புத். 67 இல. 50

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 26ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 29

SUNDAY DECEMBER 13, 2015

 

 
வடக்கு முதலமைச்சரின் தலைமையில் ஏனைய கட்சிகள் இணையக் கூடிய சாத்தியம் இருக்கின்றதா?

வடக்கு முதலமைச்சரின் தலைமையில் ஏனைய கட்சிகள் இணையக் கூடிய சாத்தியம் இருக்கின்றதா?

விக்கினேஸ்வரனின் அழைப்பு: தமிழ் கட்சிகளின் பதில் என்ன?

1. விக்கினேஸ்வரன் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று கூறுவதன் மூலம், எதனை உணர்த்த முற்படுகின்றார்?

2. அனைத்து கட்சிகளும், விக்கினேஸ்வரனுடன் இணைந்து செயற்பட முன்வந்தால், அது தமிழ் அரசியல் சூழலை பொறுத்தவரையில் ஒரு முக்கிய மாற்றமாக அமையலாம். 

தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் செயலாளரும் மூத்த தமிழ் அரசியல் தலைவர்களில் ஒருவருமான வி. ஆனந்தசங்கரி, சில தினங்களுக்கு முன்னர் ஒரு பகிரங்க அழைப்பொன்றை விடுத்திருந்தார்.

அதாவது, வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் உடன்பட்டால், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைப் பொறுப்பை அவரிடம் ஒப்படைக்க தான் தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார். அதே வேளை தான் தற்போது வகித்துவரும் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி நிலையையும், முதலமைச்சர் விரும்பும் ஒருவருக்கு வழங்குவதற்கும் தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பில், வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் பதிலளித்திருக்கின்றார்.

விக்கினேஸ்வரன் தனது பதிலில் தெரிவித்திருக்கும் சில அபிப்பிராயங்கள், தமிழ் அரசியலில் கூர்ந்து நோக்கப்பட வேண்டியதாக இருக்கிறது. விக்கினேஸ்வரன் தனது பதிலில், அனைத்து தமிழ் கட்சிகளும் அர்ப்பணிப்புடனும், பற்றுதியுடனும் எவருக்கும் விலை போகாமல், சில்லறை லாபங்களுக்கு சரிந்து கொடுக்காமல், எமது செயற்திட்டங்களை முன்னெடுக்க வரவேண்டும் என்றும், இதைனைவிடுத்து, உட்கட்சி மோதல்கள், கருத்து முரண்பாடுகளினால் எமது செயற்பாடுகள் வேறு வழிகளில் திசை திருப்பப்படுவது தவிர்க்கப்பட வேண்டும், என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.

சங்கரியின் அழைப்பு தொடர்பில், விக்கினேஸ்வரன் நேரடியாக பதிலளிக்காது விட்டாலும் கூட, சங்கரி தனது அரசியல் செயற்பாடுகள் குறித்தும், தன்மீது அவர் வைத்துள்ள நம்பிக்கை தொடர்பிலும் தன்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டிருக்கும் விக்கினேஸ்வரன், இதை மட்டுமே தன்னால் தற்போதைக்கு கூற முடியுமென்றும் தெரிவித்திருக்கின்றார்.

அண்மைக்காலமாக முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தமிழ் அரசியல் விவாதங்களில் முக்கிய இடத்தை பெற்றிருக்கின்றார். ஆரம்பத்தில் அவர் தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்த, முன்னணி தமிழ் அபிப்பிராய உருவாக்குனர்கள் கூட, தற்போது விக்கினேஸ்வரனின் கருத்துக்களை கூர்ந்து நோக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. இங்கு கவனிக்க வேண்டிய விடயம், அண்மைக்காலமாக சம்பந்தன் தொடர்பான ஊடக அவதானங்கள் குறைவடைந்து செல்கின்றன.

இதற்கு விக்கினேஸ்வரன், அரசியல் விவகாரங்கள் தொடர்பில் தொடர்ச்சியாக எதிர்வினையாற்றிவருவது மட்டுமல்லாது, தமிழரசு கட்சியின் உயர் பீடத்தினருக்கும் விக்கினேஸ்வரனுக்கும் இடையில் நிலவும் பனிப்போரும் ஒரு காரணமாகும். மேற்படி பனிப் போரின் விளைவாகவே விக்கினேஸ்வரனின் தலைமையில் ஏனைய கட்சிகள் இணையக் கூடிய சாத்தியம் இருக்கின்றதா என்னும் கேள்வி எழுந்தது. இது தொடர்ப்பில் எனது முன்னைய பத்தியொன்றிலும் குறிப்பிட்டிருக்கின்றேன்.

