புத் 63 இல. 48

சர்வதாரி வருடம் கார்த்திகை மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 முஹர்ரம் பிறை 01

SUNDAY NOVEMBER 27,  2011

ஆசிரியையின் நகைகளைக் கழற்றிய பின் சடலத்தை தெருவில் வீசிய தம்பதிகள்

ஆசிரியையின் நகைகளைக் கழற்றிய பின் சடலத்தை தெருவில் வீசிய தம்பதிகள்

சிகையலங்காரத்துக்குச் சென்ற ஸ்ரீனிவாசனாவுக்கு நேர்ந்த கதி

2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இருபத்திநான்காம் திகதி சனிக்கிழமை கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்துக்கு வந்தவர் தன் மகள் காலையில் மின்சார கட்டண பில்லைகட்டி சலூனுக்கு சென்று வருவதாகக் கூறிச்சென்றவர் வீடு திரும்பவில்லை சலூனுக்கு சென்று விசாரித்ததில் அங்கு வரவில்லையென தெரிவித்தனர் என சார்ஜன்ட் ராஜகருணாவிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.

காணாமல் போயுள்ள “ஸ்ரீனிவாசனா அமரதுங்க” கொச்சிக்கடை, தலுவகொடுவையில் ஆசிரியர் தம்பதிகளின் புதல்வி. இவருக்கு தம்பியொருவருமுண்டு. தந்தை ஓய்வுபெற்ற பாடசாலை அதிபராகவும் தாய் ஆசிரியையாகவும் கடமையாற்றியவர்கள். ஸ்ரீனிவாசனாவும் நீர்கொழும்பு லொயெலா பாடசாலையில் ஆங்கில ஆசிரியையாக கடமையாற்றினார். ஆரம்பக் கல்வியை இப்பாடசாலையில் இவர் பெற்றிருந்தார். பொறியியலாளரான இவரது கணவர் வெளிநாட்டில் கடமையாற்றி வந்தார். வருடத்துக்கு ஒன்று அல்லது இரண்டு முறை இங்குவரும் கணவர் குடும்பத்திடமிருந்துவிட்டு மீண்டும் செல்வது வழமை ஆசிரியை ஸ்ரீனி விடுமுறைக் காலங்களில் கணவன் கடமையாற்றும் நாட்டுக்கு செல்வார்.

மகளுடன் தினமும் காலையில் பாடசாலை சென்று பகல் இரண்டரை மணியளவில் வீடு திரும்புமிவர் வார இறுதியில் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்க, நகருக்கு செல்வதுண்டு. 24ஆம் திகதி தனது தாய் ஸ்ரீனிவாசனா நகருக்குச் செல்ல பேரூந்தில் ஏறுவதை மகள் கண்டுள்ளார். இரண்டு அல்லது மூன்று மணித்தியாலங்களில் வீடு திரும்பும் தாய் அன்று வீடு திரும்பாததால் அவரது கையடக்கத் தொலைபேசியுடன் மகள் பல முறை தொடர்பு கொண்டும் பலனில்லாமல் போனது. பகலாகியும் தாய் பற்றி எத்தகவலுமில்லாததால் தாயின் அப்பா அம்மாவுக்கு இவை பற்றித் தெரிவிக்க அப்பா சலூனுக்கு சென்று விசாரித்ததில் அங்கு அன்று வரவில்லையென்றதும் அவர் பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு செய்தார்.

கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்தின் மூலம் இச்சம்பவம் ஏனைய பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டன. ஸ்ரீனி காணாமல் போன மறுதினம், பெண்ணொருவர் ஹேகித்தை கறுப்பு நதியினருகில் கொல்லப்பட்டுள்ளார் என்ற தகவல் வத்தளை பொலிஸாருக்கு காலை ஏழு மணியளவில் கிடைத்தது. உடனே குற்றத்தடுப்பு பிரிவினர் ஸ்தலத்துக்கு சென்ற போது நடுவயதுடைய பெண்ணொருவரின் சடலம் புற்கள் நிறைந்த பகுதியில் காணப்பட்டது. வாயிலிருந்து இரத்தம் கசிந்த நிலையில் முகப்பகுதி கறுத்திருந்தது. சடலத்தின் காலடியில் உடைந்த பிளாஸ்டிக் துண்டொன்று காணப்பட்டது.

கொலை செய்யப்பட்ட பின் இங்கு கொண்டுவந்து போடப்பட்டுள்ளதாகவும் பிளாஸ்டிக் பகுதி வாகனமொன்றுக்குரியது எனவும் கருத்துத் தெரிவித்தார் பொறுப்பதிகாரி. சடலம் பற்றிய செய்தி எங்கும் பரவியதும் அங்குவந்த ஒருவர் சடலத்துக்குரியவர் ஆசிரியையென்றும் வசிப்பிடத்தையும் தெரிவித்தார். கொச்சிக்கடை பொலிஸ் நிலையம் மூலம் இவை பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து உறவுமுறை சகோதரரொருவர் அங்கு வந்து சடலத்தை ஆசிரியையென அடையாளம் காண்பித்தார்.

