புத் 63 இல. 48

சர்வதாரி வருடம் கார்த்திகை மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 முஹர்ரம் பிறை 01

SUNDAY NOVEMBER 27,  2011

கமால் ஐயா மௌத்து

கமால் ஐயா மௌத்து

அமைதியாக துயிலில் ஆழ்ந்து கொண்டிருந்த கொத்தான் தீவு மக்களை பள்ளிவாயிலின் ஒலி பெருக்கியில் சுபஹ்த் தொழுகைக்கான பாங்கு ஒலி (தொழுகைக்கான அழைப்பு) ஒலிக்கின்றது.

வழமையாகத் தொழுகைக்குப் பள்ளி வாயல் செல்பவர்கள் எழுந்து விடுகின்றார்கள். பாங்கு சொல்லி முடிந்ததும் மரண அறிவித்தல் என்றதும் எழுந்திருந்தவர்களும் படுக்கையில் நித்திரையைக் களைந்தவர்களும் செவி மடுக்கலானார்கள்.

இவ்வூரின் பிரபல்யமான ஓய்வு பெற்ற அதிபர் கமால் ஐயா இன்று அதிகாலை நான்கு மணிக்கு காலமானார் என்றவுடனே அவ்வூர் மக்கள் எல்லாருமே படுக்கையை விட்டு எழுந்தனர்.

சுபஹுத் தொழுகை முடிந்த கையோடு அனைவரும் கமால் ஐயாவின் மரண வீட்டை நோக்கியே சென்று கொண்டிருந்தார்கள். பள்ளிவாயிலை அண்டியிருக்கும் இரண்டொரு ஆப்பக்கடைகள் இன்று வெறிச்சோடிப் போய்க் கிடந்தன. வழமையாக தொழுகை முடிந்ததும் அனேகமானோர் இக்கடைகளில் தஞ்சமடைந்தே செல்வார்கள்.

மரண வீடு அந்த அதிகாலை வேளையிலேயே அவ்வூர் மக்களால் நிரம்பிக் கொண்டிருந்தது. ஜனாஸா ( பிரேதம்) வைப்பார்த்தவர்கள் கண் கலங்கியவர்களாக தேம்பித் தேம்பி அழுதவர்களாக அங்கேயே நின்று கொண்டிருந்தார்கள். ஊர் எங்கும் எல்லோரினது வார்த்தையிலும் கமால் ஐயா மெளத்து, கமால் ஐயா மெளத்தாமே என்பதாகத்தான் இருந்தது.

ஜனாஸாவையே பாத்துக்கொண்டு அங்கேயே நிக்காம பாத்து பாத்துவிட்டு வந்தாத்தான் மத்த மத்த ஆக்களுக்கும் பாக்க ஏலும். பொம்புளைங்களும் மிச்சப்பேர் வெளியிலே நிக்கிறாங்க. இப்படி ஒருவர் சத்தம் போடவே பார்த்தவர்கள் வெளியே வந்து கொண்டிருந்தார்கள்.

இளகிய மனம் கொண்ட சில பெண்கள் சத்தமிட்டு அழுது கொண்டிருந்தார்கள். என்ன செய்ய வாப்பாட மையத்துக்கு (மரணத்திற்கு) அவங்க மூணு புள்ளைங்களும் இல்லீயே! என்ன கத கதைக்கிறிய! அப்போ நாங்க எல்லாம் யாரு! இந்த ஐயாட புள்ளைங்க இல்லீயா! பெத்த புள்ளைங்களுக்கு குடுத்து வச்சது அம்புட்டுத்தான்.

மரண வீட்டிற்கு வந்தவர்களின் உரையாடல்கள் இவைகள். இப்படி இந்த கமால் ஐயாவின் மரணத்தில் அந்தக் கிராமத்திலுள்ள உத்தியோகத்தர்கள், படித்தவர்கள் பாமரர்கள் என்று எல்லோருமே ஏன் வருகை தந்து இந்த ஜனாஸாவில் கலந்து கொள்கிறார்கள் என்றால் அதற்குக் காரணமும் இல்லாமல் இல்லை.

