புத் 63 இல. 48

சர்வதாரி வருடம் கார்த்திகை மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 முஹர்ரம் பிறை 01

SUNDAY NOVEMBER 27,  2011

 
படிப்பு புட்டிப்பால் நடிப்பு தாய்ப்பால்

படிப்பு புட்டிப்பால் நடிப்பு தாய்ப்பால்
 

மனம் திறக்கிறார் கலைஞர் ராஜசேகரன்

ஈழத்து கோடம்பாக்கம் என்று அழைக்கக் கூடியளவுக்கு கலைஞர்களின் பிறப்பிடம் வளர்ப்பிடமாக திகழ்வது ஜெயந்தி நகர் ஜிந்துப்பிட்டி. லடிஸ் வீரமணியிலிருந்து ஸ்ரீதர் பிச்சையப்பாவரை ஈன்றெடுத்த பெருமை அந்த மண்ணிற்கு உண்டு. கலைத்தாய் பெற்றெடுத்த எண்ணற்ற கலைஞர்களுள் இன்றும் நம் மத்தியில் கலைஞனாக, தொழில் அதிபராக, சமூக சேவையாளனாக, திருமண பதிவாளராக பல முகங்களைக் கொண்டு வாழும் கலைஞர் ராஜசேகரனின் வாழ்க்கையை திரும்பிப் பார்க்கின்றேன்.

“பள்ளிப் பருவத்தில் படிப்பை புட்டிப் பாலாகவும், நடிப்பை தாய்ப்பாலாகவும் பருகி என்னுள் கலையை இரத்த பந்தமாக்கியிருந்தேன். ஆனல் இன்று.....

மனைவி ஹெலன்குமாரியுடன்

இலங்கையில் கலையை நம்பி குறிப்பாக நாடகத்துறையை தொழிலாகக் கொண்டு பிழைப்பு நடத்த முடியாது என்பதை கலைஞர்கள் பலரின் வாழ்க்கைப் பாடங்கள் உணர்த்தி நிற்கின்றன.” என்று கூறுகின்றார். இவ்வகையில் பொதுவான வாழ்க்கையிலும் சரி கலை வாழ்க்கையிலும் சரி பலவிதமான சவால்களையும் எதிர்நோக்கி அத்தனையையும் வெற்றிகரமாக முறியடித்து இன்று எமது நாட்டின் ஒரு சிறந்த கலைஞனாக ஒரு திருமணப் பதிவாளராக அரிமா சங்கத்தின் செயலாளராக சமாதான நீதிவானாக ஜொலித்து கொண்டிருக்கும் எம் நாட்டு கலைஞர் ஆர். ராஜசேகரனை தினகரன் வாரமஞ்சரிக்காக பேட்டி கண்டோம். மிகவும் உற்சாகமாக தன்னைப்பற்றி கூறத் தொடங்கினார்.

கே: உங்களின் பிறப்பிடம்.....

ப: ஜிந்துப்பிட்டி கண்ணாரத்தெருவில் 1958 ஆம் ஆண்டு பிறந்தேன். என் தந்தை ராமசாமிபிள்ளை தாய் புஷ்பம். என்னுடன் ஏழு சகோதர, சகோதரிகள். நான் குடும்பத்தில் ஐந்தாவது.

கே: பள்ளி பருவம்....

என்னுடைய வித்தியாரம்பம் முதல் க.பொ.த. வரை விவேகானந்தா கல்லூரியில்தான். விரல் விட்டு எண்ணக்கூடிய ஆசிரியர்களைக் கொண்டு இயங்கிய அப்பாடசாலையின் அதிபராக நடராஜா மாஸ்டர் இருந்தார். என்னுடைய பாலர் வகுப்பு ஆசிரியையாக ஒரு ‘குண்டு’ டீச்சர். பெயர் நினைவுக்கு வரவில்லை. பால்ய காலத்திலிருந்தே குறும்பான நடிப்பு. ஆசிரியையிடம் ஏச்சும் பேச்சும்.

பாடசாலையில் நாடகத்தில் அதிக நாட்டம் கொண்டேன். என் இல்லத்தைச் சுற்றி கலைஞர்கள். அதன் தோஷம்போல் தாய்ப்பாலை அருந்திய பாசம் நடிப்பில்.

