புத். 67 இல. 50

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 26ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 29

SUNDAY DECEMBER 13, 2015

 

 

இருள் அகன்றது

இருள் அகன்றது

பறவைக் கூட்டங்கள் தத்தமது இல்லங்களை நோக்கி பறந்து கொண்டிருக்கும் அந்திசாயும் வேளையது. தென்னந் தோட்டத்து நடுவே அமைந்துள்ள பள்ளியிலே ‘மஃரிபு’ தொழுகைக்கான அதான் ஒலித்து ஓய்ந்தது.

சற்று நேரத்தில், அக்கிராமத்து மக்கள் தொழுகைக்காகப் பள்ளியை நோக்கி விரைந்து சென்றுகொண்டிருந்தார்கள்.

அவ்வேளை, பள்ளியிலிருந்து சற்றுத் தொலைவில் அமைந்துள்ள நைஸரின் வீட்டினுள்ளிருந்து ‘சலா’ ரென்று போத்தல்கள் ஒன்றோடொன்று மோதி உடைந்து சிதறி விழுவது போன்ற பயங்கர சப்தமொன்று அக்கம் பக்கத்திலுள்ளவர்களை அதிர்ச்சியடையச் செய்தது.

அதனைத் தொடர்ந்து ஏச்சுக்களும், பேச்சுக்களும் அங்கு தொடர்ந்து கொண்டிருந்தன. கடுமையான அவ்வார்த்தைகள் அயலவர்களின் செவிகளைத் துளைத்ததோடு, நெஞ்சங்களையும் உருகச் செய்தன. “ஏய் ஜெஸ்மினா! நீ புள்ளகள எடுத்துட்டு உம்மா ஊட்டுக்கு போறியா? இல்ல, நான் ஒன்ன போக வெச்சட்டுமா?”

கோபாவேசத்துடன் காணப்பட்ட நைஸரின் நாவிலிருந்து வெளியான காரசாரமான அவ்வார்த்தைகள் ஜெஸ்மினாவின் மிருதுவான உள்ளத்தை ஊடறுத்துக் கொண்டு சென்றன.

எதையுமே அறியாத நிலையில் ஜெஸ்மினா சற்று நெருங்கிச் சென்று தாழ்ந்த குரலில் “அப்படியெல்லாம் சொல்லாதீங்க, அந்தளவுக்கு நான் பாரதூரமா என்ன தவறு செய்திட்டன்?’

ஜெஸ்மினாவின் புண்பட்ட உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து வெளியான அந்த வார்த்தை நைஸரை மேலும் கோபத்திற்குள்ளாக்கியது.

“பேச்ச வளக்காம வாய மூடுடீ, ஏதோ பத்தினியாட்டம் நியாயம் கேட்க வந்துட்டா! கண் காணாம தவறுகளையெல்லாம் செஞ்சி போட்டு அத மூடி மறச்சுறதுக்கு ஏதேதோ சொல்லி ஒன் வழிக்கு என்ன இழுக்கப் பாக்குறியா? அது இந்தக் காசிம் முதலாளிட மகன் நைஸர் கிட்ட நடக்கவே நடக்காது. தெரிஞ்சுக்கோ”! என்று எச்சரிக்கை தொனியில் கூறவே,

பக்கத்திலிருந்து இதனை அவதானித்தவாறு அங்கு நின்றுகொண்டிருந்த இரு குழந்தைகளும் தந்தையின் மூர்க்கத்தனமான இச்செயலால் கிலி கொண்ட நிலையில், ஜெஸ்மினாவின் உடையை பற்றிப் பிடித்துக் கொண்டு தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தன. உலகமே என்னவென்று அறியாத அச்சிறுசுகள் நிலத்தில் புரண்டு கொண்டு அழுவதைத் தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு அவளது தொண்டை அடைத்துக் கொண்டது.

அச்சமயத்தில் ஜெஸ்மினா தனது கைக்குழந்தையைத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு

“இதோ பாருங்க! இந்த கொழந்தகள்ட மொகத்துக்காவது ஸபூர் பண்ணுங்களேன்!” என்று கெஞ்சுமாற்போல் கூறியதும். “என்னடீ சொன்னாய்? ‘ஸபூராம் ஸபூர்’ எத்தனை நாளுக்குடி ‘ஸபூர்’(பொறுமை)பண்ணறது?” என்று கூறிக் கொண்டே ஜெஸ்மினாவின் கன்னத்தில் பலமாக அறைந்தான்.

