புத் 63 இல. 48

சர்வதாரி வருடம் கார்த்திகை மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 முஹர்ரம் பிறை 01

SUNDAY NOVEMBER 27,  2011

எனது கவிதை

எனது கவிதை

- மூதூர் முகைதீன் -

சின்னச் சின்னக் கவி எழுதி
சிந்தை மாற்றம் செய்திடுவேன்
உன்னில் உதிரும் கண்ணீரை
உலகோர் அறிய உரைத்திடுவேன்
என்னில் ஓடும் குருதியையும்
எடுத்து எழுத்தாய் விதைத்திடுவேன்
*
கற்ற அறிவைக் கைக் கொண்டு
கருத்தாய் கவிதை படைத்திடுவேன்
புற்றாய் வளரும் புன்மைகளை
புரட்டிப் புதுமை புரிந்திடுவேன்
மற்றோர் உணர்வை மதிக்கின்ற
மனித நேயம் வளர்த்திடுவேன்.
*
கன்னியர் உடலைப் புகழ்ந்திடவும்
கதிரோன் உதயம் வாழ்த்திடவும்
வெண்மதி வரவின் வடி வினையே
வெளிச்சம் போட்டுக் காட்டிடவும்
முன்னிடம் கொடுத்து கவிதையிலே
முகவரி பெற நான் விரும்பவில்லை.
*
விதியை நொந்து விடிவின்றி
விரக்தி யுடனே புவிமீதில்
உதிரும் வியர்வை உருண்டோட
உழைத்து உண்போர் உயர்ந்திடவே
புதிய கவிதை புனைந்தே நான்
புலரும் பொழுதைக் காட்டிடுவேன்.
*
வலிமை யுள்ளேர் வறியோரை
வதைத்துச் சுரண்டி வாழ்கின்ற
இழிவு நிலைமை இல்லாமல்
இனிதாய் உலகம் இயங்டவே
எளியோர் உரிமைக் குரலாக
எனது கவிதை ஒலித்திடுமே.

பூமியை மிஞ்சிய பொறுமைக்கு
 

-மெய்யன் நடராஜ் (டோஹா கட்டார்) -

ஓட்ட பந்தயத்தில்
ஆமையோடு போட்டியிட்டு
தோற்றுப்போ

நத்தையோடு கைகோத்து
நகைச்சுவையாய்
பேசிக்கொண்டு
நடைபயிற்சி சென்று வா.

நுளம்புகளின் நூலகத்தில்
முகம் சுழிக்காமல்
சத்திய சோதனை
புத்தகம் படி.

அட்டைகளுக்கும்
மூட்டை பூச்சிகளுக்கும்
இரத்த தானம் வழங்கி
ஆனந்தப் படு

பிரதான சாலையோரங்களில்
வாகனங்களில்
மோதிவிடாதவாறு
எருமை மாடுகளை
மேய்த்துப்பார்.

முதியோர் இல்லங்களில்
ஆதரவற்றோர் படும்
அவஸ்தைகளுக்குள்
ஐக்கியப்படு

மதுபான சாலைகளில்
தேநீர் குடித்துவிட்டு
புகை பிடிக்காமல்
வெளியே வா

உண்மை பேசு
அறுநூறு அங்கங்கள்
கடந்து விட்டாலும்
இப்போதுதான் தொடங்கியுள்ளது
என்ற உற்சாகத்தோடு
அறுவையானபோதும்
அமைதியோடு
ஒன்று விடாமல்
தொலைக்காட்சித் தொடர்களை
தொடர்ந்து பார்

கிராமத்து ஒற்றையடி
பாதைகளில் மாட்டு வண்டி
ஓட்டு.

வாகன நெரிசல்களில்
உன்னை தாண்ட
எத்தனிக்கும்
எவருக்கும் வழி கொடுத்து
சமிக்ஞை ஒலி
எழுப்பாமல் வாகனம் ஓட்டு

ஒலிவாங்கி மன்னர்களின்
அண்ட புளுகுகளை
சலிக்காமல் செவிமடு

இது போன்று
உன்னால் முடியாதது
எதுவானாலும் உனக்கது
சாத்தியப்படுமானால்
உண்மையில் நீ
பொறுமையில் இந்த
பூமியை மிஞ்சலாம்.

 

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.