இளமையில்

கே: பாடசாலை காலம் முடிந்ததும் கலைத் துறையிலேயே தங்கிவிட்டீர்களா அல்லது தொழிலில் ஏதும் நாட்டம் கொண்டீர்களா?

ப: நான் அந்தக் காலத்தில் எஸ்.எஸ்.ஸியை முடித்ததும் ஜப்பர்ஜி பிரதர்ஸ் நிறுவனத்தில் ‘கிளார்க்’காக தொழிலில் அமர்ந்தேன். இரண்டொரு வருடத்தின் பின் ஓர் அச்சகசாலையில் உதவி முகாமையாளராக இணைந்தேன். அதன் அனுபவம் தான் இன்று என்னை தொழிலதிபராக உயர்த்தியுள்ளது. இன்று சொந்தமாக ஓர் அச்சகத்தை நடத்துகின்றேன். அவ்வப்போது கலைத்துறைக்கும் பங்களிப்பு வழங்கிக் கொண்டிருக்கிறேன்.

கே: நாடறிந்த கலைஞனாக உங்களை அடையாளப்படுத்த வித்திட்டவரைப் பற்றி.....?

1975 ஆம் ஆண்டு கலைஞர் கே. செல்வராஜனின் உறவுகள் என்ற நாடகத்தின் மூலம் அறிமுகமானேன். அன்று தொடக்கம் இன்றுவரை சுமார் 36 வருடங்களாக கலையுலகில் சிறந்த பல நாடகங்களில் நடித்து இன்று எம் நாட்டில் நாடறிந்த ஒரு கலைஞனாக திகழ்வதில் மிகவும் சந்தோசமடைகின்றேன். நான் நடித்த ஒரு சில நாடகங்களை இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும். கோடில்லா கோலம், புதுப்பணக்காரன், விடையே இல்லாத விடுகதை, யாருக்காக, இருட்டிலே தேடாதீங்க, ஒன்று எங்கள் ஜாதியே, கலங்கம் கெரி ஓன் டிரக்டர் என்று பலதை குறிப்பிடலாம்.

பிள்ளைகளுடன்

கேள்வி: உங்களுக்கு கலைத்துறையில் ஆரம்ப காலத்தில் களம் அமைத்தவர்கள்....?

பதில்: கொழும்பு விவேகானந்தா கல்லூரியில் கல்வி பயின்ற சில கலைத்துறையில் ஆர்வமிக்க இளைஞர்களான நான், நண்பன் ஜெ. சகாயசீலன், பீ. சீத்தாராமன், மொஹமட் நசீர், சிவசங்கரன் போன்ற இளைஞர்களினால் ‘வெள்ளிநிலா’ என்ற ஒரு கையெழுத்து பிரதியை வெளியிட்டு வந்தோம். அதன் பின் வெள்ளிநிலா இசைக்குழு என்ற ஒரு இசைக்குழுவையும் ஆரம்பித்தோம் முதன் முறையாக அன்றைய இளைஞர்கள் எல்லோரும் கூடி ‘கற்பின்கனல்’ என்ற நாடகத்தையும் மேடையேற்றினோம். அப்படி உருவானதே வெள்ளிநிலா கலாலயம். இன்று 35 ஆண்டு காலமாக வெற்றி நடைபோடுவதற்கு அன்றைய விவேகானந்தா கல்லூரி அதிபர் அமரர் சு. மகேசன் காரணகர்த்தாவாக இருந்தார். இந்த நேரத்தில் என்னை பயிற்றுவித்த ஆசிரியப் பெருந்தகைகளுக்கும் என்னை உருவாக்கிய எனது கல்லூரி விவேகானந்த கல்லூரிக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

கேள்வி: உங்களுக்கு கிடைத்த பட்டங்களை கூற முடியுமா?

