புத் 63 இல. 48

சர்வதாரி வருடம் கார்த்திகை மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 முஹர்ரம் பிறை 01

SUNDAY NOVEMBER 27,  2011

 
யாழில் திடீரென முளைக்கும் விடுதிகளால் என்றுமில்லாதவாறு கலாசார சீரழிவு!

யாழில் திடீரென முளைக்கும் விடுதிகளால் என்றுமில்லாதவாறு கலாசார சீரழிவு!

யாழ்ப்பாணத்தில் இன்று மூலைமுடுக்கிலெல்லாம் விடுதிகள் இயங்குகின்றன. தென்னிலங்கையிலிருந்து வருவோர் மட்டுமல்லாது வெளிநாடுகளிலிருந்து வருபவர்களும் இங்கு தங்குகின்றனர். இவ்வாறு நடத்தப்படும் பல விடுதிகளுக்கு உரிய அனுமதிப்பத்திரங்கள் கிடையாது.

தாம் நினைத்த மாத்திரத்தில் அல்லது ஏதாவது அரசியல் பின்னணியை கொண்டு பயமின்றி இவர்கள் விடுதிகளை இஷ்டம்போல் நடத்திவருகின்றனர். பல இடங்களில் குறிப்பாக நகர்ப்பகுதியில் வீடுகள் பலவும் விடுதிகளாக இயங்குகின்றன.

உண்மையில் ஒரு விடுதியை நடத்துவதாயின் அதற்குப் பல சட்டதிட்டங்கள் உள்ளன. தங்க வருபவர்களின் பாதுகாப்பு, வசதி போன்ற அடிப்படைத் தேவைகள் அங்கு இருக்க வேண்டும். அவ்வாறான வசதிகள் உள்ளனவா என்பதை நேரில் சென்று பரிசீலணை செய்தே அதிகாரிகள் விடுதி நடத்துவதற்கான அனுமதியை வழங்குவார்கள். இதுவே நாட்டின் ஏனைய பிரதேசங்களிலுள்ள வழமையான நடைமுறையாகும்.

ஆனால் யாழ்ப்பாணத்தில் பெரும்பாலான விடுதிகளுக்கு இத்தகைய அனுமதிப்பத்திரமே கிடையாது. அதனால் அது முறையாக இயங்குகிறதா என்பதை பரிசோதனை செய்ய அதிகாரிகள் செல்வதில்லை.

அனுமதிப் பத்திரமில்லாது இயங்கும் விடுதிகளைக் கண்டுபிடித்து சீல் வைப்பதுடன் அதனைச் சட்டவிரோதமாக நடத்தியமைக்காக அதன் உரிமையாளரைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியது பொலிஸாரின் பொறுப்பு. ஆனால் பொலிஸார் இதனை முறையாகச் செய்கின்றனரா என்பது இப்போது யாழ்ப்பாணத்தில் கேள்விக் குறியாகவே உள்ளதாகத் தெரிகிறது.

காரணம் அண்மைக்காலமாக இந்த சட்டவிரோத விடுதிகள், மற்றும் அனுமதிபெற்று இயங்கும் விடுதிகளில் இடம்பெற்றுவரும் சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் இச்சந்தேகத்தை எழுப்பியுள்ளது. சில இணையத்தளங்கள் சில சம்பவங்களை மிகைப்படுத்திக் கூறினாலும் உள்ளூர் ஊடகங்களில் வெளிவரும் செய்திகள் யாழ்ப்பாணத்தில் இப்படியா? எனச் சந்தேகம் கொள்ள வைக்கிறது.

அண்மையில் ஒரு விடுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்டார்கள் எனச் சில இளம் பெண்கள் கையும் களவுமாகப் பிடிபட்டனர். பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இளம் பெண்களில் பலர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ்ப் பெண்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. இச் செய்தியைப் பத்திரிகைகளில் வாசித்த பலருக்கும் அதிர்ச்சி. எப்படி இருந்த யாழ்ப்பாணத்தில் இப்படியா என ஒவ்வொருவர் மனதிலும் கேள்வி எழுந்தது.