கமால் இந்த ஊரைச் சேர்ந்தவரில்லை. கிண்ணியாவைப் பிறப்பிடமாகக் கொண்டு முதன் முதலாக ஆசிரிய நியமனம் கிடைத்து இங்கு வந்தவர். அக்காலத்தில் எஸ்.எஸ்.k. சித்தியடைந்தால் ஆசிரிய கலாசாலைக்கு விண்ணப்பித்து முதலில் பயிற்சி பெற வேண்டும். இப்படி பயிற்சி பெற்று வந்தவர்தான் கமால் மாஸ்டர்.

தனது 22 வது வயதில் கொத்தான் தீவுக்குக் காலடி எடுத்து வைத்தார். ஒரேயொரு ஓலைப்பாடசாலை தலைமையாசிரியருடன் மெளலவியொருவருமே அப்போது இருந்தனர். 30,35 மாணவ மாணவிகள். தனக்குக் கிடைத்த முதல் பாடசாலை இப்படி இருந்தாலும் மனம் சஞ்சலமடையாமல் சிறப்புடன் பணியாற்ற திட சங்கற்பம் கொண்டார் கமால் மாஸ்டர். 4ம் வகுப்பு வரையுமே அப்போது அங்கிருந்தது. கல்வி மட்டும் இலவசம். படித்தவர்கள் என்று எவருமில்லை. உத்தியோகத்தர்களாக இருப்பவர்கள் எல்லாம் வெளியூரவர்கள். தலைமையாசிரியரும் மெளலவியும் வெளியூர் வாசிகளே.

எப்படியும் இந்தவூரில் கற்றவர்களை உருவாக்கி அரச உத்தியோகங்களில் ஈடுபடுத்த வேண்டுமென்பதே கமால் மாஸ்டரின் குறிக்கோளாக இருந்தது. அவர் வந்து 3 வருடங்களும் உருண்டோடி விட்டன.

கமால் மாஸ்டருக்கு இப்போது அந்த ஊர் நல்ல பரிச்சயமாகப் போய் விட்டது. பாடசாலை விடுமுறை நாட்களிலும் தனது ஊரை நாடாமல் இந்த ஊரிலேயே இருந்து விடுவார். ஆறாம் வகுப்பு வரையும் வைக்கப்பட்டதால் மாலை நேரங்களிலும் விடுமுறை தினங்களிலும் மாணவர்களுக்கு விசேட வகுப்புக்களை நடாத்தி வந்தார். விளையாட்டு முறையில் கற்பித்தலில் ஈடுபட்டார்.

மாணவர்களுக்கு இப்போது கல்வியில் ஒரு விருப்பு ஏற்பட்டுவிட்டது. பாடங்களில் கூடிய கவனம் எடுக்கலானார்கள். தனிப்பட்ட பரீட்சைகள் வைத்து அதிகூடிய புள்ளிகள் பெறும் மாணவருக்கு ஏனைய மாணவர்கள் மத்தியில் பரிசில்களையும் வழங்கினார்.

கமால் மாஸ்டரின் வகுப்பிலிருந்துதான் முதன் முதலில் ஐந்து மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றினார்கள். ஐந்து மாணவர்களையும் சித்தியடைய வைக்கவேண்டுமென்ற கடும் முயற்சியில் இறங்கி அதில் வெற்றியும் கண்டார். ஆம் அந்த ஐந்து மாணவர்களுமே இப்பரீட்சையில் சித்தியடைந்தனர்.

அவர்களுக்கு அலுத்கம ஸாகிறாக் கல்லூரிக்கு கற்கும்படி கட்டளை வரவே கமால் மாஸ்டரே எல்லா ஒழுங்குகளையும் செய்து அக்கல்லூரிக்கும் சென்று அவர்களைச் சேர்த்து விட்டும் வந்தார் உயர் கல்வி கற்க.

