புத் 63 இல. 48

சர்வதாரி வருடம் கார்த்திகை மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 முஹர்ரம் பிறை 01

SUNDAY NOVEMBER 27,  2011

 
ஏழாவது ஆண்டில் தடம் பதிக்கும் ஜனாதிபதியின் சேவைக்கு பெருந்தோட்ட மக்கள் வாழ்த்து.

ஏழாவது ஆண்டில் தடம் பதிக்கும் ஜனாதிபதியின் சேவைக்கு பெருந்தோட்ட மக்கள் வாழ்த்து.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 66 வது பிறந்த தினம் மற்றும் 6வது வருட பதவி நிறைவை முன்னிட்டு அவரை வாழ்த்தும் முகமாக கொழும்பு காலிமுகத்திடலில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகம் காணொளி உருமாற்றம் (Video Mapping) ஒளிப்படுத்தப்படும் காட்சி கடந்த ஞாயிறன்று நடைபெற்றது.

கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சரும் இ.தொ.காவின் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் ஏற்பாட்டில் வெகு விமர்சையாக நடைபெற்ற இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் தி.மு. ஜயரட்ண உட்பட சபாநாயகர் சமல் ராஜபக்ஷ உட்பட பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய கால்நடை வள அபிவிருத்தி சபை, மில்கோ, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம், மகாவலி அபிவிருத்தி சபை ஆகியன இணைந்து கொண்டன.

இலங்கையில் முதன் முறையாக நடைபெற்ற இந்த பிரமாண்ட கானொளி உருமாற்ற கண்காட்சியானது சுமார் 10 இற்கு மேற்பட்ட வெளிநாடுகளில் பயிற்சி பெற்ற மற்றும் 50 உள்நாட்டு தொழில்நுட்ப கலைஞர்களினால் முற்றிலும் கணனிமயப்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்டது. சுமார் ஒரு வார கால முயற்சியின் பயனாக உருவாக்கப்பட்ட இக்காணொளி உருமாற்ற காட்சி முற்றிலும் கண்கவரும் கலையம்சமாக காணப்பட்ட அதேவேளை சிறுவர்கள் மற்றும் அனைத்து பெரியோர்களையும் மிகவும் கவர்ந்திருந்தது.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றமையால் காலிமுகத்திடலுக்கு வருகை தந்திருந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பார்த்து ரசித்தனர். மிகவும் பிரமாண்டமான புரொஜக்டர் ஊடாக ஒளிக்கதிர்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு பாய்ச்சப்பட்டு அதனூடாக சாகசங்கள் நிகழ்த்தப்பட்டதன் பாரிய மின்குமிழ்கள் ஒளிமாற்றியமைத்தும் சாகசங்கள் காட்டப்பட்டன.

இன்றைய நவீன தொழில்நுட்ப யுகத்தின் செயற்பாடுகளுக்கு ஏற்ப அமைக்கப்பட்ட இச் செயற்திட்டமானது அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் முயற்சியால் மேற்கொள்ளப்பட்டது. ஒரு விடயத்தை முறையாகவும் வித்தியாசமாகவும் அதேவேளை மக்களைக் கவரும் தன்மையில் செயற்படுத்த வேண்டும் என்ற அவரின் சிந்தனையில் உருவான இந்நிகழ்வு நாட்டின் அனைத்து மக்களையும் ஒருகணம் திகைக்க வைப்பதுடன் வித்தியாசமாகவும் காணப்பட்டது.

