புத் 63 இல. 48

சர்வதாரி வருடம் கார்த்திகை மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 முஹர்ரம் பிறை 01

SUNDAY NOVEMBER 27,  2011

 
முப்பது வருட யுத்தத்தில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான கண்ணிவெடிகள்

முப்பது வருட யுத்தத்தில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான கண்ணிவெடிகள்

புதைத்த கண்ணிவெடிகளை மீட்டாலே பயமற்ற இயல்பு வாழ்வு மலரும்!

சீரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே 2002ஆம் ஆண்டு நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தையின் மூலம் சுமார் இரண்டரை வருடங்கள் வடக்கு கிழக்கில் யுத்தம் ஓய்ந்திருந்தது. இக்காலப்பகுதியில் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கைக்காகப் பல உள்ளூர் மற்றும் வெளியூர் தொண்டு நிறுவனங்கள் பாடுபட்டுழைத்தன. முப்பது வருடகால யுத்தம் சமாதானமாக முடிவிற்கு வந்துள்ளதாகப் பலரும் எண்ணிப் பெருமூச்சு விட்டனர்.

ஆனால் அச்சமாதானம் இரண்டரை வருடங்களில் தவிடு பொடியாகியது. புலிகளின் போக்கு அரசாங்கத்திற்கு வெறுப்பூட்டியதனால் யுத்தம் மீண்டும் ஆரம்பமாகி இன்று புலிகள் இல்லை எனுமளவிற்கு அவர்கள் அரச படைகளால் தோற்கடிக்கப்பட்டார்கள்.

முப்பது வருடகாலத்தில் யுத்தத்தில் சிக்குண்டு பல்லாயிரக்கணக்கான உயிர்கள் அழிந்தன. கணக்கிடப்பட முடியாத சொத்தழிவும் நாட்டிற்கு ஏற்பட்டது. நாடு

பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி கண்டது. சுற்றுலாத்துறை பெரி தும் பாதிக்கப்பட்டது. உள்நாட்டில் மக்கள் நிம்மதியற்ற வாழ்வு வாழ்ந்தனர். எப்போது எங்கே குண்டு வெடிக்கும் என்பது தெரியாது மக்கள் அங்கலாய்ப்புடன் வாழ்ந்து வந்தனர்.

இந்த யுத்த காலத்தில் பல லட்சக்கணக்கான கண்ணிவெடிகளும், மிதிவெடிகளும் யுத்தம் நடைபெற்ற வடக்கு கிழக்கில் புதைக்கப்பட்டன. தமது பாதுகாப்பிற்காக அரச படைகளும், படைகளை அழிப்பதற்காக விடுதலைப் புலிகளும் பெருந்தொகையான மிதி மற்றும் கண்ணிவெடிகளைப் புதைத்திருந்தனர். படைத்தரப்பு புதைத்த கண்ணிவெடிகளுக்கு ஒரு வரைபடம் இருந்தது. தேவையற்ற ஒரு சந்தர்ப்பத்தில்

அவற்றை அகற்று வதற்கு அவை வழிகோலுவதாக முன்னெச்சரிக்கையாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் விடுதலைப் புலிகள் தரப்பில் அத்தகைய நடைமுறை எதுவும் இருக்கவில்லை. படையினரின் முகாமருகேயும், தாம் பின்வாங்கும் நிலப்பரப்புக்களிலும் கண்டபடி மிதிவெடிகளைப் புதைத்திருந்தனர். சமாதான காலத்தில் அவற்றை அகற்ற முற்பட்டவேளை அவர்களுக்கு தாம் எங்கே எத்தனை மிதி வெடிகளைப் புதைத்துள்ளோம் என்பது தெரியாமலிருந்தது. மிதிவெடிகளில் பல அவர்களால் உள்ளூரில் தயாரிக்கப்பட்டவையாகவும் காணப்பட்டன.

