புத். 67 இல. 50

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 26ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 29

SUNDAY DECEMBER 13, 2015

 

 
இன்னும் சீராகாத கிழக்கின் கல்வித்துறை

இன்னும் சீராகாத கிழக்கின் கல்வித்துறை

இன்று கல்வித்துறை பற்றி அரசாங்கம் அக்கறையுடன் பேச்சிலும், செயலிலும் ஈடுபட்டபோதிலும் கிழக்கிலுள்ள தமிழ் மொழிப் பாடசாலைகளில் அக்கறை செலுத்துவதாக தெரியவில்லை. இதேபோன்ற நாடு முழுவதும் 300 தமிழ் மொழிப்பாடசாலைகள் உள்ளன. அவற்றின் அவல நிலை பற்றி சுட்டிக்காட்டுவதுமில்லை.

1931ஆம் ஆண்டு மெதடிஸ்த குருமார் முதல் முதல் பாடசாலைகளை அறிமுகம் செய்துவைத்தார்கள். கருங்கொடித்தீவு. விளாக்கீது, திருக்கோயில், பொத்துவில், சம்மாந்துறை, கல்லாறு, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் எல்லாம் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு தமிழ், முஸ்லிம், சிங்களமாணவர்கள் கல்விகற்று வந்தார்கள். அப்போது அவர்களிடத்தில் ஒழுக்கம் சிறப்பாக அமைந்திருந்தது. நாடு சுதந்திரம் பெற்றதும் அரச பாடசாலைகள் அறிமுகம் செய்யப்பட்டு இலவசக் கல்வி முறையையும் அப்போதைய அமைச்சர் கன்னங்கரா ஆரம்பித்துவைத்தார். கல்வியும் பாடசாலையும் சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டு வந்தது.

இலவசமாக கல்வி கற்று ஆசிரியர்களாக முன்னேறியவர்கள் காசுக்காக டியூட்டரிகளை ஆரம்பித்து செயல்படுத்திக் கொண்டு வருகின்றார்கள். இதனால் பாடசாலைகளில் முக்கிய பாடங்கள் கற்பிப்தற்கு ஆசிரியர்கள் இல்லை. ரியூட்டரிகளின் அந்தப் பாடங்களுக்கு ஆசியர்கள் இருக்கிறார்கள். அங்கு பணம் கொடுத்துத்தான் கல்வி கற்க முடியும். பணவசதி இல்லாத மாணவர்கள் இதனால் கல்விக்கு முழுக்குப்போட்டு விட்டு கூலிவேலைகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளார்கள். இதனால் சில பாடசாலைகளில் போதுமான மாணவர்கள் இல்லை என்று மூடப்பட்டுள்ளது.

அந்தப் பாடசாலைக் கட்டிடங்கள் இன்று கட்டாக்காலி கால் நடைகள், நாய்களின் உறைவிடமாக மாறிக்கொண்டுவருவதையும் காணக்கூடியதாக இருக்கிறது. பணவசதியுள்ள மாணவர்கள் நல்ல கல்வி வசதிகளுக்காக சொந்த இடங்களைவிட்டு விட்டு வேறு ஊர்களிலுள்ள சிறந்த பாடசாலைகளை நோக்கிச் செல்கின்றனர். தமிழ் மக்களின் கல்வி பெரிய அளவில் பாதிக்கப்பட்டே வருகிறது.

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் வடமாகணத்தின் கல்வியிலும், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பாடசாலைகளின் கல்வியிலும், சிங்களபாராளுமன்ற உறுப்பினர்கள் நாடு பூராவுமுள்ள சிங்களப் பாடசாலையிலும் அக்கரையோடு செயல்படுவதுதான் இன்று உள்ள கல்வி முறையாகும்.

இந்த கல்வி முறையை மாற்றவேண்டுமென்று முதுமைவாயிந்த கல்விமான்கள் அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு வந்த போதிலும் இதுவரை ஒரு பலனும் கிடைத்ததாகத் தெரியவில்லை. இன்றுள்ள மாணவர்களிடத்தில் கையடக்கத்தொலைபேசி ஒன்று அடையாள அட்டை போன்று காணப்படுகிறது. வீட்டிலே தொலைக்காட்சிக்கு முன்னால் இருப்பார்கள்.

இவர்களிடத்தில் வாசிப்பு என்பது கிடையாது. வாசிப்பை அபிவிருத்தி செய்வதற்கு நூல் நிலையங்கள் எங்கும் உள்ளன. அங்கு செல்பவர்களும் வாசிப்பதை காட்டிலும் கலந்துரையாடுவதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றார்.

மாணவர்களை பெற்றோர் பெரும் அக்கறையுடன் அவர்களை வாசிப்பில் ஈடுபடுத்தச் செய்யவேண்டும். அதேபோன்று பாடசாலைகளிலும் ஆசிரியர்கள் மாணவர்களை வாசிப்பில் ஈடுபடுத்த வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் இன்றுள்ள மாணவர்கள் சிறந்த கல்விமான்களாக மாறி எமது பாரம்பரிய கலை, கலாசாரங்களை எதிர்காலச் சந்ததியினருக்கு அறிமுகம் செய்யக் கூடியவர்களாக மாற்றம் அடைவர்கள்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.