களனி வட்டார குற்ற பிரிவு நிலைய பொறுப்பதிகாரி (சோகோ) லோறன்ஸ் தலைமையிலான குழு அப்பகுதியை சோதனை செய்து இடங்களை புகைப்படக் கருவி மூலம் பதிவு செய்தனர். வத்தளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிமல் ரத்னாயக்க விசாரணைகளுக்கு பொறுப்பாயிருந்தார். ஆசிரியை அணிந்திருந்த தங்க ஆபரணங்கள் களவாடப்பட்டிருந்தன.

ஆபரணங்களைப் பெறுவதற்காக இக்கொலை சம்பவித்திருக்கலாமெனவும் பொலிஸார் அனுமானித்தனர். இவர் அணிந்திருந்த தங்கமாலை மிகவும் பாரமானதெனவும், தங்க பிரேஸ்லட், மோதிரம், வீட்டிலிருந்து வெளியேறும் போது கொண்டுசென்ற பையில் கையடக்க தொலைபேசி, காலில் அணிந்திருந்த பாதணி ஆகியன அங்கு காணப்படவிலலை. வெளிக்காயங்கள் ஏதுமில்லை மேற்கூறப்பட்ட வைகளை பெறுவதற்காக இவர் கொல்லப்பட்டிருக்கலாமென பொறுப்பதிகாரி இதர அதிகாரிகளிடம் கருத்துத் தெரிவித்தார்.

இவரது சடலத்தின் பகுதிகள் மேலதிக பரிசோதனைக்காக இரசாயன பதிப்பாய்வாளருக்கு அனுப்புவதென தீர்மானிக்கப்பட்டது.

சடலத்தின் பக்கத்தில் காணப்பட்ட பிளாஸ்டிக் பகுதி விளையாட்டுப் பொருளினதாகும் என தெரியவந்தது. ஆசிரியையின் காணாமல் போன கையடக்க தொலைபேசி சிம் அட்டையை ஆராய்ந்த போது இவ்விலக்கம் நீர்கொழும்பு பகுதியினது என தெரியவந்ததுடன் பல நாட்களாக இவை செயலிழந்திருந்தன. பொலிஸார் தொடர்ந்தும் முயற்சி செய்தனர். ஒருவாரத்தின் பின் இவ்விலக்கம் பாவனையிலிருந்தது. நீர் கொழும்பு சிகை அலங்காரக் கடையொன்றில் பாவனையிலிருந்தது.

மாற்றுடையில் சென்ற பொலிஸார் தங்களது கையடக்க தொலைபேசி மூலம் அவ்விலக்கதுடன் தொடர்பு கொண்ட போது ஒருபெண் பதிலளித்தார். இவைபற்றிய தகவல்களை பொலிஸார் சேகரித்தனர். சிகை அலங்கார கடையை நடத்தும் பெண்ணிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

ஆசிரியை ஸ்ரீனிவாசனாவை தெரியாதென்றும் அவர் அங்கு வரவில்லையென்றும் கூற அவ்வாறெனில் கையடக்க தொலைபேசி எவ்வாறு கிடைத்ததென்று பொலிஸார் வினவ ஒரு நபரிடமிருந்து ஆயிரம் ரூபாவுக்கு வாங்கியதமாக அப்பெண் கூறினார். அந்நபரை அடையாளம் காட்ட உதவுமாறு பொலிஸார் கேட்க அப்பெண் அமைதியானார். இவர் பதில் கூறாத போது இவரது கணவர் அங்குவந்து முழு விபரத்தையும் தெரிவித்த போது மனைவியும் இதற்கு உடன்பட்டாரென பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இரண்டு மாடிகளைக் கொண்ட இக்கட்டிடத்தின் மேல் மாடியில் அழகு சிகை அலங்கார நிலையமும் கீழ்மாடியில் கணவரது மூக்கு கண்ணாடி கடையுமிருப்பதாகவும் இவையிரண்டிற்கும் பொறுப்பாக தன் மனைவி கடமையாற்றுவதாகவும் கணவர் தெரிவித்தார்.

முன்பு சிகை அலங்காரக்கடையில் ஒரு பெண் வேலை செய்ததாகவும் ஒரு மாதமாக அவர் வராதபோது தான் சில சிறிய வேலைகளை செய்ததாகவும், அச்சமயம் நீங்கள் கூறும் பெண் இங்குவந்து சிகை வெட்டவேண்டுமென்றார். சிகை கத்தரிப்பவரில்லை வேறு கடைக்குச் செல்லுமாறு வேண்டினேன். பரவாயில்லை முகத்தை அழகு படுத்துமாறு கூறினார். மேலேயுள்ள அழகு நிலையத்துக்கு செல்வோமெனக் கூறி அங்கு சென்று ஒவ்வாமை ஏதாவது உங்களுக்குண்டாவெனக் கேட்டேன், இல்லையென்றார்.

