புத் 67 இல. 19

மன்மத வருடம் சித்திரை மாதம் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ரஜப் பிறை 20

SUNDAY MAY 10 2015

 

 

மகாபலிபுரத்தில் ஓர் இலங்கைச் சூழல் செல்வோரை கிறங்கவைக்கும் ~ஐடியல்பீச்'

மகாபலிபுரத்தில் ஓர் இலங்கைச் சூழல் செல்வோரை கிறங்கவைக்கும் ~ஐடியல்பீச்'

(கடந்த வாரத் தொடர்)

செயலாற்றுவதில் மாத்திரமல்ல. வார்த்தையிலும் தெளிவு. நிலை பிறழாமல், பணியாளர்களுக்குக் கட்டளைகளையும் பிறப்பித்துக்கொண்டு தொடர்ந்து 'ஐடியல் பீச்சின்' வளர்ச்சிபற்றிச் சொல்கிறார் போஸ் தர்மலிங்கம்.

"மகாபலிபுரத்தில் அந்த நேரத்தில் ஒரு நாலு ஹோட்டல் வந்துவிட்டது. அரச சார்பு ரீதியிலும் தனியாருமாக அவற்றை ஸ்தாபித்தார்கள். எங்களுடையதுமாகச் சேர்ந்து ஐந்து ஹோட்டல்கள். இரண்டு அரச ஹோட்டல்களிலும் சுற்றுலாப் பயணிகளைத் திருப்திப்படுத்தும் ஏற்பாடுகள் பூரணத்துவம் பெற்றிருக்கவில்லை. இருப்பதில்லை. மற்றைய இரண்டிலும் அதேநிலைதான். எங்கள் ஹோட்டல் மாத்திரம்தான் பிரபல்யமானதாக விளங்கியது. அங்குப் போனால் நல்ல உணவு கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தோம். அதனால், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் எங்களிடம் வருவார்கள். தொண்ணுற்றைந்து வீதமான வாடிக்கையாளர்கள் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளே. அதனைப் படிப்படியாக முன்னேற்றிக்கொண்டு, 1995இல் தஞ்சாவூரில் ஒரு ஹோட்டலை ஆரம்பித்தோம். அது தமிழ்நாட்டிலேயே தனித்துவமான முயற்சி. ஏனென்றால், தமிழகத்தில் எங்கும் ஆற்றங்கரைகளுக்குப் பக்கத்திலோ கடல் பகுதிளிலோ ஹோட்டல் அமைப்பதற்கு அனுமதி கிடையாது. உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு தஞ்சாவூரில் நடைபெற்றபோது, ஆற்றங்கரைக்குப் பக்கத்திலேயே அனுமதி கோரியிருந்தோம். அங்கு ஓர் இருபது அறைகளுடன்தான் ஹோட்டலை ஆரம்பித்தோம். இன்று ஐம்பது அறைகளைக்கொண்டதாக வளர்ச்சியடைந்திருக்கிது. அங்கும் 95 வீதமான சுற்றுலாப் பயணிகள் வெளிநாட்டினரே. மிகவும் அமைதியான சூழலில் தஞ்சாவூர் ஹோட்டல் அமைந்திருக்கிறது. தமிழகத்தில் வேறு எங்கும் அவ்வாறானதொரு அமைவிடத்தை நீங்கள் காண முடியாது. இலங்கையில் இருக்கக்கூடிய சூழலில் இருக்க வேண்டும் என்ற ஆவலில் அதனை அமைத்தோம். அங்கு நாங்கள்தான் முதலாம் இடத்தில் இருக்கின்றோம். மகாபலிபுரத்தைப் பொறுத்தவரை இரண்டாமிடத்தில் இருக்கின்றோம்"

என்று தன்னம்பிக்கையுடன் சொல்லும் தர்மலிங்கம், 35 வருடகால தொழில்துறை வெற்றியின் ரகசியத்தையும் விளக்குகிறார்.

"இற்றைக்கு முப்பத்தைந்து முப்பத்தேழு வருடங்கள் கடந்திருந்தாலும், எமது தரத்தைப் பிசகாமல் பராமரித்து வருகிறோம். காலத்திற்கு ஏற்றவாறு அறைகளைப் புனரமைத்து தேவைக்கேற்ப சேவைகளையும் புதுப்பித்துக்கொள்கின்றோம். அதன் காரணமாக மற்றைய ஹோட்டல்களுடன் எங்களால் தாக்குப்பிடிக்க முடிகிறது."