யுத்தம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டதும் ஏ-9 பாதை திறக்கப்பட்டது. அதனால் யாழ்ப்பாணத் திற்கு எவரும் வந்துபோகும் நிலை ஏற்பட்டது. எவ்விதமான கட்டுப்பாடும் கிடையாது. இவ்வாறு வந்துசெல்லும் நபர்கள் தங்குவதற்குத் தங்குமிட தேவையேற்பட்டபோது பலரும் வருமானத்தை ஈட்டுவதற்காக சிறிய இடங்களைக் கூடத் திருத்தி தங்குமிட விடுதிகளாக்கினர்.

அவ்வாறு ஆரம்பித்து தங்குபவர்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரிக்க தங்குமிடத்திலேயே மதுபான வகைகள் அனுமதி பெறாமலேயே தாராளமாக விநியோகிக்கப்படுகிறது. அதன் பின்னர் தங்க வருபவர்களை மேலும் ஈர்ப்பதற்காக மதுவுடன் சேர்த்து மாதுக்களையும் ஒரு சில விடுதி உரிமையாளர்கள் விநியோகிக்கத் தொடங்கினர்.

அதன் பரிணாம வளர்ச்சியின் ஒரு அங்கமாகவே அண்மையில் அந்த விடுதியில் கைதான இளம் பெண்கள் விவகாரமும் அமைந்துள்ளது. சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் பொலிஸார் தமது கடமையில் இறுக்கமாக இருந்திருந்தால் இந்நிலை ஒருபோதும் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஒரு சம்பம் நடந்த பின்னர் அதனைக் கண்டுபிடித்து விசாரணை நடத்துவது பெரிய கெட்டித்தனமாகக் கொள்ள முடியாது. நடக்கவிடாமல் தடுப்பதே உண்மையான கெட்டித்தனம்.

யாழ்ப்பாணத்தில் இதுபோன்ற கலாசார சீரழிவுச் சம்பவங்கள் இடம்பெறுகிறது என்பது ஊடகங்கள் வாயிலாக பலதடவைகள் சுட்டிக்காட்டப்பட்டுக் கொண்டே வருகிறது. அதனால் பொலிஸார் இவ்விடயத்தில் விழிப்பாக இருந்திருக்க வேண்டும். இப்போதாவது விழிப்படைய வேண்டும். இனிமேல் இவ்வாறானதொரு சம்பவத்திற்கு இடமளிக்கக் கூடாது.

சிலர் யாழ்ப்பாணத்தில் கலாசார சீரழிவை வேண்டுமென்றே ஏற்படுத்தி உயர் கலாசார பண்பாட்டு விழுமியங்கள் மிக்க வடக்கின் தமிழர் பாரம்பரிய மண்ணுக்கு அவப்பெயரை ஏற்படுத்த முனைகின்றனர். அதனால்தான் சில முகவரியற்ற இணையத்தளங்கள் இதுபோன்ற செய்திகளுக்கு கை, கால் வைத்து பிரசுரித்து வருகின்றது.

யாழ். விடுதி ஒன்றில் இறுதியாக நடந்த அச்சம்பவமே இறுதியாக இருக்க வேண்டும். இனியும் இதுபோன்ற சம் பவத்திற்கு இடமளிக்கக் கூடாது. இவ் விடயத்தில் பொலிஸாரினது பங்களிப்பு மிக முக்கியமாக உள்ளது.

வடக்கில் இன்று என்றுமில்லாதவாறு கலாசாரம் சீரழிந்து வருகிறது என்று சொன்னால் அதனைப் பெரிதாக ஒருவரும் மறுக்கமாட்டார்கள். ஆனால் மண்பற்றுள்ள சிலர் அவ்வாறு எதிவுமில்லை, எல்லாம் இந்தப் பத்திரிகைகள் திரிபுபடுத்தும் பொய்யான செய்திகளே இத்தகையதொரு பிரசாரத்துக்குக் காரணம் என்று சொல்லுவர். அதிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் உண்மைகள் மறைக்கவும் முடியாது.