இதன் பின்னரே கமால் மாஸ்டரை எல்லோரும் ஐயா என்று அழைக்கத் தொடங்கினார்கள். கமால் ஐயாவுக்கு 28 வயதாகியது. இப்போது அவரை வெளியூர்வாசி என்றில்லாமல் எங்கள் ஊரான் என்றே எண்ணத் தொடங்கினார்கள். கமால் ஐயாவும் தான் ஒரு கிண்ணியாக்காரன் என்பதையே மறந்து விட்டார்.

கமால் ஐயாவுக்குத் திருமணம் செய்து வைக்க சிலர் முயற்சி செய்தனர். ஆனால் கமால் ஐயா தனக்கு இன்னும் சில இலட்சியங்கள் இருப்பதாகவும். பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்றும் சொல்லிவிட்டார். அதனால் அவ்வூரார் சிரமப்படுத்தவில்லை.

கமால் ஐயாவின் விருப்பம் தான் ஒரு ஆசிரியையை துணைவியாகக் கொள்ள வேண்டுமென்பதே. இப்போது அப்பாடசாலை தரம் உயர்த்தப்பட்டு பத்தாம் வகுப்பு வரைக்கும் வைக்கப்பட்டது. அதற்கிடையில் இரண்டு அதிபர்கள் ஓய்வு பெற்றுக் சென்றனர். தற்போதுள்ள அதிபரும் ஓய்வு பெறும் வயதை நெருங்கிக்கொண்டிருக்கின்றார். தரம் உயர்த்தப்பட்ட இவ்வூர் பாடசாலைக்கு சில ஆசிரியர்கள் இடமாற்றம் பெற்று வந்தார்கள்.

வளர்ந்த மாணவிகளுக்காக இரண்டு ஆசிரியைகளை இப்பாடசாலைக்கு நியமித்தார்கள். இதில் ஒருவர் இவ்வூரைச் சேர்ந்த வகாப் முதலாளியின் மகள் பஹீமா. இவர் புத்தளம் நகரிலேயே கற்று ஆசிரியையாக வந்தவர். பாடசாலையில் இப்போது ஆசிரியர்களின் தொகையும், மாணவர்களின் தொகையும் அதரிகரித்த வண்ணமே இருந்தன.

அப்போதிருந்த அதிபர் ஓய்வு பெறவே அதிபர் போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்திருந்த கமால் ஐயாவுக்கு அதிபராகக் கடமையாற்றும் படியும் கட்டளை பிறப்பிக்கப்பட்டது.கமால் ஐயா அதிபரானதும் அப்பாடசாலை புதுப்பொழிவை அடைந்தது. முதன் முதலாக இல்ல விளையாட்டுப் போட்டி, கல்விச் சுற்றுலா, தமிழ்த்தின கலாசாரப் போட்டிகள் எல்லாம் நடைபெற்றன. பாடசாலையின் வளர்ச்சியைக் கண்ட கல்வித்திணைக்களம் க.பொ.த. வகுப்பு ஆரம்பிக்க முன் வந்தது. ஆசிரியர் தொகையையும் அதிகரித்தது.

கமால் ஐயாவின் செய்பாடுகள் சிறந்த நிருவாகம் அன்பாகப் பழகும் தன்மை இவைகளால் கவரப்பட்ட ஆசிரியை பஹீமாவுக்கு கமால் ஐயாவை வாழ்க்கைத் துணைவராக்கும் எண்ணம் ஏற்பட்டது. இதனை பஹீமா தன் பெற்றோர்களுடன் கூற அவர்களும் செயலில் இறங்கினார்கள்.

