புத். 67 இல. 50

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 26ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 29

SUNDAY DECEMBER 13, 2015

 

வாய் தவறி தலை போகும் கதை

வாய் தவறி தலை போகும் கதை

ஒரு நாளில் புகழ்பெறுவது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அமெரிக்க ஜனதிபதியாகக் கனவு காணும் டொனால்ட் டிரம்பிடம் போய் கேட்டால் அக்கு வேறு ஆணிவேறாக சொல்லித் தருவார். சொன்னதுதான் சொன்னார் ஒரே ஒரு வார்த்தை சொன்னார். இன்று உலகமே திரும்பிப் பார்த்து காறி துப்பினாலும் அதுவும் மிகப்பெரிய புகழல்லவா, சரியாக ஹிட்லருக்கு கிடைத்ததுபோல்.

வேறொன்றும் சொல்லவில்லை, “முஸ்லிம்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதை தடுக்க வேண்டும்” என்று சொன்னார். இது என்ன பெரிய விடயமா? வட அமெரிக்கா, ஐரோப்பா எங்கும் முஸ்லிம் எதிர்ப்புக்கு பஞ்சமில்லாமல் கொட்டிக் கிடக்கிறது. இதிலே டிரம்ப் இந்த வார்த்தையை சொன்னால் என்ன குறைந்துவிடப் போகிறது என்று கூட தர்க்கித்தால் ஒரு பக்க நியாயம் இருக்கிறது.

ஆனால் டொனால்ட் டிரம்ப் என்பவர், தெருவோர குட்டிச் சுவரில் பொழுதை கழிக்க அலம்புகின்ற சாதாரண ஆளல்ல. நாளைக்கே அமெரிக்க ஜனாதிபதியாக வருவதற்கு வாய்ப்பு இருப்பவர். அதற்கான போட்டியிலும் குதித்திருப்பவர். இப்படிப்பட்டவரால் இனவாதம் தலைகேறியவர் போல் உலர முடியாது.

அமெரிக்கா அடுத்த நாடுகள் மீது மூக்கை நுழைத்து குழப்பிக் கொண்டிருந்தபோதும் அமெரிக்காவுக்கென்று பெறுமானம், விழுமியம் எல்லாம் இருக்கிறது. டிரம்ப் இதையெல்லாம் புரியாமலேயே பேசிவிட்டார் என்பதுதான் அவர் இன்று உலகப் புகழ் பெறுவதற்கு முக்கிய காரணம்.

டொனால்ட் டிரம்ப் அடிப்படையில் நல்ல வியாபாரி. அமெரிக்காவின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவர். நிலபுலன் முதலாளியாக தந்தையிடம் இருந்து வியாபரத்தை வளர்த்துவிட்ட டிரம்ப்பின் பெயரில் பல பொருட்களும் உலகெங்கும் கடைகளில் உலவுகின்றன.

அத்தோடு அமெரிக்க தொலைக்காட்சியிலும் தனது முகத்தை அடிக்கடி நுழைத்து நாட்டு மக்களிடம் பரிட்சயம் பெற்றுக் கொண்டார். என்.பி.சி. தொலக்காட்சி ரியாலிட்டி ஷோவான ‘தி அபரென்டிஸ்’ நிகழ்ச்சியை பார்த்தால் டிரம்ப்பை காணலாம். அந்த நிகழ்ச்சியை அவர் தான் தொகுத்து வழங்குவார்.

பணம், புகழ் இருந்தால் அதிகாரத்திற்கு ஆசைப்படுவது பொதுவான மனித பண்பு என்ற வகையிலேயே டிரம்பும் ஆசை ஆசையாக அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குதித்தார். அதுவும் புஷ் குடும்பம் சண்டித்தனம் காட்டிய குடியரசு கட்சியிலேயே ஜனாதிபதி வேட்பாளராக நிற்கிறார்்.