இன்று மலையகம் அரசியல், சமூக, பொருளாதார, கல்வி போன்ற அனைத்து துறைகளிலும் அபிவிருத்தி அடைந்து வருகின்றது. ஜனாதிபதி தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தர உயர்விற்கும் மேம்பாட்டிற்கும் அரிய பல திட்டங்களை பாரபட்சமின்றி நடைமுறைப்படுத்தி வருகிறார். இவரின் வருகையால் மலையகத்தில் பாரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்பதை பறைசாற்றும் வகையிலும் இந்த காணொளி உருமாற்ற வாழ்த்துச் செய்தி மலையக தோட்ட தொழிலாளர்கள் சார்பில் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மலையக தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை வளர்ச்சி முன்னரை விட தற்போது பாரிய (உரு) மாற்றங்களை பெற்று வருகின்றது. இச்சந்தர்ப்பத்தில் அமரர் செளமியமூர்த்தி தொண்டமான் நினைவுகூரத்தக்கவர். அவரின் உருவச் சிலையும் ஜனாதிபதி செயலக வளாகத்தில் அமைந்துள்ளது. மஹிந்த சிந்தனையின் கீழ் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் மலையகத்தில் மாற்றம் ஏற்பட்டு வருகின்றது.

அதனடிப்படையில் ஆசிரியர் நியமனம், மலையக இளைஞர்களுக்கு அரசாங்க நிரந்தர நியமனங்கள் ஆகியவற்றை வழங்கியுள்ளார். இந்நியமனங்களானது மலையக சமூகத்தின் அபிவிருத்தி பாதையை விஸ்தரிக்க செய்ததோடு கல்வித்துறையில் தனக்கென ஒரு இடத்தையும் தக்கவைத்து கொள்ளச் செய்தது என்றால் மிகையில்லை.

மஹிந்த சிந்தனையின் கீழ் மலையகத்தின் உட்கட்டமைப்பு மற்றும் வீதி அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இப்பாதை அபிவிருத்தியானது மலையகத்தின் அனைத்துவிதமான அபிவிருத்திக்கும் திறவுகோலாக அமைந்துள்ளதோடு தோட்டப் பகுதிகள் முழுதும் மின்சார இணைப்பு வழங்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. மலையக சமூகத்தில் வீடில்லா பிரச்சினை கெளரவ ஜனாதிபதி அவர்களால் வீடற்றோருக்கு, வீடு என்ற தொனிப் பொருளில் நிவர்த்தி செய்யும் வகையில் இன்று புதிய உத்வேகம் அளிக்கப்பட்டு பல வீடமைப்பு திட்டங்கள் மலையகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இது மாத்திரமன்றி சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. உதாரணமாக நுவரெலியா, டிக்கோயா, கிளங்கன் போன்ற வைத்தியசாலைகள் நவீன தொழில்நுட்பங்களை கொண்டு மக்களுக்கு சுகாதார சேவைகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இது மாத்திரமல்லாது தேசிய சுகாதார வாரத்தின் போது மஹிந்த சிந்தனைக்கமைய மலையகத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கு விஜயம் மேற்கொண்டு அவற்றின் குறைபாடுகள் இனங்காணப்பட்டு அவற்றை நிவர்த்தி செய்வதற்கான பரிந்துரை சுகாதார அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் இன்னும் ஐந்து ஆண்டுகளில் மலையகத்தின் சுகாதாரம் முன்னோக்கி நிற்பதற்கான வாய்ப்புகள் ஜனாதிபதி அவர்களால் மலையக சமூகத்திற்கு கிட்டியுள்ளது.

தொழிலில்லா பிரச்சினையை எதிர்கொள்ளும் வகையில் இன்று மலையக இளைஞர் யுவதிகள் தயார்படுத்தப்படுகின்றனர். மலையக இளைஞர், யுவதிகளுக்கு தொண்டமான் தொழில் பயிற்சி நிலையம், நவசக்தி, பிரஜாசக்தி செயற்திட்டங்களின் ஊடாக சுயதொழில் பயிற்சிகள் மற்றும் தொழில் பயிற்சிகள் என்பன வழங்கப்பட்டு தொழில்சார் உலகில் உள்வாங்கப்படுகின்றார்கள்.