கமால் ஐயாவும் பஹீமாவை மனதார விரும்பியிருந்தார். ஆனால் எவரிடமும் கூறவில்லை. பஹீமாவின் தந்தையுடன் இன்னும் சிலர் வந்து திருமணப் பேச்சை கமால் ஐயாவிடம் கூற பழம் நழுவிப் பாலில் விழுந்த மாதிரியிருந்தது அவருக்கு. திருமணத்திற்குப் பச்சைக் கொடி காட்டி விட்டார் கமால் ஐயா.

பஹீமா டீச்சரை மணமுடித்த பின்னர் நிரந்தர கொத்தான் தீவு வாசியாகவே கமால் ஐயா ஆகிவிட்டார்.

காலங்கள் ஓடி மறைந்தன. கமால் ஐயா தம்பதியினருக்கு இரு வயது வித்தியாசத்தில் இரண்டு ஆண்மக்களும் மூன்று வயது குறைந்த நிலையில் ஒரு மகளும் ஆஸ்தி ஆசை வாரிசாகக் கிடைத்தனர். தூரத்து உறவுத்திருமணத்தில் பிறக்கும் பிள்ளைகள் விவேகமானவர்களாக இருப்பார்கள் என்று சொல்வார்கள். அது சரியோ பிழையோ ஆனால் பஹீமா டீச்சர் பெற்ற மூன்று மக்களும் கல்வி ஞானங்களில் திறமையானவர்களாகவே காணப்பட்டார்கள்.

இம் மூன்று மக்களும் இதே பாடசாலையிலேயே தங்கள் ஆரம்பக் கல்வியைக் கற்றனர். புலமைப்பரிசில் பரீட்சையில் கூடிய புள்ளிகள் பெற்று கொழும்பிலுள்ள பிரபல்யமான கல்லூரிகளிலே உயர்கல்வியையும் கற்றார்கள்.

கமால் ஐயாவின் ஆற்றல் திறன்களைக் கண்டு புத்தளம் கல்வித் திணைக்களத்திற்கு கல்விப் பணிப்பாளராகக் கடமையேற்கும் படி வந்தது. அவ்வூர் வாசிகளின் நன்மைகள் கருதி கண்டிப்பாக அவரின் பதவியுயர்வை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் கொத்தான்தீவு மக்கள் கமால் ஐயாவுக்கு மதிப்புக் கொடுத்து பெரிய இடத்தில் வைத்திருந்தார்கள்.

க.பொ.த சாதாரண பரீட்சையில் வருடா வருடம் மாணவர்கள் சித்தியடைந்து உயர்கல்விக்காக வெளியூர்களுக்குச் செல்வதால் சில ஏழை மாணவ மாணவிகள் பாதிப்படைவதைச் சுட்டிக்காட்டி பல சிரமங்களின் மத்தியில் உயர்தர வகுப்பு வைக்கும் அனுமதியையும் கமால் ஐயாவால் பெற முடிந்தது.

பாடசாலை தரம் கூடவும் மாடிக்கட்டடங்கள் தளபாட பெளதீக வளங்கள் எல்லாம் நிறைந்து காணப்பட்டன. ஆரம்பத்தில் கமால் ஐயாவால் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து அலுத்கம ஸாகிறாவுக்குப் படிக்கச் சென்றவர்களின் நிலை இப்போது அவர்களில் மூவர் டாக்டர்கள் ஒருவர் பொறியியலாளர், மற்றவர் சட்டத்தரணி அரச உத்தியோகத்தரையே கொண்டிராத இவ்வூரில் இப்போது ஆசிரியர்கள் கிராம சேவையாளர்கள், விவசாய உத்தியோகத்தர்கள், சுகாதார உத்தியோகத்தர், தாதியர் என்று பலதரப்பட்ட அரச ஊழியர்களைக் காணக் கூடியதாக இருந்தன.

வயது யாரைத்தான் விட்டு வைக்கும். அன்று அவ்வூர் மஹா வித்தியாலயத்தில் மாபெரும் விழா என்று தான் சொல்ல வேண்டும். ஆம் கமால் ஐயாவுக்கு பிரியாவிடை வைபவம். தனது 60 வயதில் ஓய்வு பெறுகின்றார்.

