தற்போது கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகள் குருணாகல் பரகாதெனிய பிரதேசம், மாவனெல்லை மாளிகாவத்தை உள்ளிட்ட பல பிரதேசங்களில் மதரஸா என்ற போர்வையில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புக்கள் மத தீவிரவாதத்தை பரப்பி வருகின்றன.

இது எமது நாட்டிற்கு எதிர்காலத்திற்கு அச்சுறுத்தலாக அமையலாம் ஐ.எஸ். அமைப்பினை விடவும் கொடூரமான அமைப்புக்கள் உருவாகும் சாத்தியம் உள்ளன. உலகில் இடம்பெறும் கடும்போக்குவாதிகளின் தாக்குதல்களை நாம் விமர்சிக்கின்றபொழுது எமக்கு பலர் இனவாதியாக முத்திரை குத்துகின்றனர். இது தொடர்பில் சமூக பொறுப்புடன் செயற்படும் முஸ்லிம் தலைவர்களும் மெளனம் சாதித்து வருகின்றனர். பொதுவாக எல்லா சமூகத்திலும் கடும்போக்குவாதம் பேசப்படுவது இயல்பு. ஆனால் பொறுப்புணர்வு மிக்க மதத்தலைவர்கள் தொடர்ந்தும் மெளனம் சாதிக்கும் பட்சத்தில்அவர்களின் அமைதி போக்கு எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு விடுக்கப்படும் அச்சுறுத்தலாக அமைந்துவிடக்கூடும்.

தற்காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் வாழும் இளைஞர்கள் பலர் ஐ.எஸ்இயக்கத்தின் பக்கம் ஈர்க்கப்படுகின்றனர். இவர்கள் தாம் தீவிரவாத அமைப்பில் உள்ளோம் என தமது பெற்றோருக்கும் அறிவிப்பதில்லை. இவர்கள் அல்லாஹ் என்று இறைவனின் பெயரை கூறிவிட்டு எந்த தவறையும் துணிந்து செய்கின்றனர். இந்நிலையில் மாற்றம் ஏற்பட வேண்டுமாயின் முஸ்லிம் சமூகத்தில் பொறுப்புணர்வு உள்ளவர்கள் அமைதிக்காக்க வேண்டியது அவசியம். பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் பிரான்சியர் அல்லாத வேறு இனத்தவர்களே வாழ்ந்தனர்.

அதனால் ஐ.எஸ் இன் தாக்குதலில் அதிகம் அப்பாவி பொதுமக்கள் இறந்துள்ளனர். எதிர்காலத்தில் இவ்வாறான தாக்குதல்கள் தொடரும் பட்சத்தில், ஐ.எஸ் இயக்கத்திற்கு மட்டுமல்லாது, முஸ்லிம் சமூத்திற்கு இவ்வாறான நிலைக்கு முகம்கொடுக்க நேரிடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பொதுபலசேனாவின் பொதுச்செயலாளரின் கருத்துக்கள் இவ்வாறிருக்கையில் இதில் எவ்வாறான யதார்த்தங்கள் இருக்கின்றன. ஏன் இவ்வாறான கருத்துக்களை இவர் வெளியிடவேண்டும் என்பதன் பின்புலத்தையும் சற்றே ஆராய்ந்து பார்க்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகின்றது.

முதலாவதாக ஐ.எஸ் அமைப்பின் செயற்பாடுகள் சரியானதா தவறானதா என்ற விவாதம் ஒருபுறமுள்ளது. அதேநேரம் இலங்கையில் தற்போது ஆட்சிய மாற்றம் நிகழந்து அனைத்து சமுகங்களும் ஒற்றுமையாக வாழ்வதற்கான அடுத்து கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் ஐ.எஸ் இலங்கையை தாக்க வேண்டியதன் அவசியம் என்ன?

