புத் 63 இல. 48

சர்வதாரி வருடம் கார்த்திகை மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 முஹர்ரம் பிறை 01

SUNDAY NOVEMBER 27,  2011

 
தெற்கை நோக்கிய அதிவேக நெடுஞ்சாலை...

தெற்கை நோக்கிய அதிவேக நெடுஞ்சாலை...

100 மைல் வேகம்

அதி நவீன கமராக்கள் பொருத்தப்பட்டு வழி நெடுகிலும் பலத்த பாதுகாப்புடன் குறுகிய நேரத்திற்குள் குறிப்பிட்ட இடத்தை சென்றடையக் கூடிய நெடுஞ்சாலையொன்று முதன் முதலில் இலங்கையில் அங்குரார்ப் பணம் செய்து வைக்கப் படுகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை 27ம் திகதி ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படவிருக்கும் இப்பெ ருஞ்சாலை கொட்டாவையிலிருந்து காலி மாவட்ட பின்னடுவ வரை 96 கிலோ மீட்டர் தூரத்தைக் கொண்டது. சுமார் 700 கோடி ரூபா செலவில் அமைக்கப் பட்டுள்ள இந்நெடுஞ்சாலைக்கு ஜப்பான் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எட்டு தொடு முனைகளைக் கொண்ட இந்நெடுஞ்சாலையில் விசேடமாக நியமிக்கப்பட்ட போக்குவரத்து பொலிசார் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபடுத் தப்படவிருக்கின்றனர். ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ள நவீன சிசிரிவி கமராக்கள், வாகனங்களின் ஓட்டத்தை கண்காணித்துக் கொண்டிருக்கும்.

குறைந்த பட்சம் 100 மைல் வேகத்தில் வாகனத்தை செலுத்தி செல்வதற்கான ஒழுங்கு முறைகள் விதிக்கப்பட்டுள்ள இந்நெடுஞ்சா லையில் விபத்துக்களை தவிர்ப்ப தற்காக தீவிரமான போக்குவரத்து விதிகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. மீறி செலுத்தும் வாகனங்கள் கமராவில் பதிவாகி பொலிசாரின் கவனத்திற்குள்ளாக்கப்படும்.

அவசர விபத்து சேவைகளுக்கு தீயணைக்கும் படை மற்றும் அம்புலன்ஸ் சேவை கிடைக்கக்கூடிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நெடுஞ்சாலையை குறுக்கீடு செய்யக்கூடிய வகையில் பாதைகள் இல்லை. பாதசாரிகள் இல்லை. துவிச்சக்கர வண்டி பயன்படுத்தத் தடை, ஆட்டோவிற்கு இடமில்லை, மாட்டு வண்டிகள் இல்லை. ஆகவே எந்த இடையூறுமின்றி வாகனத்தை செலுத்தக்கூடிய வகையில் சீராக பாதை அமைந்திருக்கிறது. அதிவேக பாதையாக இருந்தாலும் சாரதிகள் தங்களைக் கட்டுப்ப டுத்திக் கொள்ள ஆங்காங்கே எச்சரிக்கை சமிக்ஞைகளும் உண்டு.

இந்நெடுஞ் சாலையில் நல்ல தேர்ச் சியுள்ள சாரதிகளே வாகனங்களை செலுத்த முடியும். அதற்காக இலங்கை போக்குவரத்து சபை நல்ல அனுபவமுள்ள சாரதிகளைத் தேர்ந்தெடுத்து பயிற்சிகளை வழங்கியுள்ளது. இவ்வழியே பயணிகள் சுகமாக பயணிக்கக் கூடிய வகையில் நவீன சொகுசு பஸ்களும் கொள்வளவு செய்யப்பட்டுள்ளன. இப்பாதை தனியார் பஸ் போக்குவரத்து சேவைக்கு பயன்படுத்திக் கொள்ள கணிசமான அளவு இடம்கொடுக்கப்பட்டுள்ளது.

இவ்வழியை பயன்படுத்திக் கொள்ள விரும்புவோர் நுழைவு கட்டணமொன்றை செலுத்த வேண்டும். இவ்வாறு எட்டு நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆரம்ப நுழைவாயிலில் இலத்திர னியல் முறையில் அமைக்கப் பட்டுள்ள இயந்திரத்தில் நுழைவுச் சீட்டைப் பெற்றுக் கொள்ள வேண்டும். பயணத்தின் இறுதியில் அமைகின்ற வாகன வாயிலில் பெற்ற நுழைவுச் சீட்டை ஒப்படை த்து அதற்கான கட்டணத்தையும் செலுத்த வேண்டும். கட்டணங்கள் வாகனங்களின் தரத்திற்கேற்ப வேறுபட்டிருக்கும். நெடுஞ்சா லைக்குள் பிரவேசிக்கக் கூடிய வகையில் இடையில் எட்டு நுழைவு வழிகளும் அமைந்திருக்கின்றபடியால் இடையில் பிரவேசிக்கும் வாகனங்கள் உட்பட பிரயாண இறுதியில் அதன் அதன் பிரயாணத் தூரத்தைக் கணக்கிட்டு கட்டணம் வசூலிக்கப்படும்.