பதில்: எனக்கு என் கலைச்சேவைக்காக பல பட்டங்கள் கிடைத்தன. முன்னாள் இலங்கையின் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன அவர்களால் அகில இலங்கை ஐயப்பன் சங்கத்தினால் ஐயப்பதாச சிவாச்சாரியாரின் ஏற்பாட்டில் ‘குணசித்திர நடிகர்’ என்ற பட்டமும், மணிகண்ட சேவா பீடத்தின் ஏற்பாட்டில் சாம்பசிவ மணிக்குருக்கள் ஏற்பாடு செய்த விழாவில் தென்னகத்து பிரபல பாடகர் டீ.எம். செளந்தராஜனினால் “நவரச நாயகன்” என்ற பட்டமும், அகில இன நல்லுறவு சங்கத்தினால் ‘நடிகர் திலகம்’ என்ற பட்டமும் மார்சல் ஆர்ட் கழகத்தினரால் மறைந்த கலைஞர் காமினி பொன்சேகாவினால் ‘டாக்டர்’ பட்டமும் இன்னும் பல சங்கங்களால் ‘நடிப்புச்சுடர்’ ‘நாடக வேந்தன்’ போன்ற பட்டங்களும் அகில உலக லயன்ஸ் கழகத்தினரால் M.J.F என்ற பட்டமும் இலங்கை அரசாங்கத்தினரால் சமாதான நீதவான் பட்டமும் கிடைத்துள்ளன.

எனக்கு எத்தகைய பட்டங்கள் கிடைத்தாலும் கலைஞர் ஆர். ராஜசேகரன் என்று மட்டுமே நான் குறிப்பிட விரும்புகின்றேன். 1994 ஆம் ஆண்டு அரச நாடக விழாவிலே எந்தனி ஜீவாவின் ஆராரோ ஆரிரரோ என்ற நாடகத்திற்காக எனது மனைவி ஹெலன் குமாரிக்கு அந்த ஆண்டின் சிறந்த நடிகைக்கான விருதும் எனக்கு ‘சிறந்த அளிக்கைக்கான’ Best Prsentation விருதும் கிடைத்தது. அதற்கு அடுத்த ஆண்டு நடைபெற்ற தமிழ் தேசிய நாடக விழாவில் மலையகத்து எழுத்தாளர் கே. கோவிந்த ராஜன் எழுதி எங்கள் கலாலயத்தினால் தயாரிக்கப்பட்ட “கவ்வாத்து கத்தி” என்ற நாடகம் அந்த ஆண்டின் சிறந்த தமிழ் நாடகமாக தெரிவு செய்யப்பட்டு விருதும் கிடைத்தது. தேசிய நல்லிணக்க அமைச்சினால் நாங்கள் மேடையேற்றிய ‘ஒன்று எங்கள் ஜாதியே’ என்ற நாடகம் ஹட்டன் விஜிதா அரங்கில் மேடையேற்றப்பட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

அரிமா சங்கத்தால் கெளரவிக்கப்பட்ட போது...

இதனை மலையக எழுத்தாளர் சு. முரளிதரன் எழுதியிருந்தார். இந்த நாடகம் தேசிய தமிழ் நாடக விழாவில் பங்கு பற்றி “சிறந்த இசையமைப்பு”, ‘சிறந்த துணை நடிகன்’ சிறந்த நடிப்புக்கான சிறப்பு விருது ஆகியனவும் எனக்குக் கிடைத்தது.

நான் தயாரித்து வழங்கிய “கெரிஞன் டிரெக்டர்” என்ற நகைச்சுவை நாடகம் ரூபவாஹினியில் ஒளிபரப்பப்பட்ட முதல் தமிழ் தொடர் தொலைக்காட்சி நாடகமாகும். இந்த நாடகத்தை கடந்த மாதம் LIONS CLUB OF KOTEHENA CIRCLE நிதிக்காக டவர் மண்டபத்தில் மேடையேற்றினோம்.

கே. உங்கள் திருமணம் எப்படி? காதலில் கட்டுண்டா கலைஞர்களா? அல்லது குடும்பத்தில் பேசி முடித்த திருமணமா?

