புத் 67 இல. 19

மன்மத வருடம் சித்திரை மாதம் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ரஜப் பிறை 20

SUNDAY MAY 10 2015

 

short stories

தேவிபரமலிங்கம்

குடாநாட்டின் பாரிய இடப்பெயர்ச்சி 1995ல் இடம் பெற்றது. அதுவும் வருட இறுதிப் பகுதியில் ஒக்டோபர் 30 ஆம். திகதி அதுவரை யாழ்ப்பாணக் கடைத் தெரு, போதனா வைத்தியசாலை பகுதிகளில் சோடாமூடியின் நடமாட்டங்கள் இருந்தன.

1996ல் சித்திரை வருடப் பிறப்பைத் தொடர்ந்து மீண்டு வந்த பின்பாக சோடா மூடியைக் காணவில்லை. சோடா மூடியின் இறுதி நாட்கள் அதுவாகத்தான் இருந்திருக்க வேண்டும்.

சோடாமூடி இடம்பெயர்ந்து குடாவுக்கு அப்பால் நகர்கையில் சாவு ஏற்பட்டதோ; இல்லாமல் இங்கே தங்கி நின்று உணவு கிடைக்காமல் தாக்குதல் இடையில் அகப்பட்டு மரணித்தாளோ அறிய முடியவில்லை.

அதுபோலவே சோடா மூடியின் நாமா காரணம் என்பதும் அறிய முடியாமல் போன மற்றொன்று சோடாமூடி என்பது நகரப் பகுதிகளில் சூட்டப்பட்டபெயராக விளங்கியது.

“சோடா மூடி... எங்கை போறாய்...” குரல் வந்த பகுதியைத் திருப்பிப் பார்த்து பற்கள் கொட்டிப்போன ஏறுவாயால் கண்களில் மயக்கம் தெரியப் புன்னகைப்பாள். சோடா மூடிக்குக் கதைசொல்லி வசதியாக சரசு எனப் பெயர் சூட்டி வைத்துள்ளார்.

சரசு நகரப் பகுதிகளில் திரிந்து, பெற்றுக் கொள்ளும் தர்மப்பணத்தில் அன்றாடப்பசியைப் போக்கிக் கொள்வாள். வாட்டசாட்டமான உடல். ரவுக் போட்டு சேலை கட்டிக்கொள்வாள். அவ்வப்போது குளம், கேணிகளுக்குப் போய் குளிப்பு, முழுக்கையும் முடித்துக் கொள்வாள்.

அழுக்காகும் சேவை, ரவுக்கைகளைத் தோய்த்துக் காயப்போட்டு பாவிப்பாள். தீபாவளி, பொங்கல், சித்திரை வருடம், கிறிஸ்மஸ், புதுவருடங்களில் பெரியகடை வியாபாரிகள் வழங்கும் சேலை ரவுக்கைகள் என்றில்லாமல் வீடுகள் தோறும் பெண்கள் கழித்துவிடும் சேலை, ரவுக்கைகள் கிடைத்துக் கொண்டிருப்பதால் மானத்தைக் காக்கவும் முடிந்தது. நோய் நொடிகள் வந்தால் இருக்கவே இருக்கிறது தர்மாஸ்ப்பத்திரி!

இரவு, மழை, வெய்யில் நேரங்களில் ஒதுங்குவதற்கும், குந்திக் கொள்ளவும் ‘கோடி இல்லாதாருக்குப் பல கோடி’என்று பஸ் நிலையக் கொட்டகைகள் வர்த்தக நிலையங்களின் விறாந்தைகள், மரக்கறி, மீன் சந்தைக் கட்டடங்கள் உள்ளன. அங்கங்கே சின்னச்சின்னப் பொதிகளில் இவளது சேலை, ரவுக்கைகள் பொதுக்கிப் பொதுக்கி வைத்திருப்பாள். அவற்றை யார்தான் சீண்டுவார்? துப்புரவுப் பணி செய்கையில் எடுத்து வீசி விடுவர். பணமோ, நகை நட்டோ அவளிடம் ஏது?