ஒரு மணி நேரத்திற்குள் இந்த நெடுஞ்சாலையை கடந்து செல்வதற்கான வாய்ப்பு இருப்பது போல் இலங்கையில் வேறு எந்த இடத்திலும் இதுவரை அமையவில்லையென பெருந்தெருக்கான பொறியியலாளர் சந்திரசிறி தெரிவிக்கின்றார்.

கொட்டாவை ஆரம்ப நுழைவாயிலிருந்து அடுத்த மாற்று நுழைவாயில் அமைந்துள்ள கஹதுடுவ என்ற இடத்துக்கிடையிலுள்ள 7 1/2 கிலோமீற்றர் தூரத்தை நான்கே நிமிடத்தில் கடந்து சென்றார்கள் என்றால் அதன் வேகத்தையும் பாதையின் சீரான அமைப்பையும் நாம் யூகித்துக் கொள்ள முடியும்.

கார், ஜீப், வெகன், கெப்ஸ், 9 ஆசனங்களைக் கொண்ட வேன், சிறிய ரக டிரக் ஆகியவற்றுக்கு நெடுஞ்சாலையைக் கடப்பதற்கான நுழைவுக் கட்டணம் ரூபாய் 400 ஆகும்.

9 ஆசனங்களுக்கு மேற்கொண்ட பயணிகள் வேன், 33 ஆசனங்களுக்கு உட்பட்ட பஸ் ஆகியவற்றுக்கான நுழைவுக் கட்டணம் ரூபாய் 700 ஆகும்.

33 ஆசனங்களுக்கு மேற்பட்ட பஸ், லொறி ஆகியவற்றுக்கு நுழை வுக் கட்டணம் ரூபாய் 1500 ஆகும்.

அதிகனரக வாகனங்கள் நெடுஞ் சாலையைக் கடப்பதென்றால் நுழைவுக் கட்டணமாக 2000 ரூபா அறவிடப்படும்.

பாதையை சீராக வைத்திருப்ப தற்கும் பராமரிப்பதற்குமாக நவீன ரக இயந்திரங்களும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. தீ விபத்துக்களையும், வாகன விபத்துக்களையும் தவிர்ப்பதற்காக கண்காணிப்புக் குழுவொன்று 24 மணி நேரமும், இவ் நெடுஞ்சாலையில் இயங்கிக் கொண்டிருக்கும் அத்தோடு பெருந்தெருக்கள் திணைக்களத்தைச் சேர்ந்த 500 ஊழியர்களும், பொலிஸ் பிரிவைச் சேர்ந்த 500 பேருமாக இதர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

விபத்துக்கள் ஏதும் தற்செயலாக ஏற்படுமாயின் ஒரு நொடிக்குள் அவ்விடத்தில் விபத்துச் சேவையினர் விரைந்து அத்தியாவசிய நடவடிக்கையில் ஈடுபடக் கூடிய அவசர சிகிச்சை பிரிவையும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைக்குள் பிரவேசிக்கும் சாரதி தன்னுடைய வாகனம் இப்பாதைக்குச் செல்ல தகுதியானதா, என் மனநிலை திடமாக இருக்கின்றதா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நுழைவாயிலும் கண்ணைக் கவரும்வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலையில் வாகனத்தைச் செலுத்தும் போது பின்னால் அதி வேகத்தில் வாகனத்தைச் செலுத்திக் கொண்டு வரும் சாரதிக்கு உங்களின் செயற்பாட்டை சமிக்ஞை மூலம் தெரிவிப்பதற்கான வழிகாட்டி அறிவித்தல்களும் ஆங்காங்கே இருக்கின்றன.

உள்ளே பிரவேசிப்பதும் வெளியேறுவதும் மற்றும் வாகனத்தை முன்னோக்கிச் செலுத்துவதும் பின்னால் வரும் வாகனத்திற்கு வழி விடும் விதிமுறைகள் நிச்சயமாக கடைபிடிக்கப்பட வேண்டிய விதி இங்கே நூற்றுக்கு நூறு அத்தியாவசியமாகின்றது. மும்மொழிகளிலுமான அறிவித்தல்கள் விதிமுறைகளை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

வாகன நெரிசல்களுக்குள்ளும், ஜன சந்தடிக்குள்ளும் சிக்கித் தவித்த நீங்கள் அழகான வயல்வெளிகளையும், தெளிந்தோடும் ஆற்று நீரையும் ரசித்த வண்ணம் சுகமான ஒரு பிரயாணத்தை அனுபவிக்க வேண்டுமானால் தெற்கை நோக்கி கடுகதி நெடுஞ்சாலையில் பிரயாணத்தை மேற்கொண்டு பாருங்கள்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.