மாணவர்கள், அரச ஊழியர்கள் பெற்றோர்கள் என்று இவ் வைபவத்தில் நிரம்பி வழிந்தனர். கமால் ஐயாவை எந்தளவுக்குப் புகழ்ந்து பேச வேண்டுமோ அந்த அளவுக்குப் பேசப்பட்டன.

கமால் ஐயாவும் அவரது உரையில் தன்னால் ஏதோ இந்த ஊருக்குக் கொஞ்சம் செய்துள்ளேன். தொடர்ந்தும் உங்கள் தேவைகளை என்னால் முடிந்தளவு செய்தே தீருவேன் என்று கூறி மக்கள் காட்டும் அன்பையிட்டு அழுதே விட்டார். அவருக்குக் கிடைத்த நினைவுப் பரிசுப் பொருட்களும் ஐவரினால் பொன்னாடை போர்த்தப்பட்டதும் அவரை நிலை தடுமாறச் செய்தது.

கமால் ஐயாவுக்கு 72 வயதானது. அவரது மூன்று மக்களும் படித்து டாக்டர்களானார்கள். அத்தோடு மருத்துவக் கல்லூரியிலேயே 2 மகன்மாரும் 2 துணைவிகளைத் தேடிக் கொண்டனர்.

இதேபோன்று மகளும் அவரின் விருப்பப்படி ஒருவரைக் கரம் பிடித்தார். மக்களின் மனம் நோகாமல் வாழ்க்கை துணைகளுக்கு உடந்தையாக கமால் ஐயா தம்பதிகள் இருந்தார்கள். பஹீமா டீச்சரும் 6 வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெற்று விட்டார்.

மூன்று மக்களையும் நல்ல முறையில் கல்வியில் கரை சேர்த்த கமால் ஐயாவுக்கு அவர்களினால் எந்தப் பிரயோசனமும் இல்லாமல் போனது பற்றி மனைவி பஹீமாவுடன் சொல்லி முறையிடுவார் உங்கள் தேவைகளைக் கவனிக்க நானிருக்கும் போது உங்களுக்கென்ன கவலைங்க என்று பஹீமாவும் ஆறுதல் படுத்துவார். கமால் ஐயாவின் மக்கள் கடமை புரிந்தது வெளியூர்களில். எப்போதாவது ஒரு நாள் காலையில் வந்து மதியத்திலேயே சென்று விடுவார்கள். பேரன் பேத்திகளின் அன்புப் பிணைப்பும் இல்லாமல் போய் விட்டதை எண்ணித்தான் ஐயா கவலைப்பட்டார்.

சில காலம் செல்ல ஒவ்வொரு மக்களாய் வெளிநாடுகளில் தஞ்சமடைந்து பிரஜா உரிமையும் பெற்றுவிட்டார்கள். மூத்த மகன் அவுஸ்திரேலியாவிலும் மற்றவர் இந்தோனேசியாவிலும் மகள் இங்கிலாந்திலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இருந்தாற்போல் நினைவு வந்தால் தொலைபேசியில் பேசிக்கொள்வார்கள் கமால் ஐயாவின் வீட்டுக்குச் செல்லும் உறவினர்களிடம் பஹீமா டீச்சர் சொல்வார் பாருங்களேன் எங்க குடும்பத்திலே ஆறு டொக்டர் மார்கள் இருந்தும் ஐயாவுக்கும் எனக்கும் அது இது என்று நோய் நொம்பலம் வந்தா சிங்கள வெதமாத்தய்யா மாரிடமும் அறிமுகமேயில்லாத வேற்றுமத டாக்டர்மாரிடமுமல்லவா செல்ல வேண்டியிருக்கு என்று மனம் நொந்துரைப்பார் பஹீமா.