அதனைத் தொடர்ந்து, அடியும் உதையும் விழும் சப்தத்தோடு அழுகையும், முனகலும் வெளியே கேட்க அயலிலுள்ளவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து நைஸரின் வீட்டை முற்றுகையிட்டாற்போல் நெருங்கி வந்தார்கள்.

அவ்வேளையில் குழந்தைகள் கதறித் துடித்து அழுவதை சகித்துக் கொள்ள முடியாமல் அங்கு கூடி நின்றோர் விடயத்தை விவரமாக தெரிந்து கொள்வதில் ஆவலாயிருந்தார்கள்.

அது மட்டுமல்ல! இப்படியான கசப்பான சம்பவங்கள் அப்பகுதியில் எங்கு நடந்தாலும் அங்கு எல்லோருமாகச் சென்று அவர்களைச் சந்தித்து சமரசம் செய்து வைப்பது வழக்கம். என்றாலும், அது உள் வீட்டு குடும்பப் பிரச்சினை போன்று தோன்றியதால் எவரும் அதில் உடனடியாகத் தலையிட விரும்பவில்லை.

“ஊரில் எத்தனையோ பேருக்கு ஏற்பட்ட வெவ்வேறு விதமான பிரச்சினைகளுக்கு இலகுவான முறையில் தீர்வு கண்டு சமாதானப்படுத்தி வைத்த நைஸர் தனக்கு இப்படியானதோர் அவல நிலை ஏற்பட்டுச் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றேனே, இதற்கு எந்த முறையில் விடிவு காண்பது’ யா அல்லாஹ்! நான் ஜெஸ்மினாவை கைபிடித்த நாள் முதல் பலமுறை அவளோடு சண்டையிட்டு மனம் நோகச் செய்து விட்டேனே! எந்தக் குறைபாடுமில்லாமல் சந்தோஷமாக வாழ்ந்து வந்த என் குடும்பத்தில் இப்படியானதொரு பூகம்பம் ஏற்பட்டதை என்னால் தாங்கிக்கொள்ள முடியாமலிருக்கிறது.

யா அல்லாஹ்! இந்தக் கடுமையான சோதனையிலிருந்து என் குடும்பத்தைக் காப்பாற்றி விடுதலை பெற்று நல் வாழ்வு பெற்றிட அருள் புரிவாயாக! யா அல்லாஹ்!” என்று மனமுருகியவாறு தனக்குள்ளே நினைத்துக் கொண்டான்.

நைஸர் மிக்க நல்லவன், எல்லோரிடமும் சரளமாகப் பேசி நெருங்கிப் பழகும் நல்ல தன்மை அவனிடம் நிறைய காணப்பட்டது. வணக்க வழிபாடுகளிலும் தான தர்மம் புரிவதிலும் நைஸர் முன்னிலை பெற்று விளங்கினான்.

அதேபோன்று ஜெஸ்மினாவும் நல்ல குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள். முன்னொரு காலத்தில் தோட்டத்துப் பள்ளியில் நிர்வாக சபைத் தலைவராகவும் விளங்கிய சம்சுதீன் தம்பதியின் ஏக புத்திரியான ஜெஸ்மினா, சிறு வயதுலிருந்து பிறர் மெச்சத்தக்க விதத்தில் நல்லொழுக்கத்தோடும், பணிவோடும் காணப்பட்டதால் அப்பகுதி மக்களில் பெரும் பாலானோர் அவளுடன் அன்போடும் பாசத்தோடும் நெருங்கிப் பழகினார்கள்.

ஜெஸ்மினா பாடசாலையில் கல்வி கற்கும் காலங்களில் ஏனைய மாணவ மாணவிகளுடனும் சகோதர வாஞ்சையுடன் பழகி வந்ததோடு வகுப்பாசிரியைகளிடமும் நன்மதிப்பைப் பெற்று வகுப்பில் நல்ல பெறுபேறுகளையும் பெற்று கல்வியில் முன்னேற்றமும் அடைந்து காணப்பட்டாள்.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த ஜெஸ்மினா தொடர்ந்தும் கல்வியை மேற்கொள்ள முடியாத நிலையில், தந்தை சம்சுதீன் ஹாஜியாரின் வேண்டுகோளுக்கிணங்க பாடசாலையிலிருந்து விலகி வீட்டோடு இருந்துவிட்டாள். இப்படியாக வருடங்கள் சில உருண்டோடிட அப்பகுதியிலேயே தனவந்தராகக் கருதப்பட்ட காசிம் முதலாளி தனது மகன் நைஸருக்குத் திருமணம் முடித்து வைக்கும் நோக்கில் பெண் பார்க்க பல இடங்களுக்குச் சென்று வந்தும், பெண் கட்டை , நெட்டை, கருவல், பருமன் போன்ற காரணங்களால் பேச்சுவார்த்தை தடைபட்டுபோனது.