ப: என் திருமணம் கலாட்டா திருமணம். எனக்கு நடிப்புக் கலையோடு எழுத்துத்துறையிலும் ஆர்வம் இருந்தது. அப்போது வெளியாகிக் கொண்டிருந்த கே.வி.எஸ். மோகனின் ‘கதம்பம்’ என்ற சஞ்சிகையில் ‘கலைஞர்களின் அறிமுகம்’ பகுதியை நான் எழுதிக் கொண்டிருந்தேன். அப்பகுதிக்கு பேட்டி காணும் நோக்கில் நடிகை ஹெலன் குமாரியைச் சந்தித்தேன். முதல் சந்திப்பு தொடர் நாடக மேடைவரை நெருங்கியது. அது குடும்ப உறவாக உருவெடுக்கவிருந்த நிலையில் குடும்பத்தில் பெரும் புயல். என்னுடைய மூத்த சகோதரர் கடும் எதிர்ப்பு. நாடகம் நிழல் என்றிருந்த எனக்கு நடைமுறையில் நிஜமாகிவிட்டது. மனதில் கொண்டவளை கைவிடமாட்டேன் என்ற உறுதிப்பாட்டில் குடும்பத்தைவிட்டு வெளியேறினேன். சம்பிரதாய முறைப்படி கப்பித்தாவத்தை கோவிலில் சமூகப் பெரியார்கள், கலைஞர்கள், நண்பர்கள் என புடை சூழ 1985 ஆம் ஆண்டு தாலிகட்டினேன். திருமணத்திற்கு தினகரன் பிரதம ஆசிரியராகவிருந்த அமரர் சிவகுருநாதன் உட்பட பெரியார்கள் அனைவரும் வந்திருந்து ஆசிர் வதித்தார்கள்.

காலம் வென்றுவிட்டது. வெற்றிகரமான வாழ்க்கை வெள்ளி விழாவையும் கண்டுவிட்டது. மகன் விக்ரம் பெங்களூரில் ஐ.டி. என்ஜினியராக பயின்று கொண்டிருக்கின்றார். மகள் கார்த்திகா ஹெற்றன் நஷனல் வங்கியில் கடமையாற்றுகிறார். பல சோதனைகளுக்குப் பிறகு சாதனைப் படைத்த என் குடும்ப வாழ்வில் இன்று பிரிந்த சகோதர, சகோதரிகள் ஒன்றிணைந்து சந்தோஷமாக இருக்கின்றனர். என் காதல் திருமணத்தை முன் நின்று நடாத்தி வைத்த கலைஞர், எழுத்தாளர் மாத்தளை கார்த்திகேசுவையும், என் காதலுக்கு வழி சமைத்த நடிகை ஜெயந்தியையும் என்னால் மறக்க முடியாத நன்றிக்குரியவர்கள்.

கேள்வி: இன்று உங்கள் மனைவியும் ஒரு பிரபல நடிகைதானே உங்கள் வாழ்க்கையில் அவரது பங்களிப்பு எப்படி?

முதல் மேடை நாடகம் முக்கோணத்தில் மூவரில்

பதில்: எங்கள் வெள்ளிநிலா கலாலயத்தின் நாடகங்கள் அனைத்தும் மிகவும் சிறப்பாக நடைபெறுவதற்கு முக்கிய காரணம் நாங்கள் இருவரும் ஒரே துறையில் இருந்தமையினால் எல்லாமே வசதியாக அமைந்தது. நாடக ஒத்திகைகளை நேரத்துக்கு ஆரம்பித்து நேரத்திற்கு முடிக்கக் கூடியதாகவும் நாடகக் காட்சி அமைப்பு, நுணுக்கங்கள் ஏனைய பிற விடயங்களையும் இருவரும் கலந்தாலோசித்து சரியான முடிவை எடுக்கக்கூடியதாக ஆர்வமும் திறமையும் உள்ள மனைவி எனக்கு கிடைத்தது பாக்கியமே.

கேள்வி: இலங்கையில் நாடகத்துறை மலிந்து கொண்டு போகின்றதே? இது பற்றி உங்கள் கருத்து?

பதில்: அரச நாடக விழாவுக்கு மட்டும் நாடகம் போடும் நிலை இலங்கையில் வந்துவிட்டது. இன்றைய இலங்கையில் ஒரு நாடகத்தை மிகக் குறைந்த பட்ஜெட்டில் மேடையேற்ற வேண்டுமென்றால் கூட ஆகக்குறைந்தது 100,000 ரூபாய் தேவை. ஒரு நாடகத்தை மேடையேற்ற வேண்டுமென்றால் அதற்கான முழுச் செலவையும் அதன் ஏற்பாட்டாளர்களே பொறுப்பேற்க வேண்டி ஏற்படுகிறது. அரசினதோ சமூக நிறுவனங்களினதோ விளம்பரதாரர்களினதோ பங்களிப்பு போதியளவு கூடக்கிடைப்பதில்லை.

