புத் 63 இல. 48

சர்வதாரி வருடம் கார்த்திகை மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 முஹர்ரம் பிறை 01

SUNDAY NOVEMBER 27,  2011

 
நாடுபூராகவும் மக்களது இயல்பு நிலை பாதிப்பு 17 பேர் உயிரிழப்பு; 33 பேரைக் காணவில்லை

அடைமழை; மினிசூறாவளி; மண் சரிவு; வெள்ளம்

நாடுபூராகவும் மக்களது இயல்பு நிலை பாதிப்பு 17 பேர் உயிரிழப்பு; 33 பேரைக் காணவில்லை

பல்லாயிரக்கணக்கானோர் பாதுகாப்பிடங்களில் தஞ்சம்

நாடளாவிய ரீதியில் நேற்றுவரை பெய்த கடும் மழை மற்றும் மினிச் சூறாவளியினால் வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் தென் மாகாணத்தின் பல பிரதேசங்களிலும் 17 உயிரிழப்புகளும் கடுமையான பாதிப்பும், மக்களின் இயல்பு வாழ்க்கைக்குப் பெரும் இடையூறும் ஏற்பட்டுள்ளன.

மலையகத்தில் மண் சரிவுகளால் பெருந்தெருக்களில் மண் மூடப்பட்டு வாகன மற்றும் ரயில் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. காலி, மாத்தறை பகுதிகளில் மரங்கள் சரிந்து விழுந்தமையால் மின் கம்பங்கள் சேதமாகியதில் மின் பாவனையும் தடைப்பட்டிருந்தது. தொடர்ந்து காலநிலை மந்தகரமாகவே காணப்படுகின்றது. நாட்டின் பல பாகங்களிலும் நிலவும் சீரற்ற காலநிலையால் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதோடு 18 பேர் காயமடைந்தும் 33 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கணிப்பீட்டு அறிக்கை தெரிவிக்கின்றது.

அனர்த்த நிலையால் 6496 குடும்பங் களைச் சேர்ந்த 26011 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 125 வீடுகள் முழுமையாகவும் 1560 வீடுகள் பகுதி அளவிலும் பாதிக்கப்பட்டுள்ளதோடு நிர்க்கதியான 49 குடும்பங்களைச் சேர்ந்த 204 பேர் தற்காலிக இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு:- வெள்ளம் மற்றும் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 204 குடும்பங்களைச் சேர்ந்த 776 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிர்ச்சேதங்கள் எதுவும் இல்லை.

மொனராகலை சீரற்ற காலநிலையால் இருவர் காணாமல் போயுள்ளதோடு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அனுராதபுரம்: ஒருவர் காணாமல் போயுள்ளார்.

காலி:- ஒருவர் உயிரிழந்து 9 பேர் காணாமல் போயுள்ளனர். 14 வீடுகள் முழுமையாகவும் 538 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன.

ஹம்பாந்தோட்டை:-

16 குடும்பங்களைச் சேர்ந்த 72 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வீடு முழுமையாகவும் 15 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன.

மாத்தறை:- 1103 குடும்பங்களைச் சேர்ந்த 5515 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 பேர் உயிரிழந்துள்ளனர். 9 பேர் காயமடைந்துள்ளனர். 30 பேர் காணாமல் போயுள்ளனர். 106 வீடுகள் முழுமையாகவும் 997 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன.

கிளிநொச்சி:- 263 குடும்பங்களைச் சேர்ந்த 1120 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி கண்டாவளையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாமில் 16 குடும்பங்களைச் சேர்ந்த 68 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி மூன்று வீடுகள் முழுமையாகவும் 9 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன.

நுவரெலியா:- 35 குடும்பங்களைச் சேர்ந்த 154 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு அமைக்கப்பட்டுள்ள ஒரு முகாமில் 17 குடும்பங்களைச் சேர்ந்த 85 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

களுத்துறை: ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மலையகத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் போக்குவரத்து ஸ்தம்பித நிலையடைந்துள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.