புத். 67 இல. 50

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 26ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 29

SUNDAY DECEMBER 13, 2015

 

 
சிறுவர்களுக்கு பரிசளித்து மகிழும் நத்தார் தாத்தா

சிறுவர்களுக்கு பரிசளித்து மகிழும் நத்தார் தாத்தா

டிசம்பர் மாதம் என்றாலே சிறுவர்களுக்கு குதூகலமான நாட்களாகும். அன்பளிப்புகளும் பரிசுகளும் இனிப்பு வகைகளும் தங்களைத் தேடி வரும் நாட்களாகவே கருதப்படுகிறது. விசேடமாக கிறிஸ்து பிறப்புக்கு ஆயத்தங்களை செய்பவர்களாகவும் காணப்படுவார்கள்.

இயேசு கிறிஸ்துவின் பிறப்பு விழா இன்று ஒரு வர்த்தகப் பெருவிழாவாக உருமாறி இருக்கும் சூழலிலும், பரிசுகள் வழங்குவதையும், வாழ்த்துக்கள் வழங்குவதையும் தன்னகத்தே கொண்டிருப்பதால் அதன் அர்த்தம் நீர்த்துப் போகாமல் இருக்கிறது. இயேசு பிறந்தபோது மூன்று ஞானிகள் அவரைத் தேடி வந்து பரிசுகள் வழங்கியதையே இந்த பரிசு வழங்குதலின் மையமாகப் பார்க்கப்படுகிறது. கிறிஸ்தவை நினைவுகூறும் இவ்விழா வியாபார வட்டாரத்துக்குள் விழுந்தபினர் தான் பிரபலமடைந்தது. அத்துடன் கிறிஸ்மஸ் தாத்தாவும் பிரபலமடைந்தார்.

இன்றைய நாட்களில் பரிசளிப்பு நிகழ்வுகள், சிறுவர் நிகழ்ச்சிகள், நத்தார் இன்னிசை கீதம் ஆகியவற்றில் நத்தார் தாத்தா கலந்து சிறப்பிப்பதை காணலாம். நத்தார் தாத்தா என்றால் ஏதோ ஒரு கற்பனைக்கு எட்டாத பாத்திரமாகவும் சிறுவர்களை மகிழ்விப்பவர்களாகவும் இருக்கிறது.

நத்தார் தாத்தாவை கிறிஸ்மஸ் தாத்தா, சென்டோ குரோஸ், நத்தார் பப்பா என்ற பெயர்களில் அழைப்பதுண்டு. அமெரிக்காவில் குடியேறிய டச் இனத்தவர் சிண்ட்டர் க்ளாஸ் என்று அறிமுகப்படுத்தினர். பின்னாளில் சொல்மறுவி சாண்ட்ட கிளாஸாக வலம் வரத் தொடங்கியது. செயிண்ட் நிக்கோலஸ்தான் சாண்ட்ட கிளாஸ் என்பது குறிப்பிடத்தக்கது. துருக்கி நாட்டின் மிரா நகரில் நான்காம் நூற்றாண்டில் ரோமன் கத்தோலிக்க ஆயராக (பிஷப்) வாழ்ந்தவர் தான் புனித நிக்கோலஸ். மனித நேயத்தின் சின்னமாக விளங்கிய நிக்ெகாலஸ் தேவையானவர்களுக்கு உதவுவதையே வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டிருந்தார். அத்துடன் வாழ்க்கையின் அடித்தள மக்களின் மேம்பாட்டிற்காகவும், ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்க்காகவும் தன்னை அற்பணித்துக் கொண்ட அற்புதமான தேவமனிதனாவார்.

வறுமையின் வீரியத்தையும், ஏழைகளின் துயரையும் நேரடியாகச் சந்தித்த அனுபவம் அவரை மனித நேயவாதியாக மாற்றியது. அவருடைய வாழ்க்கையில் குழந்தைகளை அவர் அபரிமிதமாக நேசித்தார். குழந்தைகள் இருக்கும் வீடுகளில் யாருக்கும் தெரியாமல் பரிசுகளை வைப்பதை மிகவும் ஆனந்தத்துடன் செய்து வந்தார்.