காலங்களையும் அதனோடு தொடர்புடைய வயதையும் யாராலும் பிடிக்க முடியாது. கமால் ஐயாவுக்கு 80 வயதாகி விட்டது. வெளிநடமாட்டங்கள் எதுவுமில்லை தொழுகை மார்க்கக் கடமைகள் எல்லாம் வீட்டில்தான்.

என்ன செய்வார் பஹீமா டீச்சர் போதியளவு பணமிருந்தும் என்ன பயன் உதவி ஒத்தாசைக்கு ஒத்தரும் இல்லையே என்ற ஆதங்கத்தில் அகதியாய் வந்து வீடில்லாமல் கஷ்டப்பட்ட ஒரு குடும்பத்தை தங்கள் வீட்டின் ஒரு பகுதியைக் கொடுத்து தங்க வைத்தார் ஐயாவின் ஆலோசனைப்படி.

வாப்பாவுக்கு சுகயீனம் என்று மூன்று மக்களுக்கு அறிவித்தும் மகளுடன் அவர் கணவரும் இங்கிலாந்தில் இருந்து வந்தார்கள் பேரனும் பேத்தியும் வெள்ளைக்காரப் பிள்ளைகள் போன்றே இருந்தனர். கிரேன் பாதர் என்று மகள் சொல்ல கமால் ஐயா அன்போடு அழைக்க பயத்தில் மகளைக் கட்டிப்பிடித்துக் கொண்டார்கள் அந்த இரண்டு பிஞ்சுகளும். கமால் ஐயா பேரப்பிள்ளங்கள தூக்கி அள்ளி தனது பிற்காலங்களிலே கழித்திடலாம் என்று கனவு கண்டு கொண்டிருந்தார். அதெல்லாம் இப்போ தவிடு பொடியாகி விட்டதே என்று கவலைப் பட்டார். அது மட்டுமா, இரண்டு மணித்தியாலங்கள் திpனிu>!} இருந்தார்கள்.

தாயின் கையால் சமைத்த சாப்பாட்டையும் உதறிவிட்டுச் சென்றாள் மகள் தன் கணவன் பிள்ளைகளுடன். பஹீமா டீச்சர் அன்று முழுதும் கண்ணீர் விட்டு அழுத வண்ணமே இருந்தார். கமால் ஐயாவும், பஹீமா வருந்த வேண்டாம், நாங்க பெற்று வளர்த்து ஆளாக்கி விட்டோம். அவர்களுக்கு இப்போது புரியாது எங்க நிலைக்கு அவர்கள் வந்ததால் தான் தெரியும். நீங்க தைரியமா இருங்க என்பார் ஐயா.

மகள் சென்று ஒரு மாதத்தின் பின் இந்தோனேசியாவில் இளைய மகன் மனைவி சகிதம் வந்தார். ஒரு பேத்திமட்டும்தான் அரேபிய பெண்மாதிரி வெகு அழகாக இருந்தாள். அவளும் என்னிடம் வர கண்டிப்பாக மறுத்து விட்டாள். தங்கள் மகளுக்கு இடம் பிடிக்கல்லையாம் சாப்பாடு ஒத்து வராதாம் அவர்களும் அவசரமாகச் செல்ல வேண்டுமாம் ஒரு மணி நேரம் இருந்து வாப்பாவுக்கு இரண்டொரு மாத்திரைகளை எழுதிக் கொடுத்து விட்டுச் சென்றார்கள்.

அவுஸ்திரேலியாவில் உள்ள மூத்த மகனுக்கு வருவதற்கு சந்தர்ப்பம் இல்லையாம் என்று தொலைபேசியில் சொன்னார். கமால் ஐயா தன் பிள்ளைகளை எண்ணி மிகமிக வருந்தினார். இப்படி என் பிள்ளைகள் இருப்பார்கள் என்று தெரிந்திருந்தால் நான் திருமணமே செய்யாமல் அன்பான இந்த ஊர்வாசிகளுடன் காலத்தைக் கழித்திருப்பேன் என்று தன்னைப் பார்க்க வருபவர்களிடம் சொல்லி வருந்துவார்.