ஜனாதிபதி வேட்பாளர் என்றதற்கு, ஜனாதிபதி தேர்தலில் நேராக குதிப்பதற்கு டிரம்ப் இன்னும் தகுதி பெறவில்லை. இப்போது குடியரசு கட்சியில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கான போட்டியே நடக்கிறது.

அந்த போட்டியில் இன்று வரை டிரம்பே முன்னிலையில் இருக்கிறார். ஜோர்ஜ் புஷ்ஷின் சகோதரரும் குடியரசு கட்சியில் டிரம்போடு மல்லுக்கு நின்றபோதும் கருத்துக் கணிப்புகளில் டிரம்பை விடவும் சற்று பின்னாலேயே இருக்கிறார். அடிப்படையில் ஒரு தொழிலதிபர் என்ற வகையில் டிரம்பிற்கு தன்னை சந்தைப் படுத்த நான்றாக தெரிந்திருக்கிறது.

இதனாலேயே அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை ஒட்டி இப்போதே அவரால் பரபரப்பு காட்ட முடிகிறது. என்றாலும் அவரது அதிகப் பிரசங்கித்தன வார்த்தைகளால் போட்டி இன்றி ஜனாதிபதி தேர்தலில் இருந்தே தகுதி இழக்கப்படும் சூழலுக்கு முகம் கொடுத்திருக்கிறார்.

வெள்ளை மாளிகையில் இருந்து, அவரது சொந்த கட்சியின் பெரும் புள்ளிகளே டிரம்ப் வீட்டுக்கு போவதுதான் நல்லது என்று சொல்கின்றனர். மறுபக்கம் சர்வதேச அளவிலும் டிரம்ப் மீது ஏச்சுப் பேச்சு வலுத்திருக்கிறது. ஸ்கொட்லாந்து டிரம்பிற்கு வழங்கிய வர்த்தக தூதுவர் என்ற அந்தஸ்த்தை அகற்றிக்கொண்டது.

மறுபுறம் மத்திய கிழக்கின் மிகப்பெரிய சில்லரை வர்த்தக நிறுவனம், டொனால்ட் டிரம்ப் உற்பத்திகளை தமது விற்பனையகங்களில் இருந்து எறிந்துவிட்டது. ரொபட் கோடன் பல்கலைக்கழகம் டிரம்பிற்கு வழங்கிய கெளரவப் பட்டத்தை திரும்ப வாங்கியாகிவிட்டது.

அதுவே ஒருபடி மேலே போய் பிரிட்டனில் டிரம்பை நாட்டுக்குள் வரக்கூடாது என்று நான்கு இலட்சம் பேர் வரை கைச்சாத்திட்டு பாராளுமன்றத்தில் மனு சமர்ப்பித்திருக்கின்றனர். பிரிட்டன் சட்டத்தின் படி எந்த குப்பையாக இருந்தாலும், 100,000 பேர் மனுவில் கைச்சாத்திட்டால் அதனை பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும். எனவே டிரம்பின் சரித்திரமும் பிரிட்டன் பாராளுமன்றத்திலும் பாடப்படும் நிலை இருக்கிறது.

டிரம்பை பொறுத்தவரை அவர் ஜனாதிபதி தேர்தல் போட்டியில் எப்போது குதித்தாரோ அப்போதிலிருந்து, முஸ்லிம் எதிர்ப்பு மற்றும் குடியேற்ற எதிர்ப்பு கருத்துகளை கொட்டிக் கொண்டே இருக்கிறார்.

அமெரிக்காவில் இருக்கும் பள்ளிவாசல்களை கண்காணிக்க வேண்டும் என்கிறார். செப்டெம்பர் 11 தாக்குதலின்போது அரபு அமெரிக்கர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாகச் சொல்கிறார். இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) என்று அழைத்துக் கொள்ளும் குழுவுக்கு எதிரான யுத்தத்தில் சந்தேக நபர்களை கடுமையாக சித்தரவதை செய்ய வேண்டும் என்கிறார்.