இவ்வாறானதொரு சூழலில்தான் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் செயலாளர் ஆனந்த சங்கரி, விக்கினேஸ்வரனை நோக்கி மேற்படி பகிரங்க அழைப்பை விடுத்திருக்கின்றார். விக்கினேஸ்வரன் மேற்படி அழைப்பை நிராகரிக்கவோ அல்லது ஏற்றுக் கொள்ளவோ இல்லை என்பதையும் இந்த இடத்தில் குறித்துக் கொள்ளலாம். இதிலிருந்து விக்கினேஸ்வரன், சங்கரியின் தலைமையில் இருக்கின்ற தமிழர் விடுதலைக் கூட்டணி தொடர்பில் எத்தகைய அபிப்பிராயத்தை கொண்டிருக்கின்றார் என்பதை, அவர் வெளிப்படுத்தாது போனாலும், அனைத்து கட்சிகளும் ஓர் அணியாக, மக்களுக்கான வேலைத்திட்டங்களில் ஒன்றிணைய வேண்டுமென்னும் விருப்பை கொண்டிருக்கின்றார் என்பது வெள்ளிடைமலை.

மேலும் விக்கினேஸ்வரனின் விருப்பில் வெறுமனே கூட்டமைப்பிலுள்ள கட்சிகள் மட்டும் இருப்பதாக தெரியவில்லை மாறாக, கூட்டமைப்புக்கு வெளியில் இருக்கின்ற கட்சிகளை நோக்கியும் தான் அவர் கைநீட்டியிருக்கின்றார். இதன் மூலம் விக்கினேஸ்வரன் மறைமுகமாக ஒரு கருத்தை வலியுறுத்த முற்படுகின்றாரா? தான் ஓர் அணிக்கான தலைமையை நோக்கி வருவதை விடவும், அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றும் போது, தலைமை தானாக வெளித்தெரியும். உண்மையில் இது தொடர்பில் கட்சிகளின் நிலைப்பாடு என்ன?

ஒருவேளை விக்கினேஸ்வரன் எதிர்பார்ப்பது போன்று, தமிழ்த் தேசிய நிலையில் இயங்கிவரும் அனைத்து கட்சிகளும், தமிழர் அரசியல் அபிலாஷைகளை முன்னிறுத்தி, விக்கினேஸ்வரனுடன் இணைந்து செயற்பட முன்வந்தால், அது தமிழ் அரசியல் சூழலை பொறுத்தவரையில் ஒரு முக்கிய மாற்றமாக அமையலாம்.

ஆனந்த சங்கரி, மேற்படி கருத்தை ஓர் இணையத்தளமொன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போதே தெரிவித்திருந்தார். அதில் அவர் குறிப்பிட்ட ஒரு விடயத்துடன் இப்பத்தியாளர் முற்றிலும் உடன்படுகின்றார்.

அவர் ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார். விடுதலைப் புலிகளுக்கும் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திற்குமான பேச்சுவார்த்தையின் போது, அதனை குழப்பும் வகையில் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்திற்கு நெருக்கடிகளை கொடுத்தவர் சந்திரிக்கா, ஆனால், இன்று அவரும் ரணிலும் ஒரே மேடையில் நிற்கின்றனர். அப்படியாயின் நாங்கள் ஏன் ஒரு பொது இலக்கிற்காக ஒரணியில் நிற்க முடியாது? இது மிகவும் நியாயமான கேள்வி. இதற்கு நியாயமாக பதிலளிப்பதாயின் - நிச்சயம் நிற்க முடியுமென்றே பதலளிக்க வேண்டும்.

2009இல் விடுதலைப் புலிகள் இயக்கம் அழித்தொழிக்கப்பட்ட போது, அந்த அழிவிலிருந்து கற்றுக் கொண்டிருக்க வேண்டிய முதல் பாடமே, எங்களுக்குள் கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் கூட, எங்களுக்குள் ஒரு பொது இணக்கம் அவசியம் என்னும் புரிதலாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அது நிகழவில்லை. கண்முன்னே நிகழ்ந்த ஒரு பேரழிவின் பின்னரும் கூட, எங்களுக்குள் கோழிச் சண்டை பிடிக்க முடிகிறதொன்றால், உண்மையில் எங்களுக்கு தமிழ் மக்களின் நலனைவிடவும், எங்களின் சொந்த நலன்கள் பெரிதாக இருக்கின்றன என்பதே பொருளாகும்.