கமால் ஐயாவுக்கு 83 வயதாகிவிட்டது: தன் உள்ளுறுப்புக்களின் செயற்பாடுகள் மெல்ல மெல்ல செயல் இழந்து போவது போல் அவருக்குத் தென்பட்டது. இந்தவூர் கொத்தான் தீவுக்கு அவர் 22 வயதில் வந்தார். அப்போது அவருக்கு அழகான சுருண்ட கேசம், எடுப்பான தோற்றம், சுறுசுறுப்பான செயற்பாடுகள் இப்போது தலையில் அய்தான பழுத்த முடிகள், பழுத்த சிறுதாடி, சுருங்கிப்போன உடல்தோற்றம், மங்கிப்போன கண்கள், சாப்பாட்டைப் பிசைந்து 3, 4 பிடிகளை ஊட்டி விடுவார் டீச்சர். ஒரு நாள் தன் மனைவி பஹீமாவிடம் இனி என்னுடைய காலம் முடியப் போகிறது. ஒன்று மட்டும் நீங்க செய்யணும் என்னங்க சொல்லுங்கோ இப்போவே செய்றேன் என்ட நிலை, அல்லது என்ட மெளத்து (இறப்பு) பற்றி நம்ம மக்கள் எவருக்காவது அறிவிக்கக் கூடாது.

ஏங்க அப்படிச் சொல்aங்க, இல்லே பஹீமா அறிவிச்சா இதோ வாரன் அதோ வாரன் என்பான்கள். ஆனால் வரமாட்டான்கள் சாக்கு போக்கு ஏதாச்சும் சொல்லி சமாளிச்சிடுவான்கள். என் ஜனாஸாவும் சுணங்கும் அடக்கம் செய்வதற்கு என்றார் ஐயா.

நம்ம வீட்டிலே இருக்கிற ஏழைங்கள மட்டும் அனுப்பிடாதீங்க ஒங்களுக்குத் துணையா வெச்சிக் கொள்ளுங்கோ ஒங்கடமெளத்துக்கு முன்னர் இந்தக்காணி வீடெல்லாம் அவங்க பேருக்கே எழுதிக் குடுத்திடுங்க. நாங்க மெளத்தான பொறவு நம்மட பேரைச் சொல்லி பிரார்த்தித்தால் கோடிக்கணக்கான நன்மைகள் வந்து கிட்டும்.

நான் ஏதாச்சும் ஒங்கள மனம் நோகும்படி குற்றம் கொறைகள் செஞ்சிருந்தா அல்லாஹ்வுக்காக மன்னி.... என்று சொல்லும் போதே கமால் ஐயாவின் வாயை பொத்திக் கொண்டார் பஹீமா.

என்னங்க இது, என்ன பேசிaங்க எனக்கு என்ன கொற வெச்சீங்க! எப்போதாவது சீ என்று பேசி இருக்கீங்களா! இல்ல கோபமா பாத்திருக்கீங்களா! பேசி இருக்கீங்களா! என்ட உம்மா வாப்பா என்ன அடிச்சியிருக்காங்க! ஏசி இருக்காங்க நீங்க அதுவும் எனக்கு செய்யலீங்களே! என்ட கண் கண்ட தெய்வம் நீங்கதானே என்று கமால் ஐயாவின் கால் பாதங்களை பற்றி தன் முகத்தில் ஒற்றி ஒற்றி தேம்பி அழுதார் பஹீமா டீச்சர்.

எனக்கு இப்போதான் பஹீமா மனசு நெறஞ்ச மாதிரி இருக்கு நான் இன்னும் கொஞ்ச நாளக்கி ஒலகத்திலே இருப்பேன் என்ற போது...

(முற்றும்)

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.