‘உதவி செய்வது கடவுளைத் தவிர யாருக்கும் தெரியக் கூடாது. ஏன் வலது கை தரும் தானம் இடது கைக்குக் கூடத் தெரியக் கூடாது' என்பது தான் திருவிவிலியம் தரும் போதனை. அந்த போதனையின்படி வாழ்ந்த புனிதரே நிக்கோலஸ்.அவர் 6ம் திகதி டிசம்பர் மாதம் 343 வருடம் தனது இவ்வுலக வாழ்வை நிறைவு செய்தார். அவரின் நினைவாக டிசம்பர் 6ம் திகதி புனித நிக்கொலஸ் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

அவர் மறைவுக்குப் பின் அவர் மேற்கொண்டிருந்த அப்பழக்கமே பின்னர் சாண்ட்ட கிளாஸ் என்ற உருவாகச் சித்தரிக்கப்பட்டு கிறிஸ்துமஸ் தினத்திற்கு முன்பு குழந்தைகளுக்கு பரிசு வழங்கும் வழக்கம் பின்பற்றப்படலாயிற்று. டாக்டர் கிளெமென்ற் மூர் ஒரு கவிஞராவார். அவர் 1822இல் இயற்றிய ‘ஜிங்கிள் பெல் ஜிங்கிள் பெல்...’ என ஆரம்பிக்கும் தன் கவிதையில் நிக்கொலஸ் அவர்களைக் கதாநாயகனாக வடிவமைத்தமையே நிக்கொலஸின் புகழ் அமெரிக்கா எங்கும் பரவ மூல காரணமாயிற்று.

கிளெமென்ற் மூர் எழுதிய கவிதைக்கு அமெரிக்க ஓவியர் உருவம் கொடுத்து அழகிய மணிகளால் அலங்கரிக்கப்பட்ட பனிச்சறுக்கு வண்டி ஒன்பது கலைமான்களால் இழுத்துச் செல்லப்படுவதையும் அதில் கம்பீரமாக அழகிய சிவந்த ஆடை அணிந்த நத்தார் தாத்தா செல்வதையும் காண முடிந்தது. அந்த மான்கள் ஒவ்வொரு வீட்டின் கூரையின் மேலாகப் பறந்து செல்வதும் புகைக்கூடுகளின் ஊடாக நத்தார் தாத்தா குழந்தைகளுக்குப் பரிசுப் பொருள் வழங்குவதும் கண்கொள்ளாக் காட்சிகளாக சித்திரிக்கப்பட்டுள்ளது.

அழகிய சிவந்த கன்னங்கள், பழுப்பு நிறத் தாடி, சிறிய வாய், பெருத்த தொப்பை, சிவப்பு நிற அழகிய மேலாடை, பனிக்கால தொப்பி, தோளிலே ஒரு மூட்டை - இவையெல்லாம் ஒன்று திரண்ட உருவம் தான் நாம் பார்த்து மகிழும் சாண்டா கிளாஸ்.

கிளெமென்ற் மூர் தான் புனைந்த ‘ஜிங்கிள் பெல்....’ கவிதையை தனது குழந்தைகளுக்கு நத்தார் பரிசாகவே புனைந்தார். ஆனால், இக்கவிதையால் கவரப்பட்ட மூரின் நண்பர் இரகசியமாக இக்கவிதையை நியூயோர்க் பத்திரிகை நிறுவனமொன்றுக்கு அனுப்பி வைத்தார். 1823ஆம் ஆண்டு கிறிஸ்மஸிற்கு முந்தைய நாள் பத்திரிகையில் அது பிரசுரிக்கப்பட்டது. சில ஆண்டுகளிலேயே அமெரிக்க மக்கள் மத்தியில் நிலையான இடத்தைப் பெற்று அவர்கட்கு மகிழ்வளித்தது இக்கவிதை. கிளெமென்ற் மூர் இதற்கு இறுதி வரை உரிமை கோரவில்லை. ஆயினும், அனைவரது மனங்களிலும் நுழைந்து குழந்தைகளின் சொத்தாக இது மாறியது. நத்தார் தாத்தா பாரம்பரியமும் உலகெல்லாம் பரவியது.

