புத். 67 இல. 50

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 26ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 29

SUNDAY DECEMBER 13, 2015

 

 
சோற்றுக்குள் இருக்கும் கல்லை அகற்ற முடியவில்லை, பாறாங்கல்லை புரட்டுவோமா?

சோற்றுக்குள் இருக்கும் கல்லை அகற்ற

முடியவில்லை, பாறாங்கல்லை புரட்டுவோமா?

 இந்தியாவின் தொலைக்காட்சி நேரடி நிகழ்ச்சி ஒன்றில், சென்னையில் வெள்ளத்தில் தப்பிய பகுதி ஒன்றின் மக்கள் பிரித்தானிய ஆட்சியாளருக்கு நன்றி தெரிவித்து கொண்டிருந்ததனை தான் பார்த்ததாக நண்பர் ஒருவர் தெரிவித்தார்.

பிரித்தானியாவின் காலநிலத்துவ ஆட்சியில், வளர்முக நாடுகளை அவர்கள் சுரண்டிச் சென்றார்கள் என்ற குற்றச்சாட்டுக்கள் பலமாக உள்ள அதேவேளை, அவர்கள் விட்டுச் சென்ற நன்மைகளில், உள்கட்டுமான வசதிகள் இன்றும் பல நாடுகளை காத்துக் கொண்டிருக்கின்றன என்பதனை மறுக்கவும் முடியாது. தமது தேவைக்காகவேனும் அவர்கள் அமைத்த, குளங்கள், கால்வாய்கல், சுரங்கப் பாதைகளை உள்ளடக்கிய புகையிரத பாதைகள், நெடுஞ்சாலைகள் என பிரித்தானய காலனித்துவத்தின் எச்ச சொச்சங்களின் தொடர்ச்சியை இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் காண முடிகிறது.

சென்னை தந்த பாடம் என்பது முழு இந்தியாவுக்கு மட்டுமானதல்ல அருகில் உள்ள இலங்கையின் வட கிழக்கு பகுதிகளுக்கு மிக முக்கிய படிப்பினையாக அமைய வேண்டும்,

30 வருட யுத்த அழிவுகளில் சிக்கி சின்னாபின்னமான வட கிழக்கு பகுதிகள், புனருத்தாரண, புனர்நிர்மான மீள்கட்டமைப்புக்களுக்கு உட்பட்டு இருக்கின்றன, குறிப்பாக வன்னிப் பெருநிலப்பரப்பு பாரிய யுத்த அழிவுகளில் இருந்து, மெதுவாக எழுவதற்கு ஆரம்பித்திருக்கின்றன. யாழ். மாவட்டத்திலும், வடமராட்சி கிழக்கு, கிழக்கின் வாகரை, சம்பூர், மூதூரின் பல பகுதிகள் உள்ளிட்ட பிரதேசங்களும் யுத்தத்தினால் பாரிய அழிவுகளை கண்டிருக்கின்றன.

இவற்றின் மீள்கட்டுமானம், உள்கட்டுமான பணிகளில் பெரும் பகுதியை மாகாண சபைகள் பொறுப்பேற்று இருக்கின்றன. அல்லது மத்திய அரசினூடான பணிகளில் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ் அதிகாரிகள் பிரதான பங்கினை வகிக்கின்றனர். முற்று முழுதாக தரை மட்டமாக்கப்பட்ட இந்தப் பகுதிளை மீளக் கட்டமைக்கும் போது, கிராம, நகரமயமாக்கலின் விதிமுறைகளை கடைப்பிடித்து, லஞ்சம் ஊழல், கையூட்டுக்களை தவிர்த்து, எமது தாயக அபிவிருத்தி என்ற இலட்சிய நோக்கிலான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

ஆயினும் வடக்கு கிழக்கில் இடம்பெறும் மீள்கட்டுமான, உட்கட்டுமான பணிகளில் இந்த விடயங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றனவா? என்ற கேள்விகள் மனதை துளையிட்டு வேதனைப்படுத்துகின்றன.

கடந்த ஆட்சிக் காலத்தில் கிளிநொச்சியில் புனரமைக்கப்பட்ட குளம் ஒன்று உடைப்பெடுக்கும் அபாயம் ஏற்பட்டதாகவும், அதனை தடுக்கும் முயற்சியில் விவசாயிகளை ஈடுபடுத்தியதாகவும் செய்தி வெளியிட்டு இருந்தது.