அன்றாடம் காச்சியாக அன்றன்றைக்கு அளக்கும் இறைவனாக யாழ். நகரக்கடைகள் இருக்கின்றன. விடிந்தால் வழமைபோல் நகர்வுகள். இருட்டி விட்டால் ஓரிடத்தில் ஒதுங்கிவிடல். அவளுக்கு இல்லாமை என்பதும் இல்லை; கவலைச்களும் இல்லை.

சரசு இந்நிலைக்கு வரமுன்பாக ஒரு இராசாத்தி போல வாழ்ந்தவள். நகரத்தின் முடிசூடா இளவரசி இவள்தான். வாழிவான உடலழகு. விதம் விதமான ஆடை, அணிகலன்கள், வீதிகளில் நடைபயின்றாய் இளவட்டங்கள் அவளைச் சுற்றி வட்டமிடும்.

நாளுக்கோர் இடம், உல்லாசம், உண்டி, போதை எல்லாமே அவளது காலடியைச் சரணடையும். கைகளில் நோட்டுகள் புரளும் இவளை எசமானாகக் கொண்ட எத்தனையோ குமருகள் இவளின் அரவனைப்பால் வீட்டு வறுமை நிலைமையைப் போக்கிக் கொண்டும் வாழ்ந்தன.

அவ்வாய்ப்புகள் இவளைத் தேடிவர முன்னதாக இவளைத் தெரிந்தும், அனுபவித்துக் கொண்டும் இவருக்கு நகர வர்த்தகமையம் வந்தேறு வாசிகள், இளையோர் வட்டத்துப் பலர் முன்வந்தனர். சிலருக்கு இவள் குருவாகவும் திகழ்ந்துள்ளாள்.

ஏறக்குறைய இருபது வருடங்கள் சரசுவின் வாழ்க்கையில் தென்றல் வீசியது. அதன்பின்பே சரசுக்கு இயல்பாக வந்த முதிர்ச்சி இளமை தந்தலாவண்யத்தைக் குறைத்தால், எல்லா வகைகளிலும் வறுமையை அவளுக்கு வழங்கி விட்டது.

“சரசு... நீ ஒதுங்கிக் கொண்டு... புதிசா ஆரும் வந்தாக் கொண்டா... உனக்கும் வாசிகிடைக்கும் தானே...”

அவ்வகையிலும் இரண்டொரு ஆண்டுகள் உருண்டன. சரசுவின் இடத்துக்குப் புதிசா சிலுக்கு வந்து சேர்ந்தாள். சரசுவின் காட்டில் பெய்த மழை இப்பெல்லாம் சிலுக்கு இருக்கும் பக்கமாகத்தான் கொட்டியது.

“சரியினி என்ர செல்வாக்கெல்லாம் சரிஞ்சு போச்சு...” மனம் பாதித்து நடைப்பிணமாக நடமாடிய சரசு தற்கொலை என்னும் பாத்திரத்தை ஏந்தவில்லை. பிச்சா பாத்திரத்தைத் தூக்கிக் கொண்டாள்.

தற்கொலை தெரிவாக இருப்பின் முப்பது வருடங்களுக்கு முன்பாகவே எடுத்திருக்க வேண்டும். அந்தளவுக்கு அவள் கோழையாக இருக்க வில்லை. அவளை இந்நிலைமைக்குத் தள்ளிவிட்ட சமூகத்தில் வாழ்ந்து காட்ட வேண்டுமென்றே துணிந்தாள்.

பொக்குவாய் கிழவியாக உருமாறி “சோடா மூடி”யெனக் கேலிக்குப் பாத்திரமாகிய சரசு யாழ் கோட்டை முனியப்பர் ஆலயச் சூழலில் வீதியோரமாக நிற்கும் பாரிய ஆலமர நிழலில் சாக்குத் துண்டைவிரித்துப் படுத்துக்கிடந்து நினைவுகளை மீட்டினாள்.