அமெரிக்காவுக்கும் மெக்சிகோவுக்கும் இடையில் மிக மிக பெரிய சுவர் கட்டப்பட வேண்டும் என்கிறார். அமெரிக்காவில் இருக்கும் அதிகளவான மெக்சிகர்கள் குற்றவாளிகளும் கற்பழிப்பாளர்களும் என்கிறார்.

அமெரிக்காவில் இருக்கும் சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக நாடு கடத்தப்பட வேண்டும் என்று கூசாமல் சொல்கிறார்.

இந்த வரிசையிலேயே கடைசியாக முஸ்லிம்கள் அமெரிக்காவுக்கு வருவதையே தடை செய்ய வேண்டும் என்று சொல்லி மாட்டிக் கொண்டார். உண்மையில் டிரம்பின் வார்த்தையில் இருந்து விழுந்த பொன் மொழிகள், ஹிட்லர் உதிர்த்த பொன்மொழிகளோடு மாத்திரமே பொருந்திப் போகின்றன.

எடுத்ததற்கெல்லாம் முஸ்லிம்களை திட்டி கரைசேர்ந்து விடலாம் என்று நினைக்கும் அரசியல் வர்க்கம் ஒன்று மேற்குலகில் அண்மைக்காலங்களில் வலுத்து வருகிறன்றது. பாரிஸ் தாக்குதலுக்கு பின்னர் நடந்த பிரான்ஸ் பிராந்திய தேர்தலிலும் அப்படி ஒரு தீவிர வலதுசாரி கட்சியே சம்பிரதாய கட்சிகளை பின்னுக்குத் தள்ளி முன்னிலை பெற்றிருக்கிறது.

இப்படியான தீவிர போக்குடையவர்கள் குருட்டுத் தனமாக மக்கள் மத்தியில் ஐ.எஸ்ஸையும், அல் கொய்தாவையும் உதவிக்கு அழைத்து தமது புள்ளடிகளை அதிகரிக்கப்பார்க்கிறார்கள். இந்த வர்க்கத்தைச் சேர்ந்தவராகவே டிரம்பையும் எடுத்துக் கொள்ள முடியும். இவ்வாறானவர்களின் தர்க்கங்கள் மொட்டைத் தலையும் முழங்காலுமாக சம்பந்தமில்லாமல் இருக்கும். பொதுவான தர்க்கத்தைச் சொன்னாலே இந்த கூற்றுகளை முறியடித்து விடலாம்.

டொனால்ட் டிரம்ப் கருத்தின் சாரம் என்னவென்றால் ஒட்டு மொத்த முஸ்லிம்களும் தீவிரவாதிகள் என்பதாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. உலகின் இப்போதைய சனத்தொகைப்படி 1.6 பில்லியன் முஸ்லிம்கள் உள்ளனர். சரி, கடந்த ஆண்டில் தீவிரவாதத்தினால் கொல்லப்பட்டவர்கள் சுமார் 30,000 பேர் இருப்பார்கள்.

இப்படியான தாக்குதல்கள் ஒவ்வொன்றையும் நடத்தியவர்கள் என்று எடுத்துக் கொண்டால் 50 பேர் தேறும். இந்த கணக்குக் கூட மிகைப்படுத்திய இலக்கம். அப்படி இருந்தும் இந்த எண்ணிக்கை உலக முஸ்லிம் சனத் தொகையில் வெறுமனே 0.1 வீதம் மாத்திரமாகும். இந்த கணக்கே இல்லாத கணக்கை வைத்துத் தான் முஸ்லிம்கள் அனைவரும் தீவரவாதிகள் என்று டிரம்ப் போன்ற ஆட்கள் தீர்ப்புச் சொல்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் அமெரிக்க ஜனாதிபதியானால் உலகின் கதி என்னவாகும் என்பதை படம்போட்டு பாடம் நடத்த வேண்டிய தேவை இருக்காது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.