புத் 63 இல. 48

சர்வதாரி வருடம் கார்த்திகை மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 முஹர்ரம் பிறை 01

SUNDAY NOVEMBER 27,  2011

 

குட்டி சேர்னோபில்?

கூடங்குளம் அணுமின் நிலையம்

குட்டி சேர்னோபில்?

தமிழகத்தின் தென் கோடியில் இருக்கும் ஒரு சிறிய கிராமம், இப்போது உலகின் கவனத்தை அதிகளவில் ஈர்த்து வருகின்றது. அதுதான் கூடங்குளம். இக்கிராம மக்களின் ஆர்ப்பாட்டம், அன்னா ஹசாரேயின் போராட்டத்திலும் பார்க்க அதிகளவிலான கவனத்தைப் பெற்று வருகின்றது. அங்கு அணு மின் நிலையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே தொடர் ஆர்ப்பாட்டங்களில் மக்கள் இறங்கியுள்ளனர்.

நூறு நாட்களைத் தாண்டிய நிலையில் மக்களின் ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாய் இடம்பெற்று வருகின்றது. ஆரம்பத்தில் உண்ணாவிரதப் போராட்டமாக ஆரம்பித்த இது பின்னர் அணு மின் நிலையப் பணிக்குச் செல்வோரைத் தடுக்கும் முற்றுகைப் போராட்டமாக மாறியது. தற்போது விரிவடைந்து, அண்டைய பகுதி மீனவர்களும் இங்கு வந்து கறுப்புக் கொடிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

1988 ஆம் ஆண்டில் இவ்வணு மின் நிலையத்துக்கான ஒப்பந்தம் கைச்சாத்தானது. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்போதும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றாலும் அவை அதிகளவில் முக்கியத்துவம் பெறவில்லை. காரணம் கூடங்குளத்தில் அணு மின் நிலையம் அமைந்தால் ஏற்படவிருக்கும் தீய விளைவுகளை உணர்ந்த சிலரே அப்போது அதனை எதிர்த்தனர். ஆனால் இன்று அன்னா ஹசாரேயின் போராட்டம் தந்த வெற்றி சாத்வீகமான முறையிலான பாரிய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட அம்மக்களை உந்தித்தள்ளியிருக்கிறது.

தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டத்தில் உள்ள கூடங்குளத்தில் 13,500 கோடி இந்திய ரூபாய் செலவில் 1000 மெகாவாட் மின்னுற்பத்தித் திறனுள்ள இரண்டு அணு உலைகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. முதலாவது அணு உலையின் நிர்மாணப் பணிகள் டிசம்பர் மாதமளவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டது. இதன் மூலம் தமிழகத்துக்கு 50 சதவீதமான மின்சாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் பல மாதங்களாக இடம்பெற்றுவந்த மக்கள் ஆர்ப்பாட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, இதன் நிர்மாணப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையம் நிரந்தரமாக மூடப்பட வேண்டும் எனக் கோரி வலுவடைந்து வரும் ஆர்ப்பாட்டங்களால், அவ்வணு நிலையத்தின் இறுதிக்கட்ட நிர்மாணப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இவ்வணு உலையின் மூலமான மின்சார உற்பத்தி ஆரம்பிக்கப்படும் பட்சத்தில், அப்பகுதி மக்களுக்கு ஏற்படப் போகும் தண்ணீர்ப் பஞ்சம், இவ்வணு உலையால் எதிர்காலத்தில் ஏற்படவுள்ள ஆபத்துக்கள் என்பனவற்றைக் காரணங்காட்டியே ஆர்ப்பாட்டக்காரர்கள் அதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். எனவே மக்களிடையே இதுகுறித்த அச்சத்தை நீக்குவதற்கு, 15 நிபுணர்கள் கொண்ட குழுவொன்றினை மத்திய அரசு நியமித்துள்ளது. இக்குழுவிடம் முன்வைக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்களின் 50 சந்தேகங்களுக்கு ஆய்வின் முடிவில் பதிவளிக்கப்படுமெனவும் உறுதிமொழிகள் வழங்கப்பட்டுள்ளன.

1986 ஆம் ஆண்டில் அன்றைய சோவியத் யூனியனின் ஒரு பகுதியாகவிருந்த உக்ரேனின் சேர்னோபில் நகரின் அணு உலையில் விபத்தேற்பட்டது. அந்த விபத்தின் பின்னர் அவ்வணு உலைபோன்ற அமைப்புடைய எல்லா உலைகளையும் மூடிவிட சோவியத் யூனியன் முடிவுசெய்தது. இதன்போது ஒரு உலையை பலகோடி ரூபாவுக்கு இந்தியாவுக்கு விற்பனை செய்தது. 1988 ஆம் ஆண்டில் இது குறித்த ஒப்பந்தம், அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் சோவியத் ரஷ்யாவின் தலைவராகவிருந்த கோர்பச்சோவுக்குமிடையில் கைச்சாத்தானது.

