புத். 67 இல. 50

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 26ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 29

SUNDAY DECEMBER 13, 2015

 

கவிதை மஞ்சரி

வாழ்ந்திட வாழ்த்துகின்றேன்!

காத்திர மாக நானும்

கல்வியில் தேர்ச்சி காணப்

பாத்திர மாகி நின்று

பணிபல செய்து என்னை

நேர்த்தியாய் வளர்த்த நல்ல

நெஞ்சினர் என்று சொல்லும்

“வாத்திமார்” அனைவருந் தான்

வாழ்ந்திட ஆசி தந்தேன்!

குறைகளைச் சிந்தை தன்னில்

கொண்டிடா வகையில் மேலாம்

நிறைவுறும் அன்பி னோடு

நித்தமும் அருகி ருந்து

அறுசுவை அடிகில் தன்னை

அன்னைதான் ஊட்டல் போலும்

பொறுமையாய் “பாடம் தன்னைப்

புகட்டிய மேலோர் வாழ்க!

பள்ளியில் முதன்மைச் சித்தி

பற்றிடும் சீடன் என்றென்

உள்ளத்தில் மகிழ்வு தேக்கி

உணர்விலே முறுக்கு ஏற்றி

கள்ளமில் அன்பி னோடு

கருணையாம் கல்வி தந்த

வல்லவர் அனைவ ருந்தான்

வாழ்ந்திட வாழ்த்து கின்றேன்!

விருதுகள், போர்வை, மாலை

விலையிலாச் சான்று பெற்று

பெருமையை மண்ணில் நானும்

பெற்றிட வாழ்த்தும் வண்ணம்

உருப்பட வைத்த நல்ல

உத்தமர் வையம் தன்னில்

திருவுடன் நீடு வாழத்

தெய்வத்தை இறைஞ்சுகின்றேன்!”


இல்லறப் பெண்ணே!

இல்லறப் பாராளு மன்றத்திலே! – பெண்

வீற்றிருப்பது ஏதுக்கம்மா?

நல்லற வாழ்வது மலர்ந்திடவே! – நாளும்

நற்பணி புரிந்திட யோசித்திடம்மா!

சதி பதி ஆவது ஏதுக் கென்றால் --------- அவர்

சாடிக்கு மூடி போல் வாழ்வதற்கே

பேதத்தை வளர்த்திட வேண்டுமென்றால்,

இந்தப் பேதைகள் வாழ்வினில் இன்பமில்லை

கற்புடை மாதராய்த் திகழ்ந்திடுவோம் – வரும்

கணவரைத் தெய்வமாய்ப் போற்றிடுவோம்

ஒழுக்கத்தை உணர்வினில் சேர்த்திடுவோம் – இந்த

உண்மையை ஏற்று நாம் வாழ்ந்திடுவோம்.

பெண்ணெனப் பேருக்குப் படைக்கவில்லை – நல்ல

பெருமைகள் நமக்குண்டு அறிந்திடுவோம்

சிக்கன வாழ்வினைக் கைக்கொள்ளுவோம் – நல்ல

சீரிய நோக்கோடு வாழ்ந்திடுவோம்

நல்லறம் காத்து நாம் வாழ்ந்து வந்தால் – நம்

நாட்டிற்கு வேறொன்றும் தேவை இல்லை

போது மென்ற மனம் படைத்திருந்தால் – இந்த

புண்ணிய வதிக் கிணை உண்டோ? அம்மா!


நல்லாட்சி கோலோச்ச உதவ வேண்டும்

விருதுபெறத் தகுதி வேண்டும்

வெற்றிபெற முயற்சி வேண்டும்

திருவருள் குருவருள் பெற

தீவிர உண்மை பக்தி வேண்டும்!

ஊழலை ஒழிப்பதற்கு சட்டம்

உறுதியாய் இருக்க வேண்டும்

ஆழுமரசுக்கு அனைத்து அதிகாரிகளும்

ஆதரவு கொடுத்தாக வேண்டும்!

நடு நிலமை தவறாத நீதியை

நாடெங்கும் நிலைநாட்ட வேண்டும்

கொடுமைகளை கழைந்து இங்கு

நல்லாட்சி கோலோச்ச வேண்டும்!

காணாமல் ஆக்கப்பட்டோர் விரைவில்

கண்டறியப் பட வேண்டும், மாய

மானாக வேசம்போடும், அரசியல்

மாரீசர்களை ஒதுக்க வேண்டும்!

தேனொழுகும் பேச்சை விட்டு, உடன்

தீர்வுக்கு வழி தேட வேண்டும்

திரைமறைவில் ஊழல் செய்தோரை

வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டும்!


வாழ்வின் நிலைகள்

உன்

உரை

உண்மை எனில்

உலகத் துயரங்கள்

உன்னை

உருக்குலைக்காது!

உன்

நடத்தை

நாணயம் எனில்

நாசகார சக்திகளின்

நடமாட்டம்

உன்னை

நடுங்க வைக்காது!

உன்

தொழில்

தூய்மையானது எனில்

துஷ்டர்களின்

தொல்லைகள்

உன்னைத்

தொந்தரவு படுத்தாது!

உன்

பண்பு

பரோபகாரம் எனில்

பஞ்சம்

உன் நிழலையும்

நெருங்காது!

உன்

பார்வை

பரிவைச் சொரியும் எனில்

பாதகர்களால்

உன்

பாதையும் பயணமும்

பாதிப்படையாது!

உன்

சிரிப்பு

சிந்தையினின்றும்

சிந்துமெனில்

சின்னத்தனமானோரின்

சீற்றம்

உன்னை

சீர்குலைக்காது!


வித்தியாசங்களால் ஓர் அத்தியாயம்

நண்பனே நகைக்காதே சமூகத்தில்

வித்தியாசங்களால் அத்தியாயங்கள் எழுதுவோம்

வேதனைகளை வீழ்த்தி

பாதைகள் போட்டு பயணிப்போம்

நாம் அருவிகளாய் ஆவோம் கரைகளை

சாராமல் தடைகளைத் தாண்டுவதால்

கரைகளைக் கடப்போம்

உருவம் காட்டும் உலகக் கண்ணாடியோடு

உடன்படாமல் இதயக் கண்ணாடியில்

அகங்களைப் பார்க்க விழிகளை வேண்டுவோம்

நண்பனைவிட எதிரிகளை நேசிப்போம்

முன்னேற்றத்திற்கு முக்கியமானவர்கள்

அவர்கள் முயற்சியின் உயற்சிக்காய்

வலிகளால் வலிமை சேர்ப்பவர்கள்

பிணிகளைப் பின்பற்றுவோம் நோய்களின்

நேயன் ஆவோம் அவை

ஆரோக்கியத்தை அறிமுகஞ் செய்கின்றன

எம்மை ஏறிமிதிக்கும் வறுமையைப் போற்றி

மதிப்போம் அவை செல்வந்தரோடு சேராமல்

ஏழைகளோடு தோழமை தேடுவதால்

கோபப் போரின் கொடுமையானது பல

உள்ளங்களை கொன்றிருப்பதால் அம்புகளின்

விற்களில் அன்புக்கணை ஏந்துவோம்

செந்நீரே நீ சிந்தியது போதும் சென்றுவிடு

இதயத்தாள்களில் வென்மையை வேண்டுகிறோம்

வித்தியாசங்களால் அத்தியாயங்களை எழுது!

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.