புத் 63 இல. 48

சர்வதாரி வருடம் கார்த்திகை மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 முஹர்ரம் பிறை 01

SUNDAY NOVEMBER 27,  2011

 
''அம்மா'' பாடலால் அகமதில் அமுதம் பொழிந்த எம்.எம்.பீர்முகமது!

''அம்மா'' பாடலால் அகமதில் அமுதம் பொழிந்த எம்.எம்.பீர்முகமது!
 

நினைவில் நிறைந்த கலைஞர்

உயிருக்கு உயிரான ‘உம்மா’ உலகத்தை விட்டுப் பிரிந்த மறுநாள் இலங்கை வானொலியில் ஒலிப்பதிவு.

ஊட்டி வளர்த்தவளை நினைத்து உருகி மெட்டமைத்து, பாடல் யாத்து பாட்டில் தாயன்பைப் போன்றிப் பாடுகிறார்...

“அம்மா அம்மா என்று சொன்னாலும் நாவில் அமுதம் வழிந்தோடுதே...

“சுப்பர் ஹிட்டா”கிப் போனது பாட்டு ஒவ்வொரு இஸ்லாமிய உள்ளங்களிலும், இல்லங்களிலும்- ஏன் உதட்டிலும் அந்தத் தாயன்புப் பாடல் ஒட்டிக்கொண்டது. அவரது எல்லாப் பாடல்களையும் முந்திக்கொண்டு இன்றும் அடையாளப்படுத்தி ஒலித்துக் கொண்டிருக்கிறது.

பீர்முஹம்மதுடன் கலைக்கமல்

“மூசிக்நூரி”, கலாபூஷணம் எம்.எம். பீர்முஹம்மது அந்த அம்மா பாடலுக்குச் சொந்தக்காரர். ஒரு “டோலக்” வாத்தியக் கலைஞராக இசை வானில் சிறகடிக்கத் தொடங்கியவர். பாடசலாசிரியராக, மெட்டமைப்பாளராக, பாடகராக பரிணாமம் பெற்று உரை- இசைச் சித்திர எழுத்தாளராக விசாலமாய் தன் விசித்திர ஆற்றலால் ஊர் போற்ற பேர்பெற்றார் பாடகர் பீர்முஹம்மது.

ஓராண்டுக்கு முன்பு எனது சிற்றுண்டிக் கடை வாசலில் முச்சக்கரவண்டியிலிருந்து இனிய சலாம் ஒலித்தது. மலர்ந்த முகத்துடன் தன் அருமை மகள் பர்ஸானாவுடன் பிர்முஹம்மது மாஸ்டர் என்னைச் சந்திக்க வந்தார்.

“கமல் “சீடி” வெளியிட வேண்டும். உங்களைத் தேடி வந்தேன். நான் பாடிய எந்தப் பாடலும் என்னிடம் இல்லை. வசூலுக்காக அல்ல; ரசிகர்களுக்காகவும் எனது வாரிசுகளுக்காகவும் மரணத்துக்கு முன் இதைச் செய்து முடிக்கவேண்டும்” என்றார்.

“சீடி வெளியிடும் முன்னர் என்னைத் தேடிவந்த உங்களை வாழ்த்தி, பொன்னாடை போர்த்தி மகிழவேண்டும்” என்றேன். அந்தச் சங்கீத சாகரம் சம்மதம் தந்தது.

எனது 20வது “கீத்ராத்” இசை நிகழ்வில் சிந்தைகுளிர கெளரவிக்கப்பட்டார். அமல் சுல்தான் பைரூஸ் மரிக்கார், “கவிமணி” நஜ்முல் ஹுசைன், ‘செந்தமிழ்ச் செல்வன்’ எம்.எஸ்.எம். ஜின்னாஹ், எனது அருமை அண்ணா உபைத் மஹ்தூம் உட்பட கலைஞர்கள் நாம் கெளரவித்து உவகையடைந்தோம்.

“வாழ்வோரை வாழ்த்தும்” வண்ண மணி விழாவிலே முதல் பத்துக் கலைஞர்களில் எனது குரு தந்தை “மூசிக்நூரி” மஹ்தும் ஏ. காதர், பீர்முஹம்மது மாஸ்டர் இருவரும் மகுடம் சூடப்பட்டார்கள்.

கலைஞர்கள் இறப்பதற்கு முன்பே சிறப்பான கெளரவம் வழங்கிய “கலைக்காவலர்” முன்னாள் அமைச்சர், இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களை நன்றியுள்ள கலா நெஞ்சங்கள் என்றும் மறவாது.

கலைஞன் மறைந்த பின் ஊரைக் கூட்டி ஒப்பாரி வைப்பதில் உடன்பாடில்லாத நான் வாழும் போதே கலைஞனை வாழ்த்திய – வாழ்த்தும் அஸ்வர் ஹாஜி அணியிலும், யதார்த்தமான இந்தப் பணியிலும் இணைந்து கொள்கிறேன்.

கால் முட்டோடு பாதம் வரை கொடிய நீரிழிவு நோய் பதம்பார்த்த போதிலும் இனிய மெட்டோடு கீதங்களை உற்சாகமாய் இசைத்துவந்த பீர்முஹம்மது மாஸ்டர் இறுதி வரை இறைவழி “பாட்டில்” ஈடுபட்டு வந்தார்.

பீர்முஹம்மது மாஸ்டரின் தணியாத தாகமாக இருந்த ‘சிடி’ வெளியீடு “நேர்மைப் பிறந்ததாக” கடந்த செப்டெம்பர் மாதம் தீர்ந்தது. பிரபல இசை அமைப்பாளர் கே.எம். சவாஹிர் மாஸ்டரும், புதல்வர் அயாஸ¤ம் இணைந்து அற்புதமாய் இசைவழங்கியுள்ளனர்.

கண்ணும் கருத்துமாக தந்தையை பொன்னெனப் பார்த்து வந்த மகள் பாத்திமா பர்ஸானா பதுருஸ்ஸமான் ‘சிடி’ வெளிவர ஒயாது ஓடி ஓடி உழைத்தார். இன்று பீர் மாஸ்டர் இறையடி எய்தி விட்டார்.

மாஸ்டர் கண்மூடி மண்மூடுமுன் பேராவலை நிறைவு செய்து உறவினர்களின், கலைஞர்களின் ஊடகவியலாளர்களின், ரசிகர்களின் மன ராஜ்யத்தில் மகள் பர்ஸானா “பொன்முடி” சூடிக்கொண்டமை உன்னதமான உண்மை.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.