இச்சந்தர்ப்பத்தில் ஜெஸ்மினாவைப் பற்றியும் அவளது குடும்ப நிலைமையைப் பற்றியும் கல்யாணத் தரகர் ஒருவர் மூலமாக கிடைத்த தகவலின் பிரகாரம் குறிப்பிட்ட தினமொன்றில் சம்சுதீன் ஹாஜியார் வீட்டுக்கு ஜெஸ்மினாவை பெண் பார்க்க காசிம் முதலாளியின் குடுபத்தார் சென்றார்கள். சம்சுதீன் ஹாஜியார் அவர்களை வரவேற்று அவர்களுக்கு இனிப்பு பண்டங்களோடு குளிர்பானமும் பரிமாறி உபசரித்தன் பின்னர், இரு சாராரும் திருமணம் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளைப் பகிர்ந்து கொண்டதில் சாகதமான முடிவு எட்டிடவே, நைஸரினதும் ஜெஸ்மினாவினதும் பூரண சம்மதத்துடன் இரு குடும்பத்தாரும் இணைந்து, இருவருக்கும் இனிதே திருமணத்தை முடித்து வைத்தார்கள்.

திருமணம் முடித்து வருடங்கள் நான்கு கடந்துகொண்டிருக்கையில், அவர்களுக்கு மூன்றரை வயதில் ஓர் ஆண் குழந்தையும், இரண்டு வயதுப் பெண் குழந்தையொன்றும் அவர்களின் அன்புச் செல்வங்களாக வளர்ந்து வந்தன.

இக்கால கட்டத்தில், நைஸரும் ஜெஸ்மினாவும் ஒருமனமாய் ஒன்றுபட்டு ஒற்றுமையாய் வாழ்வதைக் கண்டு சகித்துக் கொள்ள முடியாத ஒரு சிலரின் பொறாமை, வஞ்சகத்தன்மை போன்றவற்றால் இவர்களது நல்வாழ்வுக்கு குந்தகம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் ஒவ்வொரு நாளும் நைஸரின் உள்ளத்தை உறுத்தியது.

அன்றொரு நாள் தனது காலையுணவை முடித்துக் கொண்ட நைஸர், அவச​ர தேவையொன்றின் நிமித்தம் முக்கியஸ்தர் ஒருவரை சந்திப்பதற்காகப் புறப்பட்டுக்கொண்டு, முன் வாசலருகே வந்தான். அச்சமயம் வீட்டின் முன்னாலுள்ள 'கேட்' அருகே ட்ரீங்,, ட்ரீங்,, என்று பைசிக்கிள் மணி ஒலித்துக் கொண்டிருக்கவே, அதனைத் தொடர்ந்து “லெட்டர், லெட்டர்” என்ற அழைப்புக் குரலோடு தபால்காரன் கடிதமொன்றை நீட்டினான். 'கேட்' அருகே விரைந்து சென்று நைஸர், கடிதத்தைப் பெற்றுக் கொண்டு மீண்டும் வீட்டினுள் நுழைந்தான். ஜெஸ்மினா என்ற பெயரில் தெளிவில்லாமல் முகவரியிடப்பட்ட அக்கடிதத்தைப் பிரித்துப் பார்க்க அதில்........

“ அன்பு மறந்த ஜெஸ்மினா ”

நான் உன்னை அடைவதற்காக எடுத்துக் கொண்ட முயற்சிகள் யாவும் கானல் நீராகி விட்டன. அன்று எனது பெற்றோர் உன்னைப் பெண் கேட்டு வந்தபோது, உனது வாப்பா என்னை குடிகாரனென்று எனக்கு பெண் தர மறுத்து விட்டார்.

அதற்கு என்றாவது ஒரு நாள் உன்னைப் பழி வாங்காமல் விடமாட்டேன்”

பெயர் திகதி இடப்படாத அந்த மொட்டைக் கடிதத்தைத் திரும்பத் திரும்ப பலமுறை வாசித்து விட்டு மடித்து ​ெபாக்கெட்டினுள் இட்டுக் கொண்ட நைஸர் இது பற்றிப் பல கோணங்களிலிருந்தும் தன் சிந்தனையைச் செலுத்திக் கொண்டிருந்தான். “யார் அந்த நொந்து போனவன்? ஜெஸ்மினாவுக்கும் அவனுக்குமிடையில் எப்படி தொடர்பு ஏற்பட்டது? இந்த விடயத்தை யாரிடம் எந்த முறையில் விளங்கப்படுத்துவது?” போன்ற வினாக்களை தனக்குள்ளே கேட்டவாறு மனவேதனையடைந்து கொண்டிருந்தான்.

