புத் 63 இல. 48

சர்வதாரி வருடம் கார்த்திகை மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 முஹர்ரம் பிறை 01

SUNDAY NOVEMBER 27,  2011

எளிதான வாழ்விற்குச் சிரமங்கள் எதற்கு?

எளிதான வாழ்விற்குச் சிரமங்கள் எதற்கு?

தெரிந்த மார்க்கமே எளிதானது, வலிந்து பலப் பரீட்சை எதற்கு,
தைரியமாக அறிவதை அறிக, கருமங்கள் சிறக்க மமதை அகற்று.

நெருப்புக்குள் நீச்சலடிப்பேன், நீருக்கடியில் மூச்சை நிறுத்தி வெளியேறுவேன் என வீர வசனம் பேசும் பிரகிருதிகள், சின்னக்குருவியின் ஓசையைக் கேட்டாலே கதிகலங்கிப் பதறிப் போவார்கள்.

வெறும் வார்த்தை ஜாலம் பேசும் இத்தகையவர்கள் பேச்சுக்களை நம்புபவர்களிடம் தான் மக்களில் அநேகர் சரணடைந்து போகின்றார்கள்.

எவரது பேச்சையும் நம்பினால் தரணியில் வாழ்வது எப்படி? மோசடிக்காரர்களிடம் தேடிப்போகின்றவர்களைத் தடுத்து நிறுத்துவது எப்படி?

சொந்தப் புத்தி இருந்தால்தான் எந்தப் பிரச்சினைக்கும் முகம் கொடுத்து ஜெயிக்க முடியும்.

இரவல் புத்தியால் ஏமாந்தவர்கள் பல்கோடி கேட்க வேண்டியவர்க ளிடம் ஆலோசனைகளைக் கேட்பதும் இல்லை.

நல்ல மனுஷர்களை முட்டாள்களாக்கிப் பார்ப்பதில் கபடதாரிகளுக்கு இஷ்டம் அதிகம். இன்று மலிவான பொருள் தேடிப்போகின்றவர்கள், தரம் தேடுவதும் இல்லை. சுயமான சிந்தனையினுள் நம்பிக்கை வைக்காது விட்டால் மற்றையவர்க ளின் மந்த புத்தி மிக இலகுவாக ஆட்சி செய்ய ஆரம்பிக்கும்.

வாழ்க்கையில் பலரது தோல்விகளுக்கான காரணம் தக்க வழிகாட்டல்கள், நெறிப்படுத்துதல் மட்டுமல்ல, தனிமையில் சிறிது நேரமாவது எது சரி, எது தவறு என்பது பற்றி எள்ளளவும் கவலைப்படாமல் நிலையறியாமல் வாழ்வதுதான்.

செயல்களை வாய்மூலம் மட்டும் செய்யலாம் என உறுதியுடன் நம்புகின்றார்கள். எதனையும் செயலளவில் கையாளும் போதுதான் அவற்றில் உள்ள சிரமங்களே புரிகின்றன. ஆயினும் உறுதியுடன் மேற்கொள்ளும் காரியங்கள் தோல்வியடைவதுமில்லை.

பயந்து கொண்டே செயலாற்றுவதனாலேயே பல காரியங்கள் செயலற்றுப் போய்விடுகின்றன.

எந்த ஒரு விடயத்திலும் நாம் அஜாக்கிரதையாக இருந்து விட முடியாது. நகம் வெட்டும் போதும் கூட அவதானம் குறைந்தால் காயம் ஏற்படுவது தவிர்க்க முடியாது.

இன்று பல நல்ல ஆரோக்கியமான சமூகத்திற்கு இயைபாவனவையும் மக்களால் கவனிக்கப்படாமையினால் அவை காணாமல் போய்விட்டன.

சுலபமாகக் கிடைப்பவை தரமற்றவை என எண்ணும் மனப் போக்கினால் சிரமமான, வழியில் சுற்றித் தேடும் பிரகிருதிகள் அநேகர் எடுத்த காரியங்கள் தோல்வியில் முடிகின்றன.

தடியால் தட்டி எடுக்கக் கூடிய பழங்களை, மரத்திலேறி விழுந்து எடுக்க முனைந்து அவயங்களைத் துன்புறுத்துதல் அறிவீனம். அனுபவ அறிவு செயல்களைச் சுருக்கும். வலிமையைக் கோர்க்க அனுபவச் சங்கிலியைப் பயன்படுத்துதல் அவசியம்.

ஏனெனில் அனுபவங்கள் படிப்படியாக ஒன்றிணைந்து உறுதியான செயல்களாகப் பரினமிக்கின்றன.

எனினும் வேகமான வழிகளில் பெற்ற அனுகூலங்களால் தொடர்ந்தும் அதே அனுபவ வாயிலாக காரியமாற்றினால் அதுவே கொடிய விலங்காக அவர்களை நொறுக்கி நார் நாராய்க் கிழித்துவிடும்.

எனவே நல்ல வழியில் பயணிப்போருக்கே இரட்டிப்புப் பயன் கிட்டும். துஷ்டத்தனங்களால் கஷ்டங்களே மிகுதி!

ஒரு சின்ன விஷயத்தில் அனுகூலம் பெறவே போராட வேண்டியிருக்கின்றது எனப் பலர் விசனப்படுகின்றனர். எந்த ஒரு கருமத்தினை நிறைவேற்றுவதற்கும் ஒரு முறைமையுண்டு. ஆயினும் இன்று மக்கள் பொது நிறுவனங்களிலாகட்டும், தனியார் நிறுவனங்களிலாகட்டும் அதன் முழுமையான பயன்பாட்டைப் பெற அல்லலுறுவதாகவே பேசப்படுகின்றது. பொதுச் பிரச்சினைகளில் மக்கள் ஒன்றிணைதல் வேண்டும். எனக்கு என்ன “நான் எந்த வழியிலும் சென்று எனது காரியத்தையும் சாதித்துவிடுவேன்” என மமதையுடன் கூறினால் இதில் என்ன நியாயத் தன்மை இருக்கின்றது?

தன்னை மட்டும் காப்பாற்றிக்கொள்ளச் செய்யப்படும் அநியாய வழிமுறைகளால் பாதிப்படைவது முழுச் சமூகம்தான்.

இன்றைய தற்காலிக நன்மைகள் நாளைய துன்பங்களாக்க முயலக் கூடாது. தெரியாத விஷயங்களுக்கு ஆலோசனை செய்பவர்களால் பலரது முன்னேற்றங்கள் பின் தள்ளப்படுகின்றன.

தானாகச் செய்ய வேண்டிய காரியங்களுக்குக் காரியதரிசிகளை நாடும் பெரிய மனிதர்கள் மலிந்து விட்டார்கள். நாம் இயந்திரங்கள் போல் தேய்வடையக் கூடாது. பராமரிப்பற்ற இயந்திரங்களே தேய்ந்து, நைந்து விடுகின்றன. ஆனால் மனிதர் தன்னையும், முழுச் சமூகத்தையும் நல்ல எண்ணங்களால், செயல்களால் மெருகூட்டினால் எல்லா நன்மைகளுமே கை கூடி வரும். எளிதான வாழ்விற்கு வீணான சிரமங்கள் தேவையுமில்லை.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.