பொதுவாக வர்த்தகத்தைப் பொறுத்தவரை வர்த்தக நிறுவனங்களையோ ஹோட்டல்களையோ அவற்றுடன் போட்டிபோட்டுக்கொண்டு தரத்தைப் பேணுவதைவிட வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்வதில்தான் வெற்றி தங்கியிருக்கிறது. ஓரிடத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் மீண்டும் அந்த இடத்தைத் தேடி வரும் சேவை வழங்கப்பட்டால் ஒழிய மீண்டும் அந்தப் பக்கம் தலைவைக்கமாட்டார்கள். அதில் அடைந்த வெற்றியே ஐடியலின் வளர்ச்சிக்குக் காரணம் என்கிறார் போஸ் தர்மலிங்கம்.

"எமக்குள்ள சாதகமான சூழ்நிலை என்னவென்றால், பத்துப் பதினைந்து வருடங்களாகத் திரும்ப வருகை தரும் வாடிக்கையாளர்கள்தான். டிசம்பர் மாதத்தில் ஓர் இருபத்தைந்து குடும்பங்கள் தொடர்ச்சியாகப் பத்து வருடங்களாக வருபவர்கள். அவர்கள் ஒரு மாதம் முதல் நான்கு மாதங்கள் வரை தங்கியிருப்பார்கள். அவ்வாறாள வாடிக்கையாளர்கள் எமக்கு நிறைய இருக்கிறார்கள்" என்கிறார்.

மகாபலிபுரத்தில் எழுபது அறைகளுடன் மிளிரும் ஐடியல் பீச்சில் நூறு டொலர் முதல் இருநூறு டொலர்கள் வரைக்கும் அறைகள் உள்ளன. இவை மூன்று வகைப்படுத்தலின் கீழ் தரப்படுத்தப்பட்டுள்ளன. கடற்கரையை அண்மித்ததாக ஒரு சோலையாகக் காட்சி தரும் ஐடியல் பீச்சில், திருமணம், கருத்தரங்குகள் போன்றவற்றை நிகழ்த்துவதற்கும் வசதிகள் உள்ளன. நான்கு, ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில உள்ளதைப்போன்று நீச்சல் தடாகம் முதற்கொண்டு சகல வசதிகளும் இங்கு உள்ளன. வாடிக்கை யாளர்களுக்குப் போக்குவரத்து வசதிகளை வழங்கும் முகமாக பதினைந்திற்கும் மேற்பட்ட வாகனங்களும் தயாராக உள்ளன.

இதே வசதிகளுடன் தமிழ்நாட்டில் இன்னும் இரண்டு மூன்று ஹோட்டல்களை நிறுவுவதே தமது இலக்கு என்கிறார் போஸ் தர்மலிங்கம்.

"இராமேஸ்வரம், பாண்டிச்சேரி, மதுரை ஆகிய இடங்களில் இதே வசதிகளுடன் ஹோட்டல்களை அமைக்கவிருக்கிறோம். இராமேஸ்வரத்தில் ஏற்கனவே காணியைக் கொள்வனவு செய்துவிட்டோம். இந்தப் பகுதிக்கு வரும் யாத்திரி கர்களின் நலன் கருதி அவர்க ளுக்குக் குறைந்த செலவில் தங்கும் வசதிகளை ஏற்படுத் திக்கொடுக்கும் முகமாகவே ஹோட்டல்களை நிறுவவிருக் கின்றோம். கடந்த மூன்று தசாப்த காலமாகக் கிடைக்கப் பெற்றுள்ள அனுபவத்தைக் கொண்டு, வாடிக்கையா ளர்களுக்கு என்ன தேவை என்பதைக் கண்டறிந்துகொண் டுள்ளோம். ஆகவே, அதற்கேற்ப எமது சேவைகள் காலத்திற்கு ஏற்ப புது வடிவம் பெறும். வாடிக்கை யாளர்களின் தேவைகளை உடனுக்குடன் நிறை வேற்றும்பொருட்டு நாம் தனிப்பட்ட ரீதியில் கவனம் செலுத்துகின்றோம். எங்கள் தந்தையார் இப்போது ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாலும் எனது குடும்பத்தவர்கள் பெரும்பாலான நேரத்தை இங்குதான் செலவிடுகிறார்கள். இப்போது மகனும் மருமகளும் எங்களுடன் இணைந்து கொண்டுள்ளார்கள். அதனால், சிறந்த நிர்வாகத்திற்கும் கண்காணிப்புக்கும் துணையாகவிருக்கிறது" என்கிறார் இந்த நம்பிக்கை நட்சத்திரம்.

மகாபலிபுரத்தில் உள்ள சகல ஹோட்டல்களின் உரிமையாளர்களும் ஹோட்டலியே தங்கியிருக் கிறார்கள். முகாமையாளர்கள் எடுக்கும் முடிவிற்கும் உரிமையாளர்கள் எடுக்கும் முடிவிற்கும் வித்தியாசம் உண்டு. இலங்கையிலிருந்து வருவோருக்கு விசேட சலுகைகளையும் வசதிகளையும் வழங்கு கின்றோம். அதாவது,

(மிகுதி அடுத்த வாரம்)

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.