குறிப்பாக பொதுபலசேனாவின் பொதுச்செயலாளரின் கருத்துப்படி ஐ.எஸ் ஒரு அடிப்படைய முஸ்லிம் அமைப்பாக சித்தரிக்கப்படுகின்றது. அது முஸ்லிம்களுக்காக செயற்படுவதாக கூறப்படுகின்றது. தற்போதைய நிலையில் முஸ்லிம்கள் அச்சுறுத்தல்களோ நெருக்கடிகளோ இன்றி இன நல்லிணக்கத்திற்காக ஏகோபித்து செயற்பட ஆரம்பித்திருக்கும் நிலையில் ஐ.எஸ் முஸ்லிம்களை மையமாக வைத்து இங்கு தாக்குதலொன்றை நடத்தவேண்டியதன் அவசியம் தான் என்ன?

சிலர் கடவுள் இல்லை என்கின்றனர். மற்றும் சிலர் கோடான கோடி கடவுள்கள் இருப்பதாக நம்புகின்றனர். வேறும் சிலர் மனிதர்களில் சிலரைக் கடவுளின் அவதாரம் என்கின்றனர்.

இன்னும் சிலர் மனிதர்களில் சிலரையே கண் கண்ட கடவுளாக வழிப்பட்டு வருகின்றனர். இஸ்லாம் இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்று கூறுவதுடன் பல தெய்வ நம்பிக்கையைப் பலமாக எதிர்க்கின்றது. அத்துடன், மனிதன் கடவுளாகவும் முடியாது. கடவுள் மனித அவதாரம் எடுப்பதும் இல்லை எனக் கூறி கடவுளின் பெயரால் அரங்கேற்றப்படும் அத்தனை மூடநம்பிக்கைகளையும் அடியோடு மறுக்கின்றது.

கடவுள் இல்லை என்று கூறுபவர்கள் அதைப் பகுத்தறிவு வாதம் என்று கூறுகின்றனர். இந்தப் பிரபஞ்சம் அனைத்தும் தானாகவோ, தற்செயலாகவோ உருவானது என்பது எப்படி பகுத்தறிவாகும்? படைப்பினங்கள் இருப்பதே படைப்பாளன் ஒருவன் இருக்கின்றான் என்பதற்கான பலமான ஆதாரமாகும்.

நுணுக்கமான இந்தப் பிரபஞ்ச ஒழுங்குகளும் அற்புதமான மனித படைப்பும் உயிரினங்களின் அற்புதமான வடிவமைப்பும் மிகப்பெரும் ஆற்றல்மிக்க படைப்பாளன் ஒருவன் இருக்கின்றான் என்பதற்கான எடுத்துக் காட்டுக்களேயாகும். இலங்கையை ஒரு கடவுள் படைத்தார்் இந்தியாவை இன்னொரு கடவுள் படைத்தார்் பாகிஸ்தானை மற்றொரு கடவுள் படைத்தார். இப்படி பலரும் கொஞ்சம் கொஞ்சமாகப் படைத்த அனைத்தும் சேர்ந்துதான் உலகமாக உருவானது என்று கூற முடியுமா? நிச்சயமாக முடியாது அகில உலகையும் ஒரேயொரு கடவுள்தான் படைத்தான். அந்த ஒரு கடவுள் எல்லாவிதமான பலவீனங்களை விட்டும் பரிசுத்தமானவன் என்றே இஸ்லாம் கூறுகின்றது.

இவ்வாறான யதார்த்தமிக்க கோட்பாடுகளைக்கொண்ட ஒரு சமயத்தை எவ்வாறு தற்போதைய நடைமுறைக்குச் சாத்தியமற்ற விடயங்களைக் கொண்டது எனக்கூறமுடியும். அதேபோன்று இங்குள்ள முஸ்லிம் மதரசாக்கள் மற்றும் பள்ளிவாயல்கள் முஸ்லிம்களை புதிய இஸ்லாத்தின் பால் நின்றொழுகும் கல்விஞானத்தை போதிக்கின்றதே தவிர அங்கு அரசியலையோ அல்லது தீவிர வாத சிந்தனைகளோ என்றுமே ஊட்டப்படுவதில்லை என்பற உண்மையை ஞானசார தேரர் உணரமறுப்பதேன்.

மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதைப்போலவே ஞானசேர தேரரும் முஸ்லிம் சமுகத்தின் மீது கொண்டிருக்கும் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இவ்வாறான கருத்துக்களை முன்வைக்கின்றார் என்பது தெளிவாகின்றது. மேலும் ஞானசார தேரர் இந்நாட்டின் தேசிய இனமான முஸ்லிம் சமுகத்தின் கடந்த கால வரலாற்றை மறந்தே பேசுகின்றார் என்பது மிகவும் வேதனைக்குரியதாகும். இந்த நாட்டில் தமிழ் இளைஞர்களால் ஆயுதமேந்தி விடுதலைப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டபோது அதன் பங்காளர்களாக முஸ்லிம்கள் இணைந்திருந்தால் தற்போது நிலைமை எவ்வாறிருந்திருக்கும்.

அதேபோன்று வடக்கிலிருந்து முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டபோதும், காத்தான்குடி, ஏறாவுூர், குருக்கள் மடம் ஆகிய பிரதேசங்களில் முஸ்லிகம்கள் மிலேச்சத்தனமாக படுகொலை செய்யப்பட்டபோதும் கூட வன்முறையை கையில் எடுத்திருக்கவில்்லை. அதேபோன்று தான் முன்னை ஆட்சியாளர்களின் துணையுடன் முஸ்லிம் சமுகத்திற்கு எதிரான இனவாத அடக்குமுறைச் செயற்பாடுகள் அரங்கேற்றப்பட்டபோதும் அளுத்கமவில் உயிர்கள் பறிக்கப்பட்டபோதும் கூட முஸ்லிம்கள் வன்முறையைக் கையில் எடுத்திருக்கவில்லை. ஆகவே ஒட்டுமொத்தமாக பார்க்கையில் இந்த நாட்டில் வன்முறைகள் ந்ிகழ்வதையோ அல்லது ஒரு துளி குருதி சிந்துவதையோ முஸ்லிம்கள் ஒருபோதும் விரும்பவுமில்லை.ஏற்றுக்கொள்ளவுமில்லை. இந்த உண்மை ஞானசார தேரருக்கும் அவர் சார்ந்த அமைப்பினருக்கும் கசப்பான உண்மையானக இருந்தாலும் கூட அதனை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியிருக்கின்றது.

எனவே இத்தகைய பின்னணியில் வெறுமனே முஸ்லிகளையும் அதன் தேசிய அரசியல் கட்டமைப்பான மு.காவையும் மையப்படுத்தியதாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும் இவ்வாறான கருத்துக்கள் அரசியல் ரீதியாக காழ்பபுணர்ச்சியின் அதியுச்ச வெளிப்படாகவே கருதவேண்டியுள்ளது. எது எவ்வாறாயினும் ஐக்கிய இலங்கைக்குள் மூவினங்களுக்கிடையிலான நல்லெண்ணம் கட்டியெழுப்பப்பட்டு நிரந்தர சமாதனம் நோக்கிய பயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ள தற்போதைய நிலையினையாவது புரிந்து கொண்டு பொதுபலசேனாவின் பொதுச்செயலாளரும் அவ்வமைப்பினரும் ஏனைய இனவாதத்தை கையிலெடுத்து சுயநல அரசியல் செய்ய விளையும் சக்திகளும் தமது சிந்தனா சக்தியையும் செயற்பாட்டு போக்கையும் மாற்றியமைக்கவேண்டியது அவசரமான அவசியமாகவுள்ளது. அதிலிருந்து விலத்திநிற்பார்களாயின் எவ்வாறு தேர்தல் காலத்தில் எந்த மக்களுக்காக பெளத்த சிங்கள வாதத்தை அதீதமாக கையிலெடுத்தார்களோ அதே மக்களே தக்கபடிப்பினைகளை எதிர்காலத்திலும் வழங்குவார்கள் என்பது திண்ணம்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.