புத் 63 இல. 48

சர்வதாரி வருடம் கார்த்திகை மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 முஹர்ரம் பிறை 01

SUNDAY NOVEMBER 27,  2011

 
ரிசானாவுக்கு விடுதலை கிடைக்குமா?

ரிசானாவுக்கு விடுதலை கிடைக்குமா?

சுஐப் எம். காசிம்

,ன, மத பேதமின்றி எல்லா மக்களினதும் கவனத்தையும் அனுதாபத்தையும் பெற்றுக்கொண்ட சம்பவம் தான் ரிஸானா நபீக் எனும் பணிப் பெண்ணுக்குக் கிடைத்த மரண தண்டனையாகும்.

வறுமையின் கோரம் தாங்க முடியாத மூதூரைச் சேர்ந்த நபீக் எனும் தந்தை தனது அன்பு மகள் ரிஸானாவை பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பணிப்பெண்ணாக சவூதியிலுள்ள ரியாத் நகருக்கு அனுப்பி வைத்தார். ரிசானா அனுப்பும் பணத்தால் தமது வறுமை தீரும் என்ற அவரது ஆசைக் கனவுகள் குறுகிய காலத்தில் நிராசையாகின. 2005 மே மாதம் 4ம் திகதி ரிசானா ரியாதுக்குச் சென்று ஒரு கிராமத்து வீட்டில் பணிப்பெண்ணாகப் பணியாற்றினார். பால் புகட்டும் போது நய்வ் ஜிஸியான் காலவ் என்ற எஜமான ரின் ஆண் குழந்தை மரணமாக நேர்ந் தது. தனது குழந்தை இறந்த துக்கத்தில் நடவடிக்கை மேற்கொண்ட அந்தக் குடும்பம் பொலிஸில் முறையிட்டது.

சம்பவம் நீதிமன்றத்தில் வழக்காக மாறி 2007 ஜூன் 16இல் ரிஸானாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தீர்ப்பை ஆட்சேபித்ததால் மேன்முறையீடு செய்யவும் ரிசானாவுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. உயர் நீதிமன்றத்தில் வழக்கை கையாள மேலும் விபரங்கள் தேவைப்பட்டன. எனவே உயர் நீதிமன் றம் வழக்கை மீண்டும் தவா¡தாமி எனும் தீர்ப்பளித்த நீதிமன்றத்தில் பாரப்படுத்தி யது. உயர் நீதிமன்றம் வழக்கை எடுத்துக் கொள்ள கொங்கொங்கை தளமாகக் கொண்ட ஆசிய மனித உரிமை குழு சவூதியின் சட்ட நிறுவனமான காதே அலி சமாரிக்கு ரிசானா சார்பில் ஆஜராக நிதி உதவி வழங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

உயர் நீதிமன்றத்திலே ரிசானாவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை ஊர்ஜிதம் செய்யப்பட்டது. சவூதி அரசின் இஸ்லாமிய ஷரீஆ சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்பை மேலும் சட்டரீதியாகக் கொண்டு நடத்த முடியாத சிக்கல் நிலை ஏற்பட்டது. ரிசானாவின் மரண தண்டனை விஷயம் நமது நாட்டில் மட்டுமல்ல பல சர்வதேச நாடுகளுக்கும் தெரிய வந்தது. ஏழைப்பெண்ணான ரிசானாவுக்கு கருணை காட்டுமாறு பல சர்வதேச நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தன.

