புத் 67 இல. 19

மன்மத வருடம் சித்திரை மாதம் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ரஜப் பிறை 20

SUNDAY MAY 10 2015

 

 
நண்பன் சதீஷ்குமாரின் வெற்றி விழாவில்....

நண்பன் சதீஷ்குமாரின் வெற்றி விழாவில்....

என்னுடைய நீண்டகால நண்பன் சதீஷ் குமார் சிவலிங்கம் மலையக மண்ணின் மைந்தன். இளவயதி லேயே பல்துறை சார்ந்த ஆற்றல்களைத் தன்னகத்தே கொண்டவன். எங்கள் நட்பு வித்தியாசமான முறையில் உருவானது.

அந்த நாட்களில், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடத்தும் அகில இலங்கை ரீதியிலான போட்டிகளில் நாங்களும் பங்குபற்றுவதில் ஆர்வம் காட்டினோம்.

நாடளாவிய ரீதியிலான போட்டிகளில் முதலிடம் பெற்றவர்கள் ஜனாதிபதி விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர். அகில இலங்கை சிறந்த அறிவிப்பாளர் போட்டி, அகில இலங்கை சிறந்த பேச்சாளர் போட்டி, அகில இலங்கை சிறந்த புதிய பாடல் போட்டி, அகில இலங்கை சிறந்த கவிதைப்போட்டி போன்ற பல்வகையான போட்டிகளில் பங்குகொண்டு வெற்றிபெற்றவர்கள்.

நாம் தோல்வியடைந்த சந்தர்ப்பங்களும் உண்டு. ஆரோக்கியமான தோல்விகளும், ஆர்ப்பாட்டமில்லாத வெற்றிகளும் எங்களை நண்பர்களாக்கின. கலை, இலக்கிய, அரசியல் துறை சார்ந்த சந்திகளில் நாம் சந்திக்கும்பொழுதெல்லாம் எங்கள் நட்பு எங்களுக்குள் சுபசோபனம் சொல்லிக்கொண்டது.

அந்தப் பயணத்தின் ஓர் அங்கம் தான் அண்மையில் (31.03.2015) கொழும்பு, பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் எங்களை மீண்டும் கை குலுக்க வைத்தது.

மீண்டும் ஒரு சாதனையாளனாக சதீஷ் குமார் சிவலிங்கம் உலக அரங்கில் தலை நிமிர்ந்து நின்றார். சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியிடப்பட்ட அந்த மலையக மைந்தனின் எழுத்துக்கள் இந்த தேசத்தின் இளவரசனாக அடையாளம் காட்டியது.

அது மாத்திரமா....

சதீஷின் தோழமை உணர்வுகளால் ஈர்க்கப்பட்ட சிங்கள, முஸ்லிம் சமூகங்களின் சொந்தங்களும் அந்த மண்டபத்தில் சொந்தம் கொண்டாடிக்கொண்டிருந்தன.

சதீஷ் குமார் சிவலிங்கம் என்ற ஆளுமை மலையக மண்ணுக்கோ, இலங்கை தேசத்துக்கோ மாத்திரமல்ல, சர்வதேசத்துக்கும் சொந்தமானது என்பதற்கு அடையாளமாக புலம்பெயர்ந்த உறவுகளின் வருகையும் அந்த விழாவை ஒரு வெற்றி விழாவாக உருமாற்றிக்கொண்டிருந்தது.

பன்னூலாசிரியர் சதீஷ் குமார் சிவலிங்கத்தின் வெளியீட்டு விழாவில் நானும் கெளரவிக்கப்பட்டேன்.

அது என்னை “நண்பேன்டா” என்று மீண்டும் உரக்கச் சொல்லவைத்தது.

அதன் எதிரொலி...

புலம்பெயர்ந்த மண்ணிலிருந்து சதீஷின் விழாவுக்காகவே வருகை தந்திருந்த டென்மார்க் நாட்டுப் பிரமுகரும், எங்கள் மண்ணின் மைந்தருமான திரு. த.தருமகுலசிங்கம் என்ற மானுட நேயனை என் நேசிப்புக்குரியவனாக்கியது.

அந்த நன்றிகள் அனைத்தும் நண்பன் சதீஷ் குமாரையே சாரும். சதீஷின் கொழும்பு, மட்டக்குளி இல்லத்தில் இடம்பெற்ற இரண்டு மணிநேர கலந்துரையாடல் டென்மார்க் தருமகுலசிங்கத்தையும் என்னையும் நெருக்கமாக்கியது.

போதாக்குறைக்கு அந்த டென்மார்க் என்னை பிரித்தானியாவின் பக்கம் விரல் நீட்டிக்காட்டியது.

அங்கே தா.தேச இலங்கை மன்னன் என்ற இன்னுமொரு மானுட நேயத்தின் சொந்தக்காரன் மனித உரிமைகளுக்கான கோஷத்துடன் புன்னகைத்துக்கொண்டி ருந்தான்.

அந்தப்புன்னகை மன்னன் சர்வதேச மனித உரிமைகளின் சாசனத்தை தமிழ்த்தாய்க்கு முதலில் அறிமுகப்படுத்திய முடிசூடா மன்னன் என்பதை இலங்கை மண் அடையாளம் காண வேண்டும் என்பதற்காக டென்மார்க் தர்மகுலசிங்கம் என்னை அடையாளம் காட்டிக்கொண்டிருந்தார். நண்பா சதீஷ்....உன்னுடைய வெற்றி விழாவின் முடிவில் தர்மகுலசிங்கம் என் தோளில் போட்ட கை இன்று என்னை ஓடவைத்துக்கொண்டிருக்கின்றது.

இன்னுமொரு வெளியீட்டு விழா ஒரு வெற்றி விழா என்ற செய்தியின் பிரசவிப்புக்காக....

ஆமாம்.

மானுட நேயத்தின் வெற்றிக்காக நாங்கள் ஓடிக்கொண்டே இருப்போம்.

ஓயாத அலைகளாக....!

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.