சரசுவுக்கு இவ்வுலக நடைமுறை தெரியவரும் பராயம் இருக்கும், அவளைப் பெத்து வளர்த்து தாயார் நோயில் படுத்தவள் போய்ச்சேர்ந்து விட்டாள்.

“ஐயோ... செல்லம்மா... என்னேம் புள்ளையேம் விட்டிட்டுப் போக உனக்கு எப்படி மனம் வந்தே...”

அழுது புலம்பிய தகப்பன் எப்ப ஆண்டுத் திவசம் வருமெண்டு எதிர் பார்த்திருந்தது போல, மறுநாள் தெய்வயானையை இவளுக்கு சித்தியாக கூட்டி வந்தார். “எனக்கொண்டும் அவசரமில்லை. என்ர பெட்டை இண்டைக்கோ நாளைக்கோ எண்டிருக்கிறவள் அவளுக்குப் பாதுகாப்பாத்தான்...”

ஊரவர்களின் ஓச்சத்தை வாயடைக்க அப்படிச் சொல்லி வைத்தது: ஊருலகத்தில புதுமை ஒன்றுமில்லை. வேலாயுதம் நேகடி, கிட்டங்கிக்குப் போய் நாட்டாமை செய்வதால் உழைப்பான். அதில் கொஞ்சம் பாவிப்பது போகக் கொண்டந்து தெய்வானையிடம் கொடுப்பான்.

“இதென்னத்தைக் காணும் உங்களுக்கு அவிச்சுக் கொட்ட...” எந்த நாளும் அவளது வாயால் இந்தப் பொச்சரிப்புத்தான் வெளிவரும் கயிட்டப் பட்டுத் தொழில் செய்யும் வேலாயுதம். குடுக்கிறதை வயிற்றில் கொட்டிக் கொண்டு படுத்திடுவான்.

வயதுக்கு வந்த சரசுவின் மேனி அழகு பூரிக்க ஆரம்பித்தது. எங்கிருந்தோ தெய்வானையின் தம்பி எனக்கூடி ஒருவன் வந்து போனான். பகலில் வேலாயுதம் வீட்டில் நிற்க மாட்டான் வருபவன் தெய்வானையுடன் தம்பியாகவா நடந்து கொள்கிறான்?

“ஐயாணோய்... நீயில்லாத நேரம்... ஒரு வனிங்க வந்து போறானணை...”

“அது புள்ளே... அவளோடை ஏண்டுவிட்ட தம்பி... அவன் வருவான் போவான்...”

“அதில்லையனே... அவன் என்னோடையும்... சேட்டையள் விடுறானெல்லே...” “மாமன் தானே..”

அசட்டையாகக் கூறிய தகப்பனின் மூளைக்கு ஏறவில்லை. குமரின் பாதுகாப்புக்காகத்தான் இரண்டாந்தாரம் எடுத்தது ஊருக்கு உபதேச’ மாத்தான் அமைந்தது.

தெய்வயானைக்கு சரசு வீட்டில் இருப்பது தன்னுடைய சுதந்திரத்துக்கு குந்தகமாக உள்ளதால் திட்டமொன்றைப் போட்டாள். “இஞ்சை கேள் மனிசா... உவன் செல்லக் கண்டன் தன்ரை அரிசி மில்லில தொட்டாட்டு வேலை செய்யிறேக்கு ஆளொண்டு தேடுறான்... இவள் சரசு சும்மாதானை இருக்கிறாள்...அங்கபோய் வேலை செய்தா... அவனேதும் பாத்துக் குடுப்பான்... அப்பான் ஒரு மாதிரிச் சீவியம் ஓடும் கண்டியோ...”

வேலாயுதம் தலையணை மந்திரத்துக்கு மசியாதவனா? சரசுவும்மில் வேலைக்குப் போய்வந்து கொண்டிருந்தாள். காலப்போக்கில் வேலைகளைச் சொல்லிகொடுக்கும் சாக்கில் செல்லக்கண்டு சரசுவின் வதனக் கவர்ச்சிக்கு அடிமையாகிப் போனான்.

