புத். 67 இல. 50

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 26ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 29

SUNDAY DECEMBER 13, 2015

 

இந்திய -தென்னாபிரிக்க டெஸ்ட்: சாதனை படைக்கும் இந்தியா

இந்திய -தென்னாபிரிக்க டெஸ்ட்: சாதனை படைக்கும் இந்தியா

தோல்விகளினால் பல விமர்சனங்களுக்குள்ளான இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விராட் கோஹ்லியின் தலைமையில் களமிறங்கியது.

கடந்த இரு மாதங்களாக நான்கு டெஸ்ட், 5 ஒருநாள், 3 டுவெண்டி - 20 போட்டிகள் கொண்ட தொடர்களில் பற்குபற்ற தென்னாபிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் மற்றும் டுவெண்டி டுவெண்டி போட்டித் தொடர்களில் தென்னாபிரிக்க அணி வெற்றிபெற்றது.

இத் தோல்விகளினால் பல விமர்சனங்களுக்குள்ளான இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விராட் கோஹ்லியின் தலைமையில் களமிறங்கியது. சர்வதேச தரவரிசையில் முதலாமிடத்திலிருக்கும் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக இந்திய அணி எவ்வாறு முகம் கொடுக்கும் என ரசிகர்களும் விமர்சகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்திய ஆடுகளங்களில் வலுவான துடுப்பாட்ட வரிசையைக் கொண்ட தென்னாபிரிக்க அணி முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும் மூன்று நாட்களுக்குள் படுதோல்வியடைந்தது. மூன்றாவது போட்டி முதல் நாளைத் தவிர மற்றைய நான்கு நாளும் மழையினால் போட்டி கைவிடப்பட்டது. அப்போட்டியில் கூட முதல் நாளில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 200 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மூன்று போட்டிகள் முடிவில் 2 - 0 என்ற கணக்கில் தொடரில் முன்னணி வகித்த இந்திய அணி டில்லியில் கடந்த 3 ஆம் திகதி ஆரம்பமான போட்டியிலும் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடியது. இந்திய அணி 150 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்களை இழந்து இக்காட்டான நிலையில் இருந்த வேளையில் இத் தொடரில் பந்து வீச்சில் பிரகாசித்த ரவிச்சந்திரன் அஸ்வின் இப்போட்டியில் துடுப்பாட்டத்திலும் பிரகாசித்தார். இவர் அஜிஸ்கா ரஹேனேவுடன் இணைந்து இந்திய அணி 300 ஓட்டங்களைத் தாண்டிச் செல்ல உதவினார். இத்தொடரில் முதல் முறையாக 300 ஓட்டங்களை தாண்டிய ஒரே சந்தர்ப்பம் இதுவாகும். இப்போட்டியில் ரஹேனே 127 ஓட்டங்களைப் பெற்றார். ரஹேனே பெற்ற சதமானது இத்தொடரில் பெற்ற முதல் சதமாகும்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி ஜடேஜாவின் சுழலில் சிக்குண்டு மீண்டும் 120 என்ற குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. 214 ஓட்டங்கள் முன்னாளிருந்த இந்திய அணி தனது இரண்டாவது இனிங்ஸிலும் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி 5 விக்கெட் இழப்புக்கு 267 ஓட்டங்களைப் பெற்று தென்னாபிரிக்க அணிக்கு 481 ஓட்டங்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை நிர்ணயித்தது. இரண்டாவது இன்னிஸ்ஸிலும் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய ரஹேனே 100 ஓட்டங்களைப் பெற்றார்.

வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி போட்டியை வெற்றி தோல்வியின்றி முடித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் மந்த கதியில் துடுப்பெடுத்தாடி 143 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்து 337 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. தொடரை 3 - 0 என்ற ரீதியில் விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றது. இவ்வெற்றியை இந்திய அணி வீரர்கள் சென்னையில் மழையினால் பாதிக்கப்பட்டோருக்கு அர்ப்பணித்துள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இத் தோல்வியின் மூலம் கடந்த 9 ஆண்டுகளாக வெளிநாட்டு மைதானங்களில் தோல்வியுறாதிருந்த அணி என்ற பெருமையை தென்னாபிரிக்க அணி இழந்தது.

இந்திய அணியின் இத் தொடர் வெற்றியின் மூலம் சர்வதேச தரவரிசையிலும் முன்னேறியுள்ளது. இதுவரை அவ்வணி 104 புள்ளிகளுடன் 4வது இடத்திலிருந்து வந்தது. தற்போது 110 புள்ளிகளைப் பெற்று 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இத்தொடரில் தென்னாபிரிக்க அணி தோல்வியுற்றாலும் தர வரிசையில் முதலிடத்திலேயே தங்கியுள்ளது.