மேலை நாடுகளில் கிறிஸ்மஸ் மரத்தைச் சுற்றியும், கிறிஸ்மஸ் காலுறைகளுக்கு உள்ளேயும் பரிசுகளை மறைத்து வைத்து விடியற்காலையில் குழந்தைகளிடம் கிறிஸ்மஸ் தாத்தா இரவில் வந்து வைத்துவிட்டுப் போனதாகச் சொல்லி குதூகலிக்கும் குழந்தைகளின் மகிழ்ச்சியின் ஒலியில் கிறிஸ்மஸ் கொண்டாடுகின்றனர்.

புனித நிக்ெகாலஸின் நினைவுச் சின்னங்கள் எல்லாம் துருக்கியிலிருந்து 1087ல் அகற்றப்பட்டது. அவை இத்தாலியிலுள்ள பேரி நகருக்குக் கொண்டு செல்லப்பட்டன. ஐரோப்பாவில் புனித நிக்ெகாலஸ் பெயர் நுழைவதற்கு அது காரணமாயிற்று. துருக்கியிலிருந்து அழிந்து போகாமல் காப்பாற்றப்பட்ட அவருடைய பொருட்களைப் பாதுகாக்கும் விதமாய் பேரி நகரில் ஓர் ஆலயம் கட்டப்பட்டது. குழந்தைகள், கடலில் பயணம் செய்வோர், மீனவர் போன்றோரின் பாதுகாவலராக இவர் கத்தோலிக்கத் திருச்சபையினரால் புகழப்படுகிறார்.

'உன் வலக்கரம் செய்தது இடது கரம் அறியக்கூடாது' என்ற வேத வசனத்திற்கு ஒப்ப வாழ்ந்த அவர் மக்களின் தேவையறிந்து அதனை அவர்கள் அறியாமல் நிறைவேற்றி வந்தார். ஆலயத்தில் தங்கள் தனிப்பட்ட வேண்டுதல்களை, மனக் குறைகளை பாவசங்கீர்த்தனம் (பாவமன்னிப்பு ) செய்யும்போது சொன்னால் அவர்களின் குறைகள் நீங்க விசேடமாகப் பிரார்த்திக்கப்படும் என்று புனித நிக்ெகாலஸ் அறிவித்திருந்தார்.

அவர்களின் தேவைகளை நிறைவேற்றியும் கொடுத்துள்ளார்.

பதினாறாம் நூற்றாண்டில் மார்டின் லூத்தரினால் புராட்டஸ்டண்ட் மதத்தை நிறுவியபின் புராட்டஸ்தாந்து கிறிஸ்தவர்கள் மத்தியில் புனிதர்களின் பெயர்களும், அவர்களுடைய புகழும் பெருமையும் பெருமளவுக்கு குறைந்து போயியிருந்தாலும் நிக்ெகாலஸ் மகத்துவமான பணியும் சகல கிறிஸ்தவர்களும் போற்றுவதற்குக் காரணம் அவருடைய இறைப்பணியுடனான மனித நேயப் பணிகளே காரணம்.

இன்றைய நாளில் புனித நிக்கோலஸின் நினைவையோ அர்த்தப்படுத்தாது. உதவியற்றிருக்கும் ஏழைகளையும், நிராகரிக்கப்பட்டவர்களையும் பரிசு கொடுத்து அரவணைப்பதே விழாவை அர்த்தப்படுத்தும். அத்துடன் விழா நாயகன் இயேசுவே சொல்கிறார் ‘உங்களை அன்பு செய்பவர்களையே நீங்களும் அன்பு செய்தால் அதனால் எந்த பயனும் இல்லை’.

கிறிஸ்மஸ் தாத்தா இல்லாமல் இன்று எங்கும் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுவதில்லை என்ற அளவுக்கு கிறிஸ்மஸ் தாத்தாவும் கிறிஸ்து பிறப்பும் ஐக்கியப்பட்ட நிகழ்வாக மாறியுள்ளது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.