“நானினி... அங்கை வேலைக்குப் போகமாட்டான். அவன் சரியில்லாத ஆள்...”

தகப்பனுக்கு முன்பாகத் கண்ணீர் சிந்தினாள் சரசு. தலையணை மந்திரத்தில் மயங்கிய வேலாயுதம் அதனைப் பொருட்டாக எடுத்துக் கொண்டதாய் தெரியவில்லை.

“சரி... சரி... அங்கை போகாட்டப்போ.. கமக்காறன் மயிலர்... வீட்டில வேலை இருக்காம் அங்கை போடி...”

சித்தி தெய்வயானை போட்டதுதான் சட்டம். மாதங்கள் மூன்று செவ்வனே கழிந்தது. சரசு தனியாக நெல்லுக் கொட்டிலில் நிற்பது, மயிலருக்கு வசதியாகப் போய்விட்டது. பலநாள் குறிவைத்த வேட்டைப் பொருள் கிடைத்துள்ள சூழல்!

“விடடா என்னை... விடாட்டிக் கடிப்பன்...”

“ஆ... ஹா... ஐயோ...”

திமிறியவள் ஓட்டம் பிடித்தாள். மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க வீடு வந்த சரசுவுக்கு என்ன நடந்திருக்கும்; சூத்திரதாரி தெய்வானைக்கு சொல்லியா தெரிய வேண்டும்?

வேலாயுதத்துக்கு, மகளை வெனரவதொருவன் கைகளில் பிடித்துக் கொடுத்து விட்டால், தொல்லையொன்று நீங்கியதாக இருக்குமெனச் சிந்தனை பிறந்தது. நாட்டாமைத் தொழிலில் கல்யாணம் செய்து கொள்ளாத இளைஞர்களும் ஈடுபட்டு இருந்தனர்.

இந்திரன், அவர்களில் சரசுக்குத் தோதாக இருப்பான். அவனைக் கதைச்சுப் பேசி முடிக்கலாம். அவனும் ஆருமில்லாத தனிப்பேர் வழி. வேலாயுதத்துக்கு வசதியாகவே பட்டது.

இருக்கிற காணியும் இரவல் காணி அதுபோல கொட்டலே எத்தனையோ காணிகள் தரவையாக்கிடக்கு காணிக்காறனோடை கதைச்சுக் கேட்டுக் கொட்டில் ஒன்றைப் போட்டுக் குடுத்து பிரிச்சு விட்டால், தொல்லை இராதென எண்ணிய வேலாயுதம் காரியத்தில் இறங்கினான். தெய்வானையும் அதுக்கு மறுப்பில்லை.

இந்திரன், சரசு வாழ்க்கை குடியும், கும்மாள முமாக நகர்ந்து கொண் டிருந்தது. ஆறுமாத இடைவெளியில் இந்திரன், நான்கு பேர்களையும் கூட்டிக் கொண்டு வீடு வந்து” சேர்ந்தான். “சரசு இவங்க என்னோடை வேலை செய்யிறவங்க... இண்டைக்கு இறைச்சி... முட்டை எல்லாம் சமைச்சுக்குடுத்து... எங்கடை கல்யாண நாளைக் கொண்டாடுவம்...”

இந்திரன் கூறிய வார்த்தைகள் சரசுக்கு இனித்தன. வேலாயுதமும் தெய்வயானையும், வெறுமனே சோத்தைக் குடுத்துச் சேர்த்துவிட்ட’ கல்யாணத்தில் எவ்விதச் சுவாரஸ்யமும் இருக்கவில்லை.

சாராயம் குடித்த, பூராயம் இரவு பன்னிரெண்டு மணிவரை நீடித்தது. சரசுக்கும் வாத்து வாத்துக்கு குடுக்க வெறி உச்சியைத் தொட்டது. அங்கேபோ எல்லாரும் விழுந்து படுத்தும் விட்டனர். மதுமயக்கத்தில் கணவன் சரசமாடுவதாய் சரசு உணர்ந்தாள்.