ஜனாதிபதி மஹிந்தவும் ரிசானாவின் மீது கருணை காட்டுமாறு உருக்கமாக எழுதிய கடிதம் ஒன்றை மன்னருக்கு அனுப்பி வைத்தார். சிறையில் வாடும் ரிசானாவை பார்க்கச் சென்ற சமூகப் பணியாளகைள் ரிசானா தனது பெற்றோரைப் பார்க்க விரும்புவதாகத் தெரிவித்தனர். சவூதியில் பணிபுரியும் இலங்கையைச் சேர்ந்த டாக்டர் கிபாயா ரிஸானாவின் நலனில் அக்கறை காட்டி அடிக்கடி விடயங்களைத் தெரிவித்து வந்தார். சிறையிலே ரிசானா அழுதழுது தொழுகையில் ஈடுபடுவதாகவும் பிரார்த்தனையில் ஈடுபடுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இறந்த குழந்தையின் பெற்றோர் ரிசானாவை மன்னிக்காதவரை ரிசானாவுக்கு மீட்சியில்லை என்ற நிலைப்பாடு உருவாகியது. சவூதியிலுள்ள இலங்கைத் தூதரகம் மூலம் ரிசானாவை மன்னிக்குமாறு உருக்கமான கடிதங்களையும் அனுப்பியது. ரிசானாவுக்கும் அவரது குடும்பத்துக்கும் ஏற்பட்ட துன்பத்தை போக்கும் சக்தி இறைவனுக்கேயுண்டு என்ற முழு நம்பிக்கையோடு மூதூர் மக்கள் ரிசானாவின் விடுதலைக்காக கூட்டுத் தொழுகையில் ஈடுபட்டனர். சிறுவர் முதல் பெரியவர் வரை அழுது தொழுது கண்ணீர் மல்கிய காட்சி மக்கள் மனதை மனமுருகச் செய்தது.

ரிசானாவின் விடுதலை தொடர்பாக இலங்கையிலிருந்து பல குழுக்கள் சவூதி சென்று பேச்சுவார்த்தை நடத்தின. குறிப்பாக அமைச்சர்களான ரிசாத், ஹக்கீம், அமைச்சர் டிலான் பெரேரா மற்றும் உயரதிகாரிபளும் பல தடவை அங்கு சென்று பேச்சில் ஈடுபட்டனர். அவரது விடுதலைக்காக பல்வேறுபட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஜம்இய்யத்துல் உலமா மேற்கொண்ட பிரயத்தனங்களும் அளப்பரியன.

இவர்களது புத்திசாதுரியமான பேச்சுவார்த்தைகளால் ரிசானாவின் மரண தண்டனைக்காலம் ஒத்திப்போடப்பட்டது. மேலும் ஜனாதிபதியின் உருக்கமான வேண்டுகோளும் வெளிவிவகார அமைச்சின் மனிதாபிமான செயற்பாடுகளும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொருத்தமான முன்னெடுப்புகளும் சவூதியிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் அனுசரணையும் இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் ஊக்கமான, அக்கறையான முயற்சிகளும் ரிசானாவின் விடுதலை பற்றி சிந்திக்க வழி வகுத்தன.

இந்த நிலையில் தான் ரிசானாவுக்கு மன்னிப்பு வழங்கி விடுவிக்குமாறு கோர இலங்கை அரசின் சார்பில் உயர்மட்டத் தூதுக்குழு ஒன்று சவூதிக்கு சென்றது. மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா தலைமையிலான இத்தூதுக் குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ. எச். எம். அஸ்வர் எம். எஸ். எம். தெளபீக் வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளர் நிஸங்க விஜேரட்ண, வெளிநாட்ட வேலைவாய்ப்பு பணியகத் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க, வெளிவிவகார அமைச்சின் மேலதிகச் செயலாளர் இப்ராஹிம் அன்ஸார், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிரதிப் பொதுச் செயலாளர் மெளலவி தாஸிம், குவைத்திலுள்ள இலங்கை தூதரக அதிகாரி மெளலவி சரூக், மெளலவி எம். ஜே. எம். இம்ரான் ஹஸன் மெளலானா ஆகியோர் இடம்பெற்றனர்.

அவர்களோடு ரிஸானாவின் பெற்றோரும் அங்கு சென்றனர். ரிசானா பணியாற்றிய வீட்டு உரிமையாளரையும் அவரது கோத்திரத் தலைவரையும் சந்திப்பதற்கான ஒழுங்குகள் சவூதியிலுள்ள இலங்கைத் தூதுவர் அஹமட் ஜவாட் செய்திருந்தார். ரியாத்துக்கு சென்ற உயர் மட்டக் குழுவினர் அங்கிருந்து 450 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள தவாத்துமி பிரதேசத்தில் அமைந்த அல் ஜிம்ஸ் எனும் கிராமத்துக்கு 5 வாகனங்களில் பயணித்தனர். அப்பிரதேசத்திலே செல்வாக்குப் பெற்று விளங்கிய கோத்திரத் தலைவர் மற்றும் முக்கிய பிரமுகர்களைச் சந்தித்தனர்.

