புத் 63 இல. 48

சர்வதாரி வருடம் கார்த்திகை மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 முஹர்ரம் பிறை 01

SUNDAY NOVEMBER 27,  2011

 
இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலை

இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலை

,லங்கையின் முதலாவது அதிவேக நெடுஞ்சாலை இன்று திறந்து வைக்கப்படுகிறது. நூறு கிலோ மீற்றர் தொலைவை 100 கிலோ மீற்றர் வேகத்தில் கடந்து செல்ல முடியும். கொட்டாவையில் இருந்து காலி நகரத்திற்கு ஒரு மணித்தியாலத்தில் சென்றுவிட முடியும். நூறு கிலோ மீற்றர் வேகத்தில் செல்ல முடியாத எந்தவொரு வாகனமும் இந்தப் பாதையால் செல்வதற்கு அனுமதியில்லை. பாதசாரிகள் நடந்து செல்ல முடியாது. மீறினால் ஐயாயிரம் ரூபா அபராதம் செலுத்த வேண்டும். வாகனத்தில் பயணிப்பதற்கு நானூறு ரூபாய் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டும். அதன் விபரங்கள் வேறு பக்கங்களில் வெளியாகியுள்ளன. அதனை நீங்கள் தெரிந்துகொள்ள முடியும். இந்தப் பாதை திறந்து வைக்கப்படும் இன்றைய நாள் இலங்கை வரலாற்றில் முக்கியமான நாள்.

நெடுஞ்சாலை என்பது பொதுவாக மக்கள் பாவனைக்காக முக்கிய நகரங்களை இணைக்கும் சாலைகளைக் குறிக்கும். சில நெடுஞ்சாலைகள் நாடுகளையும் இணைக்கின்றன. உலகிலேயே மிக நீண்ட நெடுஞ்சாலை அவுஸ்திரேலியாவில் உள்ளது. இதன் நீளம் 20 ஆயிரம் கிலோ மீற்றர் ஆகும்.

முக்கிய நெடுஞ்சாலைகளைப் பராமரிக்கவென அரசாங்கங்கள் அவற்றுக்குப் பெயர்களையும் இலக்கங்களையும் அறிவிக்கின்றன. அமெரிக்காவிலேயே உலகில் மிகப்பெரிய நெடுஞ்சாலை கட்டமைப்பு காணப்படுகிறது. அனைத்து மாநிலங்களையும் இணைக்கும் நெடுஞ்சாலைகள், பெரும் நகரங்களையும் இணைக்கும் நெடுஞ்சாலைகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவுக்கு அடுத்ததாக சீனாவில் பெரிய நெடுஞ்சாலை கட்டமைப்பு உள்ளது. நவீன நெடுஞ்சாலை கட்டமைப்புகள் 20 ஆம் நூற்றாண்டில் வாகனப்போக்குவரத்து பிரபலமடைந்ததால் விரிவாக்கப்பட்டன.

நெடுஞ்சாலைகள் அவற்றின் முக்கியத்துவத்திற்கு ஏற்றவாறு ஏ,பி,சி என வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஏ வகை நெடுஞ்சாலைகள் இரண்டு மாகாணங்களை இணைக்கின்றன. பி தர நெடுஞ்சாலைகள் இரு பிரதான நகரங்களையும் ஏ தர பெருந்தெரு வுடன் இணைக்கின்றன. இவற்றைத் தவிர நூழைவுத் தெருக்கள் சில வகையில் தரப்படுத்தப்பட்டுள்ளன. இது நெடுஞ்சாலைகளுக்கென குறித்தொதுக்கப்பட்டுள்ள பொது இணக்கப்பாடாக உள்ளது.

ஆசிய நாடுகளுக்கிடையே நெடுஞ்சாலைக் கட்டமைப்பில் பொது இணக்கப்பாடும் உள்ளது. இதன்படி நாடுகளை இணைக்கும் அதிவேக நெடுஞ்சாலை கட்டமைப்புகள் உள்ளன. சார்க் நாடுகளிடையே நெடுஞ்சாலைகளின் அறிவிப்புகள் ஒரே மாதிரியில் இருப்பதற்கும் உடன்பாடு உள்ளது.

இலங்கையின் நெடுஞ்சாலைகள், பயணிகள் போக்குவரத்து மற்றும் பொருள் போக்குவரவு விடயத்தில் முக்கிய இடம் வகிக்கின்றன. இஃது ஏ.பி.சி என மூன்று தரங்களாகப் பிரிக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றது. ஏ மற்றும் பி தரப்பாதைகளை வீதி அபிவிருத்தி அதிகார சபையினாலும் சி தரத்திலான பாதைகளை மாகாண நிர்வாகங்களும் பராமரிக்கின்றன.

இலங்கை முழுவதும் 2004 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி ஏ மற்றும் பி தர நெடுஞ்சாலைகள் 11,716 கிலோ மீற்றர்களும் சி தரப் பெருந்தெருக்கள் 80,191 கிலோ மீற்றர்களும் காணப்படுகின்றன.

இலங்கையில் ஏ தரத்திலான பாதைகள் 35 உள்ளன. ஏ1 முதல் ஏ35 வரை பிரதான நெடுஞ்சாலைகளும் நுழைவுப்பாதைகளும் வடக்கு முதல் தெற்கு வரை உள்ளன.

ஆயினும் இதுகால வரை ஒரு அதிவேக நெடுஞ்சாலை கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்கவில்லை. அந்தக் குறைதான் இன்று நிவர்திக்கப்படுகிறது. தென்பகுதிக்கான அதிவேக நெடுஞ்சாலையானது விரைவில் கட்டுநாயக்கா விரைவுச் சாலையுடன் இணைக்கப்படவிருக்கிறது. இலங்கையை ஆசியாவிலேயே ஓர் அற்புத நாடாக்கும் அபிவிருத்தித் திட்டத்திற்கு இதன் ஊடாகத்தான் ஓர் உந்துதல் வழங்கப்படுகிறது. ஒரு கிராமத்தின் அபிவிருத்தியை அதன் பாதைகளை வைத்துத்தான் எடைபோடுவார்கள். அதனால்தான் எல்லாவற்றுக்கும் முதலாகப் பாதைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலை நாட்டின் அபிவிருத்தியைக் கோடிட்டுக்காட்டும் என்பதில் ஐயமில்லை.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.