29 மில்லியன் செலவில் புனரமைக்கப்பட்ட இந்தக் குளத்தின் அடிப்பாகத்தில் கசிவு ஏற்பட்டதாயின் அதன் புனரமைப்பில், முறைகேடு நடந்திருப்பது உறுதியாகிறது. கடந்த அரசாங்கம் இந்த நடவடிக்கைக்கு தலைமை தாங்கினாலும், தமிழ் அதிகாரிகளின் பங்கும் இந்த பணியில் இடம்பெற்றிருந்தமையை யாரும் மறுக்கமுடியாது. இது ஓர் உதாரணமே இன்னும் வெளிப்படாத பல உதாரணங்கள் கண்முன்னே விரிந்து செல்கின்றன.

அவை உரிய முறையில் அணுகப்படாவிட்டால், வடக்கு கிழக்கிலும் சென்னையை தரிசிக்க நீண்ட நாள் எடுக்கப் போவதில்லை,

யுத்தத்தின் பின்னரான 5 வருட காலப்பகுதி வடகிழக்கிற்கு மட்டும் அல்ல முழு நாட்டிற்குமே இருண்ட யுகமாக காணப்பட்டது. ஆனால் 2015 ஜனவரி 8 பின்னர் ஏற்பட்ட மாற்றம் அல்லது ஒரு யுகத்தின் சமூக ஜனநாயகத்தில் ஏற்பட்ட புரட்சி என்று சொல்ல முடியாவினும், குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்து இருக்கிறது. இதன் மூலம் பல கதவுகள் திறந்து விடப்பட்டு இருக்கின்றன. அவை முழுமையாக திறக்கப்படாவிடினும், பகுதி அளவிலேனும் திறக்கப்பட்டு இருக்கின்றன. அந்த சந்தர்ப்பத்தை பாதிக்கப்பட்ட இனம் என்ற வகையில் நாமும் எப்படி பயன்படுத்துகின்றோம் என்பதில் தங்கியுள்ளது.

இனத்துவ முரண்பாடுகள், கோலோச்சும் நாடுகளில் பேரினவாத ஆட்சியாளர்கள், சிறுபான்மை இனங்களை பிரித்தாளும் தந்திரங்களையும், உள்முரண்பாடுகளையும், பலவீனப் படுத்தல்களையும், ஊக்குவிக்கும் வழிமுறைகளையுமே எப்பொழுதும் கையாண்டு வருவது வரலாறுகள் தந்த பாடங்கள் ஆகின்றன. தவிரவும் பகுதி அளவிலேனும் திறந்துவிடப்பட்ட யன்னல்கள், கதவுகளினூடு பயன்களை பெற்றுக் கொள்ளுமாறு ஆட்சியாளர்கள் அழைப்பிதல்களும் அனுப்பப் போவதில்லை, பதிலாக நாமே திறக்கப்பட்டுள்ள கதவுகள், யன்னல்களினூடு பயனைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்,

எடுத்தவற்றிற்கு எல்லாம் நல்லாட்சி அரசாங்கம், எதனையுமே செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுக்களை சுமத்துவதோடு நிற்காமல், கிடைத்தவற்றை முழுமையாக பயன்படுத்தி இருக்கிறோமா? அவற்றின் பயன்கள் முழுமையாக மக்களை சென்றடைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றனவா என்ற கேள்விகளை சம்பந்தப்பட்ட தரப்புகள் எழுப்ப வேண்டும்.

அண்மைய நாட்களில் வடக்கு, கிழக்கில்இருந்து வரும் செய்திகள் மனதில் ஆழ்ந்த கவலைகளை ஏற்படுத்துகின்றன.

இங்கே மாகாண சபைகள் மீது கேள்வி எழும்பும் செய்திகளையோ, கட்டுரைகளையோ, நானோ, குளோபலோ பதிவிடுகின்ற போது விமர்சனங்னகள் எழுகின்றன. மாகாண சபையை பலவீனப்படுத்த முயல்கிறோம். முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை வெளியேற்றும் தரப்புகளுக்கு துணை புரிகிறோம் என்ற முணுமுணுப்புகள் காதுகளில் விழுகின்றன.