தென்னாபிரிக்காவின் இப்படுதோல்வியினால் அவ்வணி பல விமர்சனங்களுக்குமுள்ளாகியுள்ளது. ஓய்வு பெற்ற முன்னாள் தென்னாபிரிக்க அணித் தலைவர் கிரஹம் ஸ்மித் மீண்டும் தென்னாபிரிக்க அணியை தூக்கிநிறுத்த தான் களமிறங்க விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

டில்லியில் நடைபெற்ற நான்காவது போட்டியில் தென்னாபிரிக்க அணி 481 ஓட்டங்களை நோக்கித் துடுப்பெடுத்தாடுகையில் போட்டியை வெற்றி தோல்வியின்றி முடித்துக் கொள்ளும் வகையில் மிகவும் மெதுவாகவே துடுப்பெடுத்தாடியது.

நான்காம் நாள் பகல் இடைவேளைக்கு முன் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த அவ்வணியினர் அன்றைய தினம் 72 ஓவர்களுக்கு முகம் கொடுத்து இரண்டு விக்கெட் இழப்புக்கு 72 ஓட்டங்களையே பெற்றிருந்தது. தென்னாபிரிக்க அணித் தலைவர் அம்லா அன்றைய தினம் முதல் ஓட்டத்தைப் பெறுவதற்கு 46 பந்துகளை சந்திக்க நேரிட்டது. இது முதல் ஓட்டத்தை எடுப்பதற்கு கூடிய பந்துகளை சந்தித்தோர் வரிசையில் நான்காவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் இங்கிலாந்து அணியின் ஜோன் முர்ரே அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் முதல் ஓட்டம் பெறுவதற்கு 80 பந்துகளை எதிர்கொண்டார்.

அம்லா ஒரு கட்டத்தில் 111 பந்துகளுக்கு முகம் கொடுத்து 6 ஓட்டங்களையே பெற்றிருந்தார். மேலும் அதிரடி நாயகனான ஏ. பி. டிவிலியர்ஸ் 91 பந்துகளுக்கு 11 ஓட்டங்களையே பெற்றிருந்தார். ஐந்தாவது நாளில் அம்லா ஆட்டமிழந்து செல்லும் போது 211 பந்துகளுக்கு முகம் கொடுத்து 25 ஓட்டங்களையே பெற்றிருந்தார். மேலும் அன்றைய தினம் தென்னாபிரிக்க அணி 143 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. ஆனால் அவ்வோட்ட எண்ணிக்கையை எடுப்பதற்கு 143.1 ஓவர்களைச் சந்திக்க நேரிட்டது.

இந்திய அணியினர் வீசிய 143 ஓவர்களில் 88 ஓவர்கள் ஓட்டமற்ற ஓவர்களாகவே இருந்தன. மேலும் அப்போட்டியில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா வீசிய 46 ஓவர்கள் 33 ஓவர்கள் ஓட்டமற்ற ஓவர்களாகும். இவர் இப்போட்டியில் தொடர்ந்து 17 ஒவர்களை ஓட்டமற்ற ஓவர்களாக வீசியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் இந்திய அணி 337 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இது இந்திய அணி கூடிய ஓட்ட வித்தியாசத்தில் பெற்ற வெற்றியாகும். இதற்கு முன் 2008 ஆம் ஆண்டு மொகாலியில் அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக 320 ஓட்டங்களால் வெற்றி பெற்றதே சாதனையாக இருந்தது.

தென்னாபிரிக்க அணி இதற்கு முன்னரும் இமாலய வெற்றி இலக்கை மெதுவாக துடுப்பெடுத்தாடி வெற்றி தோல்வியின்றி போட்டியை முடிவுக்கு கொண்டு வந்த சந்தர்ப்பங்களும் உள்ளன.

2012 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அடிலேட் மைதானத்தில் அவ்வணிக்கு 430 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நான்காம் நாள் முடிவில் 80 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஐந்தாம் நாள் வெற்றி உறுதி என்ற நிலையில் உற்சாகமாக பந்து வீசிய அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை லாவகமாக எதிர்கொண்டு போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவுறும் போது தென்னாபிரிக்க அணி 148 ஓவர்களை எதிர்கொண்டு 8 விக்கெட் இழப்புக்கு 248 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. துடுப்பாட்டத்தில் டுபிளஸி 376 பந்துகளுக்கு முகம் கொடுத்து ஆட்டமிழக்காமல் 110 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். அப்போட்டியிலும் டிவிலியர்ஸ் 220 பந்துகளை சந்தித்து 33 ஓட்டளையே பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போன்று சென்ற வருடம் ஜுலை மாதம் இலங்கை அணியுடன் கொழும்பில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் 369 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி ஆட்ட நேர முடிவில் 111 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இதில் அம்லா 159 பந்துகளுக்கு 25 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். அதே போல் இறுதி நேரத்தில் அவ்வணிக்கு கை கொடுத்த வேகப்பந்து வீச்சாளர் பிளாண்டர் 99 பந்துகளுக்கு முகம் கொடுத்து ஆட்டமிழக்காமல் 22 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். இதனால் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிந்தது. ஆனால் கடைசியாக டில்லியில் நடைபெற்ற டெஸ்டிலும் இதே போன்ற ஒரு முயற்சியிலேயே தென்னாபிரிக்க அணி இறங்கியிருந்தது. ஆனால் அது கைகூடவில்லை.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.