அதற்கொரு முடிவே இருக்கவில்லை. ஈனஸ்வரத்தில் சரசு அனுங்குவதும் தெரியாமல் உறக்கத்தில் கிடந்தான் இந்திரன். விடிந்த பொழுது அந்த நான்கு பேர்களும் இருக்கவில்லை.

“இது தானா கல்யாணக் கொண்டாட்டம். இதுக்குத்தானா அவங்களைக் கூட்டிவந்தனீங்க...” சிதைக்கப்பட்ட சிலையாக காட்சியளித்த சரசு கண்ணீர் விட்டு அழுதாள்.

“சரசு... நடந்தே நடந்திட்டுது... பேசாம விட்டிட்டு இரு...” இந்திரன் சொன்னான். போறேல்லை... பொலிசுக்குப் போய்... அவங்களைப் புடிச்சடைக்கச் செய்ய வேணும்...”

இந்திரன் எத்தனையோ தடவை தடுத்தும் சரசு பொலிசுக்குப் போனாள். இவளது முறைப்பாட்டைப் பதிவு செய்து கொண்ட காவல்துறை அவளிடம் பாலியல் லஞ்சம் கேட்பான் என்பதைக் கிஞ்சித்தும் பேதைப் பெண் எதிர்பார்க்கவில்லை.

“நீங்களுமா ஐயா... என்னை விடமாட்டேங்கிaங்க... எனக்கு நீதி எங்க எப்புடிக் கிடைக்கும்....”

சமூகத்தில் எல்லா மட்டங்களிலும், பெண்ணை லாகிரிப் பொருளாக மதிக்கப்படுவது சரசுக்கு விரக்தியை ஊட்டி விட்டது.

காவல்துறை நிலையத்தால் வெளியேறியவள், வீடென்னும் அந்நரகக் கொட்டிலுக்குத் திரும்ப விருப்பவில்லை. கால்போன போக்கில் அலைந்தவளை நகரகமும், கடைத்தெருவும் அணைத்துக்கொண்டன.

ஏறத்தாள இருபது வருடங்கள் அரசியாகச் சிம்மாசனம் வைத்துக் கொண்டிருந்த அவளை முதுமை தூக்கி எறிந்தது. அவளது அறிமுகம் இன்றைக்கும் ஜீவனோபாயத்தை நகரப் பகுதியில் துணையாக இருப்பதை நினைத்துக் கொண்டாள் சரசு.

அவளுக்கு இரண்டு ஆண்டுகளும், ஒரு பெண்ணுமாக மூன்று பிள்ளைகள் பிறந்தன. “தான் போக வழியைக் காணோம் மூஞ்சூறு விளக்குமாத்தை காவின” மாதிரி அவளால் முடியவில்லை. ஆஸ்பத்திரியில் ஒப்படைத்து விடுவாள். அதனால் அவள் அனாதை இல்லை. வாரிசுகள் எங்கோ வாழ்ந்தும் வருகின்றன.

முனியப்பர் கோவில் மணியோசை அவளை நினைவுகளில் இருந்து மீளச் செய்தது. இந்தச் சமுதாயம் தனக்குத்தானே போட்டுக் கொண்டுள்ள கற்புநெறி. பண்பாடு, மனித நேயம் என்னும் வரம்பு வட்டங்களை உடைத்துக் கொண்டே முன்னேறிச் செல்கிறது.

பாரிய குடாநாட்டு இடப்பெயர்வு வரையில் யாழ்ப்பாணக்கடைத் தெருக்களில் சோடா மூடியென அழைக்கப்பட்ட சரசுவின் வாழ்க்கை எவ்விதம் அஸ்த்தமித்தது என்பது அறியப்படாத ஒன்று. எனினும் அவளது வாழ்க்கைப் பின்னணி எத்தனை பேர்களைத் திரும்பிப் பார்க்க வைக்கப்பபோகிறது?

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.