உண்மையில் யாழ்ப்பாணத்திலே உருவான தமிழர் கலாசாரம் பண்பாடு, உபசரிப்பு, ஒற்றுமை எல்லாவற்றுக்கும் என்ன நடந்தது என்ற கேள்வி இப்போது ஒவ்வொருவர் மனங்களிலும் எழ ஆரம்பித்துள்ளது. இதற்குக் காரணம் அண்மைக் காலமாக ஊடகங்களில் வெளியாகி வரும் செய்திகளே! அதுவும் தமிழ் மக்கள் வெட்கித் தலைகுனியும் அளவிற்கு மிகவும் தரக்குறைவான நடத்தைகள் தொடர்பான செய்திகள் முழுத் தமிழ்ச் சமூகத்தையும் பாதிப்படையச் செய்துள்ளது.

சிறந்த கல்வியறிவும், கலாசார பண்பாடும் கொண்ட யாழ்ப்பாண சமூகத்திலிருந்து இவ்வாறான கலாசார சீர்குழைவுச் செய்திகள் வெளிவருவது ஒட்டுமொத்த அப்பிரதேச மக்கள் அனைவருக்கும் இழிவை ஏற்படுத்துகிறது. எனவே இதற்குக் காரணமான சக்திகளை அல்லது தனிநபர்களைக் கண்டு பிடித்து சட்டத்தின் முன்னாள் நிறுத்துவது அனைவரதும் தலையாய கடமையாக உள்ளது.

யாழ்ப்பாண மக்களின் பிரதிநிதிகளாக இருப்போர் இவ்விடயங்களிலும் அக்கறை செலுத்துவது நல்லது. வெறுமனே அரசாங்கத்தைக் குறை கூறுவதால் மக்களுக்குச் சேவை செய்வதாக நினைத்துத் திருப்திப் படக்கூடாது. இவ்வாறான குறைகளை அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்து நடவடிக்கை எடுக்க வேண்டியதும் மக்கள் பிரதிநிதிகளின் கடமையாகும்.

இப்போது யாழ்ப்பாணத்தில் சகல பிரதேசங்களிலும் பொலிஸ் நிலையங்கள் இயங்குகின்றன. இராணுவ முகாம்களும், காப்பரண்களும் கூட ஆங்காங்கே உள்ளன. எனவே பொதுமக்கள் எவர் மீதாவது சந்தேகம் கொண்டால் அது குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கலாம். எமக்கு என்ன என்று அல்லது இதனால் வீண் பிரச்சினைக்கு முகம் கொடுக்க நேரிடும் என்று நினைக்கக் கூடாது. அவ்வாறு ஒவ்வொருவரும் நினைத்தால் நிலைமையை யார் சரி செய்வது?

அதே போன்று பொதுமக்கள் தெரிவிக்கும் முறைப்பாடுகளுக்கு பொலிஸாரும் பொறுப்புடன் செயலா ற்ற வேண்டும். சில சந்தர்ப்பங்களில் பொலிஸார் அசமந்தப் போக்குடன் செயற்பட்டுள்ளதாகவும், மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதில் உண்மையில்லாமல் இல்லை. ஆனால் அதற்கு மக்கள் சட்டத்தை கையில் எடுக்க முனையக் கூடாது. பொலிஸார் சட்டத்தை இறுக்கமாக கடைபிடித்தாலே குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த முடியும்.

ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தாரைப் பார்த்து எமது பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ளக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஏனைய பிரதேச மக்கள் விரும்பியதுண்டு. ஆனால் இன்று அதே யாழ்ப்பாணத்தில் நடப்பவற்றைக் கேட்டால் பயமாக உள்ளது. கோயில், குளம், தீர்த்தம், என்று பண்பாட்டு விழுமியங்களுடன் மிளிர்ந்த யாழ்ப்பாணம் இப்போது பீச், ஹோட்டல், லொட்ஜ் என்று களியாட்ட பிரதேசமாகிவிட்டது.

இதில் யாரையும் சொல்லிக் குற்றமில்லை. எல்லாம் பெற்றுத் தருகிறோம் என்று வீர வசனம் பேசி ஆயுதங்களுடன் புறப்பட்டவர்கள் எமக்கு விட்டுச் சென்ற சொத்துத் தான் இவை. அவர்கள் எதையுமே பெற்றுத் தராவிட்டாலும் இந்தப் பெயரையாவது பெற்றுத் தராமல் விட்டிருக்கலாம்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.