2002 ஆம் ஆண்டு சமாதானப்

பேச்சுவார்த்தை நடந்த காலம் முதல் கண்ணிவெடிகளை அகற்றும் மனிதாபிமான பணிக்காக ஆரம்பிக்கப்பட்ட மக்கள் வலுவூட்டலுக்கான மிலிந்த மொறகொட அமைப்பு இன்றுவரை அதன் மக்கள் பணியைச் செவ்வனே செய்துவருகிறது. இந்த அமைப்பின் மனிதநேயப் பணியில் இரு இந்திய நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அவற்றின் பயிற்சிபெற்ற அதிகாரிகள் உள்ளூர் பணியாளர்களுக்குப் பயிற்சியளித்து இந்தப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

2002 சமாதான முயற்சி முடிவடைந்து இறுதி யுத்தம் நடந்த காலத்தில்

விடுதலைப் புலிகள் மேலும் பல இலட்சக்கணக்கான கண்ணிவெடிகளை

கண்டபடி மக்கள் வாழும் பகுதிகளில் புதைத்துள்ளனர். படையினரை இலக்கு வைத்துப் புதைக்கப்பட்ட இக்கண்ணிவெடிகள் இன்றைய அமைதியான சூழலில் பொதுமக்களுக்குப் பாரிய அச்சுறுத்தலாக உள்ளது. இத்தகைய கண்ணிவெடிகளையே மக்கள் நலன்கருதி மக்கள் வலுவூட்டலுக்கான மிலிந்த மொறகொட அமைப்பு அகற்றிவருகிறது.

நோர்வே நாட்டு அரசாங்கத்தின் உதவியுடன் இந்த மனிதாபிமானப் பணி வடக்கு கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படுகின்றன. மக்களது வசிப்பிடங்கள், விவசாயக் காணிகள், வெற்றுப் பிரதேசங்கள், வரண்ட பாவனைக்குதவாத தரிசு நிலங்கள் கடற்கரைகள் எனச் சகல பகுதிகளிலும் இந்த அமைப்பின் பணியாளர்கள் தமது உயிரைப் பணயம் வைத்துப் பணிபுரிந்து வருகின்றனர்.

இவ்வாறு தனது பணியின் மூலமாக கண்ணிவெடிகளை அகற்றிய இடங்களை அரச அதிகாரிகளிடம் ஒப்படைத்து அவை பாதுகாப்பான பிரதேசங்கள் என உறுதிப்படுத்தி அவற்றில் மக்கள் மீளக்குடியேற இந்த மிலிந்த மொறகொட அமைப்பு உதவி வருகிறது. இந்த அமைப்பால் கண்ணிவெடி அகற்றப்பட்ட பிரதேசங்களில் சுமார் ஐயாயிரம் குடும்பங்கள் இதுவரை மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளன.

குறுகிய காலத்தில் இதுவொரு சாதனை என்றே கூறவேண்டும். அந்தவகையில் இந்த மக்கள் வலுவூட்டலுக்கான மிலிந்த மொறகொட அமைப்பின் மனிதநேயச் செயற்பாடுகளுக்குப் பாராட்டுக்களைத் தெரிவிக்க வேண்டும்.

யுத்தம் கொடூரமாக நடைபெற்ற பிரதேசங்களில் சுமார் 25,000 ஏக்கர் காணியில் கண்ணிவெடிகளை அகற்றி ஐயாயிரம் குடும்பங்களைக் குடியமர்த்தியதுடன், பல ஏக்கர் காணிகளில் விவசாயப் பயிர்செய்கையையும் நடத்த வழி சமைத்த இந்த அமைப்பின் சாதனை தென் ஆசியாவில் படைக்கப்பட்ட வரலாற்றுச் சாதனை என்றே கூற வேண்டும். அந்த வகையில் இந்த அமைப்பிற்காக அனுசரணையும், ஒத்துழைப்பும் வழங்கி வரும் இரு இந்திய நிறுவனங்களான சர்வதா தொழில்நுட்பக் கவுன்ஸில் மற்றும் ஹொரிஷன் நிதி நிறுவனம் ஆகியவற்றின் சேவையையும் பாராட்ட வேண்டும்.

மக்கள் வலுவூட்டலுக்கான மிலிந்த மொறகொட அமைப்பின் கண்ணடிவெடி அகற்றும் பணிகள் வடக்கு கிழக்கில் மக்களின் பயமற்ற வாழ்விற்கு வழிவகுத்துள்ளன. அத்துடன் அவர்களது வாழ்வாதாரத்தைக் கொண்டு நடத்தவும் வழிகோலியுள்ளது. இந்த அமைப்பின் மனிதாபிமானப் பணி மேலும் தொடர்ந்து மக்களுக்கு நன்மைகளை ஏற்படுத்த வேண்டும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.