அது மாத்திரமன்றி நவசக்தி செயற்திட்டத்தின் கீழ் சுயதொழிலாளர்களை ஊக்குவிக்கும் கடன் உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. தொண்டமான் தொழில் பயிற்சி நிலையத்தில் தொழில் பயிற்சிகளை நிறைவு செய்த 406 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதோடு அவர்களுக்கான சிறந்ததொரு எதிர்காலத்திற்கான அடிப்படை அத்திவாரமும் அமைக்கப்பட்டது. இவை மாத்திரமின்றி அண்மை காலங்களில் மலையகத்தின் பொருளாதார அபிவிருத்தி குறித்து கெளரவ ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையின் பின் பொருளாதாரத்தினை ஊக்குவிக்கும் வகையில் தரிசு நிலங்கள் பசும்புற் தரைகளாக மாற்றியமைக்கப்பட்டு வருகின்ற அதேவேளை அருகிவரும் நிலையிலுள்ள கால்நடை வளர்ப்பு செயற்பாடு மீளாய்வு செய்யப்பட்டு மலையகத்தில் புத்துயிர் அளிக்கப்பட்டு வருகின்றது.

இது மாத்திரமன்றி மலையக பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் முகமாக அண்மையில் அவர்களுக்கான நேர்காணல் இடம்பெற்றது. விண்ணப்பங்கள் கோரப்பட்டு ஜனாதிபதி செயலகத்திற்கு மேலதிக நடவடிக்கைகளுக்காக கையளிக்கப்பட்டுள்ளது. இதனூடாக எதிர்காலத்தில் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்புகள் பெற்றுக் கொடுக்கப்படும். இதைத்தவிர மலையகத்தின் சகலவிதமான அபிவிருத்தி திட்டங்களும் பாரிய அளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் மலையக இளைஞர், யுவதிகள் மத்தியில் விளையாட்டு திறன் விருந்திசெய்யப்பட்டு வருகின்றது. இதன் ஊடாக இளைஞர், யுவதிகள் உடல், உள ரீதியில் ஆளுமை மிக்கவர்களாக கட்டியெழுப்பப்படுகின்றனர்.

மலையக சமூகத்தின் மத்தியில் நுண்கலை, கணனி கல்வி போன்ற இன்னோரன்ன துறைகளை ஊக்குவிக்கும் வகையில் இறம்பொடை நுண்கலை கல்லூரி பிரஜாசக்தி நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டு மாணவர்கள் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். அண்மையில் நோர்வுட் விளையாட்டரங்கில் இடம்பெற்ற இளைஞர் மாநாடு இதனை பறைசாற்றியதோடு மலையக இளைஞர்களுக்கான சர்வதேச முகவரியையும் பெற்று கொடுத்தது. அத்தோடு ஆயிரம் பாடசாலைகள் திட்டத்தின் கீழ் மலையக பாடசாலைகளும் உள்வாங்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்படுவதற்கான சந்தர்ப்பமும் ஜனாதிபதி அவர்களினால் மலையகத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

ஜனாதிபதி, அமைச்சர் ஆறுமுகன் ஊடாக மலையக மக்களின் வாழ்வில் கலை கலாசார பண்பாடு பொருளாதார ரீதியில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு செயற்படுத்தப்படுகின்றது என்பதை மறுப்பதற்கில்லை. எனவே எதிர்காலத்தில் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவதன் மூலம் உலக முறைமையில் மலையக இளைஞர்கள் இணைத்து கொள்ளப்படுவதுடன் உலக பொருளாதாரத்துடன் இணைந்து செயற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்படுத்தப்பட்டு எமது மக்களும் எமது இளைஞர் பட்டாளமும் உலக முறைமையில் மிளிரும் நிலை ஏற்பட்டுள்ளது.

அத்தோடு தேசிய ரீதியில் ஏனைய இளைஞர்களை போல் மலையக இளைஞர்களுக்கும் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தில் காத்திரமான இடத்தினை வகிப்பதற்கான முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வரும் இத்தருணத்தில் ஜனாதிபதிக்கு மீண்டும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு தொடர்ந்தும் அவரின் கரத்தை பலப்படுத்தி எமது சமுதாயத்தை கட்டியெழுப்ப தொடர்ந்தும் பாடுபடுவோம் என அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.