இது பற்றி நான் கவலைகொள்ளவில்லை, காரணம் முதலமைச்சர் மீது நடவடிக்கை எடுக்குமாறு எழுந்த கோரிக்கைகள் தொடர்பில் குளோபல் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்ததை வாசகர்கள் நன்கு அறிவர், தவிரவும் மாகாண சபையை ஏற்றுக் கொள்ள முடியாது என்ற கருத்தை பலமாக கொண்டிருக்கும் சிலர், மாகாண சபை மீதான விமர்சனங்கள் வருகின்ற போது, மாகாண சபையையும், முதலமைச்சரையும் பலவீனப்படுத்தும் எனக் கூறுவது முரண்நகையாக தோன்றுகிறது.

இன்று நடைமுறையில் யதார்த்தத்தில் எம் கண்முன்னே தரப்பட்டு இருக்கும் அலகுகள், (தொடர் 20 ஆம் பக்கம்)

பிரிக்கப்பட்ட இரண்டு மாகாண சபைகளே. (இவை அதிகாரம் இல்லாத கோதுகளாக இருக்கும் நிலையில் அதற்கு அப்பால் சென்று, முழுமையான அதிகாரங்களைக் கொண்ட அரசியல் தீர்வுக்கான ஜனநாயகப் போராட்டங்கள் பலம் பெறட்டும்.) ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட மக்களின் பிரதிநிதித்துவத்தை, தேசிய ரீதியாக பிரதிநிதித்துவப் படுத்துபவர்கள். இன்றைய நடைமுறையில் பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேசங்களின் அபிவிருத்தியில் நிர்வாகக் கட்டப்பாடுகளில் நேரடியான கட்டுப்பாடுகளை கொண்டு இருக்கவில்லை. மாறாக அவர்களுக்கு குறித்து ஒதுக்கப்படும் நிதியின் மூலமாக தமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய முடியும். ஆனால் மாகாண சபைகளுக்கு ஓதுக்கப்படும் நிதி, காணப்படும் அதிகாரங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களை விடவும் மகாண சபைகளுக்கே அதிகம் காணப்படுகின்றன.

இந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே வடக்கிலும் கிழக்கிலும் அதிகளவு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டு இருக்கிறது. வடக்கு மாகாண சபையில் ஆளும் கட்சியாகவும், கிழக்கு மாகாண சபையில் ஆட்சியில் பங்கெடுக்கும் கட்சியாகவும், அக்கட்சி விளங்குகின்றது.

உண்மையில் இப்படி ஒரு சந்தர்ப்பம் வரலாற்றில் முன்னெப்போதும் கிடைத்திருக்கவில்லை. தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்விலும் சரி, அபிவிருத்தியிலும் சரி இதயசுத்தியுடனான அக்கறையோ, ஆர்வமோ, விருப்பமோ இல்லாவிடினும், முன்னைய ஆட்சிகளுடன் ஒப்பிடும் போது மிகச் சில விடயங்களிலாவது விட்டுக் கொடுப்புகளை இந்த அரசாங்கம் செய்கிறது. விட்டுக் கொwwடுக்காதவற்றை பெற்றுக் கொள்வதற்கு, விட்டுக்கொடுப்பற்ற போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அதேவேளை சமாந்தரமாக விட்டுக் கொடுக்கப்பட்ட சில விடயங்களையாவது, எல்லாவற்றையுமே இழந்து தவிக்கும் தமிழ் மக்களுக்கு முழுமையாக சென்றடைவதற்கு பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்கள், முதலமைச்சர், மாகாண அமைச்சர்கள் இணைந்து செயற்பட வேண்டும் அல்லவா? அதனை ஏன் செய்ய முடியவில்லை?

கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், அவரது நம்பிக்கைக்கு உரிய பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், கூடவே தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா ஆகியோர் முதலமைச்சருடன் முரண்பாடுகளை கொண்டிருந்தால், அவர்களுக்கிடையில் பனிப்போர் தொடர்ந்தால் அவர்களை விட்டு விடுங்கள்.