இது போன்ற போராடங்கள் நடைபெற்ற ஏனைய நாடுகளிலும் கருத்து முரண்பாடுகள் இருந்திருக்கின்றன. கருத்து முரண்பாடுகள் நிச்சயமாக இருக்கவும் வேண்டும். ஏனெனில் அது ஒரு சமூகம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதற்கான சாட்சி, ஆனால் எங்கள் மத்தியில் நிகழும் முரண்பாடுகளின் அப்படிப்படைகளோ வேறு. இது தனிப்பட்ட ஈகோ வாதங்களினதும், பதவி நலன்களினதும் விளைவுகள். இந்த விளைவுகளின் வெறும் பார்வையாளர்களாக தற்போது தமிழ் சமூகம் இருந்து கொண்டிருக்கிறது.

இப்படியானதொரு சூழலில் அனைவரும் ஓர் இடத்தில், ஒரு பொது நன்மைக்காக கூட முடியுமென்றால், அது மிகவும் ஆரோக்கியமான ஒன்று என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது. ஆனால் அண்மைக்காலமாக விக்கினேஸ்வரனை முன்வைத்து இடம்பெற்றுவரும் விவாதங்களின் போது, ஒரு கேள்வியும் அவ்வப்போது எட்டிப் பார்க்கவே செய்கிறது. விக்கினேஸ்வரன் உறுதியாக பேசுகின்றார். எவருக்கும் முன்னாலும் அவர் தனது கருத்துக்களை முன்வைக்கப் பின்நிற்கவில்லை. சுருங்கச் சொன்னால் அண்மைக்காலமாக தமிழ் அரசியலில் தனித்து தெரியும் ஒருவராகவே அவர் இருக்கின்றார்.

இப்படியான பல விடயங்கள் இருந்தாலும் கூட, தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் முன்னெடுப்புக்களுக்கு தலைமை தாங்க வேண்டுமென்னும் ஆர்வம் உண்மையிலேயே விக்கினேஸ்வரனுக்கு இருக்கிறதா? இப்படியொரு கேள்வி கூட்டமைப்பின் தலைவர்களுக்கு மட்டுமல்ல, அரசியல் நோக்கர்கள் மத்தியிலும் உண்டு. ஆனால் தற்போது விக்கினேஸ்வரன் அளித்திருக்கும் பதிலில், மேற்படி கேள்விக்கான பதில் மறைமுகமாக இருக்கின்றது என்பதே எனது பார்வை.

விக்கினேஸ்வரனை பொறுத்தவரையில் பதவி நிலைகளை நோக்கி தான் பயணிக்க விரும்பவில்லை மாறாக, அதற்கான சூழல் உருவாகுமாக இருந்தால், அதற்கான தேவை எழுமானால் அப்போது, அதனுடன் தான் இணைந்து கொள்வே விக்கினேஸ்வரன் தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்திவிட்டார். எனவே, தங்களுடைய நிலைப்பாடு என்ன? என்பதை குறிப்பிட்ட கட்சிகளின் தலைமைகளே தெளிவுபடுத்த வேண்டும்.

விக்கினேஸ்வரன் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று கூறுவதன் மூலம், எதனை உணர்த்த முற்படுகின்றார்? என்பதில் அழுத்தமான விடயங்கள் இல்லாது போனாலும், இலங்கைக்கு விஜயம் செய்யும் ராஜதந்திரிகளுக்கு விளக்கமளிப்பது தொடக்கம், இலங்கையில் மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படும் அரசியல் மறுசீரமைப்பு மற்றும் இடைக்கால நீதிக்கான பொறிமுறை போன்ற அனைத்து விடயங்களிலும், வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரனும் ஏனைய கட்சிகளும் ஒரு குடையின் கீழ் பணியாற்றும் உடன்பாட்டை எட்டுமாக இருந்தால், இதுவரை கொழும்பை மையப்படுத்தி நடைபெறும் அனைத்து விடயங்களும் வடக்கிற்கு இடம்மாறும். இதற்கு ஏனைய கட்சிகள் தயாரா?

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.