இலங்கைக்குழுவின் விஜயம் சவூதியிலுள்ள இலங்கைத் தூதரகத்தால் ஏற்கனவே அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கிணங்க கோத்திரத் தலைவரும் முக்கிய பிரமுகர்களும் அங்குள்ள கலாசார மண்டபத்தில் அங்குள்ள முறைப்படி ஊத் எனும் மனப்புகை பிடித்து வரவேற்றனர். அவர்களுக்கு விருந்துபசாரமும் அளித்தனர். இந்தச் சந்திப்பில் 25க்கு மேற்பட்ட வாகனங்களில் வந்த 250 பேர் வரையான அரபி முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்த மண்டபத்தில் நடந்த கூட்டத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிரதிப் பொதுச் செயலாளர் மெளலவி தாஸிம் தங்கள் விஜயத்தின் நோக்கம் பற்றி அரபு மொழியில் உரை நிகழ்த்தினார்.

“இலங்கை முஸ்லிம்களான நாம் சிறுபான்¨மானராக அங்கு வாழ்கின்றோம். நாம் வாழும் நாடு ஒரு பெளத்த நாடாக இருந்த போதும் முஸ்லிம்கள் தமது சமய, கலாசார செயற்பாடுகளை சுதந்திரமாக சுயாதீனமாக மேற்கொள்கின்றோம். எமது நாட்டில் வாழும் பல்லின மக்களுடன் ஒற்றுமையாகவும் அந்நியோன்யமாகவும் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். எமது நாட்டு ஜனாதிபதி பெளத்த மதத்தைச் சேர்ந்தவராயினும் முஸ்லிம்களைக் கண்ணியப்படுத்தி மதிப்பவர். ரிசானாவின் விடுதலையில் அவர் மிகவும் அக்கறையுடன் செயற்படுகின்றார்.

உலகிலேயே இஸ்லாமிய ஷரிஆ சட்டத்தை சரியாக அமுல்படுத்தும் சிறப்புக்கும் பெருமைக்கும் உரிய நாடு சவூதி என்பதை நாமறிவோம்.

முஸ்லிம்களாகிய நாமும் ஷரிஆ சட்டத்தை பெரிதும் மதிப்பவர்கள், மதிக்கின்றோம். சவூதியின் நீதித்துறை, நீதிமன்றங்களின் நடைமுறை, நீதிபதிகளின் நேர்மையான செயற்பாடு அனைத்தையும் மதிக்கின்றோம். ரிஸானாவுக்காகப் பரிந்து பேச நாம் இங்கு வரவில்லை. எனினும் இஸ்லாமிய ஷரீஆவுக்கு அமையவும் அல்குர்ஆனின் சட்ட திட்டங்களுக்கு அமையவும் ரிசானாவுக்கு மன்னிப்பு வழங்குமாறு வேண்டிக் கொள்ளவுமே நாம் இங்கு வந்துள்ளோம். நமது இஸ்லாம் சாந்தி, சமாதானத்தின் ஊற்று, அன்பு, கருணை, இரக்கம், மனிதாபிமானம் ஆகிய வற்றை உலகுக்குப் போதித்த சன்மார்க்கம். ரிசானா ஓர் ஏழைப்பெண். அவவுக்கு மன்னிப்பு வழங்குமாறு உங்கள் அனைவரையும் தாழ்மையாக வேண்டி நிற்கின்றோம்.

உங்களது கோத்திரத்தின் அன்பான நடவடிக்கை மூலமாகவும் சவூதி அரசின் செயற்பாடுகள் மூலமாகவும் எமது வேண்டுகோளுக்கான திருப்திகரமான பதில் தருவீர்களென நம்புகின்றோம். ரிசானா பணியாற்றிய வீட்டுப்பெற்றோரையும் சந்தித்து அவர்களது மன்னிப்போடு ரிசானாவுக்கு விடுதலை வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம் என்று கூறினார். அதனைத் தொடர்ந்து மெளலவி இம்ரான் ஷரிஆ சட்டதிட்டப்படி அரபி மொழியில் உரையாற்றினர். பின்னர் அலவி மெளலானா, இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்குமுள்ள பண்டைய தொடர்புகள் பற்றி எடுத்துரைத்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் இலங்கை மக்களுக்கும் அரபு மக்களுக்குமிடையிலான வரலாற்று ரீதியான தொடர்புகளை விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்துரைத்தார். இவர்களது பேச்சை மெளலவி தாஸிம் அரபியில் மொழி பெயர்த்தார்.