மற்றைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், அமைச்சர்கள இணைந்து, வடக்கு கிழக்கு அவிவிருத்திப் பணிகளை, ஏன் திட்டமிட்டு நடைமுறைப்படுத்த முடியாது?

மாறி மாறி ஒருவரை ஒருவர் குறை சொல்வதும், பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களுக்கு குறித்தொதுக்கப்படும் அரசாங்க நிதியை பகிர்ந்தளித்து விட்டு, ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் படம்பிடித்து போடும் தமிழகத்தின் நிவாரண அரசியல் செய்வதோடு மட்டும் இவர்களின் பணிகள் நிறைவடைந்து விட்டனவா?

மாகாண அமைச்சர்கள் நான்கு பேரிடம் நாற்பது துறைகள் முடங்கிக் கிடக்கின்றன. மத்திய அரசிடம் இருந்து, அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என நாற்பது வருடத்திற்கு மேல் போராடுகிறோம். வெறுமனே விழாக்களிலும், சமூக வலைத்தளங்களிலும், தூள் பறக்கும் வெட்டிப் பேச்சுக்களை பேசி, நிவாரணங்களை மட்டுமே வழங்கி, சாதனைகளை பதிந்து வரும் வரையிலான மாகாண சபை உறுப்பினர்களிடம் இந்த அமைச்சுக்களின் சில பகுதிகளை பிரித்து வழங்கி அவற்றை கண்காணித்து நடைமுறைப்படுத்தும் பொறுப்புகளை ஏன் வழங்கக் கூடாது?

ஏற்கனவே பல மாகாண சபை உறுப்பினர்களுக்கு அமைச்சர்களோடு இணைந்த பொறுப்புக்கள் பகிரப்பட்டதாகவும், எனினும் அவற்றை மேற்கொள்வதற்கான அதிகாரங்களை, அமைச்சர்கள் தங்கள் கைகளை விட்டு செல்ல அனுமதிக்கிறார்கள் இல்லை என்ற குற்றச்சாட்டுக்கள் எழுகின்றன இதற்கு மாகாண அமைச்சர்கள் பதில் அளிப்பார்களா?

தேசியத்திற்கான, தன்னாட்சிக்கான, உரிமைகளுக்கான கோரிக்கைகள், போராட்டங்கள் தொடரட்டும். 30 வருடங்களுக்கு மேற்பட்ட யுத்த அழிவுகளில் இருந்து மக்களை மீட்டெடுப்பதற்காக, அவர்களின் வாழ்வாதாரங்களை உறுதிப்படுத்துவதற்காக கிடைக்கின்ற மிகச் சிறிய சந்தர்ப்பங்களாயினும், மிகப் பெரிய சந்தர்ப்பங்கள் ஆயினும் அவற்றை முழுமையாக பயன்படுத்த மாகாண சபை உறுப்பினர்கள் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட கூட்டமைப்பும், அதன் தலைமையும் இதயசுத்தியுடனான அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.

இல்லையேல் அடுத்த மாகாண சபைத் தேர்தலிலும், பாராளுமன்ற தேர்தலிலும் தேசியக் கட்சிகளில் இருந்து அதிகளவு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவதை சுயநிர்ணய உரிமைக்காக, தேசியத்திற்காக, தன்னாட்சிக்காக, தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் எந்தத் தரப்பாலும் தடுத்து நிறுத்தமுடியாது. எதிர்வரும் 10 வருடத்தில் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாடு முழுவதும் தேசியக் கட்சிகளே ஆதிக்க சக்திகளாக மாறும் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன்.

போராட்ட காலத்தில், ஆயுதப் போட்டம் குறித்து, என் தந்தையுடன் அடிக்கடி கருத்து மோதல்கள் வரும். அப்போ பலமுறை எனக்கு சொல்லும் ஒரு விடயம் ஞாபகத்திற்கு வருகிறது. “தம்பி முதலில சோற்றுக்குள் இருக்கிற கல்லை தூக்கி போட பாருங்க. அதனையே செய்ய முடியவில்லை என்றால் எப்படியடா பாறாங் கல்லை புறட்டப் போறீங்க” அந்த கேள்வி இங்கே ஞாபகத்துக்கு வந்து தொலைகிறது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.