இப்படியாக நாட்கள் செல்லச் செல்ல நைஸரின் உள்ளத்தில் சந்தேகப் புயல் பூதாகரமாக உருவெடுத்து, இருவருக்குமிடையில் நீண்ட இடைவெளியை ஏற்படுத்தி விட்டது.

அன்று, ‘இஷாத்’ தொழுகைக்கான நேரமும் நெருங்கி வர, அப்பகுதியிலே வயதிலும் அனுபவத்திலும் மூத்த மனிதராக மதிக்கப்பட்டு வந்த வதூத் ஹாஜியார் ,பள்ளிக்குச் செல்வதற்காக அவ்வழியே நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்பொழுது, நைஸரின் வீட்டருகே மக்கள் கூடி நிற்பதையும் நைஸர் எதை எதையோ சொல்லி ஏசிக் கொண்டிருப்பதையும் அவதானித்த வதூத் ஹாஜியார், வேகமாக வீட்டருகே வந்து கதவைத் தட்டினார். கதவை திறந்த நைஸர், வதூத் ஹாஜியாரை அழைத்துச் சென்று பக்கத்திலுள்ள மரத்தடியில் பலகையால் அமைக்கப்பட்டிருந்த இருக்கையில் உட்காரச்செய்து, தனக்கும் மனைவி ஜெஸ்மினாவுக்குமிடையில் முறுகல் நிலை ஏற்படுவதற்குக் காரணமாகவிருந்த அக்கடிதத்தை வாசித்துக் காண்பித்தான்.

விடயத்தைத் தெரிந்து கொண்ட வதூத் ஹாஜியார், ஆச்சரியத்தால் அதிர்ந்துபோன நிலையில் விரலை தன் வாயில் வைத்தவாறு, சிறிது நேரம் மௌனமாயிருந்தார். வதூத் ஹாஜியாரின் இச்செயலால் தனது குடும்பப் பிரச்சினைக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கப் போகிறது என்ற நினைவில் மீண்டும் தலையை நிமிர்த்தி வதூத் ஹாஜியாரின் முகத்தை நோக்கினான்.

அப்பொழுது, புன்முறுவல் பூத்த முகத்தோடு நைஸரை நோக்கிய வதூத் ஹாஜியார் “நல்லா கேட்டுக்கப்பா! சொல்றேன்!”

அப்பொழுது சந்தோஷ மேலீட்டினால் நைஸர் தலையசைத்தான்.

“நம்ம மரக்கறிக்கட சமீம்ட ஊட்ல கூலிக்கு ஓர் இளம் ஜோடி வந்திருக்காங்களே ஒனக்கு தெரியுமா?”

“ஆமா! ஹாஜி, அப்புறம்!”

அந்த வீட்டுப் புள்ளட பேரும் ஜெஸ்மினாதான்!

“யா அல்லாஹ்! அப்படியா”

நைஸர், மெய் மறந்த நிலையில் தடுமாற்றமடையவே வதூத் ஹாஜியார் தனது பேச்சை தொடர்ந்தார்.

“அந்த ஜெஸ்மினாவுக்கு யாரோ போட்ட கடிதம் தான் ஒன் கையில கெடச்சிருக்கு. அவவ எல்லாம் நோனான்னு தான் கூப்புடுவாங்க. புறிஞ்சுதா என்றதும் “ஆமா ஹாஜி நல்லா புரிஞ்சிட்டேன் ‘அல்ஹம்மதுல்லா” என்று அல்லாஹ்வைப் புகழ்ந்து விட்டுத் தக்க தருணத்தில் கை கொடுத்து உதவிய பெரியார் வதூத் ஹாஜியாருக்கும் தனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுக்களையும் கூறிக் கொண்டு, நடந்து முடிந்த தவறுக்காக மனமுறுகிய நிலையில் மன்னிப்பு கேட்கும் நல்லெண்ணத்தோடு உரத்த குரலில்

“ஜெஸ்மினா....! ஜெஸ்மினா...!!” என்று கூறிக் கொண்டே வீட்டினுள் நுழைந்தான் நைஸர்.

“இஷா” தொழுகைக்கான அதான் ஒலித்துக் கொண்டிருக்க வதூத் ஹாஜியார் பள்ளியை நோக்கி நடந்தார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.