இதற்கு, எதிர்ப்பு எழுந்ததையடுத்து அணு உலை அமைக்கும் பணிகள் பத்தாண்டுகளுக்கும் மேலாகக் கைவிடப்பட்டன. பின்னர் 2001 இல் மீண்டும் கூடங்குளத்தில் அணு மின் நிலையம் அமைப்பதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டன. 2004 இல் ஏற்பட்ட சுனாமியினால் இவ்வணு மின்நிலைய நிர்மாணப் பணிகள் தாமதமடைந்தன. காரணம் கூடங்குளத்தில் 2004 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமியினால் பாதிப்புகள் ஏற்பட்டன. நெல்லை மாவட்டம் தமிழ்நாட்டின் பூகம்ப ஆபத் துள்ள பகுதியாகக் கருதப்படுகின்றது. 1900 க்கும் 2000 க்குமிடைப்பட்ட நூற்றாண்டுப் பகுதியில் அங்கு கிட்டத்தட்ட 36 பெரியளவிலான பூகம்பங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

கூடங்குள அணு மின் நிலையத்துக்கு குளிர்விப்பானாக குளிர் நீர் பயன்படுத்தப்படுகின்றது. நெல்லை மாவட்டம் ஏற்கனவே தண்ணீர்ப் பற்றாக்குறையுள்ள மாவட்டமாகும். அணுமின் நிலையங்களைக் குளிர்விக்கத் தேவையான நீரையும் இங்குள்ள நீர் வளங்களின் மூலம்தான் பெற வேண்டுமெனில் மக்கள் தண்ணீர்ப் பஞ்சத்தால் வாட வேண்டும் என இம் மின் திட்டத்தை எதிர்ப்போர் கூறுகின்றனர்.

கூடங்குள அணுமின் திட்டம் பற்றிய ஒப்பந்தம் கைச்சாத்தான போது, சமூக, மனித உரிமை ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் என்போர் தான் அதற்கெதிராகக் குரல் கொடுத்தனர். கூடங்குள மக்களோ அதனை அண்டிய கிராம மக்களோ இப்போது போல அந்நேரம் அணு மின் நிலையத்தை எதிர்த்துக் குரல் கொடுக்கவில்லை. காரணம், அணு மின் நிலையத்தில், அவர்களுக்கு வேலைவாய்ப்புப் பெற்றுத் தரப்படும் என்று அரசால் அவர்களுக்கு உறுதி வழங்கப்பட்டது. கூடங்குளம் ஒரு மீனவக் கிராமம், தமக்கு அணுமின் நிலையங்களில் அரசு என்ன வேலை தரக் கூடும் என்பதை ஆராயாமலே அம்மக்கள் அவ்வாக்குறுதியை நம்பினர். ஆனால் 2004 ஆம் ஆண்டின் சுனாமியும், சில காலங்களுக்கு முன்னர் ஜப்பானின் புக்குஷிமா அணு உலைகளுக்கும் அப்பகுதி மக்களுக்கும் சுனாமியால் ஏற்பட்ட பாதிப்பைக் கண்ட பின்னரும், கூடங்குள கடற் பகுதியில் மீன்பிடிக்கான வரையறைகளும் விதிக்கப்பட்ட பின்னரும்தான் அப்பகுதி மக்கள் அணுமின் நிலையத் திட்டத்தை எதிர்க்க ஆரம்பித்தனர்.

மக்கள் கடலெனத் திரண்டு இதனை எதிர்க்க ஆரம்பிக்கையில் கூடங்குள மின் நிலையத்தின் நிர்மாணப் பணிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டன. இந்நிலையில் ஆர்ப்பாட்டக் காரர்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுத்து அணுமின் நிலையப் பணிகளை அரசு கைவிட்டு விடுமா என்பது பலரது கேள்வியாக இருக்கிறது. ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் தேர்தல் தோல்வியாலும் மகளின் கைதாலும் துவண்டு போயிருக்கும் கலைஞர் இருப்பதாக அதற்கு அரசியல் சாயம் பூசப்பட்ட போதும், கிaஸ்தவ மத தலைவர்களின் தூண்டுதலில் ஆர்ப்பாட்டம் இடம்பெறுவதாக குற்றம் சாட்டப்பட்டாலும் ஆர்ப்பாட்டக்காரர்களின் நியாயபூர்வத் தன்மை நிராகரிக்க முடியாததே.

தண்ணீர்ப் பற்றாக்குறை, அணுக் கழிவு, கதிர்வீச்சு என்று மக்கள் கோஷ மிட்டுக் கொண்டிருக்க, கல்ப்பாகத்தில் எந்தவித பிரச்சினையுமின்றி அணு உலை இயங்கவில்லையா என்று மக்களைச் சமாதானப்படுத்தி விட்டு தன் திட்டத்தை அரசு நிறைவேற்றியே தீருமா அல்லது, எத்தனை கோடிகள் செலவானாலும் பரவாயில்லை மக்களின் பாதுகாப்பே முக்கியம் என்று இதனைக் கைவிடுமாவென்பது இன்னமும் சில நாட்களில் தெரிந்து விடும். என்றாலும் தற்போது இவ்வணு மின்நிலைய உருவாக்கத்தால் மக்கள் தேவையற்ற அச்சமடைந்து இருப்பதாகவும் அவ்வச்சத்தைப் போக்க நடவடிக்கை எடுக்கப் போவதாகவுமே அரசு கூறிவருகின்றது.

அனன்யா

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.