ஈழத்து நாடகங்களில் யதார்த்தமும் உயிர்ப்பும் தென்பட வேண்டுமென்றால் கலைஞர்களுக்கு போதிய பயிற்சிகளும் அனுபவங்களும் கிடைக்க வேண்டும். இதற்கு அதிகளவான நாடகங்கள் அடிக்கடி மேடையேற்றப்பட வேண்டும். அதற்கான வசதி வாய்ப்புக்கள் அரசாங்கத்தினால் வழங்கப்பட வேண்டும். தமிழ் கலைஞர்களை பொறுத்தவரையில் கொழும்பில் ஒரு ஒத்திகை மண்டபம் கூட கிடையாது. தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த தமிழ் கலைஞர்களுக்கு 25,000 ரூபா மட்டுமே கொடுக்கப்படுகின்றது. இது போதாது !

கேள்வி: இலங்கை நாடகத்துறை வளர வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டுமென்பதையும் கலாசார அமைச்சினால் கொடுக்கப்படும் கலாபூசண விருது பற்றியும் உங்கள் கருத்து என்ன?

பதில்: ஈழத்து சினிமாவோ, நாடகமோ ஏன் வளரவில்லை என்று கூற வேண்டுமென்றால் தென்னிந்திய தமிழ் படங்களும் இந்தி, ஆங்கிலப் படங்களுமே காரணம் என்று கூறுவது வழமையாகி விட்டது. இதில் ஓரளவு உண்மையாயினும் பெரும்பாலும் கலைஞர்களின் போக்கும் ரசிகர்களின் நோக்கும் வெவ்வேறு திசைகளில் பிரிந்திருப்பதே முக்கிய காரணம் என்று கூற வேண்டும். நாடகத்துறை குறித்த விழிப்புணர்ச்சி பாடசாலை மட்டத்திலிருந்து வரவேண்டும். கிழக்கில் பல்கலைக்கழக மட்டத்தில் பயிற்சிப் பட்டறைகள், வகுப்புக்கள் நடத்தப்பட்டு பட்டங்கள் வழங்கப்படுகின்றது. நாடகத்துறை பற்றி விரிவான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. ஒரு நாடகத்தை மேடையேற்றினால் ரசிகர்களை தேட வேண்டிய தேவை கிடையாது. இத்துறை சார்ந்த மாணவர்களே ரசிகர்களாகி விடுவார்கள். ஆனால் இவர்கள் படிப்போடு மட்டுமே இருக்கிறார்கள். கொழும்பில் எந்த பல்கலைக்கழகத்திலும் தமிழ் மொழி மூலமான அரங்கியல் கற்கை நெறிகள் இல்லாமையினால் அவை உருவாக்கப்பட வேண்டும்.

கலைஞர்களுக்கு வழங்கப்படும் அரச உயர் விருதான கலாபூஷணம் விருது 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் வழங்கப்பட வேண்டும் என்ற நியதியை மாற்றி வழங்க வேண்டும்.

கேள்வி: நீங்கள் ஒரு திருமண பதிவாளர் என்றும் தெரிந்து கொண்டோம். இது எப்போது கிடைத்தது.

பதில்: உண்மையிலேயே எனக்கு கிடைத்த பட்டங்கள் பதவிகளில் இதுவே எனக்கு கிடைத்த பெரியதொரு வரப்பிரசாதமாக கருதுகின்றேன். நான் மணமக்களுக்கு சத்திய பிரமாணத்தை தமிழிலேயே சொல்லுகின்றேன்.

அவர்களை வாழ்த்துவதும் தமிழிலேயே ஆகையால் இப்போது எனக்கு நிறைய சந்தர்ப்பங்கள் கிடைக்கின்றன. இதன் மூலம் பல திருமண சேவையை செய்வதில் நான் மிகவும் ஆத்ம திருப்தி அடைகின்றேன். இறுதியாக நான் இன்று இவ்வளவு உயர்வடைவதற்கு நம் நாட்டு ஊடகங்கள்தான் காரணம். அதிலும் பத்திரிகைகள் மிகவும் உந்து சக்தியாக இருந்துள்ளது. அனைத்து பத்திரிகைகளுக்கும் தினகரன் வாரமஞ்சரி மூலம் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.