கூட்டத்திற்கு வருகை தந்த கோத்திரத் தலைவர்களும் பிரமுகர்களும் மகிழ்ச்சியும் திருப்த்தியும் கொண்டவர்களாகக் காணப்பட்டனர்.

ரிசானாவுக்கு மன்னிப்பு வழங்க வேண்டுமென எல்லோரும் குறிப்பிட்டனர். மேலும் எமது பிரதேசத்துக்கு வருகை தந்ததையிட்டு மகிழ்ச்சி அடைகின்றோம். ரிசானாவுக்கு மன்னிப்பளிப்பதற்கான சகல நடவடிக்கையும் மேற்கொள்வோம் என கோத்திரத் தலைவர் குறிப்பிட்டார். ரிசானாவின் தந்தை நபீக் கோத்திரத் தலைவரின் கரங்களைப் பற்றிப் பிடித்து அழுத புலம்பிய போது உணர்ச்சி வசப்பட்டடு கோத்திரத் தலைவரும் கண்ணீர் சிந்தினார்.

பின்னர் இலங்கைக் குழுவினர் ரிசானா பணிபுரிந்த வீட்டுப் பெண்மணியின் தந்தையான ஷேக் மிர்தாஸ் பஹ்த் அல் உதைபியையும் அந்தப் பெண்மணியின் சகோதரனையும் சந்தித்தனர். இவர்களது வீடு குறிப்பிட்ட கலாசார மண்டபத்திலிருந்து 15 கிலோ மீற்றர் தொலைவில் இருக்கின்றது. மிர்தாஸ் பஹ்த் இவர்களை அன்போடு வரவேற்று விருந்துபசாரம் அளித்தார். ரிசானாவை மன்னித்து விடுதலை செய்வது தொடர்பாக இறந்த பிள்ளையின் பெற்றோரைச் சந்திக்கவும் ஏற்பாடுகள் செய்வதாக உறுதியளித்தார்.

முதிர்ந்த வயதிலே பல்லாயிரம் மைல்கள் பயணித்த பின் அங்கிருந்து 465 கிலோ மீற்றர் வரை வாகனத்தில் இளைப்பு, களைப்பின்றிப் பயணித்த அலவி மெளலானாவின் ஆர்வத்தையும் உத்வேகத்தையும் குழுவிலுள்ள சிலர் மெச்சிப் பேசினர்.

சவூதி சென்றுள்ள ரிசானாவின் பெற்றோர்கள் சிறையிலுள்ள ரிசானாவை சந்திக்க ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன. தன் மகளைச் சந்தித்த அவர்கள் கூடிய விரைவில் ரிசானாவை வீட்டுக்கு அழைத்துச் செல்ல அல்லாஹ் நாடுவான் என நம்பிக்கை ஊட்டினர். இம்மாதம் 15ம் திகதி நடந்த இந்த உணர்ச்சி பூர்வமான சந்திப்பில் ரிசானா தன்னை வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு தனது தந்தை மொஹமட்டிடமும் தாயார் ரிபானாவிடமும் அழுதழுது கெஞ்சியுள்ளார்.

விஷயங்கள் சாதகமாக முடியும்வரை ரிசானாவின் பெற்றோர் ரியாத்திலுள்ள ஹோட்டலில் தற்பொழுது தங்கியுள்ளனர். ரிசானாவுக்கு மரண தன்டனை விதிக்கப்பட்டது முதல் இதுவரையான காலப்பகுதிக்குள் ரிசானாவின் விடுதலைக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் அனைவருக்கும் முஸ்லிம்கள் சார்பாக ஜம்இய்யத்துல் உலமா சபை நன்றி தெரிவிப்பதாக மெளலவி தாஸிம் குறிப்பிட்டார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.