‘வைடிங் பேஷல்’ செய்ய வேண்டுமென்றார். அதற்கு பன்னிரெண்டு மணித்தியாலங்கள் செல்லுமென்றேன். இதற்கு முன்னரும் செய்துள்ளதாகக் கூறினார் என சந்தேக நபரான பெண் பொலிஸாரிடம் கூறினார். மேலும் அவர் சொன்னதாவது:- அப்பெண்ணை அறைக்கு அழைத்துச் சென்ற நான் அவரை கட்டிலில் சாயச் செய்து முகத்தை முதலில் சுத்தம் செய்து, கிaம் பூசினேன். பத்து நிமிடங்கள் கிaமுடமிருக்க வேண்டும். சில நிமிடங்களில் அவர் முகம் சொறிகிறது எரிகிறது என்றார்.

பிறிற்றன் வில்லையொன்றை தரவா எனக் கேட்டேன். வேண்டாம் அவை தானாக நின்றுவிடுமென்றார். இதையடுத்து அப்பெண் எனக்கு தலை சுற்றுகிறது மயக்கமாக வருகிறதென்றார். நீர்கொழும்பு ஆஸ்பத்திரிக்குச் சென்று வைத்தியரிடம் காண்பிப்போமென்றேன். அதற்கும் அவர் வேண்டாமென்றார். தானாக சுகமாகுமென்றார். இச்சமயம் இன்னுமொரு பெண்ணும் அங்கு வந்தார்.

வந்த பெண்ணுக்கு சந்தேகநபர் முகத்தை அழகுபடுத்த முனைந்த போது ஸ்ரீனிவாசனா மோசமான நிலைக்குள்ளானார். அப்பெண் சென்றதும், ஸ்ரீனியை சென்று பார்த்த போது அவரது கண்கள் மேல் நேராக்கியும் வாய்ப் பகுதி சற்று தள்ளியுமிருந்தன. மிஸ் எழும்புங்கள் என்றேன்.

அவர் பேசவில்லை. அச்சமடைந்த நான் கீழ் மாடிக்கு வந்து கணவரை பார்த்த போது அவர் மஹரகமைக்கு சென்றிருந்தார். கடை நடத்தும் தம்பதியர் அயலவர்களிடம் கடனாக பணம் பெற்றிருந்ததினால் கடன்காரன் ஒருவன் கடைக்கு வந்து சப்தமிடுகிறான். உடனே வாருங்களென மனைவி கணவனிடம் கூற அவரோ மாலை நான்கு மணியளவில் கடைக்கு வந்துள்ளார். அச்சமயம் ஆசிரியை ஸ்ரீனிவாசனா இறந்திருந்தார்.

இப்போது என்ன செய்வதென்று மனைவி பதற பெரிய பையொன்றில் ஸ்ரீனியின் சடலத்தையிட்டு, வாகனமொன்றில் வத்தளை, ஹேகித்தை பகுதியிலுள்ள பாழடைந்த இடத்துக்கு வந்து பையிலிருந்த சடலத்தை கீழே போட்டுச் சென்றுள்ளனர்.

சடலத்தை வெளியே போடு முன்னர் ஆசிரியையின் உடலில் காணப்பட்ட அனைத்து தங்க நகைகளையும் அகற்றி தமதாக்கிக் கொண்டனர்.

எல்லா வேலைகளும் முடிந்ததாக எண்ணிய அவர்கள் ஒருவருமறியாமல் மீண்டும் வீடு வந்து சேர்ந்து ஆசிரியையின் சடலத்தைக்கொண்டு சென்ற பை, மற்றும் அவர் சம்பந்தப்பட்டவைகள் அனைத்தையும் எரிந்தனர்.

ஆசிரியையின் தங்க நகைகளை நீர்கொழும்பு, கெசல்வத்தை பகுதிகளில் அடகு வைத்து பணம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்களின் வீடு சோதனையிடப்பட்ட போது உடைந்த பிளாஸ்டிக் விளையாட்டுப் பொருள்களின் பகுதிகள் கண்டெடுக்கப்பட்டன. இவைகளில் ஒரு பகுதியே அப்பையிலிருந்த இறந்தவரின் உடலில் ஒட்டி கீழே விழுந்துள்ளதாகப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

குற்றம் புரிந்து எப்பொழுதும் தப்பித்திருக்க முடியாது ஒரு நாள் சட்டத்தின் பிடியில் சிக்க நேரிடுமென்பதற்கு இச்